

கடந்த ஜூலை 23ஆம் தேதி நடிகர் சூர்யாவின் பிறந்த நாள். அன்றைய தினம் அவர் லண்டனில் இருந்ததால், பிறந்த நாளை அங்கேயே கொண்டாடினார். இந்நிலையில் அவரது பிறந்த நாளில் ரத்த தானம் செய்த ரசிகர்களை சென்னையில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் சந்தித்து பேசியிருக்கிறார். அங்கே அவர்களுடன் உரையாடியதுடன், புகைப்படமும் எடுத்துக் கொடுத்து மகிழ்ந்தார். சில ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கும் பதிலளித்துள்ளார். அதில் லோகேஷ் கனகராஜூடன் இணையும் படம் குறித்தும் பேசியிருக்கிறார் சூர்யா.
-----------------------------------
எனக்கும் பேய்க்கதைகளுக்கும் அப்படி என்னதான் தொடர்பு... ஏன் எனக்கு இத்தனை பேர் பேய்க்கதை சொல்றீங்க... நீங்க சொல்ற பேய்க் கதைகள் எவ்வளவு சிறப்பா இருந்தாலும் நான் பண்ண மாட்டேன்.'' சமீபத்தில் பேய்க்கதை சொல்லப்போன ஓர் இயக்குநரிடம் இப்படிக் கொந்தளித்திருக்கிறார் நயன்தாரா. இனி தனக்கான தனித்துவக் கதைகளைத் தேர்ந்தெடுக்கச் சொல்லி, அவற்றை மட்டுமே செய்ய முடிவெடுத்திருக்கிறாராம். தனக்குப் பிடித்த கதைகளைத் தயாரிப்பு நிறுவனங்கள் செய்யத் தயங்கினால், தன்னுடைய "ரவுடி பிக்சர்ஸ்' நிறுவனத்தின் மூலமாகத் தயாரிக்கவும் திட்டமிட்டிருக்கிறாராம் நயன்தாரா.
-----------------------------------
கடந்த சில நாள்களாக நடிகர் விஷால் நடிகை லட்சுமி மேனன் இருவருக்கும் திருமணம் நடைபெறவுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. இந்நிலையில் திருமணம் குறித்த வதந்திக்கு நடிகர் விஷால் விளக்கமளித்திருக்கிறார். தனது சுட்டுரைப் பதிவில்.... ""பொதுவாக என்னைப் பற்றிய போலி செய்திகள் மற்றும் வதந்திகளுக்கு நான் பதிலளிப்பதில்லை. அது பயனற்றது என்பது எனக்கு தெரியும். ஆனால் நடிகை லட்சுமி மேனனுடன் எனக்குத் திருமணம் என பரவிவரும் செய்தியை நான் முற்றிலுமாக மறுக்கிறேன். இந்த செய்தி முழுக்க முழுக்க ஆதாரமற்றது'' என்று தெரிவித்துள்ளார்.
-----------------------------------
இயக்குநர் கெளதம் மேனன் வடிவேலுவைச் சந்தித்துக் கதை சொல்லியிருக்கிறார். ஸ்டைலிஷான நகரப் பின்னணிகளைக் கொண்டு படம் இயக்கும் கெளதம், வடிவேலுவை இயக்கினால் அந்தப் படம் எப்படியிருக்கும் என்பது இப்போதே ஆச்சரியத்தைத் தரும் ஒன்றாக இருக்கிறது. இன்னொரு பக்கம் "ஈரம்' அறிவழகனும் வடிவேலுவுக்கு ஒரு கதை சொல்லியிருக்கிறாராம்.
'சூது கவ்வும்' நலன் குமாரசாமியும் ஒரு கதை சொல்லியிருக்கிறார் என்கிறார்கள். ஏற்கெனவே அவர்கள் படம் செய்வதாக இருந்து தள்ளிப்போடப்பட்டது குறிப்பிடத்தக்கது. நலன் குமாரசாமி தற்போது கையில் எடுத்திருக்கும் கார்த்தியின் படம் முடிந்ததும் வடிவேலு படத்திற்கான வேலைகள் சூடு பிடிக்கும் என்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.