பேல் பூரி
By DIN | Published On : 01st January 2023 12:00 AM | Last Updated : 01st January 2023 12:00 AM | அ+அ அ- |

கண்டது
(கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளஓர் ஊரின் பெயர்)
""கல்லுக்கூட்டம்''
-கே.பிரபாவதி,
மேலகிருஷ்ணன்புதூர்.
(கன்னியாகுமரி மாவட்டத்தில் மர பெயர்களைக் கொண்ட ஊர்கள்)
""பலா விளை, மா விளை, முருங்கை விளை,பன விளை''
-அ.இரவீந்திரன்,
குஞ்சன்விளை.
(திண்டுக்கல்லில் ஆட்டோ ஒன்றில்...)
""பார்த்தவனெல்லாம் என்ன பேசுவான்என்று பயப்படாதே!
படைத்தவன் என்ன நினைப்பான் என்று பயந்துவாழ்!''
-விமலா சடையப்பன்,
காளனம்பட்டி.
கேட்டது
(நாகர்கோவில் மணிமேடை ஜங்ஷனில் தரகரும், அவரது நண்பரும்..)
""இந்தத் தொழிலை விட்டுட்டு பேசாமல் பெட்டிக்கடை வெச்சு பிழைச்சுக்காலாம்னு இருக்கேன்.''
""என்ன ஆச்சு...இப்படி விரக்தியா பேசுறீங்க!''
""என்னத்த சொல்ல! இருந்தாலும் சொல்றேனாம்! பொண்ணு வீட்டுல, மாப்பிள்ளைக்கு சிரித்தமூஞ்சினு சொன்னதுக்கு, மாப்பிள்ளை என்ன கிறுக்கனானு கேட்டுபுட்டாங்க!''
- மகேஷ் அப்பாசுவாமி,
பனங்கொட்டான்விளை.
(திருப்பூர் மின்வாரிய அலுவலகத்தில் இரு பெண்மணிகள்)
""என்ன அக்கா! ஆதாரை இணைக்க வந்தீங்களா?''
"" இல்ல! எங்களை மட்டும் அவதாரைஇணைக்கச் சொன்னாங்க...அதான் கூட்டிட்டு வந்துஇணைச்சட்டுப் போறேன்.''
- மகா,
திருப்பூர்.
(திருச்சி ஹோட்டல் ஒன்றில் தரகரும், வரன் பார்ப்பவரும்..)
""பொண்ணுக்கு வயசு ஒண்ணு, ரெண்டு கூட இருக்குமுன்னு சொல்றீங்களே..?''
""அதனால் என்னங்க! எல்லோரும் இப்ப,புருஷனை வாடா- போடான்னு தானே
கூப்பிடுறாங்க??''
-அ.சுஹைல் ரஹ்மான்,
திருச்சி.
யோசிக்கிறாங்கப்பா!
மனிதனாக வாழ்வது பெரிதல்ல!
மனிதாபிமானத்துடன் வாழ்வதுதான் பெரிது.
-ச.உமாதேவி,
திருவண்ணாமலை.
மைக்ரோ கதை
""ரேணுகா! என் கைக்கடிகாரத்தைப் பார்த்தாயா?''
""படிக்கிறேன்.''
""என்ன பதில் அதற்கு?''
""கொஞ்சம் இருங்கள்!'' என்று உள்ளே சென்றாள்.
காத்திருந்தேன்.
காலண்டரில் காற்றில் ஆடிய ஆஷா பரேக்கை பார்த்துக்கொண்டே இருந்தேன்.
ரேணுகாவின் அப்பா வந்தார். என்னை அணுகினார்.
என் முதுகை அணைத்துக் கொண்டு, ""சேகர்'' என்றார்.
சந்தோஷத்துடன் ""என்ன (மாமா)'' என்றேன்.
""திரும்பு'' என்றார். திரும்பினேன்.
ரேணுகாவின் அப்பாவின் கை என் முதுகிலிருந்து கழுத்து வளைவுக்கு வந்தது. ஒரே தள்ளு!
வெளியில் வந்து விழுந்தேன். கனவும் கலைந்தது.
-சேலத்தான்,
சேலம்.
எஸ்எம்எஸ்
உட்கார்ந்திருப்பனுக்கு நிற்பவனின் கஷ்டம் தெரியாது.
நிற்பவனுக்கு நடப்பவனின் கஷ்டம் தெரியாது.
நடப்பவனுக்கு ஓடுபவனின் கஷ்டம் தெரியாது.
-வி.ந.ஸ்ரீதரன்,
சிறுசேரி.
அப்படீங்களா!
வாட்ஸ் ஆஃப் தரவுகளை பாதுகாப்பாக கையாள்வது என்பது நிறுவனத்தைவிட அதிக பொறுப்பு பயனாளர்களுக்கு உள்ளது. பயனாளர்களின் பயன்பாட்டுக்காக, மேலும் ஒரு செல்லிடப்பேசியில் ஒரே வாட்ஸ்ஆப் கணக்கை பயன்படுத்த மெட்டா நிறுவனம் அனுமதி அளித்துள்ளது.
கணினி, மடிக்கணினி ஆகியவற்றிலும் க்யூஆர் கோட்டைப் பயன்படுத்தி ஒரே வாட்ஸ்ஆஃப் கணக்கை உபயோகிக்கவும் அனுமதி உள்ளது. இப்படி உள்ளீடு செய்யப்படும் கணக்கை முறையாக லாக் அவுட் செய்யாமல் சிலர் விட்டு விடுவதால் பிறர் அந்தத் தகவல்களை திருடும் அபாயம் உள்ளது.
இதைத் தடுக்க இரண்டாவது கணக்கைப் பயன்படுத்தும்போது 6 இலக்க எண்ணை பதிவிடும் புதிய சேவையை வாட்ஸ் ஆஃப் கொண்டு வந்துள்ளது.
முதல் கணக்கு பயன்பாடான கைப்பேசியைத் தவிர மடிக்கணினி, கணினி ஆகியவற்றில் வாட்ஸ்ஆஃப் கணக்கை பயன்படுத்தும்போது இந்த 6 இலக்க எண் பாதுகாப்புச் சேவையைத் தேர்வு செய்துவிட்டால் போதும்.
கைப்பேசியைத் தவிர வேறு கணினிகளில் உங்கள் வாட்ஸ்ஆஃப் கணக்கை பயன்படுத்தினால் 6 இலக்க ரகசிய எண் கைப்பேசிக்கு வந்துவிடும்.
சரியான எண்ணை உள்ளீடு செய்தால்தான் பிற கணினிகளில் வாட்ஸ் ஆஃப் கணக்கை பயன்படுத்த முடியும். இந்தச் சேவையைப் பயன்படுத்தாமலும் இருக்க அனுமதி உள்ளது.
தற்போது பீட்டா பயன்பாட்டாளர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள இந்த புதிய சேவை விரைவில் அனைவருக்கும் வழங்கப்பட உள்ளது.
வெளி கணினிகளில் வாட்ஸ்ஆஃப் கணக்கை பயன்படுத்தும் பயனாளர்களுக்கு இந்த புதிய சேவை பெரிதும் உதவியாக இருக்கும்.
-அ.சர்ப்ஃராஸ்

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...