பேல் பூரி

''கண்ணன்! உங்க முகம் வாடியது போல் இருக்கிறது. ஏதாவது பிரச்னையா சொல்லுங்கள். அர்ச்சனை வைத்து பிரசாதம் தருகிறேன்!''
பேல் பூரி

கண்டது


(கடலூரில் உள்ள ஒரு உணவகத்தில் எழுதப்பட்ட வாசகம்)

''வேலைக்கு ஆள் தேவை'' ஒரே தகுதி- மதுபானம் அருந்தாதவராக இருக்கணும்.

-பி.கவிதா,
சிதம்பரம்.

(அம்பத்தூரில் உள்ள ஓர் ஆட்டோவில் கண்ட வாசகம்)

''மனிதனும் கடவுள் உடல் உறுப்புகளைத் தானம் செய்யும்போது...''

-ஏ.மூர்த்தி,
திருவள்ளூர்.

(கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சிலஊர்கள்)

''குட்டைக்காடு, காப்புக்காடு, துவரங்காடு, ஈத்தாங்காடு, எறும்புக்காடு''

-ஓய்.விமலலதா,
நாகர்கோவில்.

(பேரணாம்பட்டில் ஒரு வாகனத்தில் எழுதப்பட்டிருந்தது)

''பஸ்ஸில் பயணிகள் தூங்கினால் சொகுசுப்
பயணம். டிரைவர் தூங்கினால் இறுதிப் பயணம்''

-ஜெ.மணிகண்டன்,
பேரணாம்பட்டு.


கேட்டது


(துறையூர் பேருந்தில் இருவர்)

''ஏண்டா தம்பி, என்னோட சட்டைப்பையிலிருந்து பணம் எடுத்தியா?''
''ஏங்க பிள்ளையைக் கரிச்சி கொட்டறீங்க? நான் எடுத்திருக்கக் கூடாதா?''
''சான்úஸ இல்லை. நீ எடுத்திருக்க மாட்டே!''
''அது எப்படி நான் எடுத்திருக்க மாட்டேன்னு அடிச்சு சொல்றீங்க?''
''இன்னும் பணம் மிச்சம் பையில் இருக்கே!''

-இரா.ஜனனி,
துறையூர்.

(திண்டுக்கல் டீக்கடையில் இருவர்)

''என்னப்பா இப்படி துரும்பா இளைச்சிப் போயிட்டே?''
''போன மாசம் நாலு நாள் காய்ச்சலில் படுத்திருந்தேன்!''
''ம். அப்புறம்''
'' அதுக்குப் பின்னாடி உன்னை மாதிரி கேட்கிறவங்களுக்குப் பதில் சொல்லியே இப்படி துரும்பா இளைச்சிட்டேன்!''

-க.நாகமுத்து,
திண்டுக்கல்.

(திருச்சி பெரிய ஆஸ்பத்திரி வாயிலில் இருவர்)

''மாப்பிள்ளை. ஒரு டவுட் கேட்பேன். தெரிஞ்சா சொல்லு. தெரியலைன்னா சொல்லாதே!''
''தெரியாட்டி எப்படி சொல்றது!''
''தெரியாததை தெரிந்த மாதிரி சொல்லு. தெரிஞ்சுக்கிறேன்!''

-ஜா.தேவதாஸ்,
தஞ்சாவூர்.

யோசிக்கிறாங்கப்பா!


''எதிலும் சற்றுப் பொறுமையாக இருங்கள். அது புத்திசாலித்தனம்!
ஆனால் பொறுமையாகவே இருந்துவிடாதீர்கள். அது சோம்பேறித்தனம்!''

-குலசை நஜிமுதீன்,
சென்னை-127.


மைக்ரோ கதை


''கண்ணன்! உங்க முகம் வாடியது போல் இருக்கிறது. ஏதாவது பிரச்னையா சொல்லுங்கள். அர்ச்சனை வைத்து பிரசாதம் தருகிறேன்!''
அர்ச்சகர் செந்தில் கேட்டுக் கொண்டிருக்கும்போதே அம்மன் கோயில் வாசலுக்குள் ஒருவர் நுழைந்தார். அவரைக் காட்டி கண்ணன் சில விஷயங்களைச் சொன்னார்.
வாசலை தாண்டி சந்நிதிக்கு வந்தார் அவர். வந்தவருக்கு அம்மன் தரிசன கற்பூரம் காட்டி கற்பூரத் தட்டை கொண்டு வந்து அவரிடம் நீட்டினார் அர்ச்சகர் செந்தில்.
''சார்! நீங்க கவர்மெண்ட் ஆபீஸில் வேலை பார்ப்பது போல தெரிகிறது. இங்கு சந்நிதியில் இருபுறமும் பக்தர்கள் நின்று அம்மனை பார்ப்பதற்கு வரிசையாக சில்வர் தடுப்பு கம்பிகள் அமைக்க வேண்டும். அதை உங்க உபயமாக செய்தால் அம்மன் அருள் உங்களுக்கு கிடைக்கும்!'' என்றார்.
சற்று யோசித்த அவர், ' 'அதற்கென்ன என் செலவில் கட்டாயம் கூடிய விரைவில் செய்து வைக்கிறேன்!'' என்று குங்குமப் பிரசாதம் வாங்கி வெளியே சென்றார்.
அவர் போனதும் அர்ச்சகர் செந்தில் கண்ணனை நோக்கி, ''அவர் வேலை செய்யும் ஆபீஸில் உங்க காரியம் முடிய ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்தால் என்று வருத்தப்பட்டு கொஞ்ச நேரத்துக்கு முன்னால் சொன்னீர்கள். இப்போது ஆயிரம் ரூபாய்க்கு பத்து மடங்காக பத்தாயிரம் ரூபாய் வரை கம்பித் தடுப்பு வைப்பதற்கு பத்தாயிரம் ரூபாய்க்கு செலவு அவர் செய்வதை நீங்கள் பார்க்க போகிறீர்கள். இதுவும் அம்மனின் அருள் தான்!'' என்றார் அர்ச்சகர் செந்தில்.
கண்ணனுக்கு மனதில் திருப்தி ஏற்பட்டது.

-கு.அருணாசலம்,
தென்காசி.

எஸ்எம்எஸ்

உழைப்புதான் ஒரு மனிதனை
மற்றொரு மனிதனைவிட முந்தச் செய்கிறது.

-தாமஸ் மனோகரன்,
புதுச்சேரி.

அப்படீங்களா!


கைப்பேசி உருவாகி கடந்த ஏப்ரல் 3-ஆம் தேதியுடன் 50 ஆண்டுகள் ஆகின்றன.
செங்கல் போன்ற அதிக எடையுடன் எங்கும் எடுத்துச் செல்லக் கூடிய கைப்பேசியை அமெரிக்காவைச் சேர்ந்த மோட்டாரோலா நிறுவனம் உருவாக்கியது. முதல் கைப்பேசி அழைப்பை அந்த நிறுவனத்தின் பொறியாளர் மார்ட்டின் கூப்பர் 1973-ஆம் ஆண்டு ஏப்ரல் 3-இல் மேற்கொண்டார். ஆனால் சந்தைக்கு கைப்பேசி வருவதற்கு அடுத்த 10 ஆண்டுகளாகின.

1983-இல் மோட்டோரோலா கைப்பேசி 3,995 அமெரிக்க டாலருக்கு விற்பனையானது. எடையோ ஒரு கிலோ. நீளம்33 செ.மீ.
1992-ஆம் ஆண்டு டிசம்பர் 3-இல் முதல் எஸ்எம்எஸ் 'மெரீ கிருஸ்துமஸ்' என அனுப்பப்பட்டது. 1997-இல் நோக்கியாவின் சந்தை வரவால் கைப்பேசிகள் புதிய பரிமாணம் கொண்டன. 2003-இல் நோக்கியாவின் 1100 ரக கைப்பேசிதான் உலக வரலாற்றில் 25 கோடிக்கு எண்ணிக்கையில் விற்பனையானது.
பின்னர் 2007-இல் முதல் ஐபோனை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டு கைப்பேசியில் இணையப் பயன்பாட்டை கொண்டு வந்தது. கைப்பேசி பயன்பாட்டாளர்களை ஐபோன்வசீகரமும் செய்தது.
அதன்பின்னர் ஸ்மார்ட்போன்களில் செயலிகளின் ஆதிக்கம் அதிகரித்தவுடன், ஆண்ட்ராய்டு பயன்பாடு கைப்பேசிகள் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைந்தது.
இந்த கைப்பேசிகளுக்கு இணைய சேவையின் வேகத்தை 2ஜி,3ஜி, 4,ஜி,5ஜி என அதிகரித்து இன்று உலக தகவல்கள் அனைத்தும் ஸ்மார்ட் போனுக்குள் அடக்கி வைக்கப்படும் சாதனமாக மாறிவிட்டது.
50 ஆண்டுகளில் கைப்பேசிகளின் அசூர வளர்ச்சி நம்பை பிரம்பிக்க வைக்கிறது. செயற்கை நுண்ணறிவைக் கொண்ட அடுத்த தொழில்நுட்ப புரட்சியில் கைப்பேசியின் அடுத்த பரிமாணத்தை வரவேற்போம்.

-அ.சர்ப்ராஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com