பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 155
By கி. வைத்தியநாதன் | Published On : 27th August 2023 12:00 AM | Last Updated : 26th August 2023 08:16 PM | அ+அ அ- |

இந்தியாவில் வெளியாகும் எல்லா தினசரிகளிலும் தலைப்புச் செய்தியாக, காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக சீதாராம் கேசரி தேர்ந்தெடுக்கப்பட்டது இடம் பெற்றது என்றால், தமிழகம் மட்டும் அதற்கு விதிவிலக்காக இருந்தது. 'தினமணி' நாளிதழ் தவிர, ஏனைய தமிழ் நாளிதழ்கள் பரபரப்பாக வெளியிட்டிருந்த செய்தி என்ன தெரியுமா? பிரபல நடிகை 'சில்க்' ஸ்மிதாவின் தற்கொலை!
ஒட்டுமொத்த இந்தியாவையே நடிகை 'சில்க்' ஸ்மிதாவின் தற்கொலை அதிர்ச்சியில் ஆழ்த்தியது என்பது என்னவோ உண்மை. ஆனால் அது தலைப்புச் செய்தியாகவில்லை. சீதாராம் கேசரி தலைவரானது பின்னுக்குத் தள்ளப்படவில்லை.
'சில்க்' ஸ்மிதாவின் தற்கொலை மட்டுமல்ல, தமிழகத்தில் இன்னும் சில பரபரப்பான நிகழ்வுகளும் அன்று முக்கியம் பெற்றிருந்தன. அதிமுக பொதுக்குழுவால் ஜெயலலிதா மீண்டும் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரி என்று அறியப்படும் சசிகலாவும், அவரது சகோதரி மகனான ஜெ.ஜெ. டிவியின் நிர்வாக இயக்குநர் பாஸ்கரனும் 'காஃபிபோசா' சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டிருந்தனர்.
ஏற்கெனவே அந்த வழக்கில் சசிகலா கைது செய்யப்பட்டு சென்னை மத்திய சிறையில் இருக்கும் நிலையில், 'காஃபிபோசா' சட்டத்தின்கீழும் கைது செய்யப்பட்டிருப்பது, பழிவாங்கும் செயல் என்கிற விமர்சனங்கள் எழுந்தன. 'காஃபிபோசா' சட்டத்தில் கைது செய்யப்பட்டால் ஓராண்டு காலம் விசாரணை இல்லாமல் சிறையில் வைக்க முடியும் என்பதுதான் விமர்சனத்துக்கான காரணம்.
தில்லியிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த 'தில்லி மிட்-டே' என்கிற நண்பகல் நாளிதழிலிருந்து என்னை அழைத்தார்கள். 'சில்க்' ஸ்மிதா குறித்தும், சசிகலாவின் 'காஃபிபோசா' கைது பற்றியும், ஜெயலலிதா மீண்டும் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது குறித்தும் சிறப்புச் செய்திகளும், கட்டுரைகளும், படங்களும் உடனடியாகத் தங்களுக்குத் தரும்படி வேண்டுகோள் விடுத்தனர்.
சென்னை சென்று திரும்புவதற்கு விமான டிக்கெட்டுகளையும் தந்தனர். அதனால் ஒரு நாள் பயணமாக சென்னைக்குப் பறந்து வந்து, அடுத்த நாளே தில்லி திரும்பிவிட்டேன். நான் தில்லியிலிருந்து சென்னைக்குச் சென்ற அதே விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்தார் ஜார்ஜ் பெர்னாண்டஸ்.
அன்றைய இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது. பாதிக்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக இருந்தன. முதல் வகுப்பில் பயணிக்காமல், வழக்கம்போல சாதாரண வகுப்பில் பயணித்துக் கொண்டிருந்தார் ஜார்ஜ் பெர்னாண்டஸ்.
இந்திய அரசியலில் எந்தவித பந்தாவும் இல்லாமல், மிகவும் எளிமையாகவும், சாதாரணத் தொண்டர்களை மதிக்கும் விதத்தி லும் செயல்பட்ட தலைவர்களில் ஜார்ஜ் பெர்னாண்டஸ் குறிப்பிடத்தக்கவர். அவர் குறித்து இதற்கு முன்பே பதிவு செய்திருக்கிறேன். என்னை அவர் பெயர் சொல்லி அழைக்கும் அளவுக்கு அவருடன் எனக்கு நெருக்கம் இருந்தது.
விமானம் புறப்படவில்லை. பின் வரிசையில் இருந்த மூன்று பேர் இருக்கையில் தனியாக அமர்ந்திருந்தார் அவர். நாளிதழ் ஒன்றைப் படித்துக் கொண்டிருந்த ஜார்ஜ் பெர்னாண்டஸை அணுகுவதா, வேண்டாமா என்கிற தயக்கத்துடன் பத்து வரிசைகளுக்கு முன்னர் நின்று கொண்டிருந்தேன் நான். சட்டெனஅவரது பார்வை தினசரியில் இருந்து அகன்றதும் என்னைப் பார்த்துவிட்டார். அருகில் வரும்படி அழைத்தபிறகும் நான் ஏன் அங்கே நிற்கிறேன்... விரைந்து அணுகினேன்.
அடுத்த இரண்டரை மணிநேர விமானப் பயணமும் அவருடன் பேசிக் கொண்டிருப்பதில் கழிந்தது.
விமானப் பயணத்தில் ஜார்ஜ் பெர்னாண்டஸைசந்தித்தது மட்டுமல்ல, பேட்டியும் எடுத்ததை வாழ்நாளில் மறக்கவா முடியும்?
''சீதாராம் கேசரி காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மாற்றத்தை ஏற்படுத்துமா?'' என்று நான் கேட்பதற்குள் ஜார்ஜ் பதிலளிக்கத் தொடங்கிவிட்டார்.
''அவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இடைக்காலத் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். அதிக நாள்கள் தலைவராக நீடிக்க அவரை நேரு குடும்பம் அனுமதிக்காது. நரசிம்ம ராவை ஐந்தாண்டுகள் தொடர அனுமதித்ததே ஆச்சரியம்...''
''சோனியா காந்தியே காங்கிரஸ் தலைவராகும் வாய்ப்பு இருக்கிறதா என்ன?''
''உடனடியாக என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை. அவர் தலைவராக மாட்டார் என்றும் கூறிவிட முடியாது. சீதாராம் கேசரியும் அதிக நாள்கள் கட்சித் தலைவராகத் தொடர மாட்டார்; தேவே கெளடாவும் பிரதமராகத் தொடர அனுமதிக்க மாட்டார்கள்...''
''அனுமதிக்க மாட்டார்கள் என்றால், யார் அனுமதிக்க மாட்டார்கள்?''
''சோனியா காந்தி அனுமதிக்க மாட்டார். அவர்கள் இருவரும் அவரவர் பதவியில் பலமடைவது நேரு குடும்பத்தின் வருங்கால வாய்ப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடும். நரசிம்மராவ் எப்படியோ சாமர்த்தியமாக ஐந்தாண்டுகளை நகர்த்தி விட்டார். வேறு யாராலும் அதுபோலத் தொடர முடியாது.''
''கெளடா ஆட்சியைக் கவிழ்த்தால், பாஜகதான் ஆட்சி அமைக்கும். அதில் காங்கிரஸூக்கு என்ன லாபம்?''
''ஏன் காங்கிரúஸ ஆட்சி அமைத்தால் வேண்டாம் என்றா சொல்வார்கள்? அரசியலில் நீங்களாக எந்தக் கணக்கும் போடாதீர்கள். அந்தந்த சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப புதுப்புதுக் கணக்குகள் உருவாகும்.''
''நரசிம்ம ராவ் குறித்த தங்களது கருத்து என்ன?''
''அவரது ஆட்சியை மிகக் கடுமையாக எதிர்த்தவர்களில் நானும் ஒருவன். அவர் கொண்டுவந்த பொருளாதார சீர்திருத்தங்கள், உலகமயம் என்கிற பெயரில் கலாசாரச் சீரழிவை ஏற்படுத்தியது. அதெல்லாம் இருந்தாலும், அவர் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்கும் திட்டத்தை அனுமதிக்கவில்லை. கெளடா அரசு பொதுச் சொத்துகளை தனியாருக்கு தாரை வார்க்கக்கூடும், பார்த்துக் கொண்டே இருங்கள்...''
''நீங்கள் பாஜகவை நெருங்குவது போலத் தோன்றுகிறதே...''
''காங்கிரஸூக்கு பாஜக மேல் என்பதுதான் எனதுகருத்து. காங்கிரஸ் தொடர்வது என்பது நேரு குடும்பத்துக்கு இந்தியாவை அடிமை சாசனம் எழுதிக் கொடுப்பதற்கு நிகரானது என்று நான் கருதுகிறேன்.''
''சென்னையில் ஜெயலலிதாவை சென்று சந்திப்பீர்களா?''
''அவர் அழைத்தால் சென்று சந்திப்பதில் எனக்கு எந்தவிதத் தயக்கமும் கிடையாது. நானாகப் போய் சந்திக்க எனக்கு நேரமில்லை. தேவையுமில்லை.''
''முதல்வர் கருணாநிதியை...''
''அவர் இப்போது என்னை சந்திக்க விரும்பமாட்டார். லாலு பிரசாத் யாதவின் நெருங்கிய தோழராகிவிட்டார் நண்பர் கருணாநிதி.''
தேவே கெளடாவுக்கு பதிலாக ராமகிருஷ்ண ஹெக்டே பிரதமராகி இருந்தால், காங்கிரஸ், சோனியா காந்தி, ஏனைய கட்சிகள் எல்லோரையும் அரவணைத்துச் சென்று வெற்றிகரமாகக் கூட்டணி ஆட்சியை ஐந்து ஆண்டுகள் தொடர்ந்திருப்பார் என்றும், அந்த சாமர்த்தியம் கெளடாவுக்குக் கிடையாது என்றும் கருத்துத் தெரிவித்தார் ஜார்ஜ் பெர்னாண்டஸ்.
சென்னை விமான நிலையத்தில் இறங்கிய நாங்கள் விடைபெறும்போது, ஜார்ஜ் பெர்னாண்டஸ் என்னிடம் சொன்னார்.
''குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இன்னும் இரண்டே ஆண்டுகளில் ஐக்கிய முன்னணி அரசு நெல்லிக்காய் மூட்டை சிதறுவதுபோலச் சிதறிவிடும். அதிலிருக்கும் திமுக, தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகள் பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைக்கும். அதேபோல, ஜெயலலிதா மீண்டும் மிகப் பெரிய அரசியல் சக்தியாக உயர்ந்துவிடுவார்.''
''என்ன அடிப்படையில் இப்படிக் கூறுகிறீர்கள்?''
''இதற்கெல்லாம் ஜோசியமா தெரிய வேண்டும்? இன்றைய அரசியலைப் பார்க்கும் சிறு குழந்தைக்குக்கூட இது தெரியும்...'' என்று சிரித்தபடி கூறிவிட்டு நடையைக் கட்டினார் அவர். கையில் கைப்பைகூட இல்லாமல் பைஜாமா, ஜிப்பாவுடன் விமான நிலையத்திலிருந்து அவர் வெளியேறியது இப்போதும் கண்ணில் நிறைந்திருக்கிறது.
ஒரே நாளில் நான் தில்லி திரும்பிவிட்டேன். நரசிம்ம ராவைப் பிரதமர் தேவே கெளடா சந்தித்து அரை மணிநேரம் கலந்தாலோசனை நடத்தியதாக காங்கிரஸ் அலுவலக நிருபர்கள் சொன்னார்கள். என்ன பேசினார்கள் என்று யாருக்கும் தெரியவில்லை. அதைத் தெரிந்து கொள்ள ஸ்ரீகாந்த் ஜிச்கரைத் தொடர்பு கொண்டபோது அவர் நாகபுரி சென்றுவிட்டதாகக் கூறினார்கள்.
சீதாராம் கேசரியின் வீடு புராணா கிலா (பழைய கோட்டை) சாலையில் இருந்தது. அவரை சந்திக்க நேரம் கேட்டபோது, குறிப்பிட்ட நேரம் தர முடியாது என்றும், எப்போது வேண்டுமானாலும் வரும்படியும், வாய்ப்பிருந்தால் சந்திக்கலாம் என்றும் பதில் வந்தது. கேசரிஜி எப்போதும் அப்படித்தான். அவருக்கு மனமிருந்தால் மணிக்கணக்காகப் பேசிக் கொண்டிருப்பார். இல்லாவிட்டால், முகத்தைத் திருப்பிக் கொள்வார்.
சீதாராம் கேசரியிடம் ஒரு கெட்ட பழக்கம் இருந்தது. முதல் சந்திப்பின்போதே, 'நீங்கள் என்ன ஜாதி? முற்பட்ட வகுப்பினரா, பிற்படுத்தப்பட்டவரா, பட்டியல்
இனத்தவரா?' என்று தெரிந்து கொண்ட பிறகுதான், அடுத்த பேச்சு. அதே நேரத்தில், ஜாதிய துவேஷம் அவருக்கு இருந்தது என்றும் சொல்லிவிட முடியாது.
எதற்கும் எனது அதிர்ஷ்டத்தை சோதனை செய்துவிடலாம் என்று நான் அவரது வீட்டுக்குப் போனபோது, பார்வையாளர்கள் யாரும் இருக்கவில்லை. உள்ளே போனபோதுதான் தெரிந்தது அவர் வீட்டில் இல்லை என்று. கிளம்பலாம் என்று நினைத்தபோது அவரது கார் உள்ளே நுழைந்தது. எனக்கு அதிர்ஷ்டம் அடித்தது.
ஏற்கெனவே என்னை அவருக்கு நன்றாகத் தெரியும் என்பதால், மகிழ்ச்சியுடன் வரவேற்றார். தமிழ்நாடு காங்கிரஸ் குறித்து என்னிடம் இருந்து தெரிந்து கொள்வதுதான் அவரது நோக்கம் என்பது பேச்சிலிருந்து தெரிந்தது. துருவித் துருவிக் கேட்டுக் கொண்டிருந்தார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக அப்போது குமரி அனந்தன் இருந்தார். காங்கிரஸிலிருந்து மூப்பனார் பிரிந்து தமிழ் மாநில காங்கிரஸைத் தொடங்கியபோது, அவருடன் போகாமல் கட்சியைக் காப்பாற்றியவர் என்று சீதாராம் கேசரியே அவரைப் புகழ்ந்தார். குமரி அனந்தன், திண்டிவனம் ராமமூர்த்தி, கே.வி. தங்கபாலு, ஆர். பிரபு ஆகிய நான்கு பேரும் அல்லாமல், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராகும் தகுதி உடையவர்கள் யார் யார் என்று என்னிடம் கேட்டபோது, நான் தர்மசங்கடத்தில் நெளிந்தேன்.
அவரே சில பெயர்களைச் சொன்னார். எந்த அளவுக்கு தமிழ்நாடு அரசியல் குறித்தும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் உள்ள தலைவர்கள் குறித்தும் அவர் தெரிந்து வைத்திருக்கிறார் என்பதைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன். சிலர் நினைப்பதுபோல, சீதாராம் கேசரி காங்கிரஸ் தலைவர் பதவிக்குத் தகுதி இல்லாதவர் அல்ல என்பது தெரிந்தது.
''தேவே கெளடா ஆட்சிக்கு உங்களால் பிரச்னை ஏற்படும் என்று எல்லோரும் கூறுகிறார்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?''
''பிரச்னைகள் ஏற்படுத்தாமல் பிரதமர் தேவே கெளடாவும் அவரது அமைச்சர்களும் செயல்பட்டால், நான் ஏன் பிரச்னை கொடுக்கப்போகிறேன்? காங்கிரஸின் ஆதரவில் பதவியை அனுபவிக்கிறோம் என்கிற புரிதல் அவர்களுக்கு இருக்க வேண்டும். குறிப்பாக, கம்யூனிஸ்டுகளை பிரதமர் தேவே கெளடா அடக்கி வைக்க வேண்டும். பாஜக வரக்கூடாது என்பதற்காகத்தான் நாங்கள் ஐக்கிய முன்னணிக்கு ஆதரவு தருகிறோம். அதற்காக எங்கள் பொறுமையை அவர்கள் சோதிக்கக் கூடாது...!''
சீதாராம் கேசரி பேசுவதைக் கேட்டபோது, ஜார்ஜ் பெர்னாண்டஸ் சொன்னது என் நினைவுக்கு வந்தது. நான் ஏதோ கேட்க நினைத்து வாயெடுத்தேன், புஸ் புஸ்வென்று ஒரு நாய்க்குட்டி ஓடிவந்து, சீதாராம் கேசரியின் மடியில் தாவி ஏறி உட்கார்ந்தது. அதைச் செல்லமாகத் தடவிக் கொடுத்தபடி என்னிடம் கேட்டார் அவர் - ''இது யார் பரிசளித்த நாய்க்குட்டி என்று தெரியுமா?''
எனக்கெப்படித் தெரியும்? நான் அடுத்தாற்போல அவர் என்ன சொல்லப் போகிறார் என்கிற எதிர்பார்ப்புடன் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் சொன்ன பெயரைக் கேட்டபோது...
(தொடரும்)
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...