

எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல், விஜய், அஜித், சிம்பு, தனுஷ் போன்ற தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்கள் பின்பற்றி வந்த மூன்றெழுத்து ஃபார்முலாவை உடைத்த சிவகார்த்திகேயனும், விஜய் சேதுபதியும்தான் இக்கட்டுரையின் கதாநாயகர்கள்.
சென்னையின் அடையாளமான "மெரினா'தான் சிவகார்த்திகேயனுக்கும் தமிழ் சினிமாவில் அடையாளத்தைக் கொடுத்தது. காலடி பதிக்கும் முன்பே தன்னுடைய இலக்கை நிர்ணயித்தவர் சிவகார்த்திகேயன். மறுபக்கம் இலக்குகள் ஏதுமின்றி வெரைட்டியை மட்டுமே காட்ட நினைத்து தமிழ் சினிமாவில் உலா வந்துகொண்டிருப்பவர் விஜய் சேதுபதி. இதுவும் அவர் நிர்ணயித்தது அல்ல, "கோயிங் வித் த ஃப்லோ' ஃபார்முலாதான். இவ்விருவருக்குமே ஒத்துப்போகும் ஒரே விஷயம் உழைப்பு. ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் எஸ்.கே சின்னத்திரையிலும் வி.ஜே.எஸ் வெள்ளித்திரையின் ஒரு ஓரத்திலும் நின்று தன்னை நிரூபிக்க போராடிக் கொண்டிருந்தவர்கள். அதன் பின்னர், அவரவர்களது வாழ்க்கையில் நிகழ்ந்தவற்றை அவர்களே பல மேடைகளில் சொல்லிவிட்டனர். இப்போது அவர்களுடைய ரூட் எப்படியிருக்கிறது? குறிப்பிட்ட காலகட்டத்துக்கு மேல் எல்லா ஹீரோக்களுக்கும் தங்கள் படங்களின் மூலம் திரையில் தன்னைப் பரிசோதித்துப் பார்ப்பது வழக்கம். ரஜினி - கமலுக்குப் பிறகு, தற்போதைய உச்ச நட்சத்திரங்களான விஜய்யும் அஜித்துமே இந்த ஃபார்முலாவைப் பின்பற்றியவர்கள்தாம். அந்தப் பரிசோதனை முயற்சியில் கிடைத்த படங்கள்தான் "திருமலை'யும் "தீனா'வும். இந்த இரு படங்களுக்குப் பிறகுதான் இருவரின் கிராஃபுமே மாறிப்போனது.
ஆனால், விஜய் சேதுபதியும் சிவகார்த்திகேயனும் அப்படியானவர்கள் அல்லர். இதற்கு முன், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் எதை மேற்கொண்டார்களோ, அதை மேற்கொள்ளக் கூடாது என்பதில் தீர்க்கமாக இருந்து வருகிறார்கள். இதில் விஜய் சேதுபதி இன்னும் உக்கிரம். சினிமாவைப் பொறுத்தவரை ஹீரோ என்கிற பிம்பம் வந்துவிட்டால் ரசிகர்களாக அவர்களை இறுகப் பற்றிக்கொள்வார்கள். எஸ்.கே ஆன் ஸ்க்ரீனில் நம்ம வீட்டு பிள்ளையென்றால், வி.ஜே.எஸ் ஆஃப் ஸ்கீரினின் நம்ம வீட்டு பிள்ளை. எஸ்.கே தன்னுடைய இலக்கை முன்பே நிர்ணயத்துவிட்டதால், அதை நோக்கியே அவரது படங்களும் பயணித்துக்கொண்டிருக்கின்றன.
விமர்சன ரீதியாக "வேலைக்காரன்', "சீமராஜா', "மிஸ்டர் லோக்கல்' எனத் தொடர்ந்து லேசாகச் சறுக்கினாலும், தன்னுடைய பாணியை சிவகார்த்திகேயன் விடுவதாக இல்லை. அதே ஃபார்மேட்டில், அதே ஜானரில், வித்தியாச முயற்சிகள் என எதையும் மேற்கொள்ளாமல் வந்தார்; வெற்றியும் பெற்றார். எவ்வளவு விமர்சனங்களுக்கு ஆளானாலும் அதைச் சற்றும் தனது தலையில் ஏற்றிக்கொள்ளாமல் தன்னுடைய வழக்கமான பாணியையும் பாதையையும் மட்டுமே குறிக்கோளாக வைத்து பயணிக்கிறார் சிவகார்த்திகேயன். மறுபக்கம், வெற்றியோ தோல்வியோ விஜய்சேதுபதி, வெரைட்டிதான் முக்கியமென பயணித்துக்கொண்டிருக்கிறார். "சூப்பர் டீலக்ஸ்'ஸில் திருநங்கை, "செக்கச் சிவந்த வானம்' படத்தில் ரசூல் இப்ரஹிம், "சீதக்காதி'யில் ஐயா ஆதிமூலம், "பேட்ட' படத்தின் ஜித்து என வெவ்வேறு வெரைட்டியில் வருகிறார். அதுவும் ஸ்டேட் விட்டு ஸ்டேட் நடித்து வருகிறார். மலையாளம், தெலுங்கு, ஹிந்தி எனக் கிடைக்கின்ற கேப்களில் எல்லாம் தடம் பதிக்க முற்படுகிறார்.
இதற்கு இடையில் விஜய்யுடன் இணைந்த சேதுபதியாக அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி தந்தார். பல்வேறு காரணங்கள் இதற்குப் பின்னால் ஒளிந்திருந்தாலும், இவரது இந்த செய்கை தமிழ் சினிமாவுக்கு மிகவும் ஆரோக்கியமானது. அது போல் கமலுக்கு வில்லன் ஆனது இன்னும் ஆச்சரியம். இப்படி மற்ற நடிகர்கள் செய்யத் தயங்குவதை "ஜஸ்ட் லைக் தட்' எனச் செய்து மீண்டும் தன்னை நிரூபித்திருக்கிறார் வி.ஜே.எஸ்.
பொது மேடைகளில் தன்னுடைய சக நடிகர்களின் பெயரையே சொல்லத் தயங்கும் நடிகர்களுக்கு மத்தியில் வி.ஜே.எஸ்ஸின் இந்தச் செய்கை அவரது இமேஜை இன்னும் உயர்த்தியிருக்கிறது.
ஹீரோவாகிய பின்னர், தயாரிப்பு கம்பெனி ஒன்றை ஆரம்பிக்க வேண்டுமென்பது தமிழ் சினிமாவின் நம்பிக்கை. இதை இருவருமே ஆரம்பித்தனர். அவர்களுக்கான பிரத்யேக பிம்பமே தயாரிப்பிலும் பிரதிபலித்தது. நட்புக்கு மரியாதை கொடுத்த சிவா, அருண்ராஜாவின் "கனா'வை நிறைவேற்றினார். தயாரிப்பிலிருக்கும் பிசினஸை உணர்ந்தபின், "நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படத்தைத் தயாரித்தார்.
மறுபக்கம், சேது. தன்னைப் போலவே படத்தையும் வித்தியாசமாகத் தயாரிக்க ஆரம்பித்தார். பிள்ளையார் சுழியையே "ஆரஞ்சு மிட்டாய்'யில் போட்டார். அதன் பின்னர், "ஜுங்கா'. ஒரு தயாரிப்பாளராக முழு வெற்றியை ருசிக்க முடியாவிட்டாலும் சற்றும் தளராமல், கலைக்கு மரியாதை கொடுக்க நினைத்து "மேற்குத் தொடர்ச்சி மலை' படத்தை தயாரித்தார். படமும் பல விருதுகளைத் தட்டிச் சென்றது.
"வெற்றியோ தோல்வியோ' ஃபார்முலாவைத் தன்னுடைய தயாரிப்பிலும் பயன்படுத்தினார். இருவரும் தங்களுக்கு எதுவேண்டுமென்பதில் தீர்மானமாக இருக்கிறார்கள். அதேபோல் தங்களுக்கு என்ன தெரியும் என்பதிலும் தீர்க்கமாக இருக்கிறார்கள். எஸ்.கே-வுக்கு சினிமா என்பது வியாபாரம். தன்னை நம்பி வரும் தயாரிப்பாளர்களுக்கு முடிந்தவரை லாபத்தை ஈட்டித் தர வேண்டுமென்ற எண்ணமுடையவர்.
மறுபக்கம் வி.ஜே.எஸ் தன்னால் எப்படியெல்லாம் உருமாற முடியுமோ அவ்வாறெல்லாம் முயற்சி செய்து பார்க்கக்கூடியவர். படத்தின் நாயகனாக இல்லாமல், கதையின் நாயகனாகப் பயணித்து வருகிறார். கதைக்குத் தன்னால் எந்தளவுக்கு நியாயம் சேர்க்க முடியுமென்பதை உணர்ந்து தொடர்ந்து பல்வேறு மொழிகளிலும் நடித்து வருகிறார். இருவருமே அவரவர்களது பயணத்தின் இலக்கை அடைய வாழ்த்துகள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.