முத்தையா முரளிதரன் பயோபிக்!

கமர்ஷியல் படங்கள் வெளியாகி ,  அந்தப் படங்களில் எந்த படம் 'ப்ளாக் பஸ்டர் ஹிட்'  ஆகிறது என்று இன்றைய காலகட்டத்தில் போட்டிகள் நிலவிக் கொண்டிருக்கின்றன.
முத்தையா முரளிதரன் பயோபிக்!

கமர்ஷியல் படங்கள் வெளியாகி ,  அந்தப் படங்களில் எந்த படம் 'ப்ளாக் பஸ்டர் ஹிட்'  ஆகிறது என்று இன்றைய காலகட்டத்தில் போட்டிகள் நிலவிக் கொண்டிருக்கின்றன.

அதேநேரத்தில் 'பயோ-பிக்'  எனப்படும் ஒருவரது வாழ்க்கையைத் தழுவி அல்லது வாழ்க்கை வரலாற்றையோ முன்வைத்து எடுக்கும் திரைப்படங்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டிருக்கிறது.  டங்கல், மேரி கோம், எம். எஸ். தோனி- தி அன்டொல்ட் ஸ்டோரி, கங்குபாய் கத்யவாடி, ராக்கெட்ரி:  நம்பி விளைவு என்று வரிசைப்படுத்திக் கொண்டே போகலாம்.

குறிப்பாக,  விளையாட்டு வீரர்களைக் குறித்து படம் எடுக்கும்பொழுது அது ரசிகர்கள் மத்தியில் தனி ஒரு வரவேற்பைப் பெறுகிறது. 

கிரிக்கெட் உலகில் தனக்கென்று தனியொரு இடம் பதித்திருக்கிறார் 'முரளி அண்ணா' என்றழைக்கப்படும் 'முத்தையா முரளிதரன்' .  அவர் செய்த சாதனைகள், கடந்து வந்த பாதைகள்,  அவர் சந்தித்த சவால்கள் குறித்து  '800' என்ற பெயரில் எம். எஸ். ஸ்ரீபதி இயக்கத்தில் படம் வெளியாக இருக்கிறது.

1972 ஏப்ரலில் பிறந்த முத்தையா முரளிதரன் இலங்கையைச் சேர்ந்த மலையகத் தமிழர்.  இவரின் பூர்வீகம் தமிழ்நாடு. பள்ளிப் பருவத்தில் மிகச் சிறந்த கிரிக்கெட் வீரராக இருந்த இவர், தொடக்கத்தில் ஒரு வேகப்பந்து வீச்சாளராகவே இருந்தார்.  பயிற்சியாளர் சுனில் 

ஃபெர்னான்டோவின் ஆலோசனைக்கேற்ப 'ஆஃப்- ஸ்பின்' முறையைக் கற்றுக் கொண்டு,  சுழற்பந்து வீச்சாளராக மாறினார்.  

பள்ளிப் பருவத்துக்குப் பிறகு 'தமிழ் கிரிக்கெட், தடகளக் கழகத்தில்' இணைந்து கிரிக்கெட் உலகுக்குத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.  தனது முதல் போட்டியாக, 1992-இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியில் விளையாடி, 141 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.இந்நேரத்தில்தான், இலங்கையின் கிரிக்கெட் அணி தடுமாறிக் கொண்டிருந்தது. 38 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த அணியில் பந்து வீச்சாளர்கள் சொல்லிக்கொள்ளும்

அளவுக்கு இல்லை. முரளியின் என்ட்ரீ இலங்கை அணிக்கு நல்ல ஒரு பலமாக அமைந்தது. இதற்குப் பிறகு, இலங்கை கிரிக்கெட் அணி  வெற்றிகளைக் குவிக்கத் தொடங்கியது . 

1993- இல் தென்னாப்பிரிக்காவுக்கு  எதிராக விளையாடிய டெஸ்ட் போட்டியில், 104 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.  1995- இல் டிசம்பரில் ஆஸ்திரேலியாவுக்கு இலங்கை அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது, ஆஸ்திரேலியா- இலங்கை அணிகளுக்கு எதிரான பாக்ஸிங்- டே டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இதில் முரளிதரனும் கலந்து கொண்டார். இப்போட்டிக்கு முன்பு வரை 22 டெஸ்ட் போட்டிகள் மட்டுமே விளையாடி இருந்த முரளிதரன் அதில் 80 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை நிகழ்த்தினார். 

பாக்ஸிங் டே போட்டியின், இரண்டாவது நாளில், ஆஸ்திரேலிய அணியின் நடுவரான, டாரோல் ப்ரூஸ் ஹையர், 'முரளி பந்து வீசுவதற்குப் பதிலாக, பந்தை எறிந்து கொண்டிருக்கிறார்' என்று குற்றம் சாட்டியது சலசலப்பை ஏற்படுத்தியது. முரளிதரனை  ஐ.சி.சி. மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தியது. இந்தச் சோதனையும் முரளிக்கு சாதகமாகவே அமைந்தது. 1996, 1999 ஆகிய ஆண்டுகளில் இவரின் பந்து வீச்சு முறை சரியாக உள்ளது என்று அறிவித்து, விளையாட அனுமதித்தது.

1996- இல் நடைபெற்ற கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டியை இந்தியா, பாகிஸ்தான், இலங்கை நாடுகள் ஒன்றிணைந்து நடத்தின. இதில் இறுதி போட்டி வரை முன்னேறிய இலங்கை அணி, பாகிஸ்தானில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி முதல் முறையாக உலகக் கோப்பையை வென்றது.  

1997-இல் நடைபெற்ற ஹாமில்டன் டெஸ்ட் சீரிஸின் இரண்டாவது இன்னிங்ஸில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில், ஸ்டீபென் ஃப்ளெம்மிங்கை வீழ்த்தி தனது 100- ஆவது விக்கெட்டை எடுத்து சாதனை படைத்தார்.

1998-இல் ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில், முதல் முறையாக ஒரே போட்டியில், பத்து விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை புரிந்த முதல் இலங்கை அணி வீரர் என்ற பெருமைக்கு ஆளானார். தனது 300- ஆவது விக்கெட்டை 58- ஆவது டெஸ்ட் போட்டியில் எடுத்தார்.டெஸ்ட் கிரிக்கெட்டை பொருத்தவரை முரளிதரன் ஸ்பெஷல். டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவது ஒரு சவாலான விஷயம். அந்தச் சவாலையும் ஏற்றுக்கொண்டு, தனது திறமையின் மூலம் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் 800 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

இதனால்தான் இவரின் வெற்றியைக் குறிப்பிடும் விதமாக, இவரின் வாழ்க்கை வரலாறு குறித்து தயாரித்த படத்துக்கு '800' என்று பெயரிட்டுள்ளனர்.  பிரிட்டன் ஆண்டுதோறும் வெளியிடப்படும் கிரிக்கெட் உலகின் பைபிள் என்றழைப்படும் 'விஸ்டன் இதழ்', முரளிதரனை டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த பந்து வீச்சாளர் என்று குறிப்பிட்டுள்ளனர். 2007-இல் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் 700- ஆவது விக்கெட்டை எடுத்து, ஆஸ்திரேலிய சுழற்பந்து ஜாம்பவானான ஷேன் வார்ன்-க்குப் பிறகு அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது பவுலர் என்ற பெருமை பெற்றார்.

2010- ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ப்ரக்யான் ஓஜாவை வீழ்த்தி, தன் 800- ஆவது டெஸ்ட் விக்கெட்டை பதிவு செய்தார். இதுவே கிரிக்கெட் வரலாற்றில் ஒரு உச்சபட்ச சாதனையாகக் கருதப்படுகிறது. அந்தப் போட்டியே முத்தையா முரளிதரனின் கடைசி டெஸ்ட் போட்டியாக அமைந்தது. 

2011-இல் நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருடன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப்போவதாக 2010-இல்  முரளி அறிவித்தது அவரின் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  2011-இல் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருடன் முரளிதரனின் கிரிக்கெட் சகாப்தம் முடிவுக்கு வந்தது.  இலங்கை அணி இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியிடம் வீழ்ந்தது.  

கிரிக்கெட் உலகில் பல சவால்களைச் சந்தித்தாலும், தன்னை குற்றம் கூறிய ஆஸ்திரேலிய அணி மீண்டும் முரளிதரனை பந்துவீச்சு பயிற்சியாளராகப் பயிற்சி அளிக்க அழைத்தனர். இதை இவரும் பெருமிதத்துடன் ஏற்று, பயிற்சியாளராகவும் ஆஸ்திரேலிய அணிக்குச் சென்றார்.  அதே ஆஸ்திரேலிய அணியின் வீரரான ஸ்டீவ் வாக், முத்தையா முரளிதரனை பந்து வீச்சின் 'டான் ப்ராட்மேன்'  என்று குறிப்பிட்டுள்ளார். 

கிரிக்கெட்டில் மட்டுமில்லாமல், 2004- ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டத்தின் தூதுவராக இணைந்ததோடு, சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவும் வகையில், 'இலங்கையில் நற்குண முன்னேற்ற அமைப்பு'  என்பதை 1999-இல் தொடங்கி,  10 ஆயிரம் குழந்தைகளுக்கு இலவச கல்வியை வழங்கி வருகிறார். 

'800' படத்தில் முதலில் விஜய் சேதுபது நடிக்கப் போவதாக தகவல் வெளியாகி இருந்தது. ஆனால், சிலரின் வற்புறுத்தல்கள் காரணமாக,  அவர் இதிலிருந்து விலகியதாகவும் கூறப்படுகிறது.  

கிரிக்கெட் வீரராக மட்டுமே அனைவரும் அறிந்திருந்த முத்தையா முரளிதரனின் மறுபக்க வாழ்க்கையும், அவர் சந்தித்த சவால்களும், பிரச்னைகளும் படமாக்கப்பட்டுள்ளதால், '800' திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 
-

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com