'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 150
By கி. வைத்தியநாதன் | Published On : 23rd July 2023 12:00 AM | Last Updated : 23rd July 2023 12:00 AM | அ+அ அ- |

கர்நாடக பவனில் பிரதமர் தேவே கெளடாவின் ஊடக ஆலோசகர் ஜெயஷீலா ராவை சந்திக்க நான் காலை பத்து மணியிலிருந்து காத்திருந்தேன். மதியம் சுமார் ஒரு மணிக்குத்தான் ஜெயஷீலா ராவ் வந்தார். கர்நாடக பவனிலுள்ள ஓர் அறை அவருக்கென்று பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டிருந்தது. என்னையும் அழைத்துக் கொண்டு தனது அறைக்குச் சென்றார் அவர். எங்கள் இருவருக்கும் மதிய உணவுக்குச் சொல்லி விட்டு, பேச்சைத் தொடங்கினார்.
அவரது கைப்பையிலிருந்து அவர் எடுத்து நீட்டியது அன்றைய 'முரசொலி' இதழ். அதில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் முதல்வர் கருணாநிதி பேசியது முதல் பக்கத்திலேயே விரிவாக வெளியிடப்பட்டிருந்தது. அந்த உரையை என்னிடம் தந்து உரக்கப் படிக்கச் சொன்னார். ஆங்காங்கே அவருக்கு சந்தேகம் வந்த இடங்களுக்கு என்னிடம் விளக்கம் கேட்டுத் தெரிந்து கொண்டார்.
முதல்வர் கருணாநிதி உரையின் சாராம்சம் இதுதான் 'கூட்டாகச் சேர்ந்து திமுகவை ஒழிக்க சிலர் நினைக்கிறார்கள். தேவே கெளடா அரசு மீது ஜெயலலிதாவுக்குப் புதுக் காதல் ஏற்பட்டுள்ளது. என்ன பேரம், யார் வீட்டில் நடந்தது என்று எனக்குத் தெரியும்.
டான்சி நிலத்தை வாங்கவில்லை என்று ஜெயலலிதா கூற முடியுமா? கொடநாடு எஸ்டேட்டை 11 கோடி ரூபாய்க்கு சசிகலா வாங்கியுள்ளார். இந்தப் பணம் அவருக்கு எப்படி வந்தது? ஜெயலலிதா கொடுத்த பணமல்லவா அது? சசிகலாவும் அவரது பினாமிகளும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சொத்துகளை வாங்கியுள்ளனர். ஜெயலலிதாதான் அதற்குப் பணம் கொடுத்துள்ளார்.
இவ்விஷயத்தில் ஒருவேளை மத்திய அரசு கண்டும் காணாமல் விட்டுவிட்டாலும் நாங்கள் ஜெயலலிதா மீது நடவடிக்கை எடுக்காமல் விடமாட்டோம். ஊழல் குற்றத்துக்காக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது நடவடிக்கை எடுப்பது உறுதி. அண்ணா பிறந்தநாளில் இதைச் சபதமாக அறிவிக்கிறேன்...'
'என்ன பேரம், யார் வீட்டில் நடந்தது?', 'ஒருவேளை மத்திய அரசு கண்டும் காணாமலும் விட்டுவிட்டாலும்' பகுதிகளை இரண்டுக்கு மூன்று முறை என்னை படிக்கச் சொல்லிக் கேட்டார் ஜெயஷீலா ராவ். அதற்குள் உணவு வந்தது. சாப்பிட்டோம். சாப்பிடும்போது நாங்கள் எதுவும் பேசவில்லை.
உணவு அருந்திவிட்டு வந்து உட்கார்ந்தபோது நான் கேட்டேன்.
'முதல்வர் கருணாநிதிக்கு ஏன் மத்திய அரசின் மீது இப்படி திடீர் சந்தேகம் வருகிறது? ஜெயலலிதா தரப்பில் ஏதாவது பேரம் நடந்ததா என்ன?'
'எனக்குத் தெரிந்து இல்லை. திமுக, தமாகாவைத் தவிர, ஐக்கிய முன்னணியில் இருக்கும் ஏனைய கட்சிகள் அனைத்துமே ஜெயலலிதா மீது சற்று அனுதாபத்துடன்தான் இருக்கின்றன என்பது உண்மை. சுப்பிரமணியன் சுவாமி ஜெயலலிதாவுடன் இணைவது முதல்வர் கருணாநிதியை பயமுறுத்தி இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அவர் பேரம் என்று சொல்வது சுவாமியின் தலையீடாக இருக்கக்கூடும்.'
'இதைப் படிப்பதற்காகத்தான் நீங்கள் என்னை அவசரமாக அழைத்தீர்களா? இல்லை, வேறு ஏதாவது இருக்கிறதா?'
'முதல்வர் கருணாநிதியின் பேச்சு பிரதமரை மிகவும் பாதித்திருக்கிறது. அதனால் கூட்டணிக்கு பிரச்னை எதுவும் ஏற்பட்டுவிடக் கூடாது என்று அவர் நினைக்கிறார். அவரது பேச்சை முழுமையாகத் தெரிந்து கொள்ளச் சொன்னார். அதனால்தான் வரச் சொன்னேன். மேயர் தேர்தல் எப்படி இருக்கும்?'
'முதல்வர் கருணாநிதியும் திமுகவும் பயப்படுவதுபோல எதுவும் நடந்துவிடப் போவதில்லை. அதிமுகவின் செல்வாக்கு சரிந்து கிடக்கிறது. கூட்டணியால் அதை சரிக்கட்ட முடியாது. மு.க. ஸ்டாலின் மிகப் பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி... ஏன் பயப்படுகிறார்கள் என்று தெரியவில்லை...'
ஜெயஷீலா ராவ் சிரித்தார். நான் அவரை வியப்புடன் பார்த்தேன்.
'அவர்கள் பயப்படுவது ஜெயலலிதாவையல்ல. சுப்பிரமணியன் சுவாமி மீண்டும் தமிழ்நாட்டு அரசியலில் நுழைந்திருப்பதுதான் பயத்துக்குக் காரணம். ஏற்கெனவே அவர்களுக்குப் பழைய அனுபவம் உண்டு.'
அவருடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு நான் அங்கிருந்து கிளம்பிவிட்டேன். தேவே கெளடாவிடம் திமுகவுக்கு அதிருப்தி ஏற்பட்டிருப்பதற்கு இன்னொரு காரணமும் இருப்பதை ஜெயஷீலா ராவுடன் பேசிக் கொண்டிருந்ததில் இருந்து நான் தெரிந்து கொண்டேன்.
இப்போது நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு கொண்டுவந்திருக்கும் பொருளாதார அடிப்படையில் பின்தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு என்பதை முதன் முதலில் முன்மொழிந்தது பிரதமராக இருந்த தேவே கெளடா என்பது பலருக்கும் வியப்பை அளிப்பதாக இருக்கும்.
தமிழக முதல்வராக இருந்த எம்ஜிஆர், பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு என்று மட்டும்தான் சொன்னார். முதன் முதலில், பொருளாதார அடிப்படையில் பின் தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக அறிவித்தவர் பிரதமர் தேவே கெளடாதான்.
உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின்போது, 'இதுவரை அறிவிக்கப்பட்ட இட ஒதுக்கீட்டில் பயன்பெறாத, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று வரம்பின் கீழ் வராத பொருளாதார அடிப்படையில் பின் தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு' என்று பஸ்தியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் அறிவித்தது ஏனைய கூட்டணிக் கட்சிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. குறிப்பாக, தங்களைக் கலந்தாலோசிக்காமல் பிரதமர் தன்னிச்சையாக அறிவித்திருப்பதில் கடுமையான கோபத்தில் இருந்தது திமுக.
இந்தப் பின்னணியில், திடீரென்று தேவே கெளடா, முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் தலைவரான பி.வி. நரசிம்ம ராவை அவரது இல்லத்துக்குச் சென்று சந்தித்தது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. காங்கிரஸின் ஆதரவு தொடருமானால், ஐக்கிய முன்னணி அரசு திமுக உள்ளிட்ட சில கட்சிகளின் அதிருப்தியை சட்டை செய்யத் தேவையில்லை என்று பிரதமர் கெளடா நினைக்கிறார் என்கிற தோற்றத்தைக் கொடுத்தது அந்த சந்திப்பு.
சென்னையில் சிபிஐ வழக்குத் தொடர்வதற்குக் காத்திருக்காமல், தமிழக அரசின் ஊழல் ஒழிப்புப் பிரிவு, ரூ. 15 கோடிக்கு சொத்து குவிப்பு வழக்கு ஜெயலலிதா மீது பதிவு செய்திருந்தது. முதல்கட்ட விசாரணையின் அடிப்படையில், முதல்வர் பதவியில் இருந்தபோது கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துகளைச் சேர்த்ததாக ஜெயலலிதா மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. ஜெயலலிதா தனது வருமானத்துக்கும் அதிகமாக சொத்துகளைச் சேர்த்தார் என்பதுதான் குற்றச்சாட்டு.
கர்நாடக மாநிலத்திலிருந்து பிரதமர் தேவே கெளடா மாநிலங்களவை உறுப்பினராகப் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்ம ராவின் இல்லத்துக்குச் சென்று பி.வி. நரசிம்ம ராவை தேவே கெளடா சந்தித்து, சுமார் 20 நிமிடத்துக்கு மேல் அவருடன் கலந்துரையாடினார்.
பத்திரிகையாளர்கள் யாரும் 9, மோதிலால் நேரு மார்க் பங்களாவுக்குள் அனுமதிக்கப்படவில்லை. சந்திப்பு முடிந்த பிறகு, பிரதமரோ முன்னாள் பிரதமரோ நிருபர்களுக்குப் பேட்டி கொடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பும் பொய்த்தது.
ஏனைய நிருபர்களைப்போல நானும் அங்கிருந்து நகர முற்பட்டபோது, நரசிம்ம ராவின் வீட்டுக்கு உள்ளேயிருந்து ஒரு கார் வெளியே வந்தது. சாலையின் எதிர்வரிசை நடைமேடையில் சென்று கொண்டிருந்த நான், அது யாராக இருக்கும் என்று யோசித்தபடி சற்று வேகம் குறைத்தேன். வெளியே வந்த கார் என் அருகில் வந்து நின்றது. அதில் இருந்தவர் மாநிலங்களவை உறுப்பினரான ஸ்ரீகாந்த் ஜிச்கர்!
எனது வாழ்க்கையில் நான் சந்தித்த அபூர்வமான மனிதர்களில் ஒருவர் அந்த அறிவுஜீவி. இப்போதும் ஜிச்கரை நினைத்தால் சிலிர்ப்பு மேலிடுகிறது. இன்றைய தலைமுறை அறிந்து கொள்ளாத, மறந்துவிட்ட அந்த மனிதர் குறைந்த வயதில் மறைந்தது தேசத்துக்கு ஏற்பட்ட பேரிழப்பு. ஸ்ரீகாந்த் ஜிச்கருக்கு அப்படியென்ன அசாத்திய சிறப்பு என்று தானே கேட்கிறீர்கள்.
மகாராஷ்டிர மாநிலத்தின் விவசாயக் குடும்பத்தில் பிறந்த ஸ்ரீகாந்த் ஜிச்கர் பிறவியிலேயே அதிபுத்திசாலி. பள்ளியில் படிக்கும்போதே அனைத்துப் பாடங்களிலும் நூற்றுக்கு நூறு என்பது அவருக்கு இயல்பாகவே மாறியிருந்தது. மதிப்பெண் அடிப்படையில் அவருக்கு மருத்துவக் கல்லூரியில் வாய்ப்புக் கிடைத்தது. எம்பிபிஎஸ் முடித்து எம்டியும் தேர்ச்சி பெற்றபோது, என்னவெல்லாம் படிப்புகள் இருக்கின்றனவோ அவை அனைத்தையும் படித்துவிட வேண்டும் என்கிற வெறி அவருக்குள் எழுந்தது.
சட்டத்தில் முதுகலைப் பட்டம், நிர்வாக மேலாண்மையில் முனைவர் பட்டம், ஊடகவியலில் பட்டம், சம்ஸ்கிருதத்தில் முனைவர் பட்டம் என்று பட்டங்கள் சேர்க்கத் தொடங்கினார் என்றுதான் கூற வேண்டும். பொது நிர்வாகம், சமூகவியல், பொருளாதாரம், வரலாறு, தத்துவம், மராத்தி, ஹிந்தி, ஆங்கிலம் ஆகியவற்றில் முதுகலைப் பட்டங்களைப் பெற்றதுடன் நின்றுவிடவில்லை. அவற்றில் பெரும்பாலானவற்றில் பல்கலைக்கழக தங்கப் பதக்கம் பெற்றார். 42 பட்டங்கள் படித்துத் தேர்ச்சி பெற்றிருந்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
1978இல் குடிமைப் பணித் தேர்வு எழுதியபோது, காவல் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிலிருந்து பதவி விலகி மீண்டும் தேர்வு எழுதி இந்திய ஆட்சிப் பணி அதிகாரியானார். 1980இல் ஆட்சிப் பணியில் சேர்ந்த இரண்டே ஆண்டுகளில் பதவி விலகி, தேர்தலில் வென்று மகாராஷ்டிர சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது அவருக்கு வயது 26!
சட்டப்பேரவை உறுப்பினர், சட்டமேலவை உறுப்பினர், மாநிலங்களவை உறுப்பினர் என்று அவரது அரசியல் பயணம் தொடர்ந்தது. மகாராஷ்டிர மாநில அரசில் சிவராஜ்ராவ் பாட்டீல் நிலாங்கேக்கர் அமைச்சரவையில் 14 இலாக்காக்களுக்குப் பொறுப்பேற்று திறம்பட செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது அசாத்தியத் திறமையைப் பார்த்து இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, நரசிம்ம ராவ் மூவரும் அவர் மீது தனி கவனம் செலுத்தினர்.
'லிம்கா' சாதனையாளர்கள் பட்டியலில் இந்தியாவில் மிக அதிகமான பட்டங்களைப் பெற்றவர் என்கிற குறிப்பு அவருக்கு மட்டுமே சொந்தம். பிராமணர் அல்லாத ஜிச்கர் சம்ஸ்கிருதத்தில் தேர்ச்சி பெற்றது மட்டுமல்லாமல், தினந்தோறும் ஹோமம் வளர்க்கும் அக்னிஹோத்திரியாகவும் இருந்தார் என்பது வெளியில் தெரியாத உண்மை.
'நாக்பூர் டைம்ஸ்' நாளிதழ் ஆசிரியரும், அதிபருமான நரேஷ் காத்ரேயின் மறைவைத் தொடர்ந்து அந்த நாளிதழை யார் நடத்துவது என்கிற கேள்வி எழுந்தது. பிரதமர் நரசிம்ம ராவ், ஸ்ரீகாந்த் ஜிச்கரை அழைத்து அந்த நாளிதழின் பொறுப்பை ஏற்றுக்கொள்ளச் சொன்னார். 'நியூஸ்கிரைப்' செய்தி நிறுவனத்துடன் தொடர்புடைய அந்த நாளிதழின் பொறுப்பை ஜிச்கர் ஏற்றுக் கொண்டது முதல் தொடங்கிய எங்களது நெருக்கம் அவரது அகால மரணம் வரை தொடர்ந்தது.
நரசிம்ம ராவின் நம்பிக்கைக்குரியவர்களில் ஸ்ரீகாந்த் ஜிச்கர் முக்கியமானவராக இருந்தார்.
2004இல் ஸ்ரீகாந்த் ஜிச்கர் கார் விபத்தில் உயிரிழந்தபோது சொந்த சகோதரர் மறைந்துவிட்டது போன்ற துக்கத்தில் நான் தேம்பித் தேம்பி இரவு முழுவதும் அழுததை வாழ்நாளில் எப்படி மறந்துவிட முடியும்?
மனைவி ராஜஸ்ரீயையும், இரண்டு குழந்தைகளையும் அநாதைகளாக்கிவிட்டு ஜிச்கர் மறைந்தபோது அவருக்கு வயது வெறும் 49. வானவில் வந்து போனதுபோல முடிந்துவிட்டது அவரது வாழ்க்கை. இப்படியோர் ஆளுமை இந்தியாவில் இருந்தார் என்பதை வருங்காலத்துக்குத் தெரிவிப்பதற்காகத்தான் இந்தப் பதிவு.
ஜிச்கருடனான எனது நெருக்கம்தான், பின்னால் நரசிம்ம ராவுடன் நான் நெருங்குவதற்குக் காரணமாக இருந்தது.
காரில் ஏறிக்கொள்ளச் சொன்னார். அவரது வீட்டை நோக்கிக் கார் நகர்ந்தது. பிரதமர் தேவே கெளடா நரசிம்ம ராவ் சந்திப்பின் பின்னணி என்ன என்று ஜிச்கரிடம் கேட்டேன். அவர் சொன்ன பதில் என்னைத் திடுக்கிட வைத்தது. அரசியல் பூகம்பம் வெடிக்கப் போகிறது என்பது எனக்குத் தெரிந்தது!
(தொடரும்)
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...