'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 147
By கி. வைத்தியநாதன் | Published On : 02nd July 2023 12:00 AM | Last Updated : 02nd July 2023 12:00 AM | அ+அ அ- |

அஜித் சிங் தெரிவித்த அந்த இரண்டு பேரும், எனக்கு ஏற்கெனவே தெரிந்தவர்கள். அவர்கள் வேறு யாருமல்ல, ஒருவர் ஜெயஷீலா ராவ், இன்னொருவர் அமர் சிங்.ஜெயஷீலா ராவ் பிரதமர் தேவே கெளடாவின் தனிச் செயலர். முன்னாள் பத்திரிகையாளர். அமர் சிங், முலாயம் சிங் யாதவுக்கு எல்லாமே என்கிற அளவுக்கு நெருக்கமானவர். அவர்கள் இருவர் மூலம் ம. நடராசன் சொன்ன செய்தியைத் தெரிவித்து, அந்தக் கோரிக்கையை நிறைவேற்றலாம் என்கிற நம்பிக்கை எனக்குப் பிறந்தது.
ஒவ்வொரு பிரதமரும், அவர்களுக்கு நெருக்கமான பத்திரிகையாளர் ஒருவரைத் தங்களது உதவியாளராகவோ, பத்திரிகைத் தொடர்பாளராகவோ வைத்துக் கொள்வது வழக்கம். அவர்கள் மூலம் முக்கியமான பத்திரிகை ஆசிரியர்களைத் தொடர்பு கொள்வார்கள்.
பிரதமர் தேவே கெளடா பொதுவாக தில்லி பத்திரிகையாளர்களுடன் நெருக்கமான உறவு வைத்துக் கொள்ளவில்லை. அவர்களுடன் சரளமாக ஹிந்தியில் பேச முடியாது என்பதுகூடக் காரணமாக இருந்திருக்கலாம். ஜெயஷீலா ராவ் பெரியவர், சிறியவர் வேறுபாடில்லாமல் பழகக் கூடியவர் என்பதுடன், பிரதமர் கெளடாவின் பலவீனங்களை சமன் செய்வதில் சமர்த்தரும்கூட.
ஒரு நிகழ்ச்சியில் பிரதமர் தேவே கெளடா தூங்கி விட்டார். அதைப் படம் பிடித்து அடுத்த நாள் பத்திரிகைகளில் செய்தி வெளியாகிவிட்டது. பிரதமர் ஒரு முக்கியமான பிரச்னை குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தபோது அந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டது என்று விளக்கம் கொடுத்துப் பிரதமருக்கு ஜெயஷீலா ராவ் வக்காலத்து வாங்கியதை, தில்லி பத்திரிகையாளர்கள் வேடிக்கையாகக் குறிப்பிடுவார்கள்.
ஜெயஷீலா ராவ் பிரபல கன்னட தினசரியான 'பிரஜா வாணி' இதழின் ஆசிரியராக இருந்தவர். இலக்கிய ஈடுபாடு கொண்டவர். கன்னட சாகித்திய பரிஷத்துடன் நெருங்கிய தொடர்பில் கடைசி வரை இருந்தவர். தமிழ் பத்திரிகைகள் குறித்தும், சினிமா குறித்தும், இலக்கியவாதிகள் குறித்தும், அரசியல் குறித்தும் அவருக்கு அத்துப்படி. அதனால்தானோ என்னவோ, அவருக்கும் எனக்கும் காந்தமும் இரும்பும் ஒட்டிக் கொள்வதுபோல, முதல் சந்திப்பிலேயே நெருக்கம் ஏற்பட்டு விட்டது.
அஜித் சிங்கும் தேவே கெளடாவும் நெருங்கிய நண்பர்கள். அதனால், நேரடியாக பிரதமரிடம் சந்தர்ப்பம் கிடைக்கும்போது, தகவலைத் தெரிவிப்பதாக அஜித் சிங் தெரிவித்திருந்தார். நான் ஜெயஷீலா ராவைத் தொடர்பு கொண்டபோது, எனக்கு எதிர்பாராத அதிர்ச்சி.
''நீங்கள் என்ன விஷயமாக என்னைத் தொடர்பு கொள்ள விரும்புகிறீர்கள் என்று எனக்கு ஏற்கெனவே தெரியும். பிரதமர் வரை செய்தி போய் விட்டது. எப்படி, என்ன சொல்ல வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருக்கிறோம். நீங்கள் நேரில் வந்து சந்திக்கத் தேவையில்லை. நாங்கள் பெங்களூருக்குக் கிளம்பிக் கொண்டிருக்கிறோம்'' என்று அவரிடமிருந்து பதில் வந்தது.
நான் அதற்கு மேல் அவரைத் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. 'தில்லி திரும்பிய பிறகு சந்திப்போம்' என்று கூறி தொலைபேசி இணைப்பைத் துண்டித்துவிட்டேன்.
அமர் சிங்கைத் தொடர்பு கொண்டது குறித்துத் தெரிவிப்பதற்கு முன்னால், அவரைப் பற்றிய சில தகவல்களைப் பதிவு செய்தாக வேண்டும். சுதந்திர இந்திய அரசியல் சந்தித்த, எதையும் சாதிக்கும் திறமை படைத்த அரசியல்வாதிகளின் பட்டியலில் மிக முக்கியமான இடம் அமர்சிங்குக்கு உண்டு. அவர் இருக்குமிடத்தில் கலகலப்பு மட்டுமல்ல, கவர்ச்சியும் (கிளாமரும்) இருக்கும் என்பதுதான் அமர் சிங்கின் தனித்தன்மை.
எண்பதுகளில், திருமதி இந்திரா காந்தியின் படுகொலைக்குப் பிறகு, ராஜீவ் காந்தி பிரதமரான கால கட்டத்தில்தான் அமர்சிங் என்கிற மனிதரை நான் பார்க்கிறேன். அவருடன் எனக்கு அப்போது அறிமுகமோ பரிச்சயமோ கிடையாது. 'ஹிந்துஸ்தான் டைம்ஸ்' பத்திரிகை அதிபர் கே.கே. பிர்லாவின் உதவியாளராகத்தான் நான் அவரை முதலில் பார்த்தேன்.
அப்போது கே.கே. பிர்லா மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். சுமார் முப்பது வயது இளைஞரான அமர் சிங், கே.கே. பிர்லாவின் காரைத் திறந்து விடுவது, அவரது ப்ரீஃப் கேசை எடுத்துச் செல்வது என்று சுறுசுறுப்பாக இயங்குவதை நான் ரசித்துப் பார்த்திருக்கிறேன். கே.கே. பிர்லாவுடனான அந்த நெருக்கத்தை பயன்படுத்தி, விரைவிலேயே அமர்சிங் பல நாடாளுமன்ற உறுப்பினர்களின் நண்பராக மாறியதையும் நான் வேடிக்கை பார்த்திருக்கிறேன்.
மாதவ்ராவ் சிந்தியா, பிரியரஞ்சன்தாஸ் முன்ஷி போன்றவர்களுடன் அவர் நெருக்கமாக சிரித்துப் பழகுவதைப் பார்க்கும் எவரும் அவர் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பாரோ என்று நிச்சயமாக நினைப்பார்கள். மிகக் குறுகிய காலத்தில், சாதாரணமாக இருந்த அமர்சிங் பணக்காரரானதையும் நான் பார்த்தேன்.
ஒரு நாள் காங்கிரஸ் தலைமையகத்தில் நிருபர்கள் கூட்டம் முடித்து கலையும்போது, தமிழில் 'தினமணி' போல, இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்திலிருந்து ஹிந்தியில் வெளிவரும் 'ஜன்சத்தா' நாளிதழின் நிருபர், அசோகா ஹோட்டலில் நடக்க இருக்கும் விருந்துக்கு என்னை அழைத்தார்.
''யார் விருந்து கொடுக்கிறார்கள்? அழைப் பில்லாமல் எப்படி அந்த விருந்துக்குப் போக முடியும்?'' என்று நான் அப்பாவித்தனமாகக் கேட்டபோது, அந்த நண்பர் சிரித்தார்.
''கவலைப்படாதீர்கள். எனக்கும்தான் அழைப்பு இல்லை. விருந்து கொடுப்பது அரசியல்வாதியோ, தொழிலதிபரோ அல்ல, அமர்சிங். எல்லா பத்திரிகையாளர்களையும் தெரிந்து கொள்வதற்காக விருந்துக்கு அழைத்திருக்கிறார். யார் வேண்டுமானாலும் வரலாம் என்று சொல்லி இருக்கிறாராம்.''
''அதை நம்பி எல்லாம் அங்கே போய் நான் அவமானபடத் தயாராக இல்லை. எனக்கு இதுபோல ஐந்து நட்சத்திர ஹோட்டல் விருந்துகளில் கலந்து கொண்ட அனுபவமும் கிடையாது. அதனால், நான் இல்லை'' என்று சொல்லி தவிர்க்க நினைத்தேன்.
அவர் என்னை விடவில்லை. அழையா விருந்தாளியான அவருக்குத் துணை தேவைப்பட்டது என்று நினைக்கிறேன். என்னை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுவிட்டார். கோட் சூட்டுடன் வெளிநாட்டுக் கார்களில் ஒவ்வொருவராக வந்து இறங்கிக் கொண்டிருந்த அசோகா ஹோட்டலுக்கு ஆட்டோவில் போய் இறங்கி, ஹோட்டலுக்குள் நாங்கள் ஒருவித சங்கோஜத்துடன் நுழைந்ததை இப்போது நினைத்தாலும் சிரிப்பாக இருக்கிறது.
எங்களைப் போல டஜன் கணக்கில் பத்திரிகையாளர்கள் வந்திருந்தார்கள். பல மூத்த பத்திரிகையாளர்களும், பிரபல பத்திரிகை ஆசிரியர்களும்கூட இருந்தனர். நான் பணியாற்றிய ஹிந்துஸ்தான் டைம்ஸ் குழுமத்திலிருந்து வெளிவரும் 'வீக் எண்ட் ரெவ்யூ' இதழின் ஆசிரியர் பி.எம். சின்ஹா, 'ப்ளிட்ஸ்' ஆசிரியர் ரூஸி கரஞ்சியா போன்றமுக்கியமானவர்கள்கூட வந்திருந்தனர்.
விதவிதமான உணவு வகைகள்; அதை ஆங்காங்கே கூடி நின்று பேசிக் கொண்டிருக்கும் பத்திரிகையாளர்களுக்கு வழங்க அழகழகான பெண்கள்; அவர்களது கனிவான உபசரிப்பு இவையெல்லாமே எனக்கு அப்போது புதிது. அதில் குறிப்பிட வேண்டியது என்னவென்றால், ஒவ்வொரு பத்திரிகையாளரையும் தனித்தனியாக அருகில் வந்து அறிமுகப்படுத்திக் கொண்டு அமர்சிங் உரையாடினார் என்பதுதான். அமர் சிங்குடனான எனது முதல் சந்திப்பு அதுதான்.
முலாயம்சிங் யாதவுக்கு அமர்சிங் எப்படி அறிமுகமானார் என்று எனக்குத் தெரியாது. ஆனால், அறிமுகமான பிறகு அவர்கள் எந்த அளவுக்கு நெருக்கமானார்கள் என்பது உலகுக்கே தெரியும். அமர்சிங் கிழித்த கோட்டை முலாயம் சிங் தாண்டமாட்டார் என்கிற அளவுக்கு அவர்கள் நெருக்கமானார்கள். ஐக்கிய முன்னணி ஆட்சி அமைந்தபோது, முலாயம் தனது நண்பரை மாநிலங்களவை உறுப்பினராக்கியதில் வியப்பில்லை.
அமர் சிங்கின் பிற்கால அரசியலும், வளர்ச்சியும், வீழ்ச்சியும் நீண்ட வரலாறு. அதைப் பிறகு நான் கட்டாயம் பதிவு செய்வேன். இப்போதைக்கு நாம் நடந்த நிகழ்வுக்கு வருவோம்.
தொலைபேசியில் அழைத்து அமர்சிங்கை சந்திக்க நான் நேரம் வாங்கி இருந்தேன். கிரேட்டர் கைலாஷில் இருந்த அவரது வீட்டுக்குத்தான் முதலில் வரச்சொல்லி இருந்தார்கள். பிறகு, தொலைபேசியில் அழைத்து, வசந்த் விஹாரில் உள்ள முகவரியில் மாலையில் சந்திக்கலாம் என்று தகவல் தெரிவித்தார்கள்.
அங்கே சென்றபோது, அது ஒரு அப்பார்ட் மென்ட். அலுவலகமாக மாற்றப்பட்டிருந்தது. வரவேற்பறையில் அவரது உதவியாளரான பெண்மணி கேரளத்தைச் சேர்ந்தவர். அமரச் சொல்லி உபசரித்தார். மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் சரளமாகப் பேசினார். சற்று நேரத்தில், உள்ளேயிருந்து இன்னொரு பெண் வந்து, 'நீங்கள் சென்னையிலிருந்து வந்திருக்கிறீர்களா?' என்று தமிழில் கேட்டபோது எனக்கு வியப்பு.
அந்தப் பெண் எம்.பி.ஏ. படித்திருக்கிறார் என்பதும், அவருக்குத் தமிழ் மட்டுமல்லாமல் கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம், ஹிந்தி தெரியும் என்பதும் என்னை மேலும் ஆச்சரியப்படுத்தியது. எல்லா மொழிகளும் தெரிந்தவர்கள் அவரது அலுவலகத்தில் இருந்தனர் என்பதை நான் தெரிந்து கொண்டேன்.
அமர்சிங் அழைப்பதாகச் சொன்னார்கள். வரவேற்பறையைக் கடந்து அவர் செல்லவில்லை. பிறகு எப்படி அவர் உள்ளே போனார் என்று எனக்குப் புதிராக இருந்தது. அதுதான் அமர் சிங்.
அறையில் நுழைந்ததும், அசோகா ஹோட்டல் விருந்தில் சந்தித்தபோது இருந்த அதே சிநேக பாவத்துடன் கை குலுக்கினார். இடைப்பட்ட காலத்தில் பல சந்தர்ப்பங்களில்
நாங்கள் சந்தித்திருக்கிறோம் என்பதால், இடைவெளி இருக்கவில்லை.
நான் சந்திக்க வந்ததன் காரணத்தை அவரிடம் சொன்னேன். முலாயம்சிங் மூலம் உதவி கேட்கும்படி அஜித் சிங் சொன்னதாகவும் தெரிவித்தேன். அவர் சற்று நேரம் யோசித்தார்.
''ஜெயலலிதாஜி என்னிடம் நேரிடையாக தொலைபேசியில் பேசுவாரா? யாரோ சொன்னார்
கள் என்று நீங்கள் சொல்கிறீர்கள்... ஜெய
லலிதாஜியே பேசட்டும். அவருக்கு எந்தச் சிக்கலும் ஏற்பட்டு விடாமல் நான் காப்பாற்றுகிறேன். அதற்கு நான் எந்தப் பிரதிபலனும் எதிர்பார்க்கவில்லை. அவரது அறிமுகமும் நட்பும் கிடைப்பதற்காக நான் உதவத் தயாராக இருக்கிறேன். ஆனால், அவர் என்னிடம் பேச வேண்டும்...''
அவரது கோரிக்கையைக் கேட்டு நான் திடுக்கிட்டேன். எனது இயலாமையை நான் மறைக்கவில்லை.
''ஜெயலலிதாஜி யாரிடமும் உதவி கேட்பார் என்று எனக்குத் தோன்றவில்லை. உங்களது கோரிக்கையை நடராசனுக்குத் தெரிவிக்கிறேன். அதுதான் என்னால் செய்ய முடியும்.''
''இங்கிருந்தே லைட்னிங் கால் (உடனடி தொலைதூரத் தொலைபேசித் தொடர்பு) போட்டுப் பேசுங்களேன். அவரது எண்ணைத் தாருங்கள், கூப்பிடச் சொல்கிறேன்'' என்றபடி அழைப்பு மணியை அடித்தார். உதவியாளர் வந்தார்.
நான் வேலூர் தொடர்பு எண்ணைக் கொடுத்தேன். சில நிமிடங்களில் ம. நடராசனுக்கு இணைப்பு தரப்பட்டது. அமர் சிங்கின் கோரிக்கையை அவரிடம் கூறினேன். அமர் சிங்கிடம் நேரில் பேசச் சொல்லிவிட்டேன்.
ஐந்து நிமிடங்கள் அவர்கள் பேசினார்கள். இணைப்பைத் துண்டித்த பிறகு அமர் சிங் என்னிடம் சொன்னார்
''நான்தான் இதற்கான முயற்சி எடுத்தேன், அவருக்கு உதவினேன் என்று ஜெயலலிதாஜிக்கு தெரிய வேண்டும். சிபிஐ பிரச்னையை நான் சமாளித்துக் கொடுத்தால், உங்கள் நண்பரிடம் என்னை ஜெயலலிதாஜிக்கு அறிமுகப்படுத்தச் சொல்லுங்கள்.''
'சரி' என்று சொல்லவும் முடியாமல், 'என்னால்முடியாது' என்று கூறவும் முடியாமல் நான் திருதிரு வென்று விழித்தேன். அவரிடம் விடைபெற்று வெளியே வந்தேன்.
பாதுகாப்புத் துறை அமைச்சர் முலாயம்சிங் யாதவ் மூலம் அமர்சிங் கொடுத்த அழுத்தமா, இல்லை பிரதமர் தேவே கெளடா பிறப்பித்த உத்தரவா என்று தெரியாது. சிபிஐ உடனடியாகத் தலையிடுவதைத் தவிர்த்து விட்டது. இந்தத் தகவலை என்னிடம் தெரிவித்தவர் யார் தெரியுமா?
(தொடரும்)
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...