'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 151
By கி. வைத்தியநாதன் | Published On : 30th July 2023 12:00 AM | Last Updated : 30th July 2023 12:00 AM | அ+அ அ- |

ஜிச்கர் சொன்னதைக் கேட்டதும், அதை நம்ப முடியாமல், 'நிஜமாகவா?' என்று நான் திடுக்கிட்டுக் கேட்டேன். 'ஆமாம்' என்பதுபோல அவர் தலையசைத்தார்.
ஸ்ரீகாந்த் ஜிச்கரின் வீட்டுக்கு வந்து வரவேற்பறையில் அமர்ந்தபோது, நான்தான் பேச்சைத் தொடங்கினேன்.
'எதற்காக இப்படி ஒரு திடீர் முடிவை பி.வி. எடுக்க நினைக்கிறார்? பிரதமர் தேவே கெளடாவின் வற்புறுத்தல்தான் அதற்குக் காரணமா? இல்லை வேறு ஏதாவது இருக்கிறதா?'
'தனக்கெதிரான வழக்குகளில் பிரதமர் தேவே கெளடா தலையிடுவதை பி.வி. எப்போதுமே விரும்பியதில்லை. அதுகுறித்து இதுவரை அவர் ஒரு வார்த்தைகூடப் பேசியதில்லை என்று தேவே கெளடாவே என்னிடம் கூறியிருக்கிறார்.'
'வழக்குகளுக்காகப் பதவி விலகுவானேன்? அவர் பிரதமராகவோ, அமைச்சராகவோ இருந்திருந்தால் தார்மிகப் பொறுப்பேற்று பதவி விலகுவதில் நியாயம் இருக்கிறது. அவர் இப்போது ஆட்சி அதிகாரத்தில் இல்லை. கூட்டணியில் காங்கிரஸ் அங்கம் வகிக்கவும் இல்லை. அப்படி இருக்கும்போது, எதிர்க்கட்சித் தலைவராகவும், காங்கிரஸ் தலைவராகவும் இருக்கும் நரசிம்ம ராவ், பதவி விலக வேண்டிய அவசியம்தான் என்ன?'
'இந்தக் கேள்வியை நானும், பிட்டாவும் அவரிடம் பல தடவை கேட்டுவிட்டோம். ஆனாலும்கூட, அவர் பிடிவாதமாக இருப்பதாகத்தான் தெரிகிறது.'
'எதற்காகப் பிரதமர் திடீரென்று பி.வி.யை சந்திக்க இன்று நேரில் வந்தார்?'
'நான் இதைப்பற்றி அவரது உதவியாளர் ராம் காண்டேகரிடம் கேட்டபோது, அவர் குஜராத் பிரச்னை குறித்து விவாதிக்க வருவதாகத் தெரிவித்தார்.'
குஜராத்தில், முதல்வர் சுரேஷ் மேத்தா தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி அரசு அரசியல் சட்டத்தின் 356-ஆவது பிரிவின் கீழ் அகற்றப்பட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சி பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது. ஆறு மாத காலத்துக்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த முடிவெடுத்த அந்த அமைச்சரவைக் கூட்டத்தில் உள்துறை அமைச்சராக இருந்த இந்திரஜித் குப்தா கலந்துகொள்ளாதது கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானது. உள்துறை அமைச்சர் இல்லாமல் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தும் முடிவு எடுக்கப்பட்டது அந்த ஒரேயொரு முறைதான்.
தேவே கெளடா தலைமையில் ஐக்கிய முன்னணி அரசு பதவிக்கு வந்த ஆறு மாதம் முடிவடைவதற்குள், ஒரு மாநில அரசு சட்டப்பிரிவு 356 மூலம் கலைக்கப்படுவது பெரும் விவாதத்தை அப்போது கிளப்பியது. அரசமைப்புச் சட்டத்தின் 356-ஆவது பிரிவுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்ட இடதுசாரிகளும், மாநிலக் கட்சிகளும் ஆட்சி அதிகாரத்துக்கு வந்தவுடன், அதே சட்டப்பிரிவை பயன்படுத்தி தங்களது ஆட்சியைக் கலைத்திருக்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டை முன்வைத்தது பாரதிய ஜனதா கட்சி.
'தனது பதவியை ராஜிநாமா செய்வதற்கு, பி.வி.க்கு வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா?'
'நரசிம்ம ராவ்ஜி, நம்மைப் போன்றவர்களிடம் எல்லாம் எதையும் வெளிப்படையாகப் பேச மாட்டார் என்பது உங்களுக்குத்தான் தெரியுமே... எனக்குத் தெரிந்து, அவரது மனதில் என்ன இருக்கிறது என்பதைத் தெரிந்தும் புரிந்தும் வைத்திருப்பவர் ஒரே ஒருவர்தான்.'
'யார் அவர்?'
'வேறு யார்? பிரணாப் முகர்ஜிதான்.
பிரணாப் முகர்ஜியிடம் நீங்கள் பேசினால் அவர் இது குறித்து சொல்லக் கூடும். அப்படி ஏதாவது சொன்னால், தயவு செய்து அதை மறக்காமல் என்னிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்.'
'நீங்களே ஏன் பிரணாப்தாவிடம் இதுபற்றிக் கேட்கக் கூடாது?'
'நான் எம்.பி.யாக இருக்கலாம். ஆனால், பிரணாப்தா போன்ற தலைவர்களிடம் உங்களைப் போன்ற பத்திரிகையாளர்களுக்கு இருக்கும் நெருக்கம் எங்களுக்குக் கிடையாது. நான் கேட்டால் அது அதிகப்பிரசங்கித்தனம். நீங்கள் கேட்டால், அது தொழில் முறை தர்மம்...'
அதற்குப் பிறகு நான் அதிக நேரம் அங்கே இருக்கவில்லை. இருட்டி விட்டிருந்தது. இருந்தாலும், ஆட்டோ பிடித்து கிரேட்டர் கைலாஷில் இருந்த பிரணாப் முகர்ஜியின் வீட்டுக்கு விரைந்தேன்.
இரவு நேரத்தில்தான் பிரணாப்தா நெருக்கமானவர்களை சந்திப்பது வழக்கம். அதைப் 'பார்வையாளர்கள் நேரம்' என்றுகூடச் சொல்லலாம். விஸ்ராந்தையாகத் தனது பைப்பைப் புகைத்தபடி கிண்டலும் கேலியும் கலந்து அவர் உரையாடுவதை அப்போது பார்க்க முடியும்.
வழக்கத்துக்கு மாறாக, அன்றைக்குப் பார்வையாளர்கள் யாருமில்லை. உதவியாளர்களும் போயிருந்தனர். வாசலில் கூர்க்காவிடம் எனது வருகை குறித்து உள்ளே தெரிவிக்கும்படி கூறினேன். வீட்டு வேலைக்கு இருந்த பெண்மணி வெளியே வந்தார்.
இதற்கு முன்பும் என்னைப் பார்த்திருக்கிறார் என்பதால், அவர் என்னை வீட்டை ஒட்டியிருந்த அலுவலக அறைக்கு அழைத்துச் சென்றார். எனது முகவரி அட்டையை அவரிடம் கொடுத்தனுப்பினேன். உள்ளே வரச் சொன்னார் பிரணாப்தா.
வரவேற்பறையை ஒட்டி இருந்த அறையில் சோபாவில் அமர்ந்தபடி, எதையோ படித்துக் கொண்டிருந்தார் அவர். எதிரில் அமரும்படி சைகை காட்டினார், அமர்ந்தேன்.
'என்ன இந்த நேரத்தில்; இப்படி அவசரமாக?' என்பதுபோல புருவத்தை உயர்த்தியபடி என்னைப் பார்த்தார். நரசிம்ம ராவ் பதவி விலகப் போகிறார் என்று கேட்டது முதல் என்னைப் பரபரப்பு தொற்றிக் கொண்டதால், என்ன சொல்வது என்று தெரியாமல் சற்று பதற்றத்துடன் பேசத் தொடங்கினேன்.
'நரசிம்ம ராவ் பதவி விலகப் போகிறார் என்று கேள்விப்படுகிறேன், உண்மைதானா?'
'இதைத் தெரிந்து கொள்வதற்கா இந்த நேரத்தில் இங்கே தேடி வந்தாய்? உன்னிடம் அப்படி யார் சொன்னது?'
'பரவலாகப் பேசிக் கொள்கிறார்கள்...'
'யாரும் பேசிக் கொள்வதாக எனக்குத் தகவல் இல்லை. நீயாக ஏதாவது ஊகித்துக் கொண்டு வதந்திகளைப் பரப்பக் கூடாது...'
'நான் யாரிடமும் பேசவில்லை. சொல்லவும் இல்லை. ஆனால், நரசிம்ம ராவ்ஜி இந்த நேரத்தில் பதவி விலகுவது சரியல்ல என்று எனது மனதுக்குப்படுகிறது. அதனால்தான் உங்களிடம் கேட்க வந்தேன்...'
'கட்சி விவகாரங்களை எல்லாம் நான் விவாதிப்பது இல்லை என்று உனக்கு நன்றாகத் தெரியும். தமிழ்நாட்டு அரசியல் பற்றிப் பேசுவோம்...'
நரசிம்ம ராவ் குறித்த பேச்சுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். அடுத்த பத்து நிமிடங்கள் தமிழ்நாடு அரசியல் பற்றிப் பேசினோம். நான் கிளம்ப எத்தனித்தேன். விடை பெறும்போது அவர் சொன்னார் -
'கருணாகரன்ஜியையும், ராஜேஷ் பைலட்டையும் சந்தித்து, அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டு, நாளைக்கு மோதிலால் மார்க் (நரசிம்ம ராவின் வீடு) வா, அங்கே சந்திப்போம்...'
நான் வெளியே வந்துவிட்டேன். எனக்கு வேலை தந்திருக்கிறார் என்பதும், மோதிலால் மார்க்கில் சந்திப்போம் என்பதிலிருந்து அவரது நம்பிக்கை வட்டத்தில் தொடர்கிறேன் என்பதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்தது.
அதிகாலையில் எழுந்து விடுவார் கருணாகரன். எட்டு மணிக்கு நான் அங்கே சென்றபோது, ஏற்கெனவே பலர் அவரை சந்திக்கக் காத்திருந்தனர். பெரும்பாலும் கேரள மாநிலத்தவர்கள். அதிலும் குறிப்பாகக் கருணாகரன் ஆதரவாளர்கள்.
நடைப் பயிற்சி, நாளிதழ்களைப் பார்ப்பது, குளியல், பூஜை, சிற்றுண்டி அருந்துதல் எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு பார்வையாளர்களைப் பார்ப்பதில் மும்முரமாக இருந்தார் அவர். நான் வெளியே காத்திருந்தேன். கதவு திறந்து, திரைச்சீலை விலகினால் அவரது கண்ணில் படும்படியாகச் சென்று அமர்ந்து கொண்டேன்.
சிறிது நேரத்தில் நான் எதிர்பார்த்த வாய்ப்பு அமைந்தது. என்னைப் பார்த்துவிட்டார் அவர். 'ஹாா..., அகத்தேக்கு வரு...' (உள்ளே வாருங்கள்) என்று அழைத்தார். அவரது சோபாவுக்கு எதிரே போடப்பட்டிருந்த நாற்காலிகள் ஒன்றில் நானும் அமர்ந்து கொண்டேன்.
'பி.வி. கேம்பில் என்ன நடக்கிறது, அவர் ராஜிநாமா செய்யப் போகிறாரா இல்லையா?'
'எனக்குத் தெரியாது. நீங்கள் ஏதாவது தகவல் சொல்வீர்கள் என்றுதான் உங்களிடம் வந்திருக்கிறேன்.'
'பிரணாப் முகர்ஜி உங்களிடம் எதுவும் சொல்லவில்லையா? அவர் ஏன் ஒதுங்குகிறார்?'
'அது எனக்குத் தெரியாது. கட்சி விஷயங்களை அவர் என்னிடம் பேசுவதில்லை.'
'ராஜீவ்ஜியின் மரணத்துக்குப் பிறகு நரசிம்ம ராவை கட்சித் தலைவராகவும், பிரதமராகவும் ஆக்க பிரணாப், நான், ஜி.கே.மூப்பனார் மூன்று பேரும்தான் காரணம். மூப்பனார் இப்போது கட்சியில் இல்லை. நரசிம்ம ராவுக்கு பதிலாகப் பிரணாப் தலைவராக இருந்தால் அவரை ஆதரிக்க நான் தயார். நான் மட்டுமல்ல, எல்லா கோஷ்டியினரும் ஏற்றுக் கொள்வார்கள்...'
'எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள் சரி... சோனியாஜி ஏற்றுக் கொள்வாரா?'
'ஹாô... அது நல்ல கேள்வி. அவர் பிரணாபை ஏற்றுக் கொள்ளத் தயங்குவார்.'
'உங்களுக்குக் காங்கிரஸ் தலைவர் பதவியில் நாட்டமிருக்கிறதா?'
'திமுக தலைவர் கருணாநிதி சொன்ன அதே பதில்தான் என்னுடையதும் - எனது உயரம் எனக்குத் தெரியும். தேசிய அரசியலில் பங்களிப்பதுடன் எனது வேலை முடிந்தது. கேரள அரசியல்தான் எனக்கு இஷ்டம்.'
'நரசிம்ம ராவ் பதவி விலக வேண்டும் என்று நினைக்கிறீர்களா?'
'நிச்சயமாக அவர் விலக வேண்டும். அவர் விலகாவிட்டால், காங்கிரஸிலிருந்து மக்கள் விலகி விடுவார்கள். தலைமை மாற்றத்தின் மூலம்தான் கட்சியைக் காப்பாற்ற முடியும் என்று நான் நம்புகிறேன்.'
கே. கருணாகரனின் சுநேரிபாக் சாலை வீட்டிலிருந்து, ராஜேஷ் பைலட்டின் 10, அக்பர் ரோடு இல்லம் நடந்து போகும் தூரம்தான். அங்கே சென்றபோது, அவர் அவசரமாகத் தனது தெளசா தொகுதியில் ஒரு நிகழ்ச்சிக்குக் கிளம்பிக் கொண்டிருந்தார். அதனால் அதிகம் பேச முடியவில்லை.
ஒரு சில நிமிடங்கள் பேசியதிலிருந்து, கட்சித் தலைவர் பதவிக்கான போட்டியில் களமிறங்க அவர் தயாராகி இருப்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தது. நரசிம்ம ராவ் விலகினால் களமிறங்க சீதாராம் கேசரியும், ஏ.கே. அந்தோணியும் தயாராக இருப்பதாக அவர் என்னிடம் தெரிவித்தார். அவர் கிளம்பியதும், நானும் அங்கிருந்து கிளம்பி விட்டேன்.
அக்பர் ரோடு காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்த 'சாகர் ரத்னா' ஹோட்டலில் மதிய உணவை முடித்துக் கொண்டு வெளியே வந்தபோது, ஸ்ரீகாந்த் ஜிச்கரும், வசந்த் சாத்தேயும் தலைமையகக் கட்டடத்துக்குள் பேசிக்கொண்டே நுழைவது தெரிந்தது. நான் தேடிப்போனபோது அவர்கள் ஆர்.கே. தாவனின் அறையில் அவருடன் பேசிக் கொண்டிருந்தனர்.
சற்று நேரத்தில் வசந்த் சாத்தே கிளம்பிப் போய்விட்டார். ஜிச்கரும், ஆர்.கே. தாவனும் தெரிந்தவர்கள் என்றாலும், அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது அறைக்குள் நுழைவது மரியாதையல்ல என்பதால் நான் வெளியே காத்திருந்தேன். அரை மணி நேரத்துக்குப் பிறகுதான் ஜிச்கர் வெளியே வந்தார்.
சாகர் ரத்னாவுக்கு உணவு அருந்த வந்ததையும், உள்ளே நுழைவதைப் பார்த்ததும் காத்திருந்ததையும் கூறினேன். என்னையும் காரில் ஏறிக் கொள்ளச் சொன்னார். நரசிம்ம ராவின் வீட்டை நோக்கிக் கார் நகர்ந்தது.
பிரணாப்தாவை சந்தித்தது மட்டுமல்லாமல், கருணாகரன், ராஜேஷ் பைலட் சந்திப்புகள் குறித்தும் அவரிடம் பகிர்ந்து கொண்டேன். எங்கள் கார் 9, மோதிலால் நேரு மார்க் வீட்டு கேட்டுக்குள் நுழைந்து கொண்டிருந்தது.
'நரசிம்ம ராவ்ஜியை ராஜிநாமா செய்யாமல் தடுக்க இரண்டு பேரால்தான் முடியும்' - தீர்க்கமாகச் சொன்னார் ஸ்ரீகாந்த் ஜிச்கர்.
'யார் அந்த இரண்டு பேர்?'
'ஒருவர் பிரணாப் முகர்ஜி...'
'இன்னொருவர்?'
(தொடரும்)
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...