ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சர்க்கரை நோய் குறைய என்ன வழி ?

எனது வயது 60. நீரிழிவு நோயால் பெரும் பாதிப்பு. சுகர் 300 மி.கி. என்ற அளவில் இருக்கிறது.
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சர்க்கரை நோய் குறைய என்ன வழி ?

எனது வயது 60. நீரிழிவு நோயால் பெரும் பாதிப்பு. சுகர் 300 மி.கி. என்ற அளவில் இருக்கிறது. தலைசுற்றல், கிறுகிறுப்பு உள்ளது. சர்க்கரை குறையவும், கிறுகிறுப்பு நிற்கவும் என்ன ஆயுர்வேத மருந்துகளைப் பயன்படுத்தலாம். பயன்படுத்தும்போது ஆங்கில மருந்துகளை உபயோகப்படுத்தலாமா?

ரா.மங்கயற்கரசி,
மதுரை-1.

மனம் சார்ந்த 'ரஜஸ்' எனும் தோஷமும், பித்தம் மற்றும் வாயு எனும் உடல் சார்ந்த தோஷங்களும் தம் அளவைவிட உயர்ந்த நிலையில், மனிதர்களுக்குத் தலைசுற்றல் எனும் கிறுகிறுப்பை ஏற்படுத்தும் என ஆயுர்வேதம் கூறுகிறது. 

இனிப்புச் சுவையில் பொதிந்துள்ள நிலம் மற்றும் நீரின் அம்சத்தினால் கட்டுப்படும் இம்மனம் மற்றும் உடல் சார்ந்த தோஷங்கள், அதன் வரவானது சர்க்கரையின் உயர்ந்த அளவால் உடலில் குறைக்கப்படும் நிலையில், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயத்தின் கட்டுப்பாடுகள் தளர்வினால் உயரே எழும்பி, ரத்தக் குழாய்களின் வழியே மூளையைச் சென்று தாக்கும் நிலையில், தலை கிறுகிறுப்பு ஏற்படுகிறது. 

 ரத்தக் குழாய்களின் உட்புறச் சவ்வுகளில் உண்டாகும் வறட்சி, சுருங்கி விரியும் தன்மையில் ஏற்படும் சுணக்கம், உந்தித் தள்ளும் வாயுவின் வேகமான செயல்பாடு போன்றவைகளை ஏற்படுத்தும் இம்மஹாபூதங்களின் சீற்றமும் உங்கள் பிரச்னைக்குக் காரணமாகிறது.

நிலம், நீர், உடலில் சேர்க்கப்பட வேண்டும். ரத்தக் குழாய்கள் நெய்ப்புற வேண்டும். வாயுவின் வேகத்தை மட்டுப்படுத்த வேண்டும். உண்ணும் மருந்தினுடைய வீரியமானது, துரித கதியில் மூளையைச் சென்றடைய வேண்டும் என பல 'வேண்டும்' நிலையை உங்கள் உடல் அடைந்திருக்கிறது.

பால் முதுக்கன் கிழங்கு, ஆமணக்கு, தேன் கொடுக்கி, மூக்கரட்டை, தேவதாரு, காட்டுளுந்து, காட்டுப்பயிறு, பூனைக்காலி, ஜீவனபஞ்சமூலம்,  ஹ்ருஸ்வ பஞ்சமூலம், நன்னாரி, சிறுபுள்ளடி ஆகிய மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் நெய் மருந்து ஒன்று உள்ளது.  

இது இதயத்துக்கு ஏற்றது.

சர்க்கரையின் தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள உடல் மெலிவு, உடல் வலி, மேல் மூச்சு, வறண்ட இருமல் இவற்றைப் போக்கும். 

மனம் சார்ந்த 'ரஜஸ்' எனும் தோஷத்தையும், உடல் சார்ந்த வாயு மற்றும் பித்த தோஷங்களாகக் கண்டிக்கும். சுமார் பத்து மில்லி நெய் மருந்தை, நீராவியில் உருக்கி,காலை, இரவு என இரு வேளை உணவுக்குப் பிறகு மூன்று மாதங்கள் வரை அருந்தி வரலாம்.

நாட்டு மருந்துக் கடையில் வேங்கை மரப்பட்டை கிடைக்கும். பதினைந்து கிராம் பட்டையில் ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். அரை லிட்டராகக் குறுகியதும் வடிகட்டி, அதில் நூற்று ஐம்பது கிராம் புழுங்கலரிசி சேர்த்து சாதமாக வரும்வரை வேக வைக்கவும், இந்தச் சாதத்தில் மூன்று முதல் ஐந்து மில்லி கிராம் 'சிலாசத்து' எனும் பற்பம் கலந்து, ஏதேனும் ஒரு மாமிச சூப்புடன்  தினமும் ஒரு வேளை சாப்பிட்டு வரவும்.

மாமிச உணவு சாப்பிடாதவராக இருந்தால் மோர் சாதமாகச் சாப்பிடலாம்.

பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள சர்க்கரை உபாதையின் தாக்கம் வெகுவாகக் குறையும். கழலை வீக்கம், கேன்சர் கட்டிகள், நிணநீர் கிரந்தி வீக்கம், உடல் பருமன், தோல் சார்ந்த படை உபாதைகள், பௌத்திரம், குடல் கிருமிகள், யானைக்கால், வீக்கம் போன்ற உபாதைகளும் நன்கு மட்டுப்
படும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும். மூன்று- ஆறு மாதங்கள் வரை சாப்பிடலாம்.

மூலிகைத் தைலமாகிய சந்தனாதி தைலத்தைத் தலைக்குத் தேய்த்துக் குளிக்கப் பயன்படுத்தலாம். இதனாலும் சீற்றமடைந்த ரஜ- பித்த- வாயுக்கள் 
சாந்தமடையும்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com