புதுமைப் பெண்

தாலாட்டும் ரயிலின் அசைவில் கண் அயர்ந்திருந்தேன் . ஜன்னலை ஊடுருவி சூரிய விரல்கள் கிள்ளியது குளிரூட்டிய பெட்டியில் இதமாக இருந்தது. கண்களைத் திறக்க மனமில்லை . காதில் விழுந்த அந்தக் குரல் மனதை உலுக்கியது.
புதுமைப் பெண்
Updated on
5 min read

தாலாட்டும் ரயிலின் அசைவில் கண் அயர்ந்திருந்தேன் . ஜன்னலை ஊடுருவி சூரிய விரல்கள் கிள்ளியது குளிரூட்டிய பெட்டியில் இதமாக இருந்தது. கண்களைத் திறக்க மனமில்லை . காதில் விழுந்த அந்தக் குரல் மனதை உலுக்கியது.
''செல்லக்குட்டி எந்திருச்சிட்டானாம்மா? சரி, அவன் எந்திருக்கும்போது எந்திருக்கட்டும். எந்திருச்சி அம்மான்னு அழுதான்னா, காக்கா, குருவி, கோழி , நாயைக் காட்டி பேசிக்கிட்டே பாலைக் குடிக்க வைம்மா? சிரமத்தோட சிரமமா இன்னிக்கு ஒருநாள் பார்த்துக்கும்மா ?
இந்த வேலை உறுதியா கிடைச்சிரும். முன்னரே, நான் வேலை பார்த்த கம்பனிங்கிறதால, வீட்டில் இருந்தே வேலை பார்க்கிற மாதிரி கேட்டுப் பார்க்கிறேன். அய்யன் சொல்ற மாதிரி 'ஒரு காத்து நம்மல தூக்கி எறிஞ்சா, இன்னொரு காத்து நிமிர்த்தி உக்கார்த்திரும்!' இன்னிக்கி ராப்பொழுது தம்பியைப் பார்த்துக்கும்மா. அவன் எந்திருக்குமுன்ன, விடியக் காத்தால டாண்ணு வீட்டுல இருப்பேன் ! அழுவாதம்மா. நான் அருக்காணி அத்தை இல்லைம்மா , வெள்ளைச் சேலையைக் கட்டிக்கிட்டு, மூச்சூடும் அழுதுகிட்டு வீட்டுக்குள்ளே மூலையில் முடங்கிக் கிடக்க முடியாது. அந்தக் காலம் மலையேறிருச்சு. நீங்க வம்பாடு பட்டு என்னை படிக்க வச்சிருக்கீய? நான் படிப்புக்கேத்த வேலையைத் தேடி உன் பேரனையும் , உங்களையும் காப்பாத்திருவேன். கவலைப்படாதேம்மா? நாம் தைரியமா இருந்தா எந்தக் கிரகம் என்ன பண்ணும் ? நீ பெத்த மகள்... நான் உனக்கு தைரியம் சொல்லணுமாக்கும் !''
நெஞ்சை அறுக்கும் குரல் எனது கால் மாட்டிலிருந்து வந்தது. கரூரில் ஏறி எனக்கு மேல் படுக்கையில் படுத்திருப்பாள் போலிருக்கு. விடிந்ததும் கீழே என் கால் மாட்டில் உட்கார்ந்திருக்கிறாள். என் காலை முன்னே இழுத்து , போர்வையை சுருட்டி எழுந்து உட்கார்ந்தேன்.
''நல்லா உட்காரும்மா?''
''தேங்க்ஸ் அங்கிள்'' என்றவள் முகத்தை நோக்கினேன். இருபத்தெட்டு வயதிருக்கும். கட்டவிழாத உடல் ; வட்டமான கருத்த நிலவு , களையான முகத்தில் வெறுமை படிந்திருந்தது . சுருண்டு நெளிந்த கூந்தல் , முகத்துக்கு ஈர்ப்பைக் கூட்டியிருந்தது . சந்தன நிற சுடிதாரில், சிவப்பு, நீல நிற பூக்கள் மலர்ந்திருந்தன. பின்னால் முடிச்சிட்ட துப்பட்டா மார்பில் 'ஸ்' வடிவில் விரிந்து முதுக்குக்குப் பின்னர் இறங்கியது. இவளிடம் இருந்தா அந்த ரணம் தோய்ந்த முதிர்ந்த வார்த்தைகள் வெளிப்பட்டன ! நம்ப முடியவில்லை. இருக்கையிலிருந்து எழுந்து முகம் கழுவப் போகும்போது மீண்டும் அவளது முகத்தை ஊடுருவினேன். மனதின் துயரத்தை வெளிபடுத்தாத முகம்! அவளது வயதுக்கு மீறிய அனுபவ வார்த்தைகள் மனதைப் பிசைந்தது.
நான் பத்து வயதில் இருக்கும்போது கரூரில் பொரிக்காரத் தெருவில் குடியிருந்தோம் . காலையில் , மாலையில் அந்தத் தெருவின் முகனை வீட்டில் பசும்பால் வாங்கப் போவேன். அந்த வீட்டில் அருக்காணிங்கிற அக்கா வெள்ளைப் புடவை கட்டியிருக்கும். இருபது வயசுதான் இருக்கும். முகம் முழுவதும் எண்ணெய் வடிஞ்சு அழும் சோகமா இருக்கும். சுருட்டை முடியை இறுக்கமாக முடிந்து, எங்கம்மா கொண்டையைவிட பெரியதா கொண்டை போட்டிருக்கும் .
என்னைப் பார்த்ததும் சிரிச்சு, ''கண்ணு என்ன படிக்கிற, எந்த ஸ்கூலு . சாமி, நீ லீவுல இருக்கும்போது வர்றியா, நாம தாயம் விளையாடலாம்'' என்று என் கன்னத்தைத் தடவி நெட்டிமுறிக்கும் . வறுத்தக் கடலைகளை எனது டிரவுசர் பாக்கெட்டிலும், சட்டைப் பாக்கெட்டிலும் போட்டுவிடும் !
ஒரு சனிக்கிழமை பால் வாங்கி கொடுத்து காபி குடிச்சிட்டு அருக்காணி அக்காகூட தாயம் விளையாடிட்டு இருந்தேன். தாயம் விளையாடும்போது, அக்கா நடு நடுவில எந்திருச்சுப் போய், மாடுகளுக்கும், கண்ணுக் குட்டிகளுக்கும் தீவனமோ , தண்ணியோ வச்சிட்டு வரும். வந்ததும், அந்தந்தக் காய்கள் வைத்த இடங்களில் வைத்தபடி இருக்கான்னு, பார்த்த பின்னர்தான், என்னை, சோழியைப் போடவிடும். கண்கொத்திப் பாம்பாக கவனித்து எனது காய்களை வெட்டும். நான் சோர்ந்துறாம இருக்க, தனது காய்களை நான் வெட்ட அனுமதிக்கும் .
நான் வெட்டியதும், ''என்னக்கா, இப்படி ஏமாந்து வெட்டுக்கு குடுத்திட்டியே'' என்று கேட்பேன்.
' 'எனக்கு வெட்டு வாங்குறது சகசம். என் புழைப்பே வெட்டுப்பட்டு கிடைக்கையில இது சாதாரணம்'' என்று சொல்லும் .
''அப்புறம் எதுக்குக்கா, என் காய்களைத் தேடி தேடி வெட்டுறன்னு கேட்டேன். வெட்டு பட்டுகிட்டே இருக்கக்கூடாதில்லை. நாமளும் வெட்டணுமில்லை! இதுக்குதான் உனக்கும் வெட்டுக்கு குடுத்தேன். விளையாட்டுல வெட்டுக் கொடுக்கலாம். ஆனா, வாழ்க்கையில வெட்டுப்பட இடம்கொடுக்கக் கூடாது'' என்று அன்னிக்கு அருக்காணி அக்கா சொன்னதுக்கு இப்போ அர்த்தம் விளங்குது.
இப்படி ஒருநாள் சாயந்திரம் விளையாடும்போது, தோட்ட வேலைக்குப் போய் திரும்பிய ,
அந்தக்காவோட அம்மா, ''ஏண்டி, பொழுது மசங்குனதுகூட தெரியாம, விளக்கேத்தாம, அறுத்தவ, சின்ன பசங்களைக் கூட்டி விளையாடிகிட்டிருக்கியே , நாலு பேர் பார்த்து, சொல்லக் கூடாதைச் சொன்னா, நம்ம குடும்பம் சந்தி சிரிக்குமே? நீ இன்னும் சின்ன பிள்ளையா, புருஷன் இருந்தான்னா நாலு பிள்ளை பெத்திருப்பே. மூத்தது பொட்டையா பிறந்திருந்தா இந்த நேரம் உக்கார்ந்திருக்கும் . டேய் , நீ பால் வாங்குறதுக்கு மட்டும்தான் வரணும். அக்கா கூட விளையாடக் கூடாது , எந்திருச்சு ஓடுரா'' என்றாள்.
அந்தம்மா விரட்டியதிலிருந்து, நான் விளையாடப் போறதில்லை. பால் வாங்கும்போது பார்த்தா, அந்த அக்கா முகம் பாவமா இருக்கும்!
அழுவாச்சி கலந்த சிரிக்கிறாப்புல இருக்கும் . இந்தப் பெண், அருக்காணி அத்தைன்னு சொன்னதும், எனக்கு பால்கார அருக்காணிக்கா முகம் நினைவில் வந்து மனதைக் கவ்வியது .
காலைக் கடன்களை முடித்து இருக்கைக்கு வந்தேன். அவள் ஜன்னல் வழி நகரும் நிலக்காட்சிகளில் லயித்திருந்தாள். கண்களோரம் மினுமினுத்தது. அவளுக்கும் அருக்காணி அத்தை நினைவு வந்திருக்கும் போலிருக்கு. எனது அருகாமையை உணர்ந்ததும், அவள் எழுந்து எனக்கு ஜன்னலோரம் இருக்க இடம் கொடுத்தாள் .
''பரவாயில்லம்மா, நீ அங்கேயே உட்காரு?''
''இல்லீங்க அங்கிள் உங்க இடத்தை நான் ஆக்கிரமிக்கக் கூடாதில்ல !''
''என்னம்மா , நீ என் பாரம்பரிய பட்டா இடத்தையா ஆக்கிரமிச்சு அனுபவிக்கப் போறே ? நீ இன்னும் ரெண்டு மணி நேரத்தில சென்னையில் இறங்கப் போறே? நான் பத்து மணி நேரம் கழிச்சு கம்மத்தில இறங்கப் போறேன். ரெண்டு பேரும் சக பயணிகள்தானே. வாய்த்த நேரத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கிறதில் என்ன இருக்கு ?''
''அதில்லைங்க அங்கிள், நீங்க வயசானவங்க, நெடும்தூரம் போறவங்க, எதுக்கு உங்களுக்கு தொந்தரவுன்னுதான்''
அந்த நேரம் டீ, காபி விற்பவன் வந்தான் .
'' பையா , ரெண்டு டீ கொடு .''
''எனக்கு டீ வேணாங்க அங்கிள். நீங்க குடிங்க?''
''சும்மா குடிமா , நீ என் மகள் மாதிரி, உன்னை பார்க்க வச்சிட்டு குடிக்க மனசு ஒப்பலை. அதனாலதான் உன்னைக் கேட்காமலே , சொல்லிட்டேன். சாரிம்மா, தப்பா நினைச்சுக்காதே!''
''ஐயோ அங்கிள், பெரிய வார்த்தை எல்லாம் சொல்லாதீங்க?'' என்று கண்களைத் துடைத்துக் கொண்டாள்.
என் முகத்தை ஊடுருவி எனது சொல்லின் நம்பகத்தை உறுதி செய்து, டீயை வாங்கி அருந்தினாள். முகத்தில் தெளிவு தெரிந்தது. எனக்கும் இதமாக இருந்தது.
'' உன் மகனுக்கு ஒருவயசு இருக்குமாம்மா?''
''இல்லைங்க அங்கிள். அவுனுக்கு ஒன்றரை வயசு அங்கிள். ஒருவயசு பெர்த்டே கேக்கு வாங்கியாற கரூருக்கு பைக்கில போன அவனோட அப்பா ஆக்சிடன்டில இறந்துட்டாருங்க? நானும் அவரும் வேற வேற சாப்ட்வேர் கம்பனியில்தான் வேலை பார்த்தோம். அந்நியம்தான். ஒரே ஜாதின்னு, ஜாதகமெல்லாம் பார்த்து ரெண்டுபக்கமும் பேசி முடிச்சு வைச்சாங்க. அவரு என்னை நல்லாதான் பாத்துக்கிட்டார். வெள்ளி, சனி, ஞாயிறு எல்லாம் அவுட்டிங் போய் ஜாலியாவே இருந்தோம். கண்ணாலம் முடிஞ்சு ஒரு வருஷம் வரைக்கும் வேலைக்குப் போனேன். அப்புறம் பிரசவத்துக்காக மூணு மாசம் லீவ் கிடைக்கலைன்னு, வேலையை ரிசைன் பண்ணிட்டேன். மகன் பிறந்தான். சந்தோஷமாக இருந்தது. திடீர்னு காலம் டெலிட் பட்டனை சொடுக்கிவிட்டது. மகிழ்ச்சி என்னும் சொல்லே மறைஞ்சு, எல்லாம் இருண்டு போச்சு. ம்ம்ம்.. எத்தனை நாளைக்குத்தான், ஆயி அப்பன் முகத்தைப் பார்த்து நானும் அழுதிகிட்டு, அவகளையும் அழ வச்சுகிட்டுருக்கிறது ? நான் வேலைக்குப் போனா கவலையை மறக்கலாம். பையனோட எதிர்காலத்துக்கும் உதவலாமேன்னு பேசி, ஆயி அப்பனை சம்மதிக்க வச்சேனுங்க. அதான் பழையபடி அதே கம்பனிக்கே வேலைக்குப் போலாமுன்னு எழுதிக் கேட்டேன். வரச் சொல்லி இருக்காங்க; போயிட்டிருக்கேனுங்க அங்கிள்'' என்று பாலைவன மணல்குவியலில் மழைக்காற்று உரசியதுபோல் கரகரப்பையும் சிலுசிலுப்பையும் அவளது குரலில் உணர்ந்தேன்.
''பாப்பா, இதோ என் பெயரையும், போன் நம்பரையும் பதிஞ்சுக்கோ, உனக்கு எதாவது உதவி தேவைன்னா பேசு. நான் எங்கே இருந்தாலும் ,
உனக்கு தக்க ஆள்களைக் கொண்டு என்னால உனக்கு உதவ முடியும்'' என்றேன்.
எனது கைப்பேசி எண்ணையும், பெயரையும் பதிந்து கொண்டாள் . அவளது எண்ணையும், பெயரையும் எனக்கு தரவில்லை.நான் கேட்கவுமில்லை .
ஏழரை மணிக்கு வர வேண்டிய ரயில் , ஒன்பது மணிக்கு காட்பாடிக்குள் நுழைந்தது. வண்டி மதுரையில் புறப்பட்டதிலிருந்தே ஒன்றரை மணி தாமதமாகப் போய்க் கொண்டிருக்கிறது. டேராடூனிலிருந்து வரும் இணை ரயில் தாமதமாக வந்துகொண்டிருப்பதால், மதுரையிலிருந்து புறப்படும் இந்த ரயிலும் தாமதமாகக் கிளம்பும் என்று அறிவித்தனர். இதில் என்ன தொழில்நுட்ப தர்க்கமோ தெரியவில்லை .
வாராந்திர ரயில்களில் பயணிப்பதில் இதுவொரு சிரமம்; குறிப்பிட்ட நேரத்தில் ஊர் போய்ச் சேர முடியாது. காலாகாலத்தில் உண்ணவும், உறங்கவும் இயலாத சிரமப் பயணம் மனசைக் கிள்ளியதைப் பேசியதால் வயிறு கிள்ளியதை உணரவில்லை .
''ம்மா, உனக்கு சாப்பிட எதாவது வாங்கி வரவாம்மா?''
''தேங்கஸ் அங்கிள், நான் இன்னும் ஒரு மணி நேரத்தில் பெரம்பூரில் இறங்கிருவேனுங்க? என்ட்ற பிரண்ட் ஒருத்தர் வராரு, அவரோட அங்க சாப்பிட்டுக்கு வேணுங்க அங்கிள்.''
நான் வேகமாய் இறங்கி, நடைமேடையில் உணவுப்பொட்டலம் விற்பவரிடம்,
இட்லி, வடை, பொங்கல் பொட்டலங்களை வாங்கிவந்தேன். வண்டி நகர்ந்தது.
'நான் சாப்பிட வேண்டும்' என்று அவள் முகம் கழுவப்போனாள். அவளது இங்கிதம், மனதுக்கு இதமாக இருந்தது.
என்னைப் போன்றே எதிர் இருக்கையில் அமர்ந்தவர்களும் வாங்கிய பொட்டலங்களைப் பிரித்தார்கள். பின்னோக்கி ஓடும் சிறுகுன்றுகளையும், மரங்களையும் நோக்கியபடி உணவை விழுங்கினேன். பசிக்கு ருசியேது. பொட்டலக் காகிதங்களை
குப்பைத்தொட்டியில் போடப் போனேன். அவள் கதவோரம் நின்று கைப்பேசியில் கலகலப்பாகக் கதைத்துக் கொண்டிருந்தாள். என்னைக் கண்டதும் அவளது கண்களில் மரியாதை கலந்த நகைப்பு தெரிந்தது. நானும் முறுவலித்து கைகளைக் கழுவி இருக்கைக்கு வந்து, மாத்திரைகளை விழுங்கினேன் .
அவள் இருக்கையில் வந்து அமர்ந்ததும் ,
அவளது கைப்பேசி முனங்கியது .
''என்னம்மா, நான் தின்னுட்டேன். தம்பி பால் குடிச்சானா; பருப்புசோறு ஊட்ணியா. அவன் அழுது ஒட்டாரம் பண்ணலையே! சரிம்மா, இன்னைக்கொரு பொழுது பார்த்துக்கோ, விடியக்காத்தால நல்ல சேதியோடு வந்திருவேன், சரியா. தம்பியை அழுவாமப் பார்த்துக்கே. அய்யங்கிட்டவும் சொல்லு. தம்பி சத்தம் கேட்குது; வைக்கிறேன்ம்மா ?''
சற்றுமுன் அவள் கைப்பேசியில் பேசிய குதூகலம் இப்போது இல்லை. குரலில் பாசமும், பரிதவிப்புமே தென்பட்டது.
வண்டி திருவள்ளூரைத் தாண்டியதும்,
அவள் தனது கைப்பொதியைத் திறந்து , சில துணிகளையும், சிறு கைப்பையையும்
எடுத்துகொண்டு கழிவறைப் பக்கம் போனாள். நான் கைப்பேசியில் நடப்பு செய்திகளை மேய்ந்து கொண்டிருந்தேன். வண்டி புறநகருக்குள் நுழைவதால் அதன் வேகம் குறைந்தது. மிகையான வாசனை நுகர்ந்து, நிமிர்ந்தேன் .
ஜீன்ஸ் லெக்கின்ஸ் பேன்ட்டும், எடுப்பான முழுக்கை சட்டையும், இளநீல நிறத்தில், பித்தானிடாத மேல் கோட்டும் அணிந்த அவள் என்னருகில் அமர்ந்தாள்.
மாதுளம்பூவின் சிகப்பில் சாயம்பூசிய அவளது உதடு விரிய, வெள்ளரி விதை பற்கள் ஒளிர புன்னகைத்தாள்.
நெற்றியில் வெண்டை விதை அளவில் சிகப்பு ஒட்டுப்பொட்டு மிளிர்ந்தது !
சற்றுமுன் துயரமுள் போர்த்திய கூட்டுப்புழுத் தோற்றத்தில், என்னுடன் பேசிய இளம்விதவைத் தாயா இப்படி வண்ணச்சிறகை விரித்து நிற்கிறாள்!
எனது மனவோட்டத்தை உணர்ந்தவள் போல்,
''அங்கிள், சாப்ட்வேர் தொழிலில் இப்படி மினுக்கினினால்தான் வேலையத் தக்க வைக்கமுடியும்ங்க அங்கிள்! இந்த டிரெஸ் எல்லாம் என்டறவரு ஆசையாய் வாங்கிக்குடுத்தது. நான் அருக்காணி அத்தையில்லை, இதெல்லாம் பரண்ல போட! நான் வாழ்ந்து காட்டணுங்க அங்கிள் !'' என்று சொல்லும்போது பளிச்சிட்ட அவளது கண்களில் கணவனோடு அவள் வாழ்ந்த வாழ்வு மின்னி மறைந்தது .
எனது முகத்தில் மகிழ்ச்சியைப் பார்த்ததும், ''தேங்க்யூ அங்கிள். ஜாப்பில் ஜாய்ன் பண்ணினதும் கால் பண்ணுறேனுங்க அங்கிள் !'' என்று கைப்பொதியைத் தூக்கிக் கொண்டு வாசலை நோக்கி நகர்ந்தாள் .
பெரம்பூரில் வண்டி நின்றதும், தவளைத் தாவலில் நடைமேடையில் குதித்தாள். அவளுக்கு கையசைத்து வாழ்த்தினேன் .
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com