

மீண்டும் நடிக்க வரும் ஹேமமாலினி
பாலிவுட்டில் உச்சத்தில் இருந்த நடிகை ஹேமமாலினி நடிகர் தர்மேந்திராவை திருமணம் செய்ததும், குடும்பம், அரசியலில் கவனம் செலுத்தினார்.
கரண் ஜோகரின் படத்தில் நடிகர் அமிதாப்பச்சன் மனைவி ஜெயாபச்சன் வில்லியாக நடித்து இருந்தார். அதனைப் பார்த்த பிறகு ஹேமமாலினிக்கும் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்திருக்கிறது. இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், 'யாராக இருந்தாலும் நல்ல கதாபாத்திரத்துடன் வந்து என்னைப் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். அந்தக் கதாபாத்திரம் எனது வயதுக்கு தகுந்த மாதிரி இருக்கவேண்டும். கவர்ச்சியாக இருக்கலாம். எனக்கு நெகட்டிவ் கதாபாத்திரம் தேவையில்லை' என்று குறிப்பிட்டார்.
ஹேமமாலினி கடைசியாக 2020- ஆம் ஆண்டில் 'சிம்லா மிர்ச்சி' என்ற படத்தில் நடித்திருந்தார்.
கமலை புகழ்ந்த அமிதாப்
நடிகர் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கும் 'புராஜெக்ட் கே' படத்துக்கு 'கல்கி 2898 -ஏடி' எனப் பெயரிட்டுள்ளனர். அமிதாப் பச்சன், கமல்ஹாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அதிலும் கமல் வில்லனாக நடிக்கிறார்.
சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் பான் இந்தியா அளவில் உருவாகிவரும் இந்தப் படத்தை நாக் அஷ்வின் என்ற தெலுங்கு இயக்குநர் இயக்குகிறார். தீபிகா படுகோன், திஷா பதானி கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.
கலிபோர்னியா சான்டியாகோவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், கமல் ஹாசன், பிரபாஸ், 'புராஜெக்ட் கே' இயக்குநர் நாக் அஷ்வின், ராணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அமிதாப் பச்சன் வீடியோ கால் மூலம் இந்நிகழ்வில் கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் கிளிப்ஸ் விடியோவும் வெளியிடப்பட்டது.
நிகழ்ச்சியில் பேசிய கமல், 'சினிமாவுக்கு மிகப் பெரிய ஆற்றலைக் கொடுப்பது பார்வையாளர்கள்தான். நாங்கள் திரைப்படங்களை உருவாக்குகிறோம், அவர்கள் நட்சத்திரங்களை உருவாக்குகிறார்கள். அப்படிப்பட்ட பார்வையாளர்களுடனும் பிரபாஸ், அமிதாப் பச்சன் போன்ற மிகப் பெரிய நடிகர்களுடன் இங்கு அமர்ந்திருப்பதும், அவர்களுடன் படத்தில் நடித்திருப்பதும் எனக்குப் பெருமையாக இருக்கிறது' என்றார்.
உடனே இடைமறித்த அமிதாப் பச்சன், 'ரொம்பவும் அடக்கமாக இருப்பதை நிறுத்துங்கள் கமல். படப்பிடிப்பில் மட்டும் நடியுங்கள், இங்கு வேண்டாம். உண்மையில் நீங்கள்தான் எங்கள் எல்லோரையும்விடப் பெரிய ஸ்டார், மிகப் பெரிய நடிகர். கமல் செய்த சாதனைகளையும், அவர் தொட்ட உயரத்தையும் தொடுவது அவ்வளவு எளிதல்ல'' என்றார்.
நடிகர் ராணா கூறுகையில், 'ஒரு படத்தில் 10 கதாபாத்திரங்களில் கமல் நடித்திருக்கிறார். ஆனால், கமல் ஒவ்வொரு படத்துக்கும் அளவற்ற உழைப்பைக் கொடுத்திருக்கிறார் என்றார்.
கங்கனா ரணாவத் அதிரடி
பிரபல நடிகை கங்கனா ரணாவத், தற்போது இந்திரா காந்தியின் பயோபிக்கான 'எமர்ஜென்சி', தமிழில் 'சந்திரமுகி-2' ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
சமூக வலைதளங்களில் தொடர்ந்து இயங்கும் இவர், அரசியல், பாலிவுட் குறித்து சர்ச்சையான பதிவுகளையும் குற்றச்சாட்டுகளையும் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் பெயர்களைக் குறிப்பிடாமல் பாலிவுட் சூப்பர் ஸ்டார்கள் இருவர் மீது குற்றம் சாட்டி அவர்களுடனான டேட்டிங் ரகசியங்கள் குறித்தும் பேசியுள்ளார்.
இதுகுறித்து சமீபத்தில் பேசியுள்ள அவர், 'திரைப்பட மாஃபியாக்கள் எப்போதும் கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த வண்ணமிருக்கின்றனர். பிரபல பாலிவுட் உச்சநட்சத்திரம் ஒருவர் எப்போதும் போலியான சமூக வலைதளக் கணக்குகள் மூலம் என்னிடம் தொடர்பில் இருப்பவர். ஒருமுறை என்னுடைய சமூக வலைதளக் கணக்கையே முடக்கி என்னை மிரட்டினார். அவருக்கு இப்போது விவாகரத்தாகப் போகிறது என்று கேள்விப்பட்டேன்.
என்னைப் பின்தொடர்வதற்காக ரகசியமாகப் பல வழிகளைக் கையாண்டார். நான் மறுத்துவிட்டேன். பின்னர், அவர் வெவ்வேறு போலியான கணக்குகள் மூலம் என்னைத் தொடர்பு கொண்டார். அடிப்படையிலேயே ஒழுக்கமில்லாத இவர்களைப் போன்றவர்கள் மனிதர்கள் அல்ல பேய்கள். அதனால்தான் நான் அவர்களை அழிப்பதில் உறுதியாக உள்ளேன். அதர்மத்தை அழிப்பதே தர்மத்தின் முக்கிய நோக்கம். கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர் கூறியதும் இதைத்தான்' என்று கூறியுள்ளார்.
மேலும், 'இவர்களுக்கு எல்லாம் மனைவி மீது காதல் இல்லை. இதுபோன்ற சில திரைப்பட மாஃபியாக்கள் 'உச்ச நட்சத்திரம்' என எல்லோரையும் ஏமாற்றுகிறார்கள். அவர்கள் படங்கள் ஓடவில்லையென்றாலும் மொத்தமாக டிக்கெட்களை வாங்கி வசூலாகாத படங்களையும் ஹிட்டான படங்களைப் போலப் போலியாகக் காட்டிக் கொள்கிறார்கள்' என்று பேசியுள்ளார்.
பாலிவுட்டில் கீர்த்தி சுரேஷ்
மகாநதி, சாணி காயிதம், என கதைக்கும், நடிப்புக்கும் முக்கியத்துவம் தரும் சில படங்களைத் தேர்ந்தெடுத்து தனது சிறந்த நடிப்பை வெளிபடுத்தியுள்ளார். தற்போது ரிவால்வர் ரீட்டா, ரகு தாத்தா, கண்ணிவெடி போன்ற படங்களில் நடித்து வருகிறார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் தற்போது பாலிவுட்டில் கால்பதிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளன. ஏற்கெனவே போனி கபூர் தயாரிப்பில் அஜய் தேவ்கனுடன் 'மைதான்' படத்தின் மூலமாக பாலிவுட்டில் அறிமுகமாக இருந்தார். பின்னர், அப்படத்தில் நடிக்க முடியாமல் போனது.
ஜீவாவை வைத்து தமிழில் 'கீ' படத்தை இயக்கிய இயக்குநர் காலீஸ் இயக்கத்தில், அட்லியின் தயாரிப்பில் ஹிந்தியில் வருண் தவான் நடிப்பில் உருவாகவுள்ள 'விடி-18' என்ற திரைப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த படம் 2016 - ஆம் ஆண்டு அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா நடிப்பில் வெளியான 'தெறி' படத்தின் ரீமேக் என்றும் சொல்லப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் மும்பையில் தொடங்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நயன்தாராவைத் தொடர்ந்து இப்படத்தின் மூலம் பாலிவுட்டில் கால்பதிக்க உள்ள கீர்த்தி சுரேஷ் மீது அதிக எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.