நல்ல மனம்

'செலவுக்கு பணம் வேணும்னு சொன்னனே. ஏடிஎம்லே எடுத்துண்டு வந்தீங்களா' அசரீரி போல மைதிலியின் குரல் கேட்டது. 
நல்ல மனம்
Updated on
5 min read

'செலவுக்கு பணம் வேணும்னு சொன்னனே. ஏடிஎம்லே எடுத்துண்டு வந்தீங்களா' அசரீரி போல மைதிலியின் குரல் கேட்டது. 

வீட்டுக்கு வந்தும் அலுவலக வேலையில் மூழ்கியிருந்த சிவராமன் 'என்னுடைய கைப்பெட்டியில் கறுப்பு நிறப் பையில் இருபதாயிரம் ரூபாய் வைத்திருக்கிறேன்' என்றார். சற்று நேரத்தில் 'அப்படி என்ன... ஆபிஸிலிருந்து வந்ததும், மறுபடியும் ஆபிஸ் வேலை. என்னால கண்டுபிடிக்க முடியலை. வந்து எடுத்துக் கொடுத்துட்டுப் போங்க' என்றாள்.

முணுமுணுத்துக் கொண்டே அறைக்குள் வந்த சிவராமன் கைப் பெட்டியில் தேடினார். 'என்னது, பெட்டியிலே தானே கறுப்புப் பையை வைத்தேன். அதெப்படி மாயமாய்ப் போயிருக்கும்' என்று பதை பதைத்தார் சிவராமன்.

'கொஞ்சம் பொறுமையா உங்க பெட்டியில் இருக்கிற குப்பையைத் தள்ளி வைச்சிட்டுத் தேடுங்க' என்றாள் மைதிலி.

அலுவலகம் கொண்டு செல்கின்ற பெட்டியில் இருந்தவற்றை எல்லாம் வெளியே எடுத்து வைத்து விட்டுப் பெட்டியிலிருந்த எல்லா அறைகளிலும் தேடினார் சிவராமன், கறுப்பு நிறப் பையைக் காணவில்லை. சிவராமனின் படபடப்பு அதிகமாகியது. மனைவியிடம் சொன்னார். 'அந்தப் பையில என்னுடைய ஏடிஎம் கார்டு, பான் கார்டு, ஆதார், கிரெடிட் கார்டு, ட்ரைவிங் லைசன்ஸ், செக்புக் எல்லாமே இருக்கு. அந்தப் பை எங்கே போயிருக்கும்.'

'நிதானமா யோசிச்சுப் பாருங்க. நீங்க எடிஎம்ல பணம் எடுத்ததற்கப்புறம் வேறு எங்கே போனீங்க' என்று கேட்டாள். 'பணம் எடுத்ததற்கப்புறம் தள்ளு வண்டியிலே பழமும், பக்கத்திலே கடையிலே பூவும் வாங்கினேன். அப்புறம் ஓட்டல்லே போய் டிபன், காபி சாப்பிட்டு வண்டி எடுத்துண்டு வந்துட்டேன்'.

மனைவி வற்புறுத்தியதால் சிவராமன் கறுப்புப் பை காரில் விழுந்திருக்குமோ என்று தேடிப் பார்த்தார். பலனில்லை.  பெட்டியை சரியாக மூடாமல் தெருவிலோ, பழக்கடை, பூக்கடை அருகிலோ அல்லது ஓட்டலிலோ விழுந்திருக்க வேண்டும் என்ற முடிவிற்கு வந்தார்கள்.

'நீங்க வங்கியோட ஹெல்ப் லைனுக்குப் போன் பண்ணி ஏடிஎம் மற்றும் கிரெடிட் கார்டு வேற யாரும் உபயோகிக்காமல் தடை பண்ணிடுங்க' என்றாள் மைதிலி.
ஏடிஎம், கிரெடிட் கார்டு எண்களை எங்கும் குறித்து வைக்காததால் அதுவும் செய்ய முடியவில்லை ' பணமும் மற்ற முக்கிய ஆவணங்களும் தவற விட்டு விட்டேனே' என்று நொந்து கொண்டார் சிவராமன்.
' நம்பிக்கையோட இருங்க. நம்ம அதிர்ஷ்டம், நல்லவங்க யார் கிட்டயானும் கிடைச்சா நம்ம பொருள் நம்மகிட்டே திரும்ப வரும்' என்றாள் மைதிலி,
'எனக்கு நம்பிக்கையில்லை, மைதிலி, அந்த இடத்தில் மக்கள் நடமாட்டம் அதிகம். அதுவும் சிறிய கடைக்காரர்களும், அன்றாட வேலை செய்பவர்களும். அவங்க கிட்டே ஒரு பெரும் தொகை கிடைத்தால் கஷ்டம் தீர்ந்தது என்று சந்தோஷப்படுவார்கள். பணத்தை எடுத்துக்கிட்டு மீதி எல்லாத்தையும் தூக்கிப் போட்டு விட்டுப் போயிடுவாங்க' என்றார்.
'நீங்க எப்போதுமே இப்படித்தான், வறுமையிலே இருப்பவங்க ஏமாத்துவாங்க அப்படின்னு ஒரு நினைப்பு. ஏன், ஏழைகள் மீது உங்களுக்கு இத்தனை அவநம்பிக்கை. சில பணக்காரர்களை விட ஏழைகள் நேர்மையில் அதிக நம்பிக்கை கொண்டவர்கள்.'
'அவங்களுக்கு நேர்மையில்லை அப்படின்னு சொல்லலை. அன்றாடத் தேவைக்குப் போதிய வருவாய் இல்லாத போது போகும் வழியில் பெரும் தொகை கிடைத்தால், அது அதிர்ஷ்டம் என்றும், வறுமை நீங்க கடவுள் காட்டிய வழி என்றும் நினைப்பது சகஜம். அதனாலதான் எனக்குப் பணமும், ஆவணங்களும் கிடைக்கும் அப்படிங்கிற நம்பிக்கை இல்லை.'
'நம்பிக்கையோடு இருங்க.  காலையில் பார்க்கலாம். நீங்க சாப்பிட்ட ஓட்டல் பேர் ஞாபமிருக்கா? காலையில் ஓட்டல் டெலிபோன் நம்பர் கண்டுபிடிச்சு அங்கே தேடிப் பார்க்கச் சொல்லலாம்'
'அந்த ஓட்டல்ல பையைத் தவற விட்டு இருந்தா. என்னுடையதுன்னு ஆதார் கார்டு பார்த்தா அவயங்களுக்கு கண்டிப்பாகத் தெரிய வரும். அது என்னுடையது அப்படின்னு தெரிந்தாலும் நிச்சயமா சொல்ல மாட்டாங்க'என்று பெருமூச்சு விட்டார் சிவராமன்,
'ஏன், அப்படி என்ன செய்தீங்க'
நீண்ட பெருமூச்சுடன் சொல்ல ஆரம்பித்தார் சிவராமன்.
'இன்னிக்கு மாலையிலே சாந்தி பவனம் ஒட்டல்ல டிபன் சாப்பிடப் போனேன். இட்லி மற்றும் வடை சாப்பிட்டு மசாலா தோசைக்கு ஆர்டர் பண்ணினேன் ஆனால் இட்லி, வடை சாப்பிட்டவுடன் வயிறு நிறைந்தது போல இருந்தது.  ஆகவே சர்வரைக் கூப்பிட்டு "எனக்கு மசாலா தோசை வேண்டாம். பில்டர் காப்பி மட்டும் கொண்டு வா' என்றேன். 'சரி சார் மசாலா தோசை ஆர்டரை கேன்சல் பண்ணிடறேன் சார்' என்றான் அந்த சர்வர்.
'சாப்பிட்டு முடித்தவுடன் எனக்கு வந்த பில்லில் மசாலா தோசைக்கும் நூறு ரூபாய் போட்டு இருந்தது. சர்வரைக்  கூப்பிட்டுக் காட்டினேன். ஆர்டரை கேன்சல் செய்யறேன் அப்படின்னு சொல்லிட்டு பில்லுல போட்டிருக்கே. என்ன இது அப்படின்னு கோபமா கேட்டேன்.'
'சார், நான் பில் போடுறவர் கிட்டே சொன்னேன். அவர் கேன்சல் பண்ண மறந்திருக்கலாம்' அப்படின்னு சொன்னார். 
'நான் கோபமா பேசறதைப் பார்த்த பில் போடற தம்பி வந்தார். ஆமாம் சார், மசாலா தோசை ஆர்டரைக் கேன்சல் பண்ணச் சொன்னார். அதை நான் கேன்சல் பண்ண மறந்துட்டேன். இந்த பில்லைக் கேன்சல் பண்ணிட்டு உங்களுக்கு வேறே பில்லை கொடுக்கிறேன் அப்படின்னு சொன்னான்.'
'தப்பு நடக்கறது சகஜம் அப்படின்னு பெருந்தன்மையா இருந்திருக்கலாம். அப்படிச் செய்யாம இந்த மாதிரி எத்தனை பேரை ஏமாத்தி இருக்கீங்க. இந்த நூறு ரூபாயை ஆளுக்குப் பாதியா எடுத்துக்கலாம் அப்படின்னு  பண்ணினீங்களா. அப்படின்னு வாய்க்கு வந்தபடி பேசிட்டேன்.'
'நான் போட்ட சப்தத்திலே சாப்பிட வந்தவங்க எல்லாம் எங்களையே பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. அவங்களுடைய மேலாளர் வந்து தெரியாம நடந்த தப்பு 
அப்படின்னு சொன்னார். கடைசியிலே முதலாளி வந்து சமாதானம் சொன்னார். இப்படி கவனக் குறைவா நடந்துகிட்டு ஓட்டல் பேரைக் கெடுக்கிறீங்க அப்படின்னு சர்வர், பில் போடற பையன் இரண்டு பேரையும் திட்டினார். தான் சாப்பிட்ட டிபனுக்கு காசு வாங்கலை'.
'சர்வர், பில் போடற பையன் இரண்டு பேர் முகத்தைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது. அழுதுறுவாங்க போல இருந்தது. அப்பத்தான் நான் தப்பு பண்ணிட்டேன். இந்த மாதிரி அவங்களைத் திருடன்று சொல்லற மாதிரி பேசி இருக்கக் கூடாது அப்படின்னு மனத்திலே எண்ணம் வந்தது. என்னுடைய முன் கோபம், அவசர புத்தி என்னை அப்படிப் பேச வைத்தது. அந்தக் குற்ற உணர்ச்சியிலே அவசரமாக எழுந்து வந்த போது அந்த பையைத் தவற விட்டிருப்பேன்.'
'நீயே சொல்லு, இந்த மாதிரி பேசினதற்கு அப்புறம் அவங்களுக்கு எனக்கு உதவி செய்ய மனம் வருமா' என்றார் சிவராமன், 'எனக்கு மற்றவங்க மேலே நம்பிக்கை இருக்கு. நேர்மையாக சம்பாதித்த பணம். கண்டிப்பா கிடைக்கும். கடவுளை வேண்டிக்கிட்டு தூங்குங்க' என்றாள் மைதிலி,
இரவு ஒன்பது மணி, சாந்தி பவனம் சிற்றுண்டி சாலை.
கணினியில் அன்றைய தினத்தின் விற்பனையை சரிபார்த்து, ஓட்டல் உரிமையாளருக்கு விற்பனை விவரத்தை மின்னஞ்சல் மூலம் அனுப்பி விட்டு, ஓட்டல் மேல் தளத்தில் "சிப்பந்திகள் தங்கும் அறைக்குச் செல்ல எழுந்தான் கார்த்திக்.
வேலை முடித்து அறைக்குத் திரும்புவதற்கு முன் ஓட்டல் அறை எல்லாம் நன்றாக சுத்தம் செய்து இருக்கிறதா என்று சரி பார்த்து விட்டுச் செல்லுவது அவனுடைய வழக்கம். அப்படி பார்த்து வரும் போது வாடிக்கையாளர் சாப்பிட அமரும் இரு நாற்காலிகளுக்கு இடையே கருமையான நிறத்தில் ஒரு பை இருந்ததைப் பார்த்தான் காரத்திக்.  பைக்குள் பெயர், விலாசம் எதேனும் இருக்கிறதா என்று பையைத் திறந்த போது கனமாக இருந்த அந்தப் பையினுள் இருபதாயிரம் ரூபாய் மற்றும் பல வகையான கார்டு, காகிதங்கள் இருந்தன. ஆதார் கார்டில் இருந்த புகைப்படத்தை பார்த்து "இவருடைய பணப்பைதானாô இது' என்றது அவனுடைய மனம்.
இத்தனை பெரிய தொகையை இதுவரைப் பார்த்திராத கார்த்திக் கறுப்புப் பையை கையிலெடுத்துக் கொண்டு ஓட்டல் மேற்பார்வையாளரும், நண்பருமான சரவணன் அறைக்கு விரைந்தான். 
'சரவணன் சார், இந்தப் பை இரண்டு நாற்காலிகளுக்கு நடுவில் இருந்தது' என்றான்.
கறுப்புப் பையினுள் உள்ள எல்லாவற்றையும் ஆராய்ந்த சரவணன் கேட்டான். 'கார்த்திக், இந்தப் பை யாருடையது அப்படின்னு தெரியுதா உனக்கு'.
'தெரியும் சார். ஆதார் கார்டு இருந்தது. அதனால் யாருடையது அப்படின்னு தெரிஞ்சது. இன்னிக்கு பில்லிங்ல மிஸ்டேக் அப்படின்னு பயங்கரமா சண்டை போட்டாரே அவருடைய பை இது அவருடைய பெயர் சிவராமன்.'
'சரி, என்ன பண்ணலாம். சொல்லு?'
'பணத்தையும், ஆவணங்களையும் பறிகொடுத்து விட்டுத் தவிச்சுக்கிட்டு இருப்பார். அவருடைய செல்போன் நம்பர் அவருடைய பையில் இல்லை. இருந்தா, உங்களோட உடைமை பத்திரமாக எடுத்து வைத்திருக்கிறோம் அப்படின்னு சொல்லலாம். ஆதார் அட்டையில் வீட்டு விலாசம் இருக்கிறதால கொண்டு போய் அவங்க பொருளை அவங்க கிட்டே சேர்த்துட்டால் நல்லது அப்படின்னு நினைக்கிறேன், சார். அவருக்கும் நிம்மதி இருக்கும், நமக்கும் பொருளை அதுக்கு உரியவர் கையிலே சேர்த்து விட்டோம் அப்படின்னு திருப்தியாக 
இருக்கும்.
'சின்ன விஷயத்துக்குத் தேவை இல்லாமல் அந்த சிவராமன் சார் அதிகமாவே சத்தம் போட்டார். அவரால முதலாளிகிட்டேயும் நீ திட்டு வாங்க வேண்டி வந்தது. அப்படியும் அவருக்கு உதவி செய்யணும் அப்படின்னு நீ நினைக்கிறியா'.
'அவர் ஏதானும் மன அழுத்தத்திலே இருந்திருக்கலாம் சார். இல்லை, எல்லாத்துக்கும் உணர்ச்சி வசப்பட்டு சத்தம் போடற சுபாவம் அவருக்கு இருக்கலாம். அதுக்காக, நம்ம சுபாவத்தை மாத்திக்கலாமா சார். பையோட சொந்தக்காரர் யார் அப்படிங்கிற விஷயம் தெரிந்ததற்கு அப்புறமும் பொருளைத் திருப்பிக் கொடுக்கலைன்னா அது திருட்டு இல்லையா? நமக்கு எதுக்கு சார் மத்தவங்க உடைமை?' என்றான் கார்த்திக். 
'நீ சொல்லறது சரி, கார்த்திக், மனசு ஒரு சாத்தான். இதை காலையில கொடுக்கலாம் அப்படின்னு இருந்தால், மனசு மாறினாலும் மாறிடும். இந்த விவரம் தெரிந்தா மீதி பேர் நம்ம மனதை மாற்றுவதற்கு முயற்சி செய்வாங்க. நம்ம செய்யறது தப்பில்ல. நியாயம் அப்படின்னு நமக்கு நாமே சமாதானம் சொல்லிக்க, "அதிர்ஷ்டம் கதவை தட்டித்து' 'கடவுளாப் பார்த்துக் கொடுத்தது' அப்படின்னு சொல்லிப்போம். இதைத் தவிர இந்தப் பணத்தை அவர்கிட்ட கொண்டு சேர்க்கிறவரை பத்திரமாகப் பார்த்துக்கணும். அது வரைக்கும் நம்ம தூக்கமும் கெட்டுப் போகும்'
'என்னுடைய வண்டியிலே போய் கொடுத்து விட்டு வந்துடலாம். நான் முதலாளி கிட்டே இதைப் பத்திச் சொல்லிடறேன்.' என்றான் சரவணன்.
பணமும், ஆவணங்களும் பறிபோன கவலையில் தூக்கத்தை தொலைத்த சிவராமன் தம்பதியர்க்கு இரவு பத்து மணி காலிங் பெல் அழைப்பு ஆச்சரியமாக இருந்தது.
அதை விட ஆச்சரியம் அடைந்தார் சிவராமன். வாசல் கதவைத் திறந்த போது, ஓட்டலில் பில் முறைகேடு பற்றி எந்த சிப்பந்தியிடம் சற்றுத் தகாத வார்த்தைகள் பேசினாரோ, அந்த சிப்பந்தி மற்றொருவருடன் நின்றிருந்தான்.
அவனுடைய கையில் சிவராமனுடைய கறுப்புப் பை பொருள் கிடைத்த மகிழ்ச்சியில் அவருக்கு ஒன்றும் தோன்றவில்லை, மைதிலி அவர்களை உள்ளே அழைத்து அபரச் சொள்ளாள்.
கறுப்புப் பையை சிவராமனிடம் கொடுத்த சரவணன் சொன்னார். ' சார், நான் சாந்தி பவனம்' ஓட்டலில் மேற்பார்வையாளர், எங்கள் சிப்பந்தி கார்த்திக் இந்தக் கருப்புப் பையை இரு நாற்காலிகளுக்கு இடையே கண்டெடுத்து என்னிடம் கொடுத்தார். ஆதார் கார்டில் விலாசம் இருந்ததால், உங்களிடம் சேர்ப்பித்து விடலாம் என்று வந்தோம். உங்களுடைய பொருள் எல்லாம் இருக்கிறதா என்று சரி பார்த்துச் சொல்லுங்கள்.'
சிவராமன் பையினுள் பார்த்தார். இருபதாயிரம் ரூபாய் பணம் முதற் கொண்டு அவருடைய ஆவணங்கள், பேனா எல்லாம் அப்படியே இருந்தன. 'இந்த காலத்தில் இப்படியும் மனிதர்களா. நாம் எவ்வளவு மோசமாக மனிதர்களை எடை போடுகிறோம்' என்று அவர் மனது 
வெதும்பியது.
சரவணன், கார்த்திக் இருவருக்கும் நன்றி கூறிய சிவராமன், பையிலிருந்த ஆவணங்களை கையில் எடுத்துக் கொண்டு இருபதாயிரம் பணத்துடன் கார்த்திக் கையில் பையை கொடுத்தார். சற்று தயங்கியபடியே கார்த்திக்கிடம் சொன்னார்:
'தம்பி, நீ செய்த இந்த உதவி மகத்தானது. அதற்கு நான் நிச்சயமாக விலை போட முடியாது. பணம் தவிர, தவறவிட்ட ஆவணங்களை என்னிடம் சேர்ப்பித்து விட்டாய். இந்தப் பையில் இருபதாயிரம் ரூபாய் இருக்கிறது. உனக்கு எத்தனை தேவையோ அதனை எடுத்துக் கொள். நீ இருபதாயிரம் ரூபாய் எடுத்துக் கொண்டாலும் எனக்கு மகிழ்ச்சி தான்' என்றார்.
கார்த்திக் அந்தப் பையை வாங்க மறுத்தான். 'சார்... என்னுடைய வாழ்க்கையில் இத்தனை பணத்தை நான் பார்த்தது இல்லை. எங்க முதலாளி, உணவு, உடை, தங்க இடம், நல்ல சம்பளம் எல்லாம் கொடுத்து எங்களைப் பார்த்துகிட்டு இருக்கார். ஓட்டலுக்கு வரவங்க ஏதானும் மறந்து வைத்து விட்டுப் போறது வழக்கம் தான் அப்படி வைத்துவிட்டுப் போன பொருளை அதனுடைய உடைமையாளரைத் தேடி அவங்ககிட்ட ஒப்படைக்கணும். அது தான் தொழில் தர்மம் அப்படின்னு சொல்வார். அதைத்தான் சார் நான் செய்தேன். என்னுடைய கடமையை செஞ்சதுக்கு நான கை நீட்டி பணம் வாங்கிக்கிட்டா அது தப்பில்லையா?'
சிவராமன் சொன்னார். 'கார்த்திக், நீ சொல்றது உன்னுடைய நாணயத்தையும், கடமை உணர்ச்சியையும் காண்பிக்கிறது. இருந்தாலும், என்னுடைய மன சமாதானத்திற்காக இரண்டாயிரம் ரூபாயாவது நீ வாங்கிக்கிட்டா என்னுடைய மனசு நிம்மதி அடையும்.'
கார்த்திக் சொன்னான்" "சார்,  நான் எதையும் எதிர்பார்த்து உங்க பையை கொண்டு வரலை, கஷ்டப்பட்டு உழைத்த பணத்தையும், ஆவணங்களையும் இழந்து உங்க மனசு சஞ்சலப் பட்டிருக்கும். இதனால உங்க தூக்கம் கூட பாதிக்கப்படும். அது நடக்கக்கூடாது அப்படின்னு நினைச்சுத்தான் நானும், சாரும் வந்தோம்.'
'நீங்க உங்க பில்லில தப்பு இருந்தது சத்தம் போட்டீங்க, அது நியாயம் தான். ஆனால் சர்வர் தானே நீ, அப்படின்னு அந்த சர்வர் கிட்டே இளக்காரமா பேசினீங்க, என்னையும் திட்டினீங்க. அது எங்க எல்லாரையும் பாதிச்சுது. இந்த மாதிரி வசவுகள் எங்க தூக்கத்தையும் பாதிக்கிறது. படிக்கிற ஆசையிருந்தும்,மேலே படிக்க வழியில்லாம எங்க குடும்பத்துக்காக, கிராமத்தை விட்டு நகரத்துக்கு வந்து வேலை செய்கிறோம். எங்களை கேவலமாக நினைக்காமல், இவங்களுக்கும் நீதி, நேர்மை, நாணயம், சுயமரியாதை எல்லாம் உண்டு அப்படின்னு உணர்ந்து எங்களை நடத்தினால் சந்தோஷப் படுவோம். நாங்க வரோம் சார்' என்று சொல்லி விட்டுத் திரும்பிப் பார்க்காமல் சென்றான் கார்த்திக், சரவணனுடன்..
கார்த்திக் வார்த்தையிலிருந்த உண்மையை உணர்ந்த சிவராமன் வாயடைத்து நின்றார்.
நேர்மை என்ற விதை முளைக்க பணக்காரன், ஏழை என்ற பாகுபாடு தேவையில்லை. நேர்மை சாதியைப் பார்த்தும் வருவதில்லை. அதற்குத் தேவை பண்பட்ட நல்ல மனம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com