'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 121

அதிமுகவுடனான கூட்டணியை காங்கிரஸ் மேலிடம் அறிவித்தபோது, அதிருப்தியில் இருந்தாலும் மூப்பனாரும் அவரது ஆதரவாளர்களும் உடனடியாக எந்தவித முடிவையும் எடுக்கத் தயாராக இருக்கவில்லை.
'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 121

அதிமுகவுடனான கூட்டணியை காங்கிரஸ் மேலிடம் அறிவித்தபோது, அதிருப்தியில் இருந்தாலும் மூப்பனாரும் அவரது ஆதரவாளர்களும் உடனடியாக எந்தவித முடிவையும் எடுக்கத் தயாராக இருக்கவில்லை. "தனித்துப் போட்டி என்பது தற்கொலை முயற்சி' என்பதில் மூப்பனார் மிகவும் தெளிவாகவே இருந்தார்.

அதிமுக கூட்டணியை ஏற்பதில்லை என்பதிலும், அந்தக் கூட்டணியின் வேட்பாளர்களாகப் போட்டியிடப் போவதில்லை என்றும் தில்லியிலேயே மூப்பனார் ஆதரவாளர்கள் முடிவெடுத்திருப்பதாக, திருப்பத்தூர் மக்களவை உறுப்பினர் ஏ. ஜெயமோகன் என்னிடம் தெரிவித்தார். தில்லியிலிருந்து சென்னை வந்து கொண்டிருந்த விமானத்தில் என்னுடன் பயணித்தவர்களில் அவரும் ஒருவர்.

விமானம் சென்னையில் வந்து இறங்குவதற்குள், தமிழகம் முழுவதும் முன்பே திட்டமிட்டதுபோல மூப்பனார் ஆதரவாளர்கள் நரசிம்ம ராவின் கொடும்பாவியை எரிப்பது உள்ளிட்ட பல போராட்டங்களை முன்னெடுத்தனர். தமிழ்நாடு காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவன் கலவர பூமியாகக் காட்சியளித்தது. அப்போது மூப்பனார் அணியில் அவரது சென்னை மாவட்டத் தளபதிகளாக இருந்த "கராத்தே' தியாகராஜனும், வெற்றிவேலும் அந்த எதிர்ப்பை முன்னின்று நடத்தினார்கள்.

அதிமுக - காங்கிரஸ் கூட்டணி குறித்து தொண்டர்களுக்கு விளக்கவும், பத்திரிகையாளர்களுக்குப் பேட்டி கொடுக்கவும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் குமரி அனந்தனும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியனும் சத்தியமூர்த்தி பவனுக்கு வருவதாக அறிவித்திருந்தனர். அவர்கள் வருவதற்குள், அலுவலகத்தில் பறந்து கொண்டிருந்த காங்கிரஸ் கொடி இறக்கப்பட்டு கருப்புக் கொடி ஏற்றப்பட்டிருந்தது.

சென்னை திரும்பியவுடன், மூப்பனார் சென்று ஆலோசனை நடத்திய இடம் "துக்ளக்' பத்திரிகை அலுவலகம். அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து மூப்பனாரும் - ஆசிரியர் சோவும் ஆலோசித்துக் கொண்டிருந்தார்களே தவிர, எந்தவித முடிவும் எடுக்கவில்லை.

"மேலிட முடிவை ஏற்போம்' என்று மூப்பனார் அணியைச் சேர்ந்த மத்திய இணையமைச்சர் எம். அருணாசலமும், ஏனைய சில மூப்பனார் ஆதரவாளர்களும் தெரிவித்தனர். மூப்பனாரேகூட உடனடியாக எந்த முடிவும் எடுக்காமல், சத்தியமூர்த்தி பவனில் தொண்டர்களை சந்தித்தார். ""காங்கிரஸ் தலைமையின் கூட்டணி முடிவை ஏற்கவில்லை என்றாலும், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து சிந்தித்து முடிவெடுப்போம்'' என்பதுதான் தொண்டர்களிடம் அவர் சொன்ன செய்தி.

அதிமுக கூட்டணி பிரச்னையில், ஜி.கே. மூப்பனாருடன் கருத்து வேறுபாடு கொண்டிருந்தவர், அவருக்கு மிகவும் நெருக்கமானவர் என்று அதுவரை கருதப்பட்ட திண்டிவனம் ராமமூர்த்தி. காமராஜரின் அணுக்கத் தொண்டர் என்பது மட்டுமல்ல, 1967 சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸ் உறுப்பினர்களில் ஒருவரும்கூட. அவர் என்னதான் சொல்கிறார் என்று தெரிந்துகொள்ள லாயிட்ஸ் காலனியில் இருந்த அவரது வீட்டுக்குச் சென்றேன்.

என்.எம். மணிவர்மா, எஸ்.ஜி. விநாயகமூர்த்தி உள்ளிட்ட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முக்கியஸ்தர்கள் சிலர் அவருடன் இருந்தனர். கட்சித் தலைமையின் முடிவு தவறாக இருந்தாலும்கூட, திமுக ஆதரவு நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என்பது அவர்களது, குறிப்பாக, திண்டிவனம் ராமமூர்த்தியின் கருத்தாக இருந்தது.

""பலவீனமான அதிமுகவிடம் அடித்துப் பேசிக் கூடுதல் இடங்கள் பெறுவதுதான் புத்திசாலித்தனம். கருணாநிதியும், திமுகவும் மீண்டும் ஆட்சியில் அமர்வதற்குக் காங்கிரஸ் ஏன் துணைபோக வேண்டும்? அதனால் நமக்கென்ன லாபம்?'' என்று திண்டிவனத்தார் அவர்களிடம் பேசிக்கொண்டிருக்கும்போது நான் வாசல் அழைப்பு மணியை அடித்தேன்.

என்னை அவர்கள் எதிர்பார்க்கவில்லைதான். ஆனால், முகச்சுழிப்பு இல்லாமல் வரவேற்றார் திண்டிவனம் ராமமூர்த்தி.

""ஜெயலலிதாவின் ஊழல் ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்று நீங்கள் நினைக்கவில்லையா?''

""ஓர் ஊழல் ஆட்சியை அகற்றிவிட்டு இன்னோர் ஊழலாட்சி அமைய நாங்கள் ஏன் துணைபோக வேண்டும்?''

""திமுக கூட்டணி வேண்டாம் என்பதுதான் உங்கள் கருத்தா?''

""தனித்து நின்று "டெபாசிட்' இழந்தாலும் சரி, திமுகவுடன் கூட்டணி என்பது கூடவே கூடாது. பெருந்தலைவர் காமராஜர் இருந்திருந்தால் இதை ஏற்றுக் கொண்டிருப்பார் என்று நினைக்கிறீர்களா? அவரை எந்த அளவுக்குத் தரக்குறைவாக இவர்கள் பேசியிருக்கிறார்கள் என்பது என்போன்றவர்களுக்குத்தான் தெரியும். மூப்பனார் அதையெல்லாம் மறந்திருக்கமாட்டார் என்று நினைக்கிறேன்.''

""அதுதான் திமுக கூட்டணியை நீங்கள் எதிர்ப்பதற்கான காரணமா?''

""அதுமட்டுமல்ல. விடுதலைப் புலிகளுடன் தொடர்பிருக்கிறது என்று கூறி, திமுக ஆட்சியை நாம் தான் கலைத்தோம். ராஜீவ் காந்தி படுகொலையில் திமுகவுக்கு மறைமுகமாகத் தொடர்பிருக்கிறது என்று கடந்த தேர்தலில் நாம் பிரசாரம் செய்திருக்கிறோம். ஜெயின் கமிஷன் விசாரணையில் அதை ஆமோதிப்பது போன்ற சில தகவல்கள் பதிவாகி இருக்கின்றன. அப்படிப்பட்ட சூழலில் திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்து, மக்களைச் சந்திப்பது நேர்மையா என்பதுதான் எனது கேள்வி.''

""ராஜீவ் காந்தியின் ரத்தத்தில் பெற்றதல்ல எனது வெற்றி என்று சொன்னவர்தானே ஜெயலலிதா? ஊழலில் அவருக்கும் கருணாநிதிக்கும் என்ன வேறுபாடு பார்க்கிறீர்கள்? அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதை மட்டும் காமராஜர் ஏற்றுக்கொள்வாரா?''

""காமராஜரை விடுங்கள். திமுகவுடன் கூட்டணி அமைப்பதை முதலில் சோனியா காந்தியும் குடும்பமும் ஏற்றுக்கொள்ளுமா? இந்தியா முழுவதும் உள்ள காங்கிரஸ்காரர்கள் ஏற்றுக் கொள்வார்களா?''

""மூப்பனார் என்னதான் செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?''

""கட்சிக் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு, அமைதியாக இருக்க வேண்டும். இல்லையென்றால், தனித்துப் போட்டியிடத் தயாராக வேண்டும். அவர் தனித்துப் போட்டி என்று அறிவித்தால், அதை ஆதரிக்கும் முதல் நபராக நான் இருப்பேன்...''

""ரஜினிகாந்த் ஆதரவு தந்தால், காங்கிரஸ் தனித்துப் போட்டியிடத் தயாராகத்தான் இருந்தது. அவர் ஆதரவு தரவில்லையே...''

""ரஜினிகாந்த் ஒருநாளும் ஆதரவு தரமாட்டார். எம்.ஜி.ஆரைப் போலவே, தன்னையும் தமிழனில்லை என்று திமுக பரப்புரை செய்துவிடும் என்கிற பயம் அவருக்கு. எம்.ஜி.ஆருக்கு இருந்த தைரியம் ரஜினிகாந்துக்குக் கிடையாது. பார்த்துக் கொண்டே இருங்கள், மூப்பனாரைத் திமுக வலையில் கொண்டுபோய்ச் சேர்க்கும் புண்ணியத்தை ரஜினிகாந்த் கட்டிக்கொள்வார்.''

""அவர்தான் யாருக்கும் ஆதரவு தரப்போவதில்லை என்று அறிக்கை வெளியிட்டு விட்டாரே. அதனால்தானே திருநாவுக்கரசு போன்றவர்கள் மீண்டும் ஜெயலலிதாவிடம் சரணடைந்திருக்கிறார்கள்.''

""நடக்கப்போகும் வேடிக்கையை நீங்களும் பார்க்கப் போகிறீர்கள். நானும் பார்க்கப் போகிறேன். ஜெயலலிதாவைப் பழிவாங்க ரஜினிகாந்த் திமுகவை ஆதரிக்கிறாரா இல்லையா பாருங்கள்...''

சிறிது நேரம் அவருடன் விவாதித்துவிட்டு, நான் வீடு திரும்பி விட்டேன். திண்டிவனம் ராமமூர்த்தி சொன்னதுபோலவே, அன்று இரவு அமெரிக்காவிலிருந்து நடிகர் ரஜினிகாந்தின் அறிக்கை ஒன்று வெளிவந்தது. முன்பே கூறியிருந்ததுபோல தமிழக அரசியல் போக்கையே தலைகீழாக மாற்றியது அந்த அறிக்கை.

""தில்லியை விலைக்கு வாங்கலாம். மக்களை விலைக்கு வாங்க முடியாது'' என்று தலைப்பிட்டு, அதிமுக -  காங்கிரஸ் கூட்டணி அறிவிப்பை விமர்சித்து ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டிருந்தார் - ""என்னுடைய உடல் மட்டும்தான் வெளிநாட்டில் இருக்கிறதே தவிர, உயிர், மூச்சு, உணர்வு, எண்ணம் எல்லாம் என்னை வாழவைக்கும் தமிழக மக்கள் மீதுதான் இருக்கிறது சகோதரி ஜெயலலிதாவுக்கு ஒரு முன்னெச்சரிக்கை.

நீங்கள் தமிழக மக்களையும் வாழவைக்காமல், அவர்கள் கொடுத்த அரசு அதிகாரத்தையும் நல்ல வழியில் பயன்படுத்தாமல் சுயநலத்திற்காக அதிகார துஷ்பிரயோகம் செய்து பணத்தை சம்பாதித்தீர்கள். இப்போது அந்தப் பணத்தை வைத்து தில்லியையே விலைக்கு வாங்கி விட்டீர்கள்.

வாழ்த்துகள். நான் மிகத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்வது என்னவென்றால், பணத்தைக் கொடுத்து தில்லியையே வாங்கிவிட்ட நீங்கள், அதே பணத்தைக் கொடுத்து வாழும் தெய்வங்களான தமிழக மக்களையும், தமிழ்நாட்டையும் வாங்க முடியும் என்று கனவிலும் நினைக்க வேண்டாம். 

உண்மை கசக்கும். மன்னிக்கவும். ஜெய்ஹிந்த்!''

அதுவரை செய்வதறியாமல் திகைத்துக் கொண்டிருந்த ஜி.கே. மூப்பனாருக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும், புதிய பாதையைத் திறந்துவிட்டது அந்த அறிக்கை எனலாம். மூப்பனாரும் - சோ ராமசாமியும் அடுத்தகட்ட நகர்வுக்குத் தயாரானார்கள். நடிகர் ரஜினிகாந்த் ஆசிரியர் சோவுடன் தொலைபேசித் தொடர்பில் இருந்திருக்க வேண்டும்.

1996 பொதுத் தேர்தலில் திமுக - தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணியை உருவாக்கியதும், தொகுதிப் பங்கீடு பிரச்னையை சுமுகமாகப் பேசித் தீர்த்ததும் ஆசிரியர் சோ ராமசாமிதான். காலை, மாலை என்று பலமுறை திமுக தலைவர் கருணாநிதியை ஆசிரியர் சோ அவரது கோபாலபுரம் வீட்டிலும், அறிவாலயத்திலுமாக சந்தித்துப் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதன் பின்னணியில் ரஜினிகாந்தின் வழிகாட்டுதலும் இருந்திருக்க வேண்டும்.

சில வருடங்களுக்குப் பிறகு (2001-இல் அவர் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தபோது என்று நினைவு), "தமிழ் மாநில காங்கிரஸ் என்று தனிக்கட்சி தொடங்கிய மூப்பனார், ரஜினிகாந்தின் ஆதரவுடன் ஏன்  தனித்துப் போட்டியிடவில்லை?' என்று நான் சோ சாரிடம் கேட்டேன். அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான் - ""அதற்கு ஆதரவு தர ரஜினிகாந்த் தயாராக இருக்கலியே... அதிமுக எதிர்ப்பு ஓட்டுகள் பிரிஞ்சா, பழையபடி ஜெயலலிதாதான் ஜெயிப்பார் என்று ரஜினிகாந்த் நினைத்தார். திமுகவோட மூப்பனார் சேர்ந்தால்தான், அந்தக் கூட்டணிக்கு ஆதரவா அறிக்கை வெளியிடுவேன்னு அவர் சொன்னபிறகு, திமுக அலையன்ஸ் (கூட்டணி) தவிர மூப்பனாருக்கு வேறு வழியில்லை. ரஜினிகாந்தோட "இன்ட்யூஷன்' சரிதான்னுதான் எனக்கும் தோனறது.''

""அதிமுக, திமுகவுக்கு மாற்றாக மூப்பனார் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் உருவாக இருந்த வாய்ப்பு நழுவியது என்று இப்போது நீங்கள் நினைக்கிறீர்களா?''

""அதெப்படி சார் சொல்ல முடியும்? பாலிடிக்ஸ்ல, "அப்படி இருந்தா, இப்படி நடந்தா'னெல்லாம் நாம் பேசலாம். பிராக்டிகலா பார்க்கணும். ரஜினிகாந்த் உச்சகட்ட பாப்புலாரிட்டியில் இருந்த சூப்பர்ஸ்டார். அவர் ஆதரவு தந்த ஒரு கட்சி தோல்வி அடைஞ்சா, அவருடைய சினிமா வாழ்க்கையும் அதனால் பாதிக்கும். மூன்றாவது அணி, மூன்றாவது கட்சின்னு சொல்றதெல்லாம் மூணாவதா வர்றதுங்கிறதுதான் என்னோட அபிப்பிராயம்.''

திமுக கூட்டணி குறித்து ஜி.கே. மூப்பனார் என்ன சொல்கிறார் என்று தெரிந்து கொள்வதற்காக மயிலாப்பூர் வாரன் சாலையில் உள்ள அவரது வீட்டுக்குப் போனேன். அங்கே, பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடந்து கொண்டிருந்தது.

""திமுகவுடன் கூட்டணி குறித்து சோ சார் மூலம் பேசி வருகிறீர்கள், சரி. ஏற்கெனவே காங்கிரஸிலிருந்து பிரிந்து போயிருக்கும் வாழப்பாடி ராமமூர்த்தியை உங்கள் கூட்டணியில் சேர்த்துக் கொள்வீர்களா?'' - கேள்வி எழுப்பியது நான்.

என்னை உற்றுப் பார்த்து சிரித்தார் மூப்பனார். ஏதோ, வாழப்பாடி சொல்லித்தான் நான் அந்தக் கேள்வியைக் கேட்பதாக நினைத்தாரோ என்னவோ...?

""நாங்கள் ஒன்றும் சண்டைக்காரர்கள் அல்ல. நாங்கள் இருவருமே காங்கிரஸ்காரர்கள். எங்களுக்கு அவர் ஆதரவு அளித்திருக்கிறார். காங்கிரஸ்காரரான அவரை இணைத்துக் கொள்வதில் எனக்கு எந்தவிதத் தயக்கமும் இல்லை'' - இது மூப்பனார். 

பரபரப்பாகக் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்தன. அடுத்த நாள் காலையில், இரண்டு எதிர்பாராத திருப்பங்கள் காத்திருந்தன.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com