பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 153

சுமார் அரை மணி நேரக் காத்திருப்புக்குப் பிறகு அறையின் கதவு திறந்தது. புத்த பிரியா மெளரியா (பி.பி. மெளரியா) மட்டும் வெளியே வந்தார். அவரை அடிக்கடி பார்த்திருக்கிறேனே தவிர, எனக்கு நேரடிப் பழக்கம் கிடையாத
பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 153
Updated on
4 min read


சுமார் அரை மணி நேரக் காத்திருப்புக்குப் பிறகு அறையின் கதவு திறந்தது. புத்த பிரியா மெளரியா (பி.பி. மெளரியா) மட்டும் வெளியே வந்தார். அவரை அடிக்கடி பார்த்திருக்கிறேனே தவிர, எனக்கு நேரடிப் பழக்கம் கிடையாது. 

'நீங்கள் இருவரும் இங்கே எதற்காகக் காத்திருக்கிறீர்கள்? பத்திரிகை செய்தி எதுவும் கிடையாது'' என்று அவராகவே எங்களிடம் தெரிவித்துவிட்டு நகர்ந்தார். பத்திரிகை நண்பர் கிளம்பி விட்டார். நான் வெளியில் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்தேன். 

நான் உள்ளே அழைக்கப்பட்டேன். அவர்கள் மூவரும் என்னை எதிர்பார்க்கவில்லை என்பது தெரிந்தது. "யாரோ ஒருவர் காத்திருக்கிறார்' என்று மட்டும் அந்த உதவியாளர் தெரிவித்திருக்கக் கூடும் என்று நினைக்கிறேன்.
'என்ன, இந்த நேரத்தில் இங்கே வந்திருக்கிறீர்கள்? உட்காருங்கள்...'' என்று சகஜமாக ஆர்.கே. தாவன் சொன்னவுடன், அந்த அறையில் காணப்பட்ட இறுக்கம் தளர்ந்தது. அவர்கள் எல்லோருமே நரசிம்ம ராவின் நம்பிக்கைக்குரியவர்கள் என்பதால், நான் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பேசத் தொடங்கினேன்.
'மோதிலால் நேரு மார்க் சென்றிருந்தேன். நரசிம்ம ராவ்ஜி தனது கட்சித் தலைவர் பதவியை ராஜிநாமா செய்வதில் பிடிவாதமாக இருப்பதாகச் சொல்கிறார்கள். அதைப் பற்றி உங்களிடம் கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ளலாம் என்றுதான் நான் வந்தேன்.''
'நீங்கள் இப்போது நண்பராக வந்திருக்கிறீர்களா இல்லை பத்திரிகையாளராக வந்திருக்கிறீர்களா?''  கேட்டது தாவனல்ல, பூஜாரி.
என்ன பதில் சொல்வதென்று எனக்குப் புரிய வில்லை. நான் காங்கிரஸ் கட்சிக்காரனல்ல; பூஜாரியின் நண்பன் என்று சொல்லுமளவுக்குப் பெரிய மனிதனுமல்ல; பத்திரிகையாளர் என்று சொல்லலாம் என்று வாயெடுப்பதற்கு முன்னர், தாவன்ஜியே பேச்சை திசைதிருப்பிவிட்டார்.
'மோதிலால் நேரு மார்க் எல்லாம் இருக்கட்டும், நீங்கள் பிரணாப் முகர்ஜிக்கும், கருணாகரன்ஜிக்கும் வேண்டியவர்தானே.. அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று சொல்லுங்கள்''  தாவன்.
'பிரணாப்தா என்னிடம் எதுவும் பேசவில்லை. அவர் மோதிலால் நேரு மார்க்கில்தான் இருக்கிறார். ராஜிநாமா செய்ய வேண்டாம் என்று வற்புறுத்துவதாகக் கேள்விப்பட்டேன். கருணாகரன்ஜியை சந்தித்தேன். அவர் நரசிம்ம ராவ்ஜி ராஜிநாமா செய்தால்தான் ஆயிற்று என்று பிடிவாதமாக இருக்கிறார்.  பிரணாப் முகர்ஜி கட்சித் தலைவராவதில் அவருக்கு எதிர்ப்பில்லை.''
அதைக் கேட்டவுடன் ஜனார்த்தன் பூஜாரிக்குக் கோபம் வந்துவிட்டது. நான் சொல்லி  வாயை மூடவில்லை, அவர் பொரிந்து தள்ளத் தொடங்கிவிட்டார்.
'கருணாகரன்ஜி ஒரு குள்ள நரி. பிரணாப் முகர்ஜி பெயரை முன்மொழிவது வெறும் பாசாங்கு. அவருக்குக் காங்கிரஸ் தலைவராக வேண்டும் என்று ஆசை. அப்படியே நரசிம்ம ராவ்ஜி பதவி விலகினால், ஏ.கே. அந்தோனி தலைவராவரே தவிர, யாரும் கருணாகரன்ஜியைத் தலைவராக ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. அவரை அடுத்த முறை சந்திக்கும்போது நான் சொன்னதாக அவரிடம் சொல்லுங்கள்.''
ஜனார்த்தன் பூஜாரியை சமாதானப்படுத்தினார் ஆர்.கே. தாவன். அதுவரை பேசாமல் இருந்த மாதவ்சிங் சோலங்கி பேசத் தொடங்கினார்.
'கருணாகரன்ஜி என்ன சொல்கிறார், சரத் பவார் என்ன சொல்கிறார், ராஜேஷ் பைலட் என்ன சொல்கிறார் என்பதெல்லாம் இப்போது முக்கியமல்ல. சோனியா காந்தி வெளிப்படையாக எதுவும் தெரிவிக்கத் தயாராக இல்லை. உள்துறை அமைச்சர் இந்திரஜித் குப்தா போஃபர்ஸ் விசாரணையை முடுக்கிவிடுவதில் தீவிரமாக இருப்பதால், நேரு குடும்பம் மெளனம் காக்கிறது. ஒன்று நரசிம்ம ராவ்ஜி ராஜிநாமா செய்யாமல் தைரியமாக வழக்குகளைச் சந்திக்க வேண்டும். அல்லது, செயல் தலைவர் ஒருவரை அவரே தேர்ந்தெடுத்து நியமிக்க வேண்டும்.''
தாவன்ஜியும், பூஜாரியும் சோலங்கியின் கருத்தை ஆமோதித்தனர். அவர்கள் பேசிக் கொண்டிருந்தபோதே, தொலைபேசி ஒலித்தது. எடுத்துப் பேசிய ஆர்.கே. தாவனின் முகம் மாறியது.
தொலைபேசி உரையாடல் முடியும்வரை நாங்கள் மூவரும் தாவன்ஜியின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தோம். ஒருசில விநாடிகளில் உரையாடல் முடிந்துவிட்டது.
'தஸ் நம்பர் சே புலாத்தா ஹை (பத்தாம் நம்பரிலிருந்து அழைக்கிறார்கள்)'' என்றார் ஆர்.கே. தாவன்.
சோனியா காந்தியின் இல்லமான 10, ஜன்பத்திலிருந்து அழைப்பு வந்திருந்தது. உடனே கிளம்பினார் தாவன். நான் விடைபெற்று வெளியே வந்துவிட்டேன். என்னைத் தொடர்ந்து மற்றவர்களும்...
காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இருந்த டெலிஃபோன் பூத்திலிருந்து பிரணாப் முகர்ஜியின் கிரேட்டர் கைலாஷ் வீட்டைத் தொடர்பு கொண்டேன். இப்போதுபோல, செல்லிடப்பேசிகள் இல்லாத காலம் அது. எண்ணைச் சுழற்றித் தொடர்பு கிடைத்ததும் ஒரு ரூபாய் நாணயத்தைப் போட்டுப் பேசும் டெலிஃபோன் பூத்துகள்தான் பெரும்பாலான பத்திரிகையாளர்களுக்கும் உதவியாக இருந்தன.
எதிர்முனையில் பிரணாப்தா உதவியாளரான எம்.கே. முகர்ஜி ஃபோனை எடுத்தார். பிரணாப் முகர்ஜி வெளியே போயிருப்பதாகவும், எந்த நேரத்திலும் வரக் கூடும் என்பதால், கிளம்பி வந்தால் சந்திக்கலாம் என்று தெரிவித்தார். அதற்குப் பிறகு நான் ஏன் காத்திருக்கிறேன்... ஆட்டோ பிடித்து கிரேட்டர் கைலாஷ் நோக்கி விரைந்தேன். 
அங்கே போவதற்குள் பிரணாப்தா வந்திருந்தார். நான் வந்திருப்பது தெரிவிக்கப்பட்டதும் என்னை உள்ளே அழைத்தார்.
'உன்னிடம் பேசுவதற்கு இப்போது நேரமில்லை. தில்லியில்தானே இருக்கிறாய், இரண்டு நாள்கள் கழித்து சந்திப்போம். மிக முக்கியமான வேலையில் இருக்கிறேன். என்ன நடக்கிறது என்பது உனக்குத் தெரிந்திருக்கும். பிறகு பார்ப்போம்...''
அவர் சொன்னபோது, எனக்கு வருத்தம் ஏற்படவில்லை. உதவியாளர் மூலம் "இப்போது சந்திக்க முடியாது' என்று சொல்லி என்னைத் திருப்பி அனுப்பி இருக்கலாம். என்மீது எந்த அளவுக்கு அன்பும் நம்பிக்கையும் இருந்தால், உள்ளே அழைத்து பிறகு வரும்படி சொன்னார் என்பதை இன்றுவரை நினைத்து நெகிழ்கிறேன்.
எதுவும் பேசாமல் தலையை மட்டும் ஆட்டினேன். "கருணாகரன்ஜியையும், ராஜேஷ் பைலட்டையும்...' என்று நான் தொடங்குவதற்குள், "அதற்கெல்லாம் இனி அவசியமே இருக்காது...' என்று இடைமறித்துக் கூறி முற்றுப்புள்ளி வைத்து விட்டார். நான் அறையிலிருந்து வெளியே வந்துவிட்டேன்.
எம்.கே. முகர்ஜியிடம் சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்து விட்டுக் கிளம்ப எத்தனித்தேன். வெளியே ஒரு கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. அறையிலிருந்து வெளியே எட்டிப் பார்த்தேன். பிரபல வழக்குரைஞர் கபில் சிபல் (அப்போது அவர் அரசியலுக்கு வரவில்லை. வழக்குரைஞராக மட்டுமே இருந்தார்). காரில் இருந்து இறங்கி, நேராக பிரணாப் முகர்ஜியின் அறையை நோக்கி நடந்தார்.
லக்குபாய் பாதக் வழக்கில் நரசிம்ம ராவ் ஆஜராக வேண்டும் என்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜித் பார்ஹோரி உத்தரவு பிறப்பிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அந்த வழக்கு குறித்து விவாதிப்பதற்கு வழக்குரைஞர் கபில் சிபல் வந்திருக்கக்கூடும் என்று நினைத்துக் கொண்டேன்.
கிரேட்டர் கைலாஷிலிருந்து கன்னாட் பிளேசிலுள்ள எனது அலுவலகத்துக்கு வரும்போதுதான், தமிழக முதல்வர் கருணாநிதியும், கர்நாடக முதல்வர் ஜே.எச். பாட்டீலும் காவிரிப் பேச்சுவார்த்தைக்காக தில்லி வந்திருக்கிறார்கள் என்பது நினைவுக்கு வந்தது. அலுவலகத்துக்குப் போகாமல், கெளடில்யா மார்க்கிலுள்ள தமிழ்நாடு இல்லத்துக்குச் செல்லும்படி ஆட்டோக்காரரைப் பணித்தேன்.
தமிழக முதல்வர் வந்திருக்கிறார் என்பதால், தமிழ்நாடு இல்லம் விழாக்கோலம் பூண்டிருந்தது. திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமல்லாமல், முதல்வரை சந்திக்கத் தமிழகத்தைச் சேர்ந்த தில்லி பிரமுகர்களும், தமிழ்நாட்டுடன் தொடர்புடைய தொழிலதிபர்களும் அங்கே குழுமி இருந்தனர்.
முதல்வருடன் வந்திருந்த அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன் மட்டுமல்லாமல், அவரது மனசாட்சிக் காவலராகக் கருதப்படும் மத்திய தொழில்துறை அமைச்சர் முரசொலி மாறனும் அவருடன் இருந்தார். தில்லியிலுள்ள பத்திரிகை நிருபர்கள் அங்கே காத்திருந்தனர். அவர்களில் ஒருவனாக நானும் இணைந்து கொண்டேன்.
மத்திய கூட்டணியில் தமிழக ஆளுங்கட்சியான திமுகவும், கர்நாடகத்தில் ஆட்சியில் இருக்கும் ஜனதா தளமும் இடம் பெற்றிருந்தும்கூடக் காவிரிப் பிரச்னை எந்தவித சமரசமும் ஏற்படாமல் இழுத்தடித்துக் கொண்டிருந்தது. தேவே கெளடா பிரதமராக ஆதரவு அளிப்பதற்கு காவிரி நதிநீர்ப் பங்கீடு குறித்து முதல்வர் கருணாநிதி உத்தரவாதம் பெற்றிருந்தார் என்று பரவலாக நம்பப்பட்டது.
இரண்டு மாதங்களுக்கு முன்னர், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஏ.எம். அஹமதி தலைமையிலான மூன்று பேர் அமர்வு, இரு மாநில முதல்வர்களும் சந்தித்துப் பேசி இடைக்காலத் தீர்வு ஒன்றை உருவாக்க வேண்டும் என்று கூறியிருந்தது. முதல்வர்கள் சந்தித்தார்கள். ஆனால், தீர்வுதான் எட்டப்படவில்லை.
அதன் தொடர்ச்சியாகத்தான் இப்போது இரண்டு மாநில முதல்வர்களும் தில்லியில் சந்தித்துப் பேசுவது என்று முடிவெடுத்திருந்தனர். பிரதமர் தேவே கெளடா இந்தப் பிரச்னையில் தலையிடாமல் தவிர்த்து வருகிறார் என்கிற வருத்தம் திமுகவுக்கும், முதல்வர் கருணாநிதிக்கும் இருப்பதாகக் கசிந்த தகவல்களை உறுதிப்படுத்துவதுபோல இருந்தன சில நிகழ்வுகள்.
பிரதமர் தேவே கெளடாவின் மதிய விருந்துக்கான அழைப்பை ஏற்றுக் கொண்டிருந்தார் முதல்வர் கருணாநிதி.  ஆனால், காவிரிப் பிரச்னையில் அவர் தலையிட மறுப்பதும், கர்நாடகம் எந்தவித சமரசத்துக்கும் தயாராக இல்லாமல் இருப்பதும் அவரைக் கோபப்படுத்தி இருக்க வேண்டும். பிரதமரின் மதிய விருந்தை ரத்து செய்து, அதில் கலந்து கொள்வதை முதல்வர் தவிர்த்துவிட்டார். பிரதமரின் விருந்தைத் தவிர்த்த முதல்வர், குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மாவின் அழைப்பை ஏற்று, ராஷ்டிரபதி பவனில் இரவு விருந்தில் கலந்து கொண்டார். 
பெங்களூரிலும், சென்னையிலும் நடைபெற்ற காவிரி நதிநீர்ப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளில் எந்தவித முடிவும் எட்டப்படாத நிலையில், தில்லி பேச்சுவார்த்தையும் பலனளிக்கும் என்கிற நம்பிக்கையை முதல்வர் கருணாநிதி இழந்துவிட்டார் என்று பரவலாகப் பேசப்பட்டது. 
காவிரிப் பிரச்னை குறித்தும், முதல்வரின் தில்லி விஜயம் குறித்தும், திட்டக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டது குறித்தும் நிருபர்களிடம் முதல்வர் பேசுவார் என்று எதிர்பார்த்துக் காத்திருந்த எங்களுக்குப் பெருத்த ஏமாற்றம்.
'திமுகவின் ஆதரவில் ஐக்கிய முன்னணி ஆட்சி அமைந்திருக்கும் நிலையில், காவிரிப் பிரச்னைக்குத் தீர்வு கண்டு சாதனை படைக்க வேண்டும் என்பது முதல்வர் கருணாநிதியின் கனவு. கர்நாடக முதல்வர் ஜே.எச். பாட்டீலும் சரி, பிரதமர் தேவே கெளடாவும் சரி காவிரிப் பிரச்னையில் சமரசம் செய்தால் தங்களது செல்வாக்கு சரிந்துவிடும் என்று பயப்படுகிறார்கள்'' என்று நிருபர் ஒருவர் அனைவரின் மனதிலும் ஓடிக் கொண்டிருந்த எண்ணத்தைப் போட்டு உடைத்தார்.
திடீரென்று பரபரப்பு ஏற்பட்டது. முதல்வர் கருணாநிதி அவசரமாக எங்கோ கிளம்பிப் போகிறார் என்பது தெரிந்தது. அவரைத் தொடர்ந்து "முரசொலி' மாறன், மத்திய தரைவழிப் போக்குவரத்து அமைச்சர் டி.ஜி. வெங்கட்ராமன், இணையமைச்சர்கள் என்.வி.என். சோமு, டி.ஆர். பாலு, ஆற்காடு வீராசாமி, துரைமுருகன் உள்ளிட்டவர்களும் கிளம்பிச் சென்றனர்.
காவிரிப் பிரச்னைக்கு முடிவு எட்டப்படாத நிலையில், முதல்வர் கருணாநிதி கடுமையான முடிவை எடுக்கக்கூடும் என்பதால், அடுத்தகட்ட பரபரப்புக்கு நாங்கள் தமிழ்நாடு இல்லத்தில் காத்திருந்தோம்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com