
என்மீது மிகுந்த அன்பும் அக்கறையும் வைத்திருந்த முன்னாள் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் தினேஷ் சிங் குறித்து நான் ஏற்கெனவே குறிப்பிட்டிருக்கிறேன். தனது தந்தையார் தினேஷ்சிங் நினைவாக அவரது மகள் ராஜ்குமாரி ரத்னாசிங் தில்லியில் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். அந்த நிகழ்ச்சிக்கு எனக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. போயிருந்தேன்.
அந்த நிகழ்ச்சியில் நான் எதிர்பாராமல் சந்தித்த நபர் வேறுயாருமில்லை, குவாலியர் ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான மாதவராவ் சிந்தியாதான். குவாலியர் ராஜ குடும்பத்தின் கடைசி அரசரான ஜியாஜிராவ் சிந்தியாவின் மகனான மாதவராவ் சிந்தியா, மன்னர் மானிய ஒழிப்பு வரை குவாலியர் 'மகாராஜா' என்கிற பட்டத்துடன் இருந்தவர்.
பாரதிய ஜனதா கட்சியின் முன்னோடியான பாரதிய ஜன சங்கத்தின் நிறுவனத் தலைவர்களில் ஒருவரான ராஜமாதா விஜயராஜே சிந்தியா இவரது தாயார். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று நாடு திரும்பிய மாதவராவ் சிந்தியாவின் முதல் அரசியல் பிரவேசம் 1971இல்.
நாடு தழுவிய அளவில் இந்திரா காந்தி அலை அடித்துக் கொண்டிருந்த நேரத்தில் மத்திய பிரதேசம் குணா தொகுதியில் பாரதிய ஜன சங்க வேட்பாளராக மிகப் பெரிய வெற்றியை அவரால் ஈட்ட முடிந்தது. அப்போது அவரது வயது வெறும் 22!
அதுமட்டுமல்ல, அவரால் தோற்கடிக்கப்பட்டவர் யார் தெரியுமா? இந்தியா சுதந்திரம் அடையும்போது அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவரும், சுதந்திரத்திற்குப் பிறகு ஜெயப்பிரகாஷ் நாராயண் போன்றவர்களுடன் இணைந்து பிரஜா சோஷலிஸ்ட் கட்சியை நிறுவியவருமான ஆச்சார்ய கிருபளானி.
இந்தியா சுதந்திரம் அடைந்தது முதல் தொடர்ந்து நான்கு முறை குணா தொகுதியில் இருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார், அந்த சோஷலிஸ்ட் தலைவர். 1971இல் ஐந்தாவது தேர்தலில், இளைஞரான குவாலியர் மகாராஜா மாதவராவ் சிந்தியாவால் பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டபோது, ஆச்சார்ய கிருபளானி அது குறித்துத் தெரிவித்த கருத்து, இன்றளவும் சிந்தனைக்குரியது.
'இந்தியா சுதந்திரம் அடைந்து, குடியரசாக மாறிவிட்டது என்னவோ உண்மை. ஆனால், நமது மக்களின் மனதில் குடிகொண்டிருக்கும் ஜமீன்தாரிய மனநிலையும், அடிமைத்தனமும் விலகக் குறைந்தது ஒரு நூற்றாண்டாவது ஆகும்!' என்பதுதான் ஆச்சார்ய கிருபளானி சொன்ன கருத்து.
தனது முதல் தேர்தலில் வெற்றி பெற்றவுடன், மாதவராவ் சிந்தியா நேரில் போய், ஆச்சார்ய கிருபளானியிடம் ஆசி பெற்றார் என்பது அப்போது பரபரப்பாகப் பேசப்பட்ட செய்தி. தான் போட்டியிட்ட எந்தவொரு தேர்தலிலும் தோல்வியைத் தழுவாதவர் அவர் என்பதுடன், பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார்.
1977இல் வீசிய ஜனதா அலையில்போது, அதே குணா தொகுதியில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டு, ஜனதா கட்சி வேட்பாளரைப் பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார் மாதவராவ் சிந்தியா. 1980இல் காங்கிரஸில் இணைந்த பிறகும் அவரது வெற்றிப் பயணம் கடைசிவரை தொடர்ந்தது.
மாதவராவ் சிந்தியாவிடம் தோல்வியைத் தழுவிய இன்னொரு மிகப் பெரிய அரசியல் தலைவர் அடல் பிகாரி வாஜ்பாய். 1984 தேர்தலில், குவாலியர் தொகுதியில் மிக அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வாஜ்பாயை காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்ட மாதவராவ் சிந்தியா தோற்கடித்தபோது, பலரும் அதை நம்ப மறுத்தனர். தனது அரசியல் வாழ்க்கையில் வாஜ்பாய் எதிர்கொண்ட தேர்தல் தோல்வி அது மட்டுமே.
1971 முதல் 2001இல் தனது 56வது வயதில் கான்பூரில் பேரணியில் கலந்துகொள்ள தனியார் விமானம் ஒன்றில் பயணித்தபோது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தது வரை தொடர்ந்து ஒன்பது முறை மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் மாதவராவ் சிந்தியா. தான் 'குவாலியர் மகாராஜா' என்கிற செறுக்கு துளியும் இல்லாமல் பழகும் பண்பு, கட்சி பேதமில்லாமல் அவருக்கு நண்பர்களைத் தேடித் தந்திருந்தது.
ஜெயின் ஹவாலா குற்றச்சாட்டில் அவர் மீது வழக்குத் தொடரப்பட்டபோது, காங்கிரஸில் இருந்து விலகி 'மத்திய பிரதேச விகாஸ் காங்கிரஸ்' என்கிற கட்சியைத் தொடங்கி இருந்தார் மாதவராவ் சிந்தியா. அந்தக் கட்சியின் சார்பில்தான் 1996 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றிருந்தார். தேவே கெளடா தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசுக்கு ஆதரவு தெரிவித்திருந்தாலும், அமைச்சரவையில் அவர் சேரவில்லை.
ராஜ்குமாரி ரத்னாசிங்கின் நிகழ்ச்சியில் மாதவராவ் சிந்தியா என்னைப் பார்த்ததும், அவரே கையசைத்து அருகில் அழைத்தார். 'நிகழ்ச்சி முடிந்ததும் போய் விடாதீர்கள். உங்களிடம் ஒரு முக்கியமான செய்தியை நான் தெரிவிக்க வேண்டும். உங்களுக்கு அந்தத் தகவல் பயன்படக் கூடும்' என்று தெரிவித்துவிட்டு, அருகில் இருந்தவர்களிடம் பேசத் தொடங்கிவிட்டார். நானும் அங்கிருந்து எனது இருக்கைக்கு வந்து விட்டேன்.
நிகழ்ச்சி முடிந்தும்கூட அவரைச் சுற்றி நண்பர்கள் கூட்டம். சற்று தள்ளி அவரது பார்வை படும் இடத்தில் நான் நின்று கொண்டிருந்தேன். வந்திருந்தவர்கள் அவரிடம் உரையாடுவதும், புகைப்படம் எடுத்துக் கொள்வதுமாக இருந்தனர். அவரே மீண்டும் என்னை அழைத்தார்.
'நீங்கள் எனது வீட்டுக்குச் சென்றுவிடுங்கள். எந்த நேரமானாலும் நான் வந்து சந்திக்கிறேன்' என்று சொன்னபோது, மகிழ்ச்சியுடன் தலையசைத்து விடைபெற்றுக் கொண்டேன். அவர் வந்தபோது இரவு பத்து மணி கடந்திருந்தது. நான் வருவேன் என்று அவரது உதவியாளருக்கு ஏற்கெனவே தகவல் தெரிவிக்கப்பட்டிருந்ததால், அவர்கள் என்னை ராஜ மரியாதையுடன் பார்த்துக் கொண்டனர் இரவு உணவு வரை!
'நாளை காலையில் நான் வெளிநாடு செல்ல இருக்கிறேன். அதனால்தான் எவ்வளவு நேரமானாலும் நீங்கள் காத்திருக்கும்படி சொன்னேன்...' என்றபடி வந்தமர்ந்தார் மாதவராவ் சிந்தியா.
'ஏதோ முக்கியமான தகவல் இருப்பதாகச் சொன்னீர்களே...'
'ஒன்றல்ல, மூன்று தகவல்கள் இருக்கின்றன. முதலாவது தகவல், உங்களுக்கு ஏற்கெனவே தெரிந்திருக்கும். அஜித் சிங் காங்கிரஸிலிருந்து விலகி தனிக்கட்சி தொடங்கப்போவதாகக் கேள்விப்படுகிறேன். தேவையில்லாமல் விஷப்பரீட்சையில் இறங்க வேண்டாம் என்று நான் எச்சரித்ததாக அவரிடம் சொல்லுங்கள்.'
'அவர் மிகவும் தெளிவாகவும், பிடிவாதமாகவும் இருக்கிறார். அவரிடம் கலந்தாலோசிக்காமல் நரசிம்ம ராவ் பகுஜன் சமாஜ் கட்சியுடன் தேர்தல் கூட்டணி அறிவித்தது முதல் அவர் காங்கிரஸில் பிடித்தமில்லாமல்தான் இருக்கிறார்.'
'அடுத்த செய்தியைச் சொல்கிறேன், கேட்டுக் கொள்ளுங்கள். இன்னும் அதிக நாள்கள் நரசிம்ம ராவால் காங்கிரஸ் தலைவராகத் தொடர முடியாது. உத்தர பிரதேசத்தில் காங்கிரஸூக்குப் பிரபலமான தலைவர் யாரும் கிடையாது. காங்கிரஸில் தொடர்ந்தால், அஜித் சிங் வலுவான தலைவராக உயர முடியும்.'
'அஜித் சிங்கிற்கு அறிவுரை கூறும் நீங்கள் ஏன் தனிக்கட்சி தொடங்கி இருக்கிறீர்கள்?'
'உத்தர பிரதேசம் போல அல்ல மத்திய பிரதேசம். இங்கே அர்ஜுன் சிங், திக்விஜய் சிங், மோதிலால் வோரா என்று மூன்று முன்னாள் முதல்வர்கள் கட்சியிலும் மக்கள் மத்தியிலும் செல்வாக்குடன் வலம் வருகிறார்கள். அங்கே என்.டி. திவாரி செல்வாக்கே இல்லாத தலைவர். தனிக்கட்சி தொடங்கி நடத்துவது என்பது எளிதல்ல என்பதை நான் கடந்த சில மாதங்களில் புரிந்து கொண்டிருப்பதால்தான் சொல்கிறேன், அவரிடம் நான் கேட்டுக் கொண்டதாகத் தகவல் சொல்லுங்கள்.'
'அஜித் சிங், நரசிம்ம ராவ் சரி, மூன்றாவது தகவல் என்ன?'
'அது உங்கள் தமிழகத்துடன் தொடர்புடையது. ஜெயலலிதாஜி மீது வழக்கு மேல் வழக்குப் போட்டு அரசியலில் தனிமைப்படுத்துவது என்பதில் முதல்வர் கருணாநிதியும், ப. சிதம்பரமும் முனைப்பாக இருக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த செய்தி. அவர்களும் அதை மறுக்கவில்லை. ஆனால், ஐக்கிய முன்னணி அரசில் திமுகவையும், தமாகாவையும் மீறி ஜெயலலிதாவுக்கு ஆதரவாகச் சிலர் செயல்படுகிறார்கள் என்று தெரிகிறது.'
நான் நிமிர்ந்து உட்கார்ந்தேன். ஒருவேளை, நான் ஜெயஷிலா ராவையும், அமர்சிங்கையும் தொடர்பு கொண்டது மாதவராவ் சிந்தியாவுக்குத் தெரிந்திருக்குமோ என்கிற சந்தேகம் எனக்குள் எழுந்தது.
'காங்கிரஸ் அழுத்தம் கொடுக்கிறது என்று நினைக்கிறீர்களா?'
'காங்கிரஸை எப்படி கேவலப்படுத்தி, அரசியலில் இருந்து அகற்றுவது என்பதில் ஐக்கிய முன்னணியில் உள்ள எல்லா கட்சிகளுமே குறியாக இருக்கின்றன. நரசிம்ம ராவைக் காப்பாற்றுவதற்கே முடியாமல் காங்கிரஸ் தவித்துக் கொண்டிருக்கிறது, அவர்கள் எப்படி ஜெயலலிதாஜியைக் காப்பாற்ற முடியும்?'
'எதை வைத்து நீங்கள் ஜெயலலிதாவுக்கு ஆதரவாகச் சிலர் இருப்பதாகக் கூறுகிறீர்கள்?'
'ஜெயலலிதாஜி மீது வழக்கு எதுவும் தொடர முடியாது என்று தங்களுக்குக் கிடைத்திருக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் பிரதமர் தேவே கெளடாவிடம் சிபிஐ இயக்குநர் ஜோகிந்தர் சிங் தெரிவித்திருக்கிறார் என்று எனக்குத் தகவல் கிடைத்திருக்கிறது.'
'சுமார் ரூ. 4 கோடி மதிப்புள்ள வெகுமதிகளை ஜெயலலிதா பெற்றிருக்கிறார். அதில் 3 லட்சம் அமெரிக்க டாலரும் அடக்கம். அதுவும் அந்நியச் செலாவணியாக அவர் பெற்றிருக்கிறார். அவர் மீது வலுவான வழக்கு இருப்பதாக அல்லவா கூறுகிறார்கள்.'
'இந்தப் பரிசுகள் குறித்தும், அந்நியச் செலாவணி குறித்தும் தெரிவித்திருப்பதுடன் அதற்கு வரியும் கட்டியிருக்கிறார் ஜெயலலிதாஜி. நரசிம்ம ராவ் அரசு அறிமுகப்படுத்திய சிறப்பு விதிவிலக்குத் திட்டத்தில், அரசில் பதவி வகிப்பவர்கள் வெளிநாடுகளிலிருந்து வெகுமதிகளைப் பெறுவது தடை செய்யப்படவில்லை. ஜெயலலிதாஜி மீது இந்தக் காரணத்துக்காக சிபிஐ வழக்குத் தொடுத்தால், இந்தியாவில் உள்ள பல அரசியல்வாதிகள் மீதும் அதேபோல வழக்குத் தொர வேண்டி வரலாம் என்று சிபிஐ பிரதமரை எச்சரித்திருக்கிறது.'
'ஒரு மாநில முதல்வர் தனிப்பட்ட நன்கொடையாக, பிறந்த நாள் பரிசாக, அதுபோல அந்நியச் செலாவணியாக பணம் பெறுவது சரியா என்கிற கேள்வி எழத்தானே செய்கிறது. 3 லட்சம் அமெரிக்க டாலரை யாரோ ஒருவர் நன்கொடையாக கொடுத்தார் என்றால், அதை விசாரிக்கத் தானே வேண்டும்.'
'குற்றம் சாட்டலாம், விமர்சிக்கலாம். அதைப்பற்றி சிபிஐ விசாரிக்க முடியாது என்று ஜோகிந்தர் சிங்கே கூறியிருக்கிறார் என்று பிரதமர் அலுவலகத்துடனும், சிபிஐயுடனும் தொடர்புடைய சில உயர் அதிகாரிகள் என்னிடம் தெரிவிக்கிறார்கள். நீங்கள் விசாரித்துப் பாருங்கள்.'
'ஜெயலலிதாஜிக்குப் பிரதமரோ, ஜோகிந்தர் சிங்கோ உதவுகிறார்கள் என்று நீங்கள் சந்தேகப்படுகிறீர்களா?'
'நான் எந்த சந்தேகமும் படவில்லை. இந்தப் பிரச்னை ஐக்கிய முன்னணியில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கிறேன். உள்துறை அமைச்சர், நிதியமைச்சர் இருவரும் பிரதமருக்கு நெருக்கடி கொடுக்கக் கூடும். சிபிஐ சொன்னதில் நியாயம் இருப்பதாகத்தான் எனக்குத் தோன்றுகிறது. நீங்கள் விசாரித்துப் பாருங்கள்...'
அடுத்த நாள் காலையில் வெளிநாடு செல்ல இருக்கும் அவரிடம் அதற்கு மேலும் பேசிக் கொண்டிருக்க விரும்பவில்லை. விடைபெற்றுக் கொண்டேன்.
மாதவராவ் சிந்தியா எதிர்பார்த்தது நடந்தது. அவர் சொன்னதுபோல, பிரதமருக்குக் கேள்வி எழுப்பி நெருக்கடி கொடுத்தது உள்துறை அமைச்சர் இந்திரஜித் குப்தாவோ, நிதியமைச்சர் ப. சிதம்பரமோ அல்ல. தொழில்துறை அமைச்சர் முரசொலி மாறனோ, ஏனைய திமுகவினரோகூட அல்ல.
மத்திய புலனாய்வுத் துறை அமைப்பின் செயல்பாட்டுக்கு எதிராகக் கொதித்தெழுந்த அந்த அமைச்சர், பிரதமரிடமே சென்றுவிட்டார்.
(தொடரும்)