ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: குடிப்பழக்கத்தை நிறுத்த....!

எனக்கு மண்ணீரல் வீக்கம், பசியின்மை, வயிற்று வலி, மலச்சிக்கல், மூலம் போன்ற உபாதைகளால் அவதியுறுகிறேன். குடிப்பழக்கம்தான் காரணம். அதை நிறுத்த வேண்டும் என்று மருத்துவர் கூறுகிறார்.
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: குடிப்பழக்கத்தை நிறுத்த....!

எனக்கு மண்ணீரல் வீக்கம், பசியின்மை, வயிற்று வலி, மலச்சிக்கல், மூலம் போன்ற உபாதைகளால் அவதியுறுகிறேன். குடிப்பழக்கம்தான் காரணம். அதை நிறுத்த வேண்டும் என்று மருத்துவர் கூறுகிறார். ஆனால் அதை என்னால் நிறுத்த முடியாமல் கஷ்டப்படுகிறேன்.  இந்த உபாதைகள் குறைய மூலிகை மருந்துள்ளதா?

-தாமோதரன்,
காரைக்கால்.

குடிப்பழக்கத்திற்கு அடிமையான நண்பர்களை நீங்கள் தவிர்க்க வேண்டும். அதைத் தொடர்ந்து, குடித்துவந்தால் தங்களுக்கு சோகை நோய், மூச்சிரைப்பு, தொடர் இருமல், கிராணி எனும் உணவு செரியாமல் வெளியேறும் உபாதை, தோல் பாதிப்பு, பௌத்திரம், வீக்கம், பூட்டுகளில் வீக்கத்துடன் கூடிய சில்லிட்ட வலி, இதய உபாதைகள் போன்ற பிரச்னைகளும் ஏற்படக் கூடிய பாதிப்புகள் வரக்கூடும். ஒருசில மூலிகைகளின் சுவையினால் ஏற்பட்டுள்ள உபாதைகளும், வரவிருக்கக் கூடிய பிரச்னைகளையும் குணப்படுத்தலாம்.

குடிப்பழக்கத்தை நிறுத்தி, இந்த மூலிகைகளின் கலவையை நீங்கள் சாப்பிட்டால், மூலிகைகளுக்கும் உபாதைகளுக்கும் சண்டை நடந்து இறுதியில் மூலிகைகள் வெற்றி பெறும். 

குடித்துக் கும்மாளமிட்டால், மூலிகைகள் குடித்தத் திரவத்துடன் சண்டையிட்டு படுதோல்வியையே சந்திக்கும் என்பதை நினைவில் கொள்ளவும்.

கறியுப்பு எட்டு பங்கு, சவுட்டுப்பு ஐந்து பங்கு, அட்டுப்பு, இந்துப்பு, தனியா, திப்பிலி, மோடி, கருஞ்ஜீரகம், இலவங்கப் பத்திரி, நாககேஸரம், தாளீசபத்திரி, புளிவஞ்சி இவை ஒவ்வொன்றும் இரண்டிரண்டு பங்கு, மிளகு, ஜீரகம், சுக்கு இவை ஒவ்வொரு பங்கு,  இலவங்கப் பட்டை, ஏலம் இரண்டும் தனித்தனியே அரைப் பங்கு இவற்றையெல்லாம் சேர்த்து செய்த சூரண மருந்து தற்சமயம் விற்பனையிலுள்ளது.

உப்பு போடாத 200 மில்லி மோரில், இந்த சூரண மருந்தை, மூன்று சிட்டிகை கலந்து காலை, மதியம், இரவு என மூன்று வேளை, உணவிற்கு அரை மணி முன்னால், சுமார் நாற்பத்தி எட்டு நாட்கள் சாப்பிட்டு வர, நீங்கள் குறிப்பிடும் உபாதைகளும், எதிர்காலத்தில் வரவிருக்கும் பிரச்னைகளையும் குணப்படுத்தி, வராமல் தடுக்கவும் செய்யவும்.

மேலும் மஹோதரம் எனும் நீர்ச்சேர்க்கையினால் ஏற்படும் வயிறு வீக்கம், க்ஷயம் எனும் உடல் இளைத்துப் போகச் செய்து தாதுக்களின் பலவீனம் போன்ற உபாதைகளையும் குணப்படுத்தும்.

பசியை நன்கு தூண்டிவிட்டு, தன்னைச் சுற்றியுள்ள சீரணமாகாமல் கிடக்கும் பழைய உணவுகளை விரைவில் செரிக்க வைக்கும். மதுபானத்தினால் ஏற்பட்ட குடல் அழற்சி, கல்லீரல் செயல்திறன் குறைபாடு போன்ற நிலையில், நீங்கள் சொன்ன செரிமான கேந்திரத்தை, கனமான மைதா பொருட்கள், ரவை,இனிப்பான உணவு வகைகளால் துன்புறுத்தக் கூடாது.

நாலு பலம் (240 கிராம்) பச்சரிசியை பதினாறு மடங்கு தண்ணீரில் பக்குவம் செய்து வடித்தெடுத்த கஞ்சியில், இரண்டு சிட்டிகை சுக்குப் பொடியும், இந்துப்பும் சேர்த்து உபயோகித்தால், பசியைத் தூண்டுவதுடன் செரியாமல் கிடக்கும் பதனழிந்த உணவுகளையும் குடல் உட்புற அழுக்குகளையும் சுரண்டி வெளியேற்றும். மதியம், இரவு சிறிது மோர் சாதம் சாப்பிடலாம்.

குடியினால் ஏற்படும் ரத்தக் கணங்களின் பலவீனம், உடல் ஆயாஸம், உட்புறக் காய்ச்சல் போன்ற நிலைகளில், தனியா, சுக்கு, திப்பிலி, மிளகு, இந்துப்பு இவற்றையும் மோரையும் மேற்குறிப்பிட்ட கஞ்சியில் கலந்து, எண்ணெயில் பொரித்த பெருங்காயத்தைச் சேர்த்துப் பக்குவம் செய்து சாப்பிடுவது நல்லது.

தண்ணீரை நன்கு காய்ச்சி எடுத்து, இரவில் பருகிவர கப உபாதைகள், பூட்டுகளில் வீக்கத்துடன் கூடிய வலி, உடல் பருமனால் ஏற்படும் கஷ்டங்கள், இருமல், மூச்சிரைப்பு, காய்ச்சல் இவை நீங்கும். சிறுநீர்ப்பை சார்ந்த உபாதைகளைப் போக்கும். பசியை நன்றாகத் தூண்டிவிடும்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com