'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 149
By கி. வைத்தியநாதன் | Published On : 16th July 2023 04:04 PM | Last Updated : 16th July 2023 04:04 PM | அ+அ அ- |

பிரதமரை சந்திக்க நேரம் கேட்டு அந்த அமைச்சர் தகவல் அனுப்பியபோது, அதை வழக்கமான ஒன்று என்றுதான் பிரதமர் அலுவலகம் நினைத்தது. ஆனால், அந்த சந்திப்பின்போது பிரதமரிடம் அந்த அமைச்சர் எழுப்பிய கேள்விகள், அதை அசாதாரண சந்திப்பாக்கியது என்று பிரதமர் அலுவலகத்தைச் சேர்ந்த முக்கியமான ஒருவர் என்னிடம் தனிப்பட்ட முறையில் பகிர்ந்து கொண்டார்.
தேவே கெளடா தலைமையில் அமைந்த ஐக்கிய முன்னணி அரசில் தமிழ் மாநில கட்சியின் சார்பில் தொழிலாளர் நலன், நாடாளுமன்ற விவகாரத் துறை ஆகியவற்றுக்கான இணையமைச்சராக இருந்த எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம்தான் அந்த அமைச்சர். தன் மூலமாகத் தெரிவிக்கப்பட வேண்டிய சிபிஐயின் கருத்து நேரடியாகப் பிரதமருக்கு சிபிஐ இயக்குநரால் தெரிவிக்கப்பட்டிருப்பதை அவர், கெளரவப் பிரச்னையாக எடுத்துக் கொண்டதாக அந்த அதிகாரி என்னிடம் தெரிவித்தார்.
''சிபிஐயின் செயல்பாடுகள் எனது கட்டுப்பாட்டில் இருப்பதால், எந்தவொரு தகவலாக இருந்தாலும் என் மூலம் பிரதமர் அலுவலகத்துக்கு தெரிவிக்கப்படுவதுதான் முறை. அதிகாரிகள் நேரடியாகப் பிரதமரிடம் தொடர்பு கொள்வது, அவரிடமிருந்து உத்தரவுகள் பெறுவது என்று சொன்னால், அது எனது பதவியின் மரியாதையை பாதிக்கும்'' என்று பிரதமர் தேவே கெளடாவிடம், இணையமைச்சர் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம் வெளிப்படையாகத் தெரிவித்ததாக அந்த அதிகாரி சொன்னார்.
பிரதமர் எதுவும் பேசவில்லை என்றும் எஸ்.ஆர்.பி. சொன்னதை அமைதியாகக் கேட்டுக் கொண்டதாகவும் தெரிகிறது.
''இதே போன்று சிபிஐ செயல்பட்டால் தமிழ்நாட்டில் திமுகவையும், தமாகாவையும் அது பாதிப்பதுடன், ஐக்கிய முன்னணி அரசையும் பாதிக்கும்'' என்று இணையமைச்சர் எஸ்.ஆர்.பி. குறிப்பிட்டதாக அந்த அதிகாரி கூறினார்.
எஸ்.ஆர்.பி. பிரதமரைச் சந்தித்து விட்டுப்போன பிறகு, பிரதமர் அந்த அதிகாரியை அழைத்து, சிபிஐ இயக்குநர் ஜோகிந்தர் சிங்கிடம் தன்னை சந்திக்க வரும்படி தெரிவித்துக் கட்டளையிட்டார். ''இயக்குநர் தன்னை சந்தித்துப் பேசுவதற்கு முன்னர் இணையமைச்சரை சந்தித்துப் பேசுவதை வழக்கமாகக் கொள்ள வேண்டும் என்றும் அவருக்குக் கட்டளை பிறப்பித்தார்'' என்று தெரிவித்த அதிகாரி, சிரித்துக் கொண்டே இன்னொன்றையும் சொன்னார்.
''கூட்டணி ஆட்சியில் இதுதான் பிரச்னை. தனிக்கட்சி ஆட்சியில் அமைச்சர்கள் முதல்வருக்கும், பிரதமருக்கும் பயப்படுவார்கள். கூட்டணி ஆட்சியில் ஆளுக்கு ஆள் பிரதமரை மிரட்டுவார்கள். என்ன செய்ய?'' என்று பிரதமர் கன்னடத்தில் சலித்துக் கொண்டதாக அந்த அதிகாரி சொல்லிச் சிரித்தார்.
ஜோகிந்தர் சிங்கை சந்திக்க நான் எடுத்த முயற்சிகள் பயனளிக்கவில்லை. தமிழகப் பத்திரிகையாளர் என்றாலே அவர் சுதாரித்துக் கொண்டு தவிர்த்து வந்தார். ஒருசில கன்னட பத்திரிகை நிருபர்கள் மூலம் சந்திக்க நான் எடுத்த முயற்சிகளும் வெற்றி பெறவில்லை.
ஜெயலலிதா மீதான வழக்குகளை சிபிஐ எடுத்துக் கொள்ளப் போகிறதா, இல்லையா என்பது குறித்து நான் மேலும் தீவிரமாக விசாரித்தபோது, எனக்குக் கிடைத்த தகவல் இதுதான் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளில் தன்னை ஒரு பகடைக்காயாகத் திமுகவும், தமாகாவும் பயன்
படுத்துவதை சிபிஐ விரும்பவில்லை. அதே நேரத்தில், துறை சார்ந்த இணையமைச்சர் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியத்தின் அழுத்தம் காரணமாக, தலையிட விரும்பவில்லை என்று தமிழக அரசுக்குக் கறாராகக் கடிதம் எழுதுவதையும் சிபிஐ தவிர்த்துவிட்டது.
முன்பே தெரிவித்ததுபோல, அஜித் சிங் காங்கிரஸிலிருந்து விலகி, பாரதிய கிஸான் காம்கர் கட்சி என்று தனிக்கட்சி தொடங்கி இருந்தார். தனது எம்.பி. பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, மீண்டும் தேர்தலில் போட்டியிடும் முடிவில் இருந்தார் அவர்.
அதனால், மேற்கு உத்தர பிரதேசத்தில் உள்ள தனது தொகுதியான பாக்பத்தில், தனது புதிய கட்சி குறித்த விளக்கக் கூட்டம் ஒன்றுக்கு அவர் ஏற்பாடு செய்திருந்தார். அந்தக் கூட்டத்துக்கு என்னையும் தன்னுடன் அழைத்துப் போனார். காரில் செல்லும்போது, நடந்ததை எல்லாம் அவரிடம் விளக்கினேன். பிரதமர் தேவே கெளடாவை தானே நேரில் தொடர்புகொண்டு பேசியதாக அவர் தெரிவித்தார்.
''நான் உங்களுக்கு ஆச்சரியமான, நீங்கள் எதிர்பார்க்காத தகவல் ஒன்றைச் சொல்லப் போகிறேன்.''
''காங்கிரஸ் தொடர்பானதா இல்லை; எங்கள் தமிழ்நாடு தொடர்பானதா?''
''ஜெயலலிதா தொடர்பானது. சுப்பிரமணியன் சுவாமியுடன் பேசிக் கொண்டிருந்தேன். அவர் ஜெயலலிதா தன்னைத் தொடர்பு கொண்டு பேசியதாகச் சொன்னார்.''
அவர் சொன்னதை நான் நம்பவில்லை. ஜெயலலிதாவின் மீது சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்ந்திருப்பதே சுவாமிதான். அதுமட்டுமல்ல, அவரது ஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவர் சந்திரலேகாவின் முகத்தில் ஆசிட் வீச்சு நடந்த சம்பவத்தின் பின்னணியில் ஜெயலலிதா சசிகலா இருப்பதாக குற்றச்சாட்டு இருக்கிறது. அப்படி இருக்கும்போது, ஜெயலலிதா வலியப் போய் சுப்பிரமணியன் சுவாமியைத் தொடர்பு கொண்டார் என்பதை எப்படி நம்புவது?
''நீங்கள் நம்ப மாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும். நானும்கூட நம்பவில்லை. சுப்பிரமணியன் சுவாமி சொல்வதை எல்லாம் நம்புவது சிரமம்தான். ஆனால், அவர் சொல்லுவதெல்லாம் உண்மையாகத் தான் இருக்கும் என்பதை பல நிகழ்வுகளில் நான் உணர்ந்திருக்கிறேன்.''
''சுவாமியைத் தொடர்பு கொண்டு ஜெயலலிதா என்ன சொன்னாராம்? வழக்குகளை வாபஸ் பெற்றுக் கொள்ளும்படி கோரிக்கை விடுத்திருக்கிறாரா?''
''அதையெல்லாம் சுவாமி என்னிடம் சொல்லவில்லை. தமிழக அரசியலில் புதிய பல திருப்பங்கள் ஏற்படப் போகிறது என்று மட்டும்தான் கூறினார். தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்பதை விசாரியுங்கள்.''
பாக்பத்தில் நடந்த பிரம்மாண்டமான பேரணியைப் பார்த்தபோது, இடைத் தேர்தலிலும் அஜித் சிங்தான் வெற்றி பெறப்போகிறார் என்பதை நான் உறுதியாகத் தெரிந்து கொண்டேன். அது கூட்டிவரப்பட்ட கூட்டமாகத் தெரியவில்லை; உணர்வுபூர்வமாகக் கூடிய கூட்டமாகத் தெரிந்தது. சரண் சிங்கின் செல்வாக்கு அவர் மறைந்து பல ஆண்டுகளாகியும் குறையவில்லை என்பதன் அடையாளம் அது.
அடுத்த ஓரிரு நாள்களிலேயே ஜெயலலிதாவின் அறிக்கை வெளிவந்தபோது, அஜித் சிங் சொன்னதுபோல, சுப்பிரமணியன் சுவாமியை ஜெயலலிதா தொடர்பு கொண்டிருக்கக் கூடும் என்பது உறுதியானது. ஆனால், ஜெயலலிதா வெளியிட்டிருந்த அறிக்கையில் அது குறித்த சமிக்ஞை எதுவுமே இருக்கவில்லை.
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. சென்னை மாநகராட்சி மேயர் தேர்தலில் திமுக சார்பில் முதல்வர் கருணாநிதியின் மகனும், திமுக இளைஞரணியின் செயலாளருமான மு.க. ஸ்டாலின் களமிறக்கப்பட்டிருந்தார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் டி. ஜெய
குமாரும், ஜனதா கட்சியின் சார்பில் சந்திரலேகாவும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டிருந்தனர்.
முந்தைய தேர்தல் முறை மாற்றப்பட்டு, மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படும் மேயர் என்பதால், சென்னை மாநகராட்சிக்கான தேர்தல் மிகுந்த முக்கியத்துவம் பெற்றிருந்தது. பொதுவாக உள்ளாட்சித் தேர்தல்களில் ஆளும் கட்சிதான் வெற்றி பெறும் என்றாலும்கூட, சென்னை மாநகராட்சி மேயருக்கான 1996 தேர்தல் திமுகவுக்கு கெளரவப் பிரச்னையாகவே மாறியிருந்தது.
அப்படிப்பட்ட பின்னணியில்தான் யாரும் சற்றும் எதிர்பாராதவிதமாக ஜெயலலிதாவின் அறிக்கை வெளிவந்தது. தனது வேட்பாளரான ஜெயகுமாரை வாபஸ் பெற்றுக் கொண்டதுடன் நிறுத்திக் கொள்ளாமல், பொது வேட்பாளராக ஜனதா கட்சி வேட்பாளர் சந்திரலேகாவை எல்லா எதிர்க்கட்சிகளும் ஆதரிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்ததுதான் வியப்பிலும் வியப்பு.
நான் பத்திரப்படுத்தி வைத்திருக்கும் ஜெயலலிதாவின் அன்றைய அறிக்கையை இப்போது மீண்டும் படிக்கும்போது, சிரிப்பாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்று இருந்த நிலையிலும் ஜெயலலிதாவிடம் காணப்பட்ட துணிச்சல் அந்த அறிக்கையில் வெளிப்பட்டது.
சுப்பிரமணியன் சுவாமியை ஜெயலலிதா தொடர்பு கொண்டாரா அல்லது சுவாமியின் வேண்டுகோளுக்கிணங்க, சந்திரலேகாவை ஆதரிக்கும் முடிவை ஜெயலலிதா எடுத்தாரா என்று தெளிவாகத் தெரியவில்லை. மிகவும் சாதுர்யமாக சுப்பிரமணியன் சுவாமியின் நட்பைப் பெறுவதற்கு ஜெயலலிதா மேற்கொண்ட ராஜதந்திரமாகத்தான் அந்த அறிக்கையும் முடிவும் தெரிந்தது. அந்த அறிக்கையில் காணப்பட்ட வாசகங்கள் இவை
''மொகலாயச் சக்கரவர்த்திகள், தங்கள் வாரிசுகளை முதலில் நாட்டின் ஒரு பகுதிக்கு சிற்றரசர்களாக அமர்த்துவது வழக்கம். அதே பாணியில் குடும்ப அரசியல் நடத்தும் கருணாநிதி, தனது புதல்வர் ஸ்டாலினை சென்னை மேயராக்க முனைந்துள்ளார்.
ஏற்கெனவே தில்லி சுல்தான் நாற்காலியில் முரசொலி மாறன் அமர்த்தப்பட்டிருக்கிறார். இது குடும்ப அரசியல் என்பதை நடுநிலையாளர்கள் அனைவரும் உணர்கிறார்கள். இது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல. நாட்டுக்கும் நல்லதல்ல.
அதிகாரம் ஒரே குடும்பத்தில் குவியும்போது, எதிர்க்கட்சிகளையும் தனக்குப் பிடிக்காதவர்களையும் துன்புறுத்தவும், பழிவாங்கவும் எண்ணம் வரும். அந்த வகையில்தான், டாக்டர் சுப்பிரமணியன் சுவாமியின் நியாயமான கோரிக்கை கவனிக்கத்தக்கது. குடும்ப அரசியலைத் தவிர்க்கும் முயற்சியில் மற்ற கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை வாபஸ் பெற்று சந்திரலேகாவை ஆதரிக்க வேண்டுமென சுவாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜனநாயகம் பலியாகக்கூடாதென்ற எண்ணமுள்ளவர்கள் இதை ஆதரிக்கக் கடமைபட்டவர்கள். ஆகவே, அதிமுகவின் ஆட்சிமன்றக் குழுவும், தலைமைக் கழக நிர்வாகிகளும் கூடி விவாதித்து, அதிமுக வேட்பாளர் ஜெயகுமாரை வாபஸ் பெற்று, பொது வேட்பாளராக சந்திரலேகாவை ஆதரிக்க முடிவு செய்துள்ளோம்.
வேறுபாடுகளை மறந்து தங்கள் வேட்பாளர்களைத் திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு மற்ற தோழமை எதிர்க்கட்சிகளையும் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். ஜனநாயகம் தழைக்கவும், நாட்டை ஆளும் அதிகாரம் ஒரே குடும்பத்தில் குவியாதிருக்கவும், வாரிசுகள் போக்கு வளராதிருக்கவும் அதிமுக எப்போதும் தன்னால் இயன்றதைச் செய்யும் என்பதை உறுதிப்படுத்துகிறேன்.''
ஜெயலலிதாவின் அறிக்கையைத் தொடர்ந்து, அதிமுக வேட்பாளர் ஜெயகுமார் போட்டியிலிருந்து விலகினார். திமுகவின் மு.க. ஸ்டாலினுக்கும், ஜனதா கட்சியின் சந்திரலேகாவுக்கும் போட்டி என்கிற அளவில் மாறியது சென்னை மேயருக்கான நேரடித் தேர்தல்.
ஜெயலலிதாவின் அறிக்கை வெளியான இரண்டு நாள்களில் அண்ணா அறிவாலயத்தில் நடந்த முப்பெரும் விழாவில் முதல்வர் கருணாநிதி ஆற்றிய உரை, ஜெயலலிதா சுப்பிரமணியன் சுவாமி இருவருக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் திடீர் உறவு குறித்து மட்டுமல்ல, மறைமுகமாக ஐக்கிய முன்னணி அரசையும் விமர்சிப்பதாக இருந்ததுதான் அதிர்ச்சித் திருப்பம்.
சிபிஐ தன்னைக் கலந்தாலோசிக்காமல், நேரடியாக பிரதமருக்கு மட்டுமே தகவல்களைத் தெரிவிக்கிறது என்கிற மத்திய இணையமைச்சர் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியத்தின் ஆதங்கத்தைப் பிரதிபலிப்பதாக அமைந்தது முதல்வர் கருணாநிதியின் உரை. ''என்ன பேரம் யார் வீட்டில் நடந்தது என்று எனக்கு நன்றாகத் தெரியும்'' என்று அவர் குறிப்பிட்டது தில்லி அதிகார மையத்தில் எதிரொலித்தது.
தன்னை உடனடியாக வந்து சந்திக்கும்படி, கன்னடப் பத்திரிகையாளர் ஒருவர் மூலம் எனக்கு தகவல் அனுப்பி இருந்தார் பிரதமர் தேவே கெளடாவின் ஊடக ஆலோசகர் ஜெயஷீலா ராவ்.
(தொடரும்)
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...