'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 143

விமானத்தைத் தவறவிடுவது, ரயிலை தவறவிடுவது என்பது இப்போதல்ல, நினைவு தெரிந்த நாளிலிருந்தே என்னிலிருந்து பிரிக்க முடியாதவை.
'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 143
Updated on
4 min read

விமானத்தைத் தவறவிடுவது, ரயிலை தவறவிடுவது என்பது இப்போதல்ல, நினைவு தெரிந்த நாளிலிருந்தே என்னிலிருந்து பிரிக்க முடியாதவை. விமானத்தைத் தவறவிட்டுவிட்டு ரயிலில் பயணிப்பதும், ரயிலைத் தவறவிட்டுவிட்டு காரில் பயணிப்பதும் எனக்குப் புதிதொன்றுமல்ல.

சென்னைக்கு விமானத்தில் டிக்கெட் போட்டிருந்தேன் என்றாலும், குறித்த நேரத்துக்கு விமான நிலையத்தை அடைய முடியவில்லை. சரி, இனி அடுத்தது என்ன என்று யோசிக்காமல் ரயிலில் கிளம்புவது என்று முடிவெடுத்து, புதுதில்லி ரயில் நிலையத்தில் சென்னைக்குச் செல்லும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸூக்கு டிக்கெட் எடுத்துக் கொண்டு அலுவலகம் வந்தேன். 

இப்போதுபோல இணைய வழிப் பதிவுகள் எல்லாம் அப்போது கிடையாது. ரயில் நிலையத்துக்குச் சென்றுதான் பயணப் பதிவு செய்தாக வேண்டும்.

ராம் விலாஸ் பாஸ்வான் ரயில்வே அமைச்சராக இருந்ததால், அவசர ஒதுக்கீட்டில் இடம் பிடித்துவிடலாம் என்கிற நம்பிக்கைதான் காரணம். எனது நம்பிக்கை பொய்க்கவில்லை. அமைச்சரக ஒதுக்கீட்டில் இடம் கிடைத்தது. 

இரண்டு இரவுகள், ஒரு பகல் பயணம். பயணத்தின்போது முன்புபோல, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் யாரும் பயணிக்கவில்லை. அவர்கள் விமானத்தில் பறக்கத் தொடங்கிவிட்டனர். முன்னாள் எம்.பி.க்கள்தான் ரயிலில் பயணம் செய்கிறார்கள் என்று பணியில் இருந்த டிக்கெட் பரிசோதகர் தெரிவித்தார்.

1996 பொதுத் தேர்தலுக்குப் பிறகு தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததைத் தொடர்ந்து பல நிகழ்வுகள் அதிவேகமாக நடந்திருக்கின்றன. அந்த பரபரப்பான கட்டத்தில், சென்னையில் இல்லாமல் தில்லியில் இருந்தது பத்திரிகையாளரான எனக்கு இழப்புதான். ஒரே நேரத்தில் இரண்டு இடங்களிலும் இருக்க முடியாது என்பதால், தில்லிக்கு முன்னுரிமை அளித்தேன் எனலாம்.

ரயில் பயணத்தின்போது, தமிழகத்தில் அரங்கேறி இருந்த நிகழ்வுகள், ஜன்னல் வழியே பார்த்தால் மரங்கள் பின்னோக்கி ஓடுவதுபோல, மனத் திரையில் ஓடத் தொடங்கின. திமுக ஆட்சி அமைந்தது முதலே, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மீது மட்டுமல்லாமல், அவரது அதிமுக அமைச்சரவையில் இருந்த பல அமைச்சர்கள் மீதும் விசாரணைகளும், வழக்குகளும், சோதனைகளும், கைதுகளும் பாயத் தொடங்கின.

முதலாவதாகக் கைது செய்யப்பட்டவர் முன்னாள் வருவாய்த் துறை அமைச்சரான எஸ்.டி. சோமசுந்தரம். அவரது கைதுக்கும் தமிழக அரசுக்கும் தொடர்பில்லை. வழக்குரைஞர் விஜயனைத் தாக்கிய வழக்கில் சிபிஐ விசாரணைக்குப் பிறகு அவர் கைது செய்யப்பட்டார். அதில் தொடங்கிய கைதுப் படலம், ஜெயலலிதாவின் கைது வரை தொடர்ந்த வண்ணம் இருந்தது. 

எஸ்.டி.எஸ்.இன் கைது நடந்து பத்து நாள்கூட ஆகவில்லை, சசிகலா அமலாக்கப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டார். பத்து மணிநேர விசாரணைக்குப் பிறகு அவர் கைது செய்யப்பட்டார். ஜெ.ஜெ. தொலைக்காட்சிக்காக வெளிநாட்டு நிறுவனத்துக்கு ரிசர்வ் வங்கியின் அனுமதி இல்லாமல் எட்டு லட்சம் டாலர் கொடுத்ததுதான் வழக்கு.

அந்த வழக்கு விசாரணைக்கு சசிகலா வந்தபோது, புகைப்படக்காரர் ஒருவரைத் தாக்கினார் என்கிற குற்றச்சாட்டில் அவரது கணவர் ம. நடராசன் மீதும் வழக்குத் தொடரப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தார். சசிகலா சென்னை மத்திய சிறையில் என்றால், ம. நடராசன் வேலூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார்.

மத்திய சிறைச்சாலைக்குச் சென்று தனது தோழி சசிகலாவை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சந்தித்தது அன்றைய நாளிதழ்களில் தலைப்புச் செய்தியாக வந்திருந்தது நினைவுக்கு வந்தது. அவர்களது உணர்ச்சிப்பூர்வமான சந்திப்பும், ஜெயலலிதாவைப் பார்த்ததும் தனது உணர்ச்சியைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் சசிகலா அழுததும், அவர்களுடன் இருந்த காவலர் சொல்லிக் கேள்விப்பட்டேன்.

வேட்டி  சேலை வாங்கியதில் ரூ. 18 கோடி முறைகேடு நடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி கைது; கு.ப. கிருஷ்ணன் வீட்டில் வருமான வரி சோதனை; சேடப்பட்டி முத்தையா, வ.சத்தியமூர்த்தி, எஸ்.ரகுபதி  ஆகியோர் வீட்டில் சோதனை; செல்வகணபதி கைது என்று ஊழலுக்கு எதிரான மிகப் பெரிய யுத்தமே நடத்தப்பட்டது. பிற்காலத்தில் அவர்களில் பலரும் திமுகவில் இணைந்து அமைச்சர்கள் ஆயினர் என்பது வேடிக்கையான திருப்பம்.

ஒருபுறம் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ந்தன என்றால், இன்னொரு பக்கம் ஜெயலலிதாவுக்கும், அவரது தலைமைக்கும் எதிராக தலைவர்கள் பலர் போர்க்கொடி தூக்க முற்பட்டிருந்தனர். ஜெயலலிதாவை விமர்சித்து எஸ்.டி. சோமசுந்தரம் எழுதிய கடிதமும், முதல்வர் ஜெயலலிதா சொல்லித்தான் வேட்டி  சேலை வாங்கியதில் தான் முறைகேட்டில் ஈடுபட்டதாக இந்திரகுமாரி வெளியிட்ட அறிக்கையும் பிளவை நோக்கி அதிமுக நகர்வது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தின.

தடாலடியாக எஸ்.டி. சோமசுந்தரம், எஸ். கண்ணப்பன், செ. அரங்கநாயகம், குழந்தைவேலு ஆகியோரைக் கட்சியிலிருந்து நீக்குவதாக ஜெயலலிதாவின் அறிக்கை வந்தது. குழந்தைவேலு அப்போது நாடாளுமன்ற உறுப்பினராக இல்லை என்றாலும் மாநிலங்களவையில் பிளவு ஏற்படுத்த அவர் முயன்று வந்தது எனக்குத் தெரியும். அதனால், அவர் அகற்றப்பட்டது என்னை வியப்படையச் செய்யவில்லை.

அதிமுகவில் துணைப் பொதுச் செயலாளராக இருந்த எஸ். முத்துசாமியைக் கட்சியிலிருந்து விலக்குவதாக அறிவிப்பு வந்ததை யாருமே எதிர்பார்க்கவில்லை. அவர் திமுகவுடன் தொடர்பில் இருந்தார் என்பதுதான் ஜெயலலிதா முன்வைத்த குற்றச்சாட்டு. ஜெயலலிதா சந்தேகித்தது போலவே அவர் பின்னாளில் திமுகவில் இணைந்தார். 

முத்துசாமியைக் கட்சியிலிருந்து விலக்கிய பிறகு, ஜெயலலிதா ஒரு தன்னிலை விளக்க அறிக்கையை வெளியிட்டார். தேர்தல் தோல்விக்குத் தான் முழுப் பொறுப்பையும் ஏற்பதாகவும், தேர்தல் தோல்வியைக் காரணமாக்கிக் கட்சியில் பிளவை ஏற்படுத்த மூத்த தலைவர்கள் சிலரை கருணாநிதி தூண்டுவதாகவும் குற்றம்சாட்டியிருந்தார் அவர்.

ஜெயலலிதாவின் சந்தேகம் அடுத்த சில நாள்களிலேயே ஊர்ஜிதமானது. முத்துசாமியைப் பொதுச் செயலாளராக அறிவித்து, போட்டி அதிமுக உருவாக்கப்பட்டது. அந்த சூழலில்தான் நான் சென்னை திரும்பிக் கொண்டிருந்தேன்.

ஜெயலலிதா மீதும் அவரது அமைச்சரவை சகாக்கள் மீதும் விசாரணை, சோதனை என்று திமுக முடுக்கிவிட்டிருந்ததுபோல, தேவே கெளடா அரசும் முந்தைய நரசிம்ம ராவ் அரசில் இருந்த பல அமைச்சர்கள் மீது விசாரணையும், வழக்கும் தொடுத்த வண்ணம் இருந்தது என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும். முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் மீதான வழக்குகள் மட்டுமல்லாமல், மேலும் பலரும் விசாரணை வளையத்துக்குள் கொண்டவரப்பட்டனர்.

சோனியா காந்திக்கும், நேரு குடும்பத்துக்கும் மிகவும் நெருக்கமானவர் என்று கருதப்பட்டவர் ஷீலா கெளல். நரசிம்ம ராவ் அரசில் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்த ஷீலா கெளல், அவரது உதவியாளர் துங்கன் ஆகியோர் வீடுகளில் சிபிஐ சோதனை நடத்தி அவர்கள் மீது வழக்கு தொடுத்தது. தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் சுக்ராம் மீதான வழக்கு பல ஆண்டுகள் நடந்து அவர் சிறைத்தண்டனை பெற்றார்.

சென்னை திரும்பியவுடன் முதல் வேலையாகப் பிரணாப் முகர்ஜி அனுப்பியிருந்த கடிதத்தைச் சேர்ப்பித்தாக வேண்டும் என்கிற கட்டாயம் இருந்தது. தொலைபேசியில் அழைத்து சந்திக்க நேரம் ஒதுக்கும்படி கோரிக்கை வைத்தேன். மாலையில் சந்திக்க வரும்படி தகவல் வந்தது.

குறித்த நேரத்தில் நான் கிண்டி ஆளுநர் மாளிகையில் இருந்தேன். ஏனைய அதிகாரபூர்வ விருந்தினர்களைச் சந்திப்பது போலல்லாமல், என்னை வசிக்கும் பகுதிக்கு அழைத்துவரப் பணித்திருந்தார் ஆளுநர் சென்னா ரெட்டி.

அவரிடம் பிரணாப் முகர்ஜி தந்தனுப்பி இருந்த கவரை நீட்டினேன். 

''என்ன இது, எனக்கு ஏதாவது மனு தருகிறாயா, இல்லை உதவி கேட்கிறாயா?''

''இரண்டுமே இல்லை. பிரணாப் முகர்ஜி இந்தக் கடிதத்தை உங்களிடம் நேரில் கொண்டுபோய்த் தரச் சொன்னார்.''

அந்தக் கவரை வாங்கிப் பிரித்தார். கடிதத்தை எடுத்துப் படித்தார்.

''அந்தக் கடிதத்தில் என்ன எழுதியிருக்கிறார்?''

''அது உங்களுக்குத் தெரியலாம் என்றால் அவர் ஏன் கடிதம் எழுத வேண்டும்.  உங்களிடம் சொல்லி அனுப்பி இருக்கலாமே!  உங்கள் மூலம் நடத்திக் கொள்ள வேண்டிய வேலையை எனக்குத் தருகிறார் பிரணாப், அவருக்காக நான் செய்தாக வேண்டும்.''

தமிழகத்தில் ஜெயலலிதா, சசிகலா மட்டுமல்லாமல், பல அமைச்சர்கள் மீதும் தொடரப்பட்டுவரும் வழக்குகள் குறித்து ஆளுநர் சென்னா ரெட்டியிடம் கேட்டேன்.

''ஆட்சி அதிகாரம் கிடைத்துவிட்டால் அது நிரந்தரமானது என்று சிலர் நினைத்து விடுகிறார்கள். எங்களைப்போல அடிமட்டத்தில் இருந்து வளர்ந்த அரசியல்வாதிகளுக்கு அளவு தெரியும். அளவுக்கு அதிகமான ஆணவம், தேவையில்லாமல் சண்டை பிடித்துக் கொள்வது போன்றவை அதிகார போதையின் அடையாளங்கள், அவற்றின் விளைவுகளைத்தான் ஜெயலலிதாஜி சந்திக்கிறார்.''

''ஜெயலலிதா கைது செய்யப்படுவாரா?''

''அதை நீங்கள் முதல்வர் கருணாநிதியிடமோ,  மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்திடமோதான் கேட்க வேண்டும். ஜெயலலிதாவைக் கைது செய்ய வேண்டும் என்பதில் அவர்கள் இரண்டு பேரும்தான் முனைப்பாக இருக்கிறார்கள்.''

''உங்களுக்கும்கூடத்தான் அதில் பங்கு உண்டு. ஜெயலலிதா உங்களையும்தான் அவமதித்திருக்கிறார்...''

''என்னை விடுங்கள், அவர் யாரைத்தான் விட்டு வைத்தார்? திடீரென்று முதல்வர் பதவி, அதிகாரம் எல்லாம் கிடைத்தபோது அவருக்குத் தலைகால் புரியவில்லை. அமைச்சர்களும் அவரைத் திருப்திப்படுத்த நிறைய லஞ்சம் வாங்கிய பணத்தைக் கொண்டுபோய்க் கொடுத்தனர். என்னைப் போன்ற அனுபவசாலிகளை அவர் எதிரியாகப் பார்த்தார். என்னிடம் ஆலோசனைகள் கேட்டிருந்தால், அவர் இப்படிப்பட்ட சிக்கல்களில் மாட்டிக் கொண்டிருக்க மாட்டார்.''

என்னிடம் பேசிக் கொண்டே அவரிடம் நான் கொடுத்த பிரணாப் முகர்ஜியின் கடிதத்தையும், கவரையும் சாவகாசமாக சுக்கு நூறாகக் கிழித்துக் கொண்டிருந்தார் அவர். அதை அருகிலிருந்த குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு, மீண்டும் என்னிடம் பேசத் தொடங்கினார்.

''நீங்கள் சோ ராமசாமியைப் பார்த்து, நான் அவரை சந்திக்க விரும்புவதாகத் தகவல் தெரிவிக்கவும். நாளைக்கே அவர் வந்தால் நன்றாக இருக்கும். நாளை மறுநாள் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் பிரதமர் தேவே கெளடா சென்னை வருகிறார். அதற்கு முன்னர் எங்கள் சந்திப்பு நிகழ வேண்டும் என்று நான் விரும்புவதாக சோவிடம் தெரிவியுங்கள்'' என்றார் ஆளுநர் சென்னா ரெட்டி.

பிரணாப் முகர்ஜியின் கடிதத்துக்கும், பிரதமரின் சென்னை விஜயத்துக்கும், சோ சாருக்கும் என்னதான் தொடர்பு இருக்க முடியும்? புரியவில்லை.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com