பிரணாப்தா என்கிற மந்திரச் சொல்! - 154
By கி. வைத்தியநாதன் | Published On : 20th August 2023 12:00 AM | Last Updated : 20th August 2023 12:00 AM | அ+அ அ- |

தில்லி தமிழ்நாடு இல்லத்தில் நாங்கள் காத்திருந்தபோது தூர்தர்ஷன் செய்தி அறிக்கையில் பரவலாக எதிர்பார்க்கப்பட்ட அந்தத் தகவல், அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. லக்குபாய் பாதக் வழக்கில் நரசிம்ம ராவ் நேரில் ஆஜராக வேண்டும் என்று தில்லி சிறப்பு நீதிபதி அஜித் பார்ஹோரி சம்மன் அனுப்ப உத்தரவிட்டிருந்தார்.
லக்குபாய் பாதக் வழக்கு விசித்திரமானது. 1984-இல் இந்திரா காந்தி அமைச்சரவையில் நரசிம்மராவ் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தபோது, சந்திரா சுவாமி மூலம் செய்திக் காகித (நியூஸ் பிரிண்ட்) இறக்குமதி உரிமத்துக்காக ஒரு லட்சம் டாலர் கையூட்டுக் கொடுத்ததாகப் புகார் அளித்திருந்தார், லண்டன் ஊறுகாய் வியாபாரி லக்குபாய் பாதக். பத்து ஆண்டுகளுக்குப் பிறகுதான் வழக்கே பதிவாகியது.
எந்தவித நேரடி சாட்சியும் இல்லாத அந்த வழக்கில், எந்த அடிப்படையில் பி.வி.
நரசிம்ம ராவ் இணைக்கப்பட்டார் என்பது இன்றுவரை புதிராகவே இருக்கிறது. சந்திராசுவாமிக்குத் தொடர்புடைய அந்த மோசடியில் நரசிம்ம ராவுக்கும் தொடர்பிருக்கக் கூடும் என்கிற அடிப்படையில் வழக்குப் பதிவாகி இருந்தது. அந்த வழக்கில்தான் 1996 செப்டம்பர் 30-ஆம் தேதி, நரசிம்மராவ் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி அஜித் பார்ஹோரி உத்தரவிட்டிருந்தார்.
நரசிம்மராவ் பிரதமர் பதவியிலிருந்து விலகுவதற்காகக் காத்திருந்தது போல, அவர் மீது ஒன்றன் பின் ஒன்றாகப் பல வழக்குகள் தொடரப்பட்டன. அவரது அரசியல் வருங்காலத்துக்கே முற்றுப்புள்ளி வைத்த அந்த வழக்குகளில் லக்குபாய் பாதக் மோசடி வழக்கு முக்கியமானது. இந்த வழக்கின் முடிவு என்னவாயிற்று என்பது குறித்துப் பின்னர் பதிவு செய்கிறேன்.
நாங்கள் அக்பர் ரோடு காங்கிரஸ் அலுவலகத்தை அடைந்தபோது, ஏற்கெனவே பிரணாப் முகர்ஜியும், பொதுச் செயலாளர்களில் ஒருவரான தேவேந்திர துவிவேதியும் அங்கே வந்திருந்தனர். பி.வி. நரசிம்மராவின் அறிக்கை நகல் எடுக்கப்படுவதாகவும், பத்திரிகையாளர் சந்திப்பு முடிந்ததும் அனைவருக்கும் விநியோகிக்கப்படும் என்றும் எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. காத்திருந்தோம்.
பொதுச் செயலாளர் துவிவேதியும், பிரணாப் முகர்ஜியும் நிருபர்கள் கூட்டம் நடக்கும் அறைக்கு வந்தனர். பிரணாப் முகர்ஜிதான் நரசிம்ம ராவின் சார்பில் தகவலைத் தெரிவித்தார். அறிக்கையை வெளியிட்டார். எல்லோருக்கும் அதன் நகல் தரப்பட்டது.
'நரசிம்ம ராவ் கட்சித் தலைவர் பதவியிலிருந்து மட்டும்தான் விலகுகிறார். அவர் நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவராகத் தொடர்வார்' என்று தெரிவித்தார் பிரணாப் முகர்ஜி.
'அப்படியானால் அடுத்தாற்போல யார் காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவார்?' என்று நிருபர்கள் கேட்டனர்.
'இடைக்காலத் தலைவரைத் தேர்ந்தெடுக்க காங்கிரஸ் காரியக் கமிட்டி இரண்டு நாள்களில் கூட இருக்கிறது. அகில இந்திய காங்கிரஸ் மாநாடு (ஏ.ஐ.சி.சி.) விரைவில் கூட்டப்படும். அந்த மாநாட்டில் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார். அதுவரை இடைக்காலத் தலைவர் பதவி வகிப்பார்' - இது பிரணாப் முகர்ஜி.
'இடைக்காலத் தலைவராக நீங்கள் தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு இருக்கிறதா?' என்று நான் கேட்டவுடன் என்னை முறைத்துப் பார்த்தார் பிரணாப்தா. அப்படியொரு கேள்வியை நான் எழுப்பியதை அவர் ரசிக்கவில்லை.
'நான் இடைக்காலத் தலைவராகவும் விரும்பவில்லை. தலைமைப் போட்டியில் களமிறங்குவதாகவும் இல்லை. அதுபற்றி எல்லாம் விவாதிப்பதற்கான நேரமும் இது அல்ல' என்று கூறி அந்தப் பேச்சுக்கே முற்றுப்புள்ளி வைத்து விட்டார் அவர்.
நரசிம்ம ராவின் அறிக்கையைப் படிக்கத் தொடங்கினேன். ஏற்கெனவே சொன்னதுபோல, காங்கிரஸ் தலைவராக, வழக்கு விசாரணைக்கு சாட்சிக் கூண்டில் ஏறி நிற்க அவர் தயாராக இல்லை என்பதை உறுதிப்படுத்துவதாக அமைந்திருந்தது அவரது அறிக்கை. தன்னைப் பாதுகாத்துக் கொள்வதைவிடவும், காங்கிரஸ் கட்சியின் கெளரவத்துக்குக் களங்கம் ஏற்பட்டுவிடலாகாது என்பதுதான் அவரது நோக்கம் என்பதை அந்த அறிக்கை தெளிவு படுத்தியது.
'லக்குபாய் பாதக்கை சந்திரா சுவாமி ஏமாற்றியதாகத் தொடரப்படும் வழக்கில் எனக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்தி வைக்குமாறு நான் கோரியதை நீதிபதி ஏற்கவில்லை. மாறாக, இம்மாதம் 30-ஆம் தேதி இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக எனக்கு சம்மன் அனுப்பி இருக்கிறார்.
இந்த வழக்கு விசாரணை இன்னும் முழுமையாகத் துவங்கி நடைபெறவில்லை என்ற போதிலும், காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கும் நான் நீதிமன்ற விசாரணைக் கூண்டில் ஏற்றப்படுவதை அந்தப் பதவிக்குக் களங்கமாக நான் நினைக்கிறேன். தனிப்பட்ட முறையில் விசாரணைக்கு அழைக்கப்பட்டாலும், மோசடி வழக்கில் காங்கிரஸ் தலைவர் அழைக்கப்பட்டிருப்பதாகத்தான் அது வர்ணிக்கப்படும்.
மாணவப் பருவத்தில் விடுதலைப் போராட்டத்தில் சுவாமி ராமதீர்த்தர், மகாத்மா காந்திஜி ஆகியோரின் அறைகூவலை ஏற்று, காங்கிரஸ் தொண்டனாக என்னை இணைத்துக் கொண்டேன். காங்கிரஸ் கட்சிக்கு அவமரியாதையோ, கெட்ட பெயரோ ஏற்படுத்தும் எந்தவொரு செயலிலும் நான் ஈடுபட முடியாது. அதனால் கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகிவிட நான் தீர்மானித்துவிட்டேன்.
இந்த விஷயத்தில் நான் முழுக்க முழுக்க அப்பாவி. இது குறித்து எனக்கு எதுவுமே தெரியாது. எனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் போலியானவை; அற்பமானவை; ஆதாரம் இல்லாதவை. எனது பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகக் கூறப்பட்டவை.
பிரதமர் பதவி உள்பட எத்தனையோ பதவிகளை நான் வகித்தபோதும், எனது கட்சிக்கோ, அரசுக்கோ கெட்ட பெயர் ஏற்படுத்தும் விதத்தில் நான் நடந்து கொண்டதே இல்லை. எனக்கு சம்மன் அனுப்புவது என்ற நீதிபதியின் தீர்ப்புக்குப் பிறகு கட்சியில் அநாவசியப் பதற்றமும், குழப்பமும் ஏற்பட்டு
விடக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகிவிட முடிவு செய்திருக்கிறேன்.
நீதிமன்றத்திலும், நல்லபடியான ஆட்சியிலும் எனக்கு முழு நம்பிக்கை உண்டு. எனக்கு எதிராகக் கூறப்படும் அனைத்துக் குற்றசசாட்டுகளுமே உண்மையற்றவை, ஆதாரமில்லாதவை என்று நிரூபணமாகிவிடும். அரசியல் ரீதியாக என்னை வீழ்த்தவும், தனிப்பட்ட முறையில் எனக்குக் களங்கம் ஏற்படுத்தவும் செய்யப்படும் முயற்சிகள் வெற்றி பெறாது. 'சத்தியமேவ ஜெயதே...' (சத்தியம்தான் வெல்லும்) என்பதுதான் எனது ஒரே பதில்!'
24, அக்பர் ரோடு காங்கிரஸ் தலைமையகத்தில் நிருபர் கூட்டம் நடைபெறும் அந்த அறையில் குழுமியிருந்தவர்கள் அனைவரும் அறிக்கையைப் படித்துவிட்டு எதுவும் பேசவில்லை. சற்று நேர அமைதிக்குப் பிறகு அங்கிருந்து கலைந்து சென்றோம். பிரணாப் முகர்ஜியோ, தேவேந்திர துவிவேதியோ இருக்கிறார்களா என்று தேடினேன். அவர்கள் ஏற்கெனவே சென்றுவிட்டிருந்தனர்.
நரசிம்ம ராவின் அறிக்கை வெளியானது முதலே, இடைக்காலத் தலைவராக யார் நியமிக்கப்படுவார் என்கிற விவாதம் தொடங்கிவிட்டது. மூத்த தலைவர்களான அர்ஜுன் சிங்கும், என்.டி. திவாரியும் கட்சியிலிருந்து பிரிந்து சென்றுவிட்டிருந்தனர். ஒரு காலத்தில் பிரதமர் பதவிப் போட்டியில் இருந்த சரத் பவார், மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைத் தேர்தல் படுதோல்வியைத் தொடர்ந்து செல்வாக்கு இழந்திருந்தார். கருணாகரன், ராஜேஷ் பைலட் இருவரும் கட்சித் தலைவர் பதவிக்கு ஆசைப்பட்டாலும், காங்கிரஸ் காரியக் கமிட்டியிலும் சரி, கட்சி உறுப்பினர்கள் மத்தியிலும் சரி பெரிய அளவிலான ஆதரவு இருக்கவில்லை.
மூத்த தலைவர் என்கிற முறையில் சீதாராம் கேசரியின் பெயரும், சோனியா காந்தியின் ஆதரவு பெற்றவர் என்பதால் ஏ.கே. அந்தோணியும் முன்னணியில் இருந்தனர். அந்தோணி வந்துவிடக் கூடாது என்பதில் குறியாக இருந்த கருணாகரன், சீதாராம் கேசரியை ஆதரிக்க முன் வந்திருப்பதாகப் பேசிக் கொண்டனர்.
நரசிம்ம ராவுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் ஸ்ரீகாந்த் ஜிச்கரை சந்தித்தால் ஏதாவது தகவல் கிடைக்கக்கூடும் என்று நினைத்து அவரது வீட்டுக்குப் போனேன். நான் எதிர்பார்த்ததுபோல, 9, மோதிலால் நேரு மார்குக்கு நரசிம்ம ராவை சந்திக்க அவர் கிளம்பிக் கொண்டிருந்தார்.
'திங்கள்கிழமை மாலையில் காரியக் கமிட்டிக் கூட்டம் நரசிம்ம ராவின் வீட்டில் நடைபெறுகிறது என்பது வரையில்தான் எனக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. யாரை இடைக்காலத் தலைவராகத் தேர்ந்தெடுப்பது என்பது தொடர்பாக பிரணாப் முகர்ஜி வீட்டில் ஆலோசனை நடப்பதாகக் கேள்விப் படுகிறேன். நான் இதுவரை நரசிம்ம ராவ்ஜியை சந்திக்கவில்லை. அவர் பிரணாப் முகர்ஜி தவிர, வேறு எந்தத் தலைவரையும் சந்தித்ததாகவும் தெரியவில்லை.'
'ஏ.கே. அந்தோணிக்கு இடைக்காலத் தலைவர் பதவிக்கான வாய்ப்பு இருக்கிறதா?'
'நரசிம்ம ராவ்ஜி நாடாளுமன்றக் காங்கிரஸ் கட்சித் தலைவராக இருப்பதால், வட இந்தியாவைச் சேர்ந்த ஒருவர்தான் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று நினைக்கிறேன். இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது...'
ஜிச்கர் அவசரமாகக் கிளம்பிக் கொண்டிருந்ததால், நானும் விடை பெற்றேன். அங்கிருந்து நேராக நான் விரைந்தது கிரேட்டர் கைலாஷிலுள்ள பிரணாப் முகர்ஜியின் வீட்டுக்கு. ஜிச்கர் சொன்னது போலவே அங்கே சில தலைவர்கள் கூடிப் பேசிக் கொண்டிருந்தனர்.
யார் யார் வந்திருக்கிறார்கள் என்று விசாரித்தேன். பிரணாப் முகர்ஜிக்கு மிகவும் நெருக்கமானவர் என்று கருதப்படும் சந்தோஷ் மோகன் தேவ், மூத்த தலைவர் ஜி. வெங்கடசாமி, பஜன்லால், மோதிலால் வோரா ஆகியோர் இருப்பதாகச் சொன்னார்கள். சுமார் இரண்டு மணிநேரத்துக்கும் மேலாக அவர்கள் பேசிக் கொண்டிருந்தனர். அதனால் அங்கிருந்தும் நான் கிளம்பிவிட்டேன்.
நரசிம்ம ராவின் மோதிலால் நேரு மார்க் இல்லத்தில் நடைபெற்ற காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் சுரேஷ் கல்மாதி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார். அந்தக் கூட்டத்தில் என்ன நடந்தது என்பது அவர் சொல்லித்தான் பத்திரிகையாளர்களுக்குத் தெரிந்தது. 19 காரியக் கமிட்டி உறுப்பினர்களும், சில சிறப்பு அழைப்பாளர்களும் கலந்து கொண்ட அந்தக் கூட்டத்தின் தொடக்கத்திலேயே தனது முடிவை நரசிம்ம ராவ் தெளிவாகக் கூறிவிட்டார்.
'வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நான், காங்கிரஸ் கட்சித் தலைவராக விசாரணைக் கூண்டில் ஏற விரும்பவில்லை' என்பதுதான் அவர் தெரிவித்த முடிவு. அவர் தலைவராகத் தொடர்வது, யாராவது ஒருவரை செயல் தலைவராக்குவது என்கிற கோரிக்கையை அவர் நிராகரித்துவிட்டார்.
'ராஜேஷ் பைலட்டைத் தவிர ஏனைய அனைவரும் முன்மொழிந்த பெயர் சீதாராம் கேசரி. கட்சியின் பொருளாளராக 18 ஆண்டுகள் பதவி வகித்துவரும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பிகாரியான சீதாராம் கேசரி தலைவராவதன் மூலம் வட மாநிலங்களில் காங்கிரஸ் புத்துயிர் பெறும் என்று எல்லோருமே கருதினார்கள்' - இது சுரேஷ் கல்மாதி பத்திரிகையாளர்களிடம் தெரிவித்த கருத்து.
சீதாராம் கேசரி தலைவராக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 10, அக்பர் ரோடு ராஜேஷ் பைலட்டின் வீட்டுக்குச் சென்றேன். அவரைச் சுற்றி ஆதரவாளர்கள் குழுமி இருந்தனர்.
'தேர்வு குறித்து என்ன நினைக்கிறீர்கள்?'
'தற்கொலை முயற்சி..!'
தில்லியில் சீதாராம் கேசரி காங்கிரஸ் தலைவராக அறிவிக்கப்பட்ட அதே நாளில், சென்னையில் இருந்து இரண்டு பரபரப்பான தகவல்கள் ஊடகத் தலைப்புச் செய்திகளாயின. அவை...
(தொடரும்)
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...