திரைக்  கதிர்

ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் யுவன் சங்கர் ராஜாவுக்கும் சமீபகாலங்களில் பெரும் நட்பு நிலவுகிறது.
திரைக்  கதிர்


ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் யுவன் சங்கர் ராஜாவுக்கும் சமீபகாலங்களில் பெரும் நட்பு நிலவுகிறது. ரஹ்மானின் கச்சேரி நடைபெற்றதில் சர்ச்சைகள் எழுந்ததைத் தொடர்ந்து அவர் வேதனையில் இருப்பதைத் தெரிந்துகொண்டு சட்டென்று ரஹ்மானின் ஸ்டூடியோவுக்குப் போய் நின்றுவிட்டார் யுவன். அங்கே ரஹ்மானோடு பாதி நாள் இருந்து, சகஜமான மனநிலைக்கு அவரைத் திருப்பினாராம். அந்த நட்பையும் பிரியத்தையும் அங்கே இருந்த திரையுலகினர் எக்கச்சக்கமாகப் புகழ்ந்து பேசிக் கொண்டேயிருக்கிறார்கள்.

-----------------------------------------------

பா.இரஞ்சித்தின் "நீலம் ப்ரொடக்ஷன்ஸ்' தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத படம் படமாக்கப்பட்டு வருகின்றது. துருவ் விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு இந்தப் படத்தின் புது போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டிருந்தது. ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம், "மணத்தி கணேசன்' என்ற கபடி வீரரின் வாழ்க்கைக் கதையை மையமாகக் கொண்டு உருவாகிறது என்ற பேச்சுகள் எழுந்தன. யார் இந்த மணத்தி கணேசன். தூத்துக்குடி மாவட்டத்தின் கடைக்கோடி கிராமத்தில் கபடி விளையாடிக் கொண்டிருந்த இவர், தில்லியில் அர்ஜுனா விருது வென்ற கதை இது.

-----------------------------------------------

ரஜினி - லோகேஷ் கனகராஜ் இணையும் படத்தின் அறிவிப்பை அவசரகதியில் வெளியிட்டது சன் பிக்சர்ஸ். அதற்கு முன்னரே ரஜினியிடம் தேதி வாங்கிக் காத்திருக்கும் லைகா நிறுவனம், தங்களுக்கான படத்தை முடித்துக்கொடுத்துவிட்டு பிறகு சன் பிக்சர்ஸ் படத்தில் நடிக்கலாம் என ரஜினிக்குக் கோரிக்கை வைக்கிறது. "ஜெயிலர்' வசூல் வெற்றி பெற்றிருக்கும் நிலையில், அடுத்த படத்துக்கான பிசினஸ் பிரமாண்டமாக இருக்கும் எனக் கணக்கு போடும் சன் பிக்சர்ஸ், தங்கள் படத்தைச் சூட்டோடு சூடாக ஆரம்பிக்கலாம் எனச் சொல்லி, ரஜினியின் சம்பளத்தையும் கூடுதலாகக் கொடுத்திருக்கிறது. "அக்டோபரில் ஷூட்டிங் எனச் சொல்லியிருக்கும் வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்' என "லைகா'வின் சுபாஸ்கரனும் இயக்குநர் த.செ.ஞானவேலும் ரஜினியிடம் பேசிவருகிறார்கள்.

-----------------------------------------------

நித்யா மேனன்,  "தமிழ் நடிகர் தன்னை துன்புறுத்தியதாக' கூறியதாக சமூக வலைதளங்களில் சிலர் வதந்திகளைப் பரப்பி வந்தனர். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகை நித்யா மேனன், "இது முற்றிலும் தவறான செய்தி. அப்படி நான் எந்த ஒரு நேர்காணலும் கொடுக்கவில்லை. இந்த போலிச் செய்தியைப் பரப்பியது யார் என்று அடையாளம் காட்டுங்கள். மிகக் குறுகிய காலத்திற்குத்தான் நாம் அனைவரும் இங்கு இருக்கிறோம். நாம் ஒருவருக்கொருவர் எவ்வளவு தவறு செய்கிறோம் என்பது எனக்கு எப்போதும் ஆச்சரியமாக இருக்கிறது. வெளி உலகத்துக்கு எடுத்துச் சொல்வதால் மட்டுமே மோசமான நடத்தையை நிறுத்த முடியும் என்பதால் இன்று இதை நான் சுட்டிக்காட்டுகிறேன். சிறந்த மனிதர்களாக இருங்கள்'' எனப் பதிவிட்டிருக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com