ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: தலையில் புண், பொடுகு குணமாக..?

என் வயது 80. உடல் சூட்டினால் தலையில் புண்ணும் பொடுகும் உள்ளன. வாய்ப்புண் உள்ளது.
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: தலையில் புண், பொடுகு குணமாக..?

என் வயது 80. உடல் சூட்டினால் தலையில் புண்ணும் பொடுகும் உள்ளன. வாய்ப்புண் உள்ளது. உஷ்ணத்தால் கண் பொங்குகிறது. இவை குணமாக மருந்து உள்ளதா? என்ன உணவு எடுத்துகொள்வது நல்லது?

வரதராஜன்,
மேற்கு மாம்பலம், சென்னை.

வாதபித்த கபம் என திரிதோஷங்கள் தம் பிடியினுள் மனித உடலை வைத்துகொண்டு, சீற்றம் ஏற்பட்டால் உபாதையையும், குறைந்து போனால் தம் செயல்களை மந்தமாக்கிவிடுவததையும் சீரான நிலையில் ஆரோக்கியத்தையும் தருகின்றன.

வாத கப தோஷங்களில் காணப்படாத சூடு எனும் உஷ்ணத்தை பித்த தோஷம் மட்டுமே பெற்றிருப்பதால், அதனுடைய குணங்களாகிய சிறிது நெய்ப்பு ஊடுருவும் தன்மை சூடு லேசு துர்நாற்றம், ஒழுகிஓடும் தன்மை நீர்த்தது ஆகியவை உங்களுடைய உடலில் ஏற்றம் அடைந்திருப்பதையே காட்டுகிறது.

பொதுவாக, வயோதிகத்தில் வாத தோஷத்தினுடைய தாக்கமே அதிகம் காணப்படும். உங்களுடைய இந்த விபரீதமான, அபரிதமான பித்த சீற்றத்துக்குக் காரணமாக வம்ச பரம்பரை, தொழில், குடும்ப சூழ்நிலை போன்றவற்றை முன்நிறுத்தலாம்.

குடலை சுத்தம் செய்யும் முறைகளில் பேதியும், பித்த சீற்றத்தை அடக்குவதில் பசு நெய்யும் சிறந்தவை என அஷ்டாங்கஹிருதயம் எனும் ஆயுர்வேத நூல் கூறுகிறது. பேதி மூலம் பித்த சீற்றத்தை வெளிப்படுத்த நினைத்தால், தங்களுடைய வயோதிகம் அந்தச் சிகிச்சையைத் தாங்கிக் கொள்ளுமா? என்ற சந்தேகம் எழுகிறது. ஆனாலும், உபாதையை தோற்றுவிக்கும் தோஷங்களை அடக்குவதைக் காட்டிலும் வெளியேற்றிவிடுவதே சாலச் சிறந்தது எனும் ஆயுர்வேத கூற்றையும் நாம் மறுக்க இயலாது என்பதால், சுகமான இதமான கழிச்சலை ஏற்படுத்தி, தங்களுடைய பலவீனம் ஏற்படாத வகையில் தோஷத்தை வெளியேற்ற வேண்டும். அந்த வகையில் அவிபத்திசூரணம், திரிவிருத்லேஹ்யம், கல்யாண குலம் எனும் லேஹியம் போன்றவற்றில் ஒன்றை ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனையின்படி தேர்ந்தெடுத்துச் சாப்பிட நல்லது.

சுகமான கழிச்சலின் மூலம் பித்தத்தை வெளியேற்றிவிட்டாலும், அதற்கான தகுந்த காரணத்தை உணவு மற்றும் செயல் மூலமாகப் பெற்றுவிட்டால், பித்தம் மறுபடியும் சூடேறத் தொடங்கும். அதனால் கழிச்சலுக்குப் பிறகு, டீ, காபி சாப்பிடுவது, மசாலா பொருட்கள், புளி, காரம், உப்புச்சுவை, புலால் உணவு, புளித்த தயிர் போன்ற உணவுகளை நிறுத்தி, மாறாக இனிப்பு, கசப்பு, துவர்ப்புச் சுவையை அதிகம் உணவில் சேர்ப்பதையும், விசனப்படாத நிம்மதியான வாழ்க்கையைக் கைகொள்வதையும் நீங்கள் பழக்கமாக்கிக் கொள்ளவும்.

அதிக கோபம், நிதானமின்மை, பதட்டம், எதிலும் அவசரம், பகல் தூக்கம் (உணவு உண்ட பிறகு) ஆகிய செயல்களால் பித்த சீற்றம் ஏற்படும்.

நீர்க்காய்களாகிய வெள்ளரிக்காய், புடலங்காய், சுரைக்காய், பீர்க்கங்காய், பூசணிக்காய் போன்றவை சாப்பிட நல்லது. இனிப்பு திராட்சை, வாழைப்பழம், ஆப்பிள் பழம், கொய்யாப் பழம், பலாப்பழம், ப்ளம்ப்ஸ், பேரிக்காய், சீதாபழம், குளிர்ச்சி தரக் கூடியவை. புளிப்பான எலுமிச்சை, ஆரஞ்சு பழம், மாதுளை ஆகியவை சிறிது காலம் நிறுத்திவைக்கலாம்.

தேங்காயும், அதிலுள்ள இளநீரும் சாப்பிட உகந்தவை. இயற்கை அன்னை அளித்திருக்கக் கூடிய பால், பால் பொருள்கள் சாப்பிட உகந்தவை.

ஆறிய பாலில் தேன் கலந்து வாய் கொப்பளிக்க வாய்ப்புண் ஆறிவிடும். தூர்வாதிதைலத்தைத் தலைக்குத் தேய்த்துக் குளிக்க, புண்ணும், பொடுகும் குறையும், திரிபலை சூரணத்தை இரவு படுக்கும் முன் சிறிது தேன், நெய் குழைத்துச் சாப்பிட, கண்பொங்கும். உபாதை குணமாகும். வாஸாகுடூச்யாதி கஷாயம், திராக்ஷôதி கஷாயம், திக்தகம், மஹாதிக்தகம் எனும் நெய் மருந்துகள் பித்த உபாதையை நன்கு கண்டிக்கக் கூடியவை.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com