'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 122

மூப்பனார் அணிக்கும் திமுகவுக்கும் இடையேயான கூட்டணி உருவானதில், மூப்பனாருக்கோ அவரது அணியினருக்கோ அதிகமான பங்கு இருக்கவில்லை என்பதுதான் உண்மை.
'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 122

மூப்பனார் அணிக்கும் திமுகவுக்கும் இடையேயான கூட்டணி உருவானதில், மூப்பனாருக்கோ அவரது அணியினருக்கோ அதிகமான பங்கு இருக்கவில்லை என்பதுதான் உண்மை. ஒருபுறம் நியூயார்க்கிலிருந்து நடிகர் ரஜினிகாந்த், "துக்ளக்' ஆசிரியர் சோ ராமசாமி மூலம் திமுகவுடன் தொடர்பில் இருந்தார். இன்னொருபுறம், மூப்பனாருக்கும், திமுக தலைவர் கருணாநிதிக்கும் இடையே சோ சார் பாலமாக இருந்தார்.

மார்ச் 31-ஆம் தேதி அறிவாலயத்தில் நடந்த திமுக நிர்வாகக் குழுக் கூட்டத்துக்குப் பிறகு நிருபர்களுக்கு அதன் தலைவர் மு. கருணாநிதி அளித்த பேட்டியில், "மூப்பனார், எஸ்.ஆர்.பி., அருணாசலம் போன்றவர்கள் தில்லியிலிருந்தே பேசியிருப்பார்களேயானால், அதற்கான தயார் நிலையில் நாங்கள் இருந்திருக்க முடியும். ஆனால், அவர்கள் சென்னைக்கு வந்தபிறகே எங்களுடன் தொடர்பு கொண்டனர்' என்று தெரிவித்தார்.

கூட்டணி அறிவிக்கப்பட்டு இரண்டு நாள்கள் கழித்து, சத்தியமூர்த்தி பவனில் தனது புதிய கட்சியான "தமிழ் மாநில காங்கிரஸ்' சார்பில் மூப்பனார் நிருபர்களைச் சந்தித்தார். "தில்லியிலிருந்து சென்னை வந்து சேரும்வரை என் மனதில் எந்தத் திட்டமும் இல்லை. அதிமுகவுடன் கூட்டணி இல்லாவிட்டால் தனித்துப் போட்டி என்ற மாற்று யோசனையைத்தான் கட்சித் தலைமையிடம் முன்வைத்தோம். எங்கள் விருப்பத்துக்கு மாறாகப் பிரதமர் முடிவெடுத்ததால் நான் தலைமையை எதிர்க்க நேரிட்டது' என்று அப்போது அவரும், கருணாநிதி கூறியதை உறுதி செய்தார்.

தனித்துப் போட்டி என்று தீர்மானித்திருந்த மூப்பனாரின் எண்ணத்தை மாற்றி, திமுகவுடன் கூட்டணி என்கிற முடிவை எடுக்க வைத்தது யார்? இந்தக் கேள்வி புதிரொன்றுமல்ல - நடிகர் ரஜினிகாந்த்தான். 

அந்தக் கூட்டணியை ஏற்படுத்த நடிகர் ரஜினிகாந்துக்குத் துணை நின்றவர் "துக்ளக்' ஆசிரியர் சோ ராமசாமி. கூட்டணியை ஏற்படுத்தியது மட்டுமல்ல, மூப்பனாரின் தலைமையிலான அணிக்கு எத்தனை இடங்கள் என்பதைத் தீர்மானித்ததிலும் சோ சாரின் பங்கு இருந்தது. 

நியூயார்க்கிலிருந்த ரஜினிகாந்தை தொலைபேசியில் கருணாநிதியிடம் பேச வைத்து, சோ சார் அழுத்தம் கொடுத்ததன் விளைவுதான் மூப்பனார் அணிக்கு திமுக ஒதுக்கிய 40 சட்டப்பேரவைத் தொகுதிகளும், 20 மக்களவைத் தொகுதிகளும். 

இரண்டு எதிர்பாராத திருப்பங்கள் நடந்தன. குமரி அனந்தனும், திண்டிவனம் ராமமூர்த்தியும் காங்கிரஸ் கட்சியிலேயே தொடர்வது என்கிற திருப்பம் முதலாவது. அதுவரையில், வாழப்பாடி ராமமூர்த்தியுடன் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்த திமுக தலைவர், மூப்பனார் தங்களது அணியுடன் கைகோர்க்கிறார் என்றவுடன், அவரை முற்றிலுமாகப் புறக்கணித்து விட்டார் என்பது இரண்டாவது எதிர்பாராத திருப்பம்.

சாஸ்திரி நகரிலுள்ள வாழப்பாடி ராமமூர்த்தியின் வீட்டில் அவரை சந்தித்தேன். ஆத்திரத்தின் உச்சத்தில் இருந்தார் அவர். திமுக தலைவர் கருணாநிதியையும், மூப்பனாரையும், ரஜினிகாந்தையும் பதிவு செய்ய முடியாத வார்த்தைகளால் வாழப்பாடியார் அர்ச்சனை செய்ததை வாழ்நாளில் மறக்க முடியாது. ""வயிறெரிந்து நான் விடும் சாபம் பலிக்காமல் போகாது!'' என்று சூளுரைத்தபடி, சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டு, அவர் வீட்டுக்குள் சென்ற காட்சி இப்போதும் என் கண் முன்னர் நிற்கிறது.

ஏப்ரல் 1-ஆம் நாள் பிறந்த  பின்னிரவு நேரம். கருணாநிதியும், மூப்பனாரும் இணைந்து கூட்டணி அறிவித்ததை மகிழ்ச்சியுடன் வரவேற்று, நியூயார்க்கிலிருந்து நடிகர் ரஜினிகாந்த் ஓர் அறிக்கையை வெளியிட்டிருந்தார் - ""இரண்டு பெரும் தலைவர்களை ஒன்றாக இணைத்து, ஒரு மிகப் பெரிய அணியை உருவாக்கி, தமிழக மக்களையும், தமிழ்நாட்டையும் ஆண்டவன் காப்பாற்றிவிட்டார். மூப்பனாரும் கருணாநிதியும் சேர்ந்து அமைத்திருக்கும் கூட்டணி, தமிழ் மக்களின் மானத்தையும், கெளரவத்தையும் காப்பாற்றும் கூட்டணி.

அகில இந்தியக் காங்கிரஸின் மூத்த தலைவர், பெரியவர், மதிப்புக்குரிய மூப்பனாரை இந்தியாவில் இருக்கும் அனைத்து உண்மையான காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவரைப் பாராட்ட எனக்கு வயதில்லை. இந்த இக்கட்டான சூழ்நிலையில் முடிந்தவரை தொகுதிகளைக் கொடுத்த கலைஞர் கருணாநிதிக்கும், இந்தக் கூட்டணி உருவாவதற்குப் பாலமாக இருந்த "துக்ளக்' ஆசிரியர் சோவுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.''

ரஜினிகாந்தின் அறிக்கை மூப்பனார் அணியினருக்கு மட்டுமல்ல, திமுகவுக்கும் மிகப் பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியது. அதுவரையில் அதிமுகவை வீழ்த்த முடியுமா, முடியாதா என்று மக்கள் மத்தியில் இருந்த ஐயப்பாட்டை அகற்றி, திமுக - தமாகா கூட்டணியை வெற்றிக் கூட்டணியாக மாற்றியது அந்த அறிக்கைதான். 

ரஜினிகாந்த் வெளியிட்ட அறிக்கை, அவர் நேரடியாக தமிழகம் முழுவதும் பிரசாரத்தில் ஈடுபடுவார் என்கிற எதிர்பார்ப்பை திமுக, தமாகா தொண்டர்கள் மத்தியில் ஏற்படுத்தியதில் வியப்பில்லை. ஏப்ரல் 20-ஆம் தேதி சென்னை திரும்பும் ரஜினிகாந்த், முதல்வர் ஜெயலலிதா போட்டியிடும் தொகுதி உள்பட, தமிழகத்தில் பத்து இடங்களில் அவருக்கு எதிராகப் பிரசாரம் செய்ய இருக்கிறார் என்றெல்லாம் பரபரப்பு வதந்திகள் பரவிக் கொண்டிருந்தன. ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள், தங்களை மூப்பனாரின் புதிய கட்சியின் உறுப்பினர்களாகத் தாங்களாகவே தீர்மானித்துக் கொண்டனர்.

இன்னொருபுறம், அதிமுகவும் ஜெயலலிதாவும் துவண்டுவிடவில்லை என்பதுதான் ஆச்சரியம். வேட்பாளர்களை அறிவித்தது மட்டுமல்லாமல், தனது தேர்தல் பிரசாரத்தையும் தொடங்கிவிட்டார் முதல்வர் ஜெயலலிதா. 

""யார் பிரதமர் என்பதில் எதிரணிக்குத் தெளிவில்லை'' என்பதுதான் அவரது பிரசாரத்தின் மையக் கருத்து. "ராஜீவ் படுகொலையைத் தொடர்ந்து, திமுகவைக் கடுமையாக விமர்சித்த மூப்பனாரும் மற்றவர்களும் திமுகவுடன் கூட்டணி சேர்ந்திருப்பதுதான் சந்தர்ப்பவாதமே தவிர, அதிமுக - காங்கிரஸ் கூட்டணி சந்தர்ப்பவாதக் கூட்டணி அல்ல' என்பதும் அவரது பிரசாரத்தில் முக்கிய அம்சமாக இருந்தது.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவன், மூப்பனார் ஆதரவாளர்களின் கைவசம் போய்விட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி என்கிற பெயர்ப் பலகை தமிழ்நாடு காங்கிரஸ் "டிரஸ்ட்' (அறக்கட்டளை) என்று மாற்றப்பட்டது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு அலுவலகம்கூட இல்லாத நிலைமை ஏற்பட்டது. அவசர அவசரமாக சென்னை மேற்கு மாம்பலம் போஸ்டல் காலனியில் ஒரு அலுவலகத்தை ஏற்படுத்தினார்கள். தலைவர் குமரி அனந்தன், மத்திய இணையமைச்சர் கே.வி. தங்கபாலு, எம்.பி.க்கள் திண்டிவனம் கே.ராமமூர்த்தி, இரா. அன்பரசு உள்ளிட்டவர்கள் அங்கே பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.

அதிமுகவில் காணப்பட்ட உற்சாகமோ, திமுக - தமாகா கூட்டணியில் காணப்பட்ட உற்சாகமோ தமிழ்நாடு காங்கிரஸில் காணப்படவில்லை என்பதை, அந்த அலுவலகத்தைப் பார்க்கும்போதே தெரிந்தது. முக்கியமான தலைவர்களும், எம்.பி.க்களும் கட்சிக் கட்டுப்பாட்டை மீறாமல் காங்கிரஸில் தொடர்ந்தாலும்கூட, அதிமுகவுடனான கூட்டணியை வெற்றிக் கூட்டணியாக அவர்கள் கருதவில்லை என்பதை உணர முடிந்தது.

மாம்பலத்திலிருந்த காங்கிரஸ் கட்சியின் புதிய அலுவலகத்தைப் பார்க்கலாம் என்று நான் சென்றபோது, அங்கே தலைவர் குமரி அனந்தன் மட்டுமல்லாமல், வள்ளல்பெருமான், எம்.பி. சுப்பிரமணியம், மணிசங்கர அய்யர் ஆகியோரும் இருந்தனர். மணிசங்கர அய்யருடன் பேச்சுக் கொடுத்தேன்.

""இந்திய அரசியல் வரலாற்றில், காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து போனவர்கள் யாரும் பெரிய அளவில் வெற்றியடைந்ததில்லை. தாற்காலிகமாக சில வெற்றிகளைப் பெறுவதும், பதவியைக் கைப்பற்றுவதும் நடந்திருக்கிறதே தவிர, கடைசியில் அவர்கள் மீண்டும் காங்கிரஸில் இணைவார்கள் அல்லது அடையாளம் இல்லாமல் போய்விடுவார்கள்.''

""நீங்கள் மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரஸ் அரசியலில் தாக்குப்பிடிக்காது என்று சொல்கிறீர்களா?''

""காமராஜராலேயே தாக்குப் பிடிக்க முடியவில்லை. மூப்பனாரால் எத்தனை காலம் தாக்குப்பிடித்துவிட முடியும்? நிஜலிங்கப்பா, எஸ்.கே. பாட்டீல், அதுல்யா கோஷ் போன்றவர்களும், தேவராஜ் அர்ஸ், பிரம்மானந்த ரெட்டி, வி.பி. சிங் உள்ளிட்டவர்களும் என்னவானார்களோ அதே நிலைமைதான் மூப்பனாருக்கும் ஏற்படும்.''

""காங்கிரஸ் திமுகவுடன் கூட்டணி வைத்திருந்தால், மூப்பனார் விலகி இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காதே?''

""யாருடன் கூட்டணி அமைப்பது என்பதைத் தலைமைதான் முடிவு செய்ய வேண்டும். அந்தக் கூட்டணி பிடிக்காவிட்டால், மெளனமாக ஒதுங்கி இருக்க வேண்டுமே தவிர, எதிரியின் எதிரி நண்பன் என்று தனது சொந்த விருப்பு வெறுப்புக்காகக் கட்சியைப் பிளவுபடுத்தக் கூடாது. இத்தனை காலம் அவர் அணிந்திருந்த கதர் சட்டைக்கு துரோகம் இழைத்துவிட்டார் மூப்பனார்.''
""நீங்கள் ஏன் திமுகவுடனான கூட்டணியை எதிர்க்கிறீர்கள்?''

""ராஜீவ் காந்தியை மனதில் நினைத்துப் பார்த்தேன். என் மனசாட்சி திமுகவுடனான கூட்டணியை ஏற்றுக்கொள்ளவில்லை.''

""அதிமுக கூட்டணியால் மயிலாடுதுறையில் வெற்றிபெற முடியும் என்று நினைக்கிறீர்களா?''

""தோல்வி அடைவதற்காக யாரும் தேர்தலில் நிற்பதில்லை!''

மணிசங்கர அய்யரிடம் இருக்கும் தெளிவும், அவர் பதிலளிக்கும் சாதுர்யமும் அன்றுபோல இன்றுவரை இருக்கிறது என்பதுதான் என்னை ஆச்சரியப்படுத்தும் அவரது தனித்துவம்.

திமுக - தமாகா கூட்டணி அறிவிப்பைத் தொடர்ந்து, சென்னை தி.நகர் பனகல் பூங்கா அருகில் அந்தக் கூட்டணியின் முதல் தேர்தல் பிரசாரக் கூட்டம் நடந்தது. திமுக, தமாகா தலைவர்கள் மட்டுமல்லாமல், ஆர்.எம். வீரப்பன், பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்ட ஏனைய கூட்டணிக் கட்சியினரும் மேடையில் நிறைந்திருந்தனர்.

அதற்கு முன்பும், அதற்குப் பின்பும் அப்படியொரு மக்கள் கூட்டத்தையும், தொண்டர்களின் உற்சாகத்தையும் சென்னையில் நடந்த எந்தவொரு கூட்டத்திலும் நான் பார்த்ததில்லை. "தில்லிக்கு மூப்பனார், சென்னைக்குக் கருணாநிதி' என்று மக்கள் நல உரிமைக் கழகப் பொதுச் செயலாளர் பண்ருட்டி எஸ். ராமச்சந்திரன் கூறியபோது, கரவொலி விண்ணைப் பிளந்தது.

சென்னையில் திமுக - தமாகா கூட்டணியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் என்றால், சேலத்தில் முதல்வர் ஜெயலலிதாவும், பிரதமர் நரசிம்ம ராவும் கலந்துகொண்ட பிரம்மாண்டமான பொதுக்கூட்டம். கூட்டம் பிரம்மாண்டமாக இருந்ததே தவிர, கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில் உற்சாகம் இருந்தது என்று சொல்ல முடியவில்லை. கூட்டப்பட்ட கூட்டம் அதில் நிறையவே இருப்பது நன்றாகவே தெரிந்தது.

சேலம் பொதுக்கூட்டம் முடிந்ததும் அங்கிருந்து காரில் பெங்களூருக்குப் பயணமானேன். கர்நாடகம், கேரள மாநிலங்களில் தேர்தல் நிலவரம் குறித்துத் தெரிந்து கொள்ளப் பயணித்து, நான் சென்னை திரும்பியபோது, அடுத்த நாள் நியூயார்க்கிலிருந்து நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்புகிறார் என்று சொன்னார்கள்.

ஏப்ரல் 20-ஆம் தேதி சனிக்கிழமை அதிகாலை 6 மணிக்கு, ஏர் இந்தியா விமானத்தில் ரஜினிகாந்த் பம்பாயிலிருந்து சென்னை வருகிறார் என்று தகவல் கிடைத்தது. ஐந்து மணிக்கே விமான நிலையத்துக்கு ஏனைய  பத்திரிகையாளர்களைப் போல நானும் ஆஜராகி இருந்தேன்.

நூற்றுக்கணக்கானோர் முந்தைய நாள் இரவிலேயே அங்கே வந்து குவிந்திருந்தனர். திமுக தொண்டர்களும், தமாகா-வினரும் நிறைந்திருந்தனர். அங்கே கூடியிருந்தவர்கள் அனைவருக்கும் ரஜினிகாந்த் திமுக - தமாகா கூட்டணியை ஆதரிப்பார் என்பது தெரியும். அவர் பிரசாரத்துக்குச் செல்வாரா என்கிற கேள்விக்கு விடைதேடிக் காத்திருந்தது கூட்டம்; பத்திரிகையாளர்களும்...

கருப்பு பேண்ட், கருப்பு டீ ஷர்ட், கருப்பு நிறத் தொப்பியுடன் வழக்கமான சுறுசுறுப்புடன் விமான நிலையத்திலிருந்து வெளியே வந்தார் நடிகர் ரஜினிகாந்த்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com