பந்தம்

அன்றுதான் புதியதாக மூத்த மகள் புவனாவின் வீட்டுக்குள் நுழைவதுபோல் தயக்கமாய் நுழைந்தார் பரமசிவம்.
பந்தம்

அன்றுதான் புதியதாக மூத்த மகள் புவனாவின் வீட்டுக்குள் நுழைவதுபோல் தயக்கமாய் நுழைந்தார் பரமசிவம். இதற்கு முன்பு எண்ணற்ற முறை மகளின் வீட்டுக்கு வந்திருக்கிறார். அப்போதெல்லாம் தனக்குப் பிரியமான அன்பு மகள் புவனாவைப் பார்க்கும் ஆவலும், அன்புப் பேத்திகள் இருவரையும் பார்க்கத் துடிக்கும் உணர்வுடனுமே வீட்டுக்குள் நுழைந்திருக்கிறார். இந்த முறை அவர் வந்திருக்கும் நோக்கம் அவருக்கே பிடித்தமானதாக இல்லாமல் இருப்பதும், பலரின் மன வருத்தத்துக்கு காரணமாகிவிடுமோ? என்ற சந்தேகமும் அவருக்குத் தோன்றியதும்தான், இந்தத் தயக்கத்துக்குக் காரணம்.

'வாங்கப்பா..' என்று சமையல் கட்டிலிருந்து எதேச்சையாக வெளியே வந்த புவனாவுக்கு அப்பாவின் திடீர் வருகை ஆச்சரியத்தைக் கொடுத்தது. ஆனாலும் அவளுக்கு மிகப் பிரியமான அப்பாவைப் பார்த்தது அவள் முகமலர்ச்சியிலும், கண்களில் ஒளிர்ந்த ஒளியிலும் தெரிந்தது. பேத்திகளுக்குப் பிரியமாய் வாங்கி வந்திருந்த தின்பண்டப் பையை அவள் கையில் கொடுத்தார். பிள்ளைகள் பள்ளிக்குப் போயிருப்பதாகவும், கணவன் வேலைக்குப் போயிருப்பதாகவும் கூறிய மகளின் முகத்தை உற்று நோக்கினார் பரமசிவம்.
முதல் குடும்ப வாரிசாக அவள் பிறந்தபோது அவரும், மனைவி கௌரியும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. குழந்தைக்கு குடும்ப வழக்கப்படி காது குத்தி, கிடா வெட்டி ஊரை அழைத்துச் சோறிட்டுக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
புவனா வளர வளர, காலத்தில் பெய்த மழையால், அவரது விவசாய வருமானமும் நன்றாக வந்து குடும்பத்தில் செல்வச் செழிப்பும் சேர்ந்தது. பின்னர், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த பெண் குழந்தைக்கு 'கவிதா' என்று பெயரிட்டனர். விவசாயிகளுக்கு, தங்களுக்குப் பின்னர் விவசாயத்தைக் கவனித்துக் கொள்ள ஆண் வாரிசு வேண்டும் என்பது கிராமப்புறங்களில் உலவி வரும் சித்தாந்தம். அந்த ஆசை நிறைவேறவில்லை.
மூன்றாவதும் பெண் பிறந்தது கௌரிக்கு. யாரோ கூறினார்கள் என்பதற்காக மூன்றாவது பெண்ணுக்கு ' மங்களா' என்று பெயரிட்டனர். அந்த ராசியோ அல்லது கௌரி இருந்த சஷ்டி விரதம் காரணமோ, நான்காவதாகப் பையன் பிறந்தான். விவசாய வருமானம் செழிப்பாக இருந்ததால், பையன் ரமேஷ் பிறந்ததைச் சிறப்பாகவே கொண்டாடினர் பரமசிவன் தம்பதியினர்.
குடும்பத்தில் உறுப்பினர்கள் அதிகமாகிவிட்டதால் பரமசிவமும், கௌரியும் அதிகம் உழைக்க வேண்டி இருந்தது. காலையில் தோட்டத்துக்குச் சென்றால் மாலை இருள் மங்கும் நேரத்தில் வீடு வந்து, குளித்து உறங்கி எழுந்து மீண்டும் தோட்டம் செல்வதற்கே நேரம் சரியாக இருந்தது.
அந்தக் காலங்களில் மூத்தவள் புவனா தன்னுடைய வயதுக்கு மீறிய குடும்பப் பொறுப்பை எடுத்து கௌரியின் சுமையைக் குறைத்தாள். காலையில் உணவு தயாரிப்பது, தங்கைகள், தம்பிக்கு காலை உணவு கொடுத்து, மதிய உணவு கட்டிக் கொடுத்து அவர்களை கன்னிவாடி பள்ளிக்கு அனுப்புவது, அப்பா அம்மாவுக்கு காலை உணவும் மதிய உணவும் தோட்டத்துக்கு எடுத்துச் சென்று கொடுப்பது போன்ற வேலைகள் அவளுடையதாயின.
இதனால் ஆறாம் வகுப்போடு தன் படிப்பை முடித்துக் கொண்டாள். மூன்று பெண் குழந்தைகள் இருக்கும் பய உணர்வில், பதினெட்டு வயது நிரம்பியவுடன் புவனாவுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்து விட்டார் பரமசிவம். அவளின் நல்ல குணத்துக்கேற்ப பக்கத்து ஊரில் பத்து ஏக்கர் விவசாய நிலம் உள்ள நல்ல மாப்பிள்ளை அமைந்துவிட்டார். மாப்பிள்ளை உபதொழிலாக கரூரில் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம் ஒன்றும் நடத்திக் கொண்டிருந்தார். இரண்டு ஆண்டுகளில் புவனாவின் வாழ்க்கை தலைகீழாக மாறியது.
ஏற்றுமதியில் ஒரு பெரும் தொகையை இழந்த புவனாவின் கணவர், தன்னுடைய நிலம், வீடு, புவனாவின் நகைகள் போன்றவற்றை இழந்து, கடன் முழுவதும் கட்ட வேண்டி வந்தது. எந்த ஊரில் முதலாளியாக வலம் வந்தாரோ, அதே ஊரில் வேறு ஒரு முதலாளியின் கீழ் மேனேஜராக வேலை செய்து மாதச் சம்பளம் வாங்கும் நிலை வந்தது. இரண்டு பெண் குழந்தைகள் வேறு பிறந்துவிட்டதால், புவனாவும் கம்பெனி வேலைக்குச் செல்ல வசதியாக கரூரில் வாடகை வீடு எடுத்து வசிக்கத் தொடங்கினர்.
புவனாவின் வாழ்வில் குறுகிய காலத்தில் நடந்து முடிந்த மாற்றங்களை நினைத்து மறுகி நின்றார் பரமசிவம்.
கடந்த கால நினைவுகளில் மூழ்கி இருந்த அவரை, புவனாவின் குரல் சுயநினைவுக்குக் கொண்டு வந்தது.
' என்னப்பா.. அப்படியே நின்னுட்டீங்க? உட்காருங்க' என்ற புவனா உள்ளே சென்று தண்ணீர் கொண்டு வந்தாள். எப்போதும் சதைப்பிடிப்புடன் இருக்கும் அவளின் கன்னங்கள் ஒட்டிப் போய் இருந்தன. கண்களில் ஒளி குறைந்து, பார்வை ஒரு யோகியின் பார்வையைப் போல விறுப்பு வெறுப்பற்று இருந்தது. தான் கலங்கினால் அவளும் உடைந்து விடுவாள் என்று பார்வையை அவள் முகத்திலிருந்து மாற்றி வீட்டுக்குள் நோக்கினார் பரமசிவம். அதிகப் பொருள்கள் இன்றி வீடு வெறிச்சோடிக் கிடந்தது.
'நீ வேலைக்குப் போக நேரமாயிடுச்சாம்மா புவனா?' என்றார் பரமசிவம்.
'இல்லப்பா... இன்னும் நேரம் இருக்கு..' என்று அவர் முன் அமர்ந்தாள்.
நேரடியாக விஷயத்துக்கு வந்தார்,
'புவனா. எனக்கும் அம்மாவுக்கும் வயசாயிடுச்சு. நல்ல நிலையில் இருக்கும்போதே, உங்க எல்லோரது சம்மதத்துடன் சொத்தைப் பிரித்துக் கொடுத்துவிடலாம்னு இருக்கேன். அது விஷயமாத்தான் பேசலாம்னு வந்தேன்.'
' சொல்லுங்கப்பா.. நீங்க எப்படி செய்தாலும் எங்களுக்கு சம்மதம்' ' என்றாள் புவனா.
'விவசாய நிலம் ஆறு ஏக்கரையும் தம்பி ரமேஷ் பேரில் எழுதி வைக்கலாம்னு இருக்கேம்மா? அப்புறம் கன்னிவாடி சந்தைக்குப் பின்னால இருக்கற நம்ம நாப்பது சென்ட் நிலத்தை நாப்பது லட்சம் ரூபாய்க்கு கேக்கறாங்க. அதை வித்து பொண்ணுங்க உங்க மூணு பேருக்கும் கொடுக்கலாம்னு! உனக்கு இருபது லட்சம், கவிதாவுக்கு பத்து லட்சம், மங்களாவுக்கு பத்து லட்சம்னு மனசில நினைச்சிருக்கேம்மா..'. இதைச் சொல்லும்போது புவனாவின் முகத்திலிருந்து அவர் பார்வையை விலக்கவில்லை. ஆனால் எந்த உணர்ச்சியையும் வெளிப்படுத்தாத அந்த முகபாவனையிலிருந்து எதையும் படிக்க முடியவில்லை அவரால்!
'எதுக்கப்பா வேறுபாடு? எனக்கு மாத்திரம் அதிகம்? சமமா பிரிங்க! அம்மாவும் நீங்களும் பத்து லட்சம் எடுத்துக்குங்க? பாக்கி முப்பது லட்சத்தை எங்க மூணு பேருக்கும் கொடுங்க' என்றாள் சுமதி.
'இல்லம்மா.. உன் தங்கைங்க இரண்டு பேரும் நல்ல வசதியா இருக்குறாங்க! மற்றபடி எங்கிட்டயும் கொஞ்சம் காசு இருக்கு. எனக்கும் அம்மாவுக்கும் எதுவும் தேவையில்லை. ஏதோ கெட்ட நேரம்.. உனக்குத்தான் இப்படி...' என்று இழுத்தார் பரமசிவம்.
' உங்க எல்லோரையும்விட நான்தான் ஏழைன்னு சொல்றீங்க? அப்படித்தானே அப்பா?' என்று புவனா முடிப்பதற்குள் கண்கலங்கிவிட்டார் பரமசிவம். அதுவரை அடக்கி வைத்திருந்த அவரின் துக்கம் விம்மலாக வெடித்தது. தனது வாழ்வில் முதல் முதலாக நுழைந்து, வசந்தத்தைத் தெளித்த அந்த மழலை, தன்னை ஏழை என்று அழைத்துக் கொண்டதை அவரால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.
இறுகியிருந்த அவள் உணர்வுகள் இளகி, பத்து வயதுச் சிறுமியானாள் புவனா. துக்க வீட்டில் தவிர அவர் எங்கும் அழுது பார்த்திராத புவனா, குலுங்கி அழும் அப்பாவின் தோளில் சாய்ந்து கண்ணீர் விட்டாள். குலுங்கும் இந்தத் தோள் தன்னை எங்கெல்லாம் சுமந்து திரிந்திருக்கிறது, எத்தனை சுமைகளைக் கடந்து வந்திருக்கிறது என்று நினைத்துப் பார்த்தவுடன் தன்னைத்தானே சபித்துக் கொண்டாள். எப்படி சட்டென அப்பாவின் மனம் புண்படும்படி வார்த்தைகளைப் பேச முடிந்தது?
'அப்பா.. மன்னிச்சிடுங்க.. ஏதோ வேதனையில் அப்படி பேசிட்டேன். நீங்க எப்படி செய்தாலும் எனக்கும் அவருக்கும் சம்மதம். சரியா?' என்று அவரைத் தேற்றினாள்.
சுதாகரித்துக் கொண்ட பரமசிவம், 'சரிம்மா.. ஆடிப் பண்டிகைக்கு உங்களை ஊருக்கு கூப்பிடலாம் என்று வந்தேன். மாப்பிள்ளையிடம் சொல்லும்மா? இன்னும் கவிதாவுக்கும், மங்களாவுக்கும் சொல்ல வேண்டும். எல்லோரும் இரண்டு நாளைக்கு முன்பே வந்திருங்க?' என்று அவசர, அவசரமாக அவள் கொண்டு வந்த காப்பியைக் குடித்துவிட்டு கிளம்பினார்.
அடுத்த நாள் சின்னதாராபுரத்தில் இருக்கும் இரண்டாவது மகள் கவிதாவின் வீட்டுக்குச் சென்றார். வாசலில் இரண்டு கார்கள் நின்று கொண்டிருந்தன. மாடியில் இரண்டு ரூம் கொண்ட பெரிய வீடு. மாப்பிள்ளை சிமென்ட் பைப் செய்யும் கம்பெனி வைத்திருந்தார். கூடவே கரூரில் பைனான்ஸ் கம்பெனிகளும் வைத்திருந்தார். அமராவதி ஆற்றுப் பாசனத்தில் விவசாய நிலமும் ஐந்து ஏக்கர் இருந்தது. மாப்பிள்ளை ஒரே பையன். நல்ல குணம் கொண்டவரும் கூட. கவிதாவுக்கும் ஒரே பையன். மூன்றாவது படித்துக் கொண்டிருக்கிறான். கவிதா மட்டுமே வீட்டில் இருந்தாள். சொத்து பிரிப்பது பற்றியும், அக்காவுக்கு இருபது லட்சமும், கவிதாவுக்கும் மங்களாவுக்கும் தலா பத்து லட்சம் கொடுப்பதாகவும் கூறியவுடன் அவள் முகத்தில் எந்த உணர்ச்சியும் வெளிப்படுத்தாமல், 'ஆடிப்பண்டிகைக்கு ஊருக்கு வரும்போது பேசிக் கொள்ளலாம் அப்பா' என்று பிடி கொடுக்காமல் பேசினாள். ஒருவேளை மாப்பிள்ளையிடம் கலந்துகொண்டு சம்மதம் சொல்லலாம் என்று இருக்கிறாள்போலும் என்று நினைத்துக் கொண்டு விடை பெற்றுக் கிளம்பினார் பரமசிவம்.
மூன்றாவது மகள் மங்களாவை தாராபுரத்தில் கட்டிக் கொடுத்திருந்தார் பரமசிவம். மாப்பிள்ளை தாராபுரத்திலும், அதைச் சுற்றியுள்ள ஊர்களிலும் லாரி எடை பார்க்கும் மிஷின்கள் போட்டிருந்தார். அது மட்டுமல்லாது ரியல் எஸ்டேட் பிசினஸிலும் நல்ல சம்பாத்யம். விவசாய நிலமும் இருந்தது. மங்களாவுக்கு ஒரு பையனும், பெண்ணும். பரமசிவம் போயிருந்தபோது மாப்பிள்ளை வெளியே ஏதோ வேலையாகக் கிளம்பிக்கொண்டிருந்தார். அவர் விடைபெற்றுப் போன பின்னர் மகளிடம் சொத்து பிரிப்பதைப் பற்றி ஆரம்பித்தார்.
முந்திக் கொண்ட மங்களா, 'கவிதாக்கா போன் பண்ணியிருந்தாங்க அப்பா! எல்லாத்தையும் ஆடிப் பண்டிகைக்கு ஊருக்கு வரும்போது பேசிக் கொள்ளலாம்' என்று நறுக்கென்று கூறினாள்.
எதற்காக புவனாவுக்கு அதிகம் கொடுக்கிறார் என்று விளக்கிக் கூறும் வாய்ப்பைக் கூட அவள் பரமசிவத்துக்குக் கொடுக்கவில்லை. கடைசி இரண்டு பெண்களும் நடந்து கொள்வதைப் பார்த்தால், புவனாவுக்கு அதிகம் கொடுப்பதில் இஷ்டம் இல்லாதது போல் தோன்றியது அவருக்கு! நல்ல நிலைமையில் இருந்து வந்த அவர்களின் உறவுக்குள் பிரச்னையைதான் உண்டாக்கி விட்டோமோ? என்று குழப்பிக் கொண்டார் பரமசிவம்.
தான் பெற்ற பெண்களே தன்னிடம் பிடி கொடுத்துப் பேசாததை கௌரியிடம் சொல்லிச் சொல்லி மாய்ந்து போனார்.
கௌரியே பொறுக்க முடியாமல், ' ஏங்க அதையே பேசிக்கிட்டு? ஆடி நோன்பு வந்தா ஏதோ ஒரு முடிவு ஆவுது.. பேசாம பொறுமையா இருங்க' என்று சொன்னவுடன்தான் புலம்புவதை நிறுத்தினார்.
எதிர்பார்த்திருந்த ஆடிப் பண்டிகையும் வந்தது. வீடே கலகலப்பாய் இருந்தது. மூன்று பெண்களும், அவர்களின் குழந்தைகளும் வீட்டை திருவிழாக்கோலம் போல் செய்துகொண்டிருந்தனர். அக்காவும், தங்கைகளும் எந்த வித்தியாசமும் இல்லாமல் வழக்கம்போல் குதூகலமாய் பேசிக் கொண்டிருப்பது கண்டு பரமசிவம் திருப்தியடைந்தார். மூன்று மாப்பிள்ளைகளும் காரை எடுத்துகொண்டு வெளியே சென்று விட்டனர்.
இனி மதியம் சாப்பாட்டுக்கு மட்டுமே வருவார்கள். குழந்தைகள் எல்லோரும் விளையாட வெளியே தோட்டத்துக்குச் சென்றுவிட்டனர். 'இதுதான் தகுந்த சமயம்' என்று பரமசிவம் சமயலறையில் வேலையாய் இருந்த கௌரியை அழைத்தார். அப்பா ஏதோ பேசப்போகிறார் என்பதைக் குறிப்பால் அறிந்த பெண்கள் மூவரும் தங்களின் பேச்சை நிறுத்தினர். அடுத்து வரும் நிமிடங்கள் உறவுகளுக்கான சோதனை என்பதை உணர்ந்து, பெண்களின் முகம் நோக்கி பரமசிவம் கேட்டார்,
'நான் சொல்லிவிட்டு வந்ததை யோசனை பண்ணி பார்த்தீங்களா? ஏதாவது முடிவு எடுத்திருக்கிறீங்களாம்மா?'
அவரின் பார்வை கவிதாவின் முகத்தையும், மங்களாவின் முகத்தையும் ஆவலுடன் நோக்கியிருந்தது. தொண்டையை செறுமிக்கொண்டு கவிதா பேசினாள்.
'உங்க முடிவு எனக்கும், மங்களாவுக்கும் கொஞ்சம் கூட இஷ்டம் இல்லப்பா?'
ஏதோ சொல்ல வந்த புவனாவை அடக்கினாள் மங்களா, ' அக்கா, நீ இதுல தலையிடாதே. அப்பா மட்டும் பேசட்டும்.'
பரமசிவம் தடுமாற்றத்துடன் பேச ஆரம்பித்தார், ' இல்லம்மா! அக்காவின் நிலைமையை யோசித்துத்தான் நான் இப்படி முடிவு செஞ்சேன். ஏம்மா, மாப்பிள்ளைங்க ஏதாவது சொன்னாங்களா?'
' சேச்சே.. உங்க மாப்பிள்ளைகளைப் பற்றி உங்களுக்குத் தெரியாதா அப்பா? நீங்களே முடிவு எடுத்துக்குங்கன்னு சொல்லிட்டாங்க? ஆனா நீங்கதான் தப்பா பங்கு பிரிச்சிட்டீங்க? முழுப்பணமும் அக்காவுக்குத்தான் கொடுக்க வேண்டும். இதைத்தான் நாங்க ரெண்டு பேரும் முடிவு செய்திருக்கிறோம். இந்தப் பணம் அக்காவின் இரண்டு பெண்களின் படிப்புச் செலவுக்காக?'
புவனா ஏதோ சொல்ல வாய் திறக்க ஆரம்பிக்கும்போது, அருகிலிருந்த கவிதாவும், மங்களாவும் சட்டென சரிந்து புவனாவின் மடியில் தலைவைத்துப் படுத்தனர். சிறு வயதில், பாவாடை தாவணிப் பருவத்தில், போட்டி போட்டிக் கொண்டு அக்காவின் மடியைப் பங்கிடும் தங்கைகளின் நினைவு வந்து புவனாவின் கண்களை மறைத்தது.
'பணமோ, வசதியோ தங்கைகளை மாற்றவில்லை' என்பதை உணர்ந்தாள் புவனா.
கவிதா உடைந்த குரலில் புவனாவைப் பார்த்துப் பேசினாள்,
'எங்களுக்காக உன் படிப்பை, சுகத்தை, பசியை ஏன் இளமைச் சுகங்கள் அத்தனையும் விட்டுக் கொடுத்தாய். ஒரு தாய் தன் குழந்தைகளுக்குச் செய்யும் அத்தனையும் குறைவில்லாமல் செய்தாய். நீ எங்களுக்கு இன்னொரு அம்மா. நாங்கள் உனக்கு ஏதாவது செய்ய வேண்டாமா? அதனால்தான் நானும், மங்களாவும் முடிவெடுத்திருக்கிறோம். இந்தப் பணம் உங்கள் பெண்களின் படிப்புக்கு மாத்திரம். அது மட்டுமல்ல! அவர்கள் திருமண வயதுக்கு வரும்போது, அவர்களுக்கு மாப்பிள்ளையைப் பார்த்து, திருமணத்தைச் சிறப்பாக முடிப்பது வரை எங்கள் பொறுப்பு. அப்படியாவது நாங்கள் உனக்குப் பட்டிருக்கும் நன்றிக் கடனை தீர்க்க முடிகிறதா? என்று பார்க்கலாம்.'
சிறு குழந்தைகளைப் போல மடியில் படுத்திருந்த இருவரின் தலைகளையும் மென்மையாக வருடினாள் புவனா. அந்த வீடு முழுவதும் அன்பால் நிறைந்திருப்பதைப் பார்த்து புன்முறுவல் பூத்துக் கொண்டனர் பரமசிவமும், கௌரியும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.