பேல்பூரி

விதைத்துக் கொண்டே இரு. முளைத்தால் மரம். முளைக்காவிட்டால் உரம்.
பேல்பூரி

கண்டது


(தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூரில் உள்ள ஒரு சிற்றுண்டிக் கடையின் பெயர்)

''வாங்க நம்ம அக்கா கடை''

-வீர.செல்வம்,
பந்தநல்லூர்.

(மன்னார்குடியில்  ஒரு காரில் எழுதியிருந்தது)

''வார்த்தைகளில் அடங்கா காவியம்; வண்ணத்தில் அடங்கா ஓவியம் அம்மா''

-முனைவர் க.இருளப்பன்,
மன்னார்குடி,

(திண்டிவனத்தில்  பழைய கட்டடங்களை இடித்துக் கொடுக்கும் கடையின் பெயர்)

''தரைமட்டம்''

-ம.வசந்தி,
திண்டிவனம்.

கேட்டது


(சிதம்பரம் தெற்கு வாணியத் தெருவில் இரு உறவினர்கள் பேசியது)

''மாமா. உங்க பொண்ணு பயங்கரமா கோபப்படுறா? சில நேரம் அடிக்கிறா, வந்து கேளுங்க?''
''விடுங்க மாப்ளே. உங்க பெண்டாட்டி உங்களை அடிக்காம பக்கத்து வீட்டுக்காரரையா அடிப்பா?''

-அ.ப.ஜெயபால்,
சிதம்பரம்.

(திருச்சி பூங்கா ஒன்றில் நடைபயிற்சியில் இருவர் பேசியது)

''இவ்வளவு திடகாத்திரமாக இருப்பது எப்படி?''
''மனைவியோட சண்டை போட்டது இல்லை. பிள்ளைங்களுக்கு அறிவுரை சொன்னது இல்லை. பெத்தவங்களை முதியோர் இல்லத்தில் விட்டது இல்லை.''
''ம். நடிகர் வடிவேலு மாதிரி பிளான் பண்ணி வாழறீங்கன்னு சொல்லுங்க?''

-அ.சுஹைல் ரஹ்மான்,
திருச்சி.

(சென்னையில் நண்பர் ஒருவரின் வீட்டில் தந்தையும், மகனும்..)

''ஏன்டா... மொபைல வெச்சிட்டு பேப்பரை எடுத்து படியேன்டா?''
''மொபைலில் இ.பேப்பர் தாம்பா படிக்கிறேன்.''

-என்.கே.மூர்த்தி,
சென்னை.

யோசிக்கிறாங்கப்பா!


விதைத்துக் கொண்டே இரு. 
முளைத்தால் மரம். முளைக்காவிட்டால் உரம்.

-மா.திவாகர்,
மரத்துறை.


மைக்ரோ கதை


''தாத்தா எங்கே போறீங்க?'' 
''சுபாஷ் கடைக்கு..''
''சபாஷ். அப்படின்னா வரும்போது எனக்குப் பிடிச்ச ஸ்வீட்  உங்களுக்குத் தெரியுமே? மறக்காம வாங்கிட்டு வாங்க?'' என்று பேத்தி அகல்யாவின் அன்புக் கட்டளையை ஏற்று,  பழனிசாமி வீட்டைவிட்டு புறப்
பட்டார்.
அப்போது அவருக்கு நண்பர் போன் செய்தார்.
''பழனிசாமி சார். வர்றீங்களா டீ குடிப்போம்.''
''சரி எங்க வரட்டும்..''
''ஆகாஷ் கடைக்கு...''
''சுபாஷ் கடைக்குப் போகலாமே..''
''அங்கே அலுத்துப் போச்சு சார்..''
பேத்தி கேட்ட ஸ்வீட்டுக்கு, சரியான ஒரு பதிலுக்குத் தலையை சொரிந்து கொண்டிருந்தார் பழனிசாமி.

-பொன்.சொர்ணவேல், 
செங்கோட்டை.



எஸ்.எம்.எஸ்.


மகிழ்ச்சியின் ரகசியம் விரும்புவதைச் செய்வது!
வெற்றியின் ரகசியம். செய்வதை விரும்புவது!!

-ஜி.அர்ச்சுனன்,
செங்கல்பட்டு. 

அப்படீங்களா!

சிறு பிள்ளைகள் விடியோ கேம்களுக்கு அடிமையாகி இருப்பதைத்தான் பெரும்பாலும் பார்த்திருப்போம்.  ஆனால், கனடாவைச் சேர்ந்த ஆறு வயது சிறுமி சிமர் குரானா விடியோ கேமையே உருவாக்கி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

'சாதனை புரிய வயதில்லை'  என்றாலும், கணினி மென்பொருள் கோடிங்கை சிறு வயதில் கற்றுக் கொண்டு விடியோ கேமை உருவாக்கியுள்ளார்.  அதுவும், குழந்தைகளுக்கு ஏற்ப பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட துரித உணவுகளைத் தவிர்ப்பது, சத்தான உணவுகளை உட்கொள்வது போன்றவற்றை வைத்து குழந்தைகளுக்கு நல் வழிகாட்டும் விடியோ கேமை சிமர் உருவாக்கி உள்ளார்.

'யூ டியூப்' பார்த்து கணித்தைக் கற்றுக் கொண்ட சிமர், தொடக்கப் பள்ளி வகுப்பிலேயே மூன்றாம் வகுப்பு கணிதப் பாடங்களை படித்து அசத்தியுள்ளார். அவரது ஆர்வத்தைப் பார்த்த அவரது தந்தை பாராஸ் சிமருக்கு பிடித்த விடியோ கேம்களை அவரே உருவாக்கும் கனவை நனைவாக்கும் பணியைத் தொடங்கினார். பெரியவர்களுக்கே கோடிங் வகுப்புகள் கடினமாக இருக்கும் என்பதால், சிறுமி சிமருக்கு விடியோ கேம் கோடிங் வகுப்புகளை கற்றுத் தர யாரும் முன்வரவில்லை. பின்னர் ஒரு ஆசிரியர் மூலம் கேம்கள் உருவாக்கத்தை சிமர் கற்றுக் கொண்டார்.

பள்ளி,  மாலை வகுப்புகளைத் தொடர்ந்து கொண்டே சிமர் விடியோ கேம் உருவாக்கும் கோடிங் வகுப்புகளைத் துரிதமாக மேற்கொண்டார். சில மாதங்களில் விடியோ கேமை உருவாக்கிய 6 வயது சிறுமி என்ற சாதனையைப் படைத்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார் சிமர்.

சிமர் வேர்ல்ட் எனும் யூடியூப் சேனல் மூலம் புதிய கேம்களுக்கான யோசனைகளையும் சிமர் பெற்று வருகிறார். 

-அ.சர்ப்ராஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com