'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 145
By கி. வைத்தியநாதன் | Published On : 18th June 2023 12:00 AM | Last Updated : 18th June 2023 12:00 AM | அ+அ அ- |

நான் அவர்களை நெருங்குவதற்குள், ஆளுநர் சென்னா ரெட்டியும் மற்றவர்களும் விமான நிலையத்துக்குள் நுழைந்துவிட்டனர். உள்ளே போவதற்கு அனுமதி பெறாததால், நான் வெளியே நின்றுவிட்டேன்.
வேறு ஏதோ காரணத்துக்காகத் திரும்பிய ஆளுநரின் ஏ.டி.சி. என்னைப் பார்த்துவிட்டார். அவர் ஆளுநரை நெருங்கித் தகவல் சொல்ல, அவர் திரும்பிப் பார்த்தார். உள்ளே வரும்படி சைகை செய்தார்.
அழைத்தது ஆளுநர் என்பதால், பாதுகாப்பு அதிகாரிகள் சோதனைக்குப் பிறகு என்னை உள்ளே அனுமதித்தனர். 'சீர்பெருமக்கள் ஓய்வு அறை' என்கிற தகவல் பலகையுடன் அமைந்த வி.ஐ.பி. லெளஞ்சில் இருந்த ஆளுநர் சென்னா ரெட்டியிடம் அழைத்துச் செல்லப்பட்டேன்.
அன்றைய சென்னை விமான நிலையத்தை இன்றைய விமான நிலையத்துடன் ஒப்பிடும்போது, பிரமிப்பாக இருக்கிறது. கைத்தடியை உருட்டியபடி சோபாவில் அமர்ந்திருந்த ஆளுநர் சென்னா ரெட்டி ஹைதராபாத் செல்வதாகத் தெரிவித்தார்.
''இங்கே விமான நிலையத்தில் யாரை சந்திக்க வந்திருக்கிறீர்கள்? வெளியூரிலிருந்து வருகிறீர்களா?''
நான் கபில் சிபிலை வழியனுப்ப வந்ததைச் சொன்னதும் புன்னகைத்தார்.
''கபில் சிபிலா, யார் வந்தாலும் ஜெயலலிதா கைதாவதைத் தடுக்க முடியாது. வருமான வரித் துறை, அமலாக்கத் துறை, சிபிஐ என்று எல்லா அமைப்புகளும் அவரைக் குறி வைத்திருக்கின்றன. வழக்குப் பதிவு செய்வதற்கு முன்னர் விசாரணைக்கு அழைப்பார்கள், கைது செய்வார்கள். அதை எப்படித் தடுக்க முடியும்?''
''கபில் சிபிலும் அதைத்தான் சொல்கிறார். இப்போதைக்குத் தடைதான் வாங்கிக் கொடுக்க முடிந்தது, கைதைத் தடுக்க முடியாது என்று கூறினார். ஜெயலலிதாவும் கைதுக்குத் தயாராக இருப்பதாக அவரிடம் தெரிவித்தாராம்.''
''மத்திய அரசைப் பகைத்துக் கொள்ள வேண்டாம் என்று பல தடவை எச்சரித்தேன். என்னையே எதிரியாகப் பார்க்கத் தொடங்கிவிட்டார்.''
''சசிகலாவுடனான தொடர்பை முற்றிலுமாகத் துண்டித்துக் கொள்வதாக அறிக்கை விட்டிருக்கிறார். அதனால் ஏதாவது பயனளிக்குமா?''
''எனக்கு எப்படித் தெரியும்? பிரணாப் முகர்ஜியிடமும், 'சோ' ராமசாமியிடமும் கேட்க வேண்டிய கேள்வியை என்னிடம் நீங்கள் கேட்கிறீர்கள். நீங்கள் கொண்டுவந்த கடிதத்தில் என்ன இருக்கிறது என்கிற உங்களது கேள்விக்கு இப்போது பதில் கிடைத்திருக்குமே...''
அவரும் சிரித்தார். நானும் சிரித்தேன்.
''தில்லிக்கு எப்போது கிளம்புகிறீர்கள்?''
''இங்கேதான் பரபரப்பாக இருக்கிறது. தில்லியில் எனக்கென்ன வேலை?''
''நரசிம்ம ராவின் நிலைமையும் ஜெயலலிதாவைப் போலத்தான். அவர் கைது செய்யப்படமாட்டார் என்று நினைக்கிறேன். ஆனால், நிச்சயமாக வழக்கு, விசாரணை என்று அலைக்கழிக்கப்படுவார். நீங்கள் பிரணாப் முகர்ஜியைப் பார்த்தால், நான் சொன்னதாக அவரிடம் ஒரு செய்தியைச் சொல்லுங்கள். நரசிம்ம ராவ் பதவி விலகி, அவரிடம் காங்கிரஸின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளச் சொன்னால் தயங்காமல் ஏற்றுக் கொள்ளச் சொல்லுங்கள். இல்லையென்றால், பிரதமராகும் வாய்ப்பை அவர் நிரந்தரமாக நழுவ விடுகிறார் என்று நான் சொன்னதாகத் தெரிவியுங்கள்.''
சரி' என்று தலையாட்டினேன். இப்போது நினைத்துப் பார்த்தால், சென்னா ரெட்டியின் அரசியல் அனுபவம் வியக்க வைக்கிறது. அவர் எதிர்பார்த்தது போலத்தான் நடந்தது.
மத்திய அமைச்சர்கள் என்.வி.என். சோமு, எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட விஐபிக்கள் அறைக்குள் வந்தவுடன், ஆளுநர் சென்னா ரெட்டியிடம் விடைபெற்றுக் கொண்டு நான் விமாநிலையத்திலிருந்து கிளம்பினேன்.
ஒருபுறம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா அவரது உறவினர்கள் மத்திய அரசு அமைப்புகளின் பல்வேறு வழக்குகளை எதிர்கொண்டார்கள் என்றால், போட்டி அதிமுகவினர் மாநில லஞ்ச ஒழிப்புத் துறையால் தொடர்ந்து சோதனைகளுக்கு உள்ளானார்கள்.இலவச வேஷ்டி, சேலை திட்டத்தில் ஆர். இந்திரகுமாரி; வருமான வரித்துறை சோதனையின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறையால் கு.ப. கிருஷ்ணன்; ஜவஹர் வேலைவாய்ப்புத் திட்ட முறைகேடு குறித்த சிபிஐ விசாரணையைத் தொடர்ந்து மாநில அரசால் டி.எம்.செல்வகணபதி; போக்குவரத்துத் துறை ஊழல் விவகாரத்தில் கே.ஏ. செங்கோட்டையன் என்று வரிசையாக ஒருவர் பின் ஒருவராக வழக்குகளில் சிக்கினர்.
நிலக்கரி இறக்குமதி ஊழல் வழக்கில் எஸ். கண்ணப்பன் மீது வழக்குத் தொடரப்பட்டது; சேடப்பட்டி முத்தையா, பரமசிவன், வ. சத்தியமூர்த்தி வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைகள்; எஸ். முத்துசாமி, செ. அரங்கநாயகம் ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தயாராகிக் கொண்டிருந்தது இப்படி ஜெயலலிதா அமைச்சரவையில் இருந்த பெரும்பாலான அமைச்சர்கள் மீது மத்திய புலனாய்வுத் துறையும், மாநில லஞ்ச ஒழிப்புத் துறையும் முனைப்புடன் வழக்கு தொடர்ந்தன.
நிபந்தனை ஜாமீனில் வேலூரில் இருந்த ம. நடராசன் என்னை சந்திக்க விரும்புவதாக அவரை சந்தித்துவிட்டு வந்த தெலுங்கு நாளிதழ் நிருபர் ஒருவர் எனக்குத் தகவல் தந்தார். முன்பே தகவல் அனுப்பி இருந்ததால், காட்பாடி ரயில் நிலையத்தில் நான் இறங்கியதும், என்னை அழைத்துவர நடராசன் கார் அனுப்பி இருந்தார்.
நண்பர் ஒருவரின் விருந்தினர் விடுதியில் தங்கி இருந்தார் நடராசன். உள்ளே நுழைந்த என்னைப் பார்த்ததும், நடராசன் கேட்ட முதல் கேள்வி என்ன தெரியுமா?
''உங்க சோவுக்கு எதுக்கு இந்த வேலை? சசிகலாவுக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இனிமேல் கிடையாது என்று அந்த அம்மையாரை அறிக்கைவிடச் சொன்னது சோவென்று கேள்விப்படுகிறேன்.''
நான் எதுவும் சொல்லவில்லை. இன்றுவரை அதன் பின்னணி குறித்து நான் யாரிடமும் தெரிவித்ததும் இல்லை. அன்றும் அப்படித்தான்.
''சிறையில் சந்தித்தபோது இருவரும் பேசி வைத்துக் கொண்டு இப்படியொரு அறிக்கையை வெளிவிட்டிருப்பதாகத்தான் பரவலாகப் பேசுகிறார்கள். நீங்கள் ஏன் அனாவசியமாக சோ சாரை இதில் இழுக்கிறீர்கள்?''
''சோ உங்களிடம் ஏதாவது சொல்லாமலா இருப்பார்?''
''அந்த அளவுக்கு என்னிடம் சோ சார் எந்த விஷயம் குறித்தும் விவாதிப்பது இல்லை. சோ சாரைப் பொருத்தவரை, எனக்குத் தெரிந்து அவர் தனது கருத்துகளை எழுத்தில் பதிவு செய்வாரே தவிர, தேவையில்லாமல் விவாதித்து வீணாக்கமாட்டார்.''
''இருந்தாலும் உங்களுக்கு சோ மீதான மரியாதையும், பக்தியும் ரொம்பவும் அதிகம்தான். அவருக்கு என்னவோ, எங்கள் குடும்பத்தைக் கண்டாலே பிடிக்கவில்லை...''
நான் பதிலேதுவும் சொல்லவில்லை. அவரை சந்திக்க சிலர் வந்தார்கள். அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். நான் அமைதியாக அங்கிருந்த தினசரிகளைப் புரட்டிக் கொண்டிருந்தேன். மதிய உணவுக்குப் பிறகுதான் அவருடன் மீண்டும் தனிமையில் பேசுவதற்கு வாய்ப்புக் கிடைத்தது.
தேர்தல் தோல்வியோ, வழக்குகளோ அவரைப் பெரிதாக பாதித்ததாகத் தெரியவில்லை. பழைய உற்சாகத்துடன் நடராசன் இருப்பது எனக்கே வியப்பாக இருந்தது. நிபந்தனை ஜாமீனில் இருக்கும் நிலையில் அவர் மிகவும் தளர்ந்து போயிருப்பார் என்று நினைத்த எனக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது.
''ஜெயலலிதா கைதாவதைத் தவிர்க்க முடியாது என்று கபில் சிபிலும், சென்னா ரெட்டியும் கூறுகிறார்கள். அவரும் அதை எதிர்பார்த்தே இருப்பதாக கபில் சிபில் சொன்னார்.''
''அது தெரிந்த விஷயம்தானே? அவரைக் கைது செய்வதன் மூலமும், வழக்குகளை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு மன உளைச்சல் கொடுப்பதன் மூலமும் அந்த அம்மாவை அரசியலைவிட்டு ஒதுக்கிவிட நினைக்கிறார்கள் கலைஞரும், சிதம்பரமும். அதற்கு மூப்பனாரும் துணை போகிறார் என்பதுதான் எனக்கு வருத்தம். இவர்களுக்கு ஜெயலலிதாவைப் பற்றி தெரியாது.''
''என்ன சொல்ல வருகிறீர்கள்?''
''தேர்தல் தோல்வியுடன் அவரை சும்மா விட்டால், அமைதியாகி இருப்பார். இவர்கள் அவருக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைகளும், கட்சியில் அவருக்கு எதிராக நடக்கும் சதிகளும் ஜெயலலிதாவைப் போராடத் தூண்டுமே தவிர, அரசியலில் இருந்து விலகத் தூண்டாது...''
''சொத்துக் குவிப்பு, அந்நியச் செலாவணி மோசடி, ஊழல் போன்ற வழக்குகளில் இருந்து மீண்டு, ஜெயலலிதாவால் அரசியலில் தாக்குப்பிடிக்க முடியும் என்று நினைக்கிறீர்களா?''
''ஜெயலலிதா மீதும் அவரது அமைச்சர்கள் மீதும் தொடரப்படும் வழக்குகள் மூலம், தன் மீதான சர்க்காரியா கமிஷன் ஊழல் இமேஜை மறைத்துவிடலாம் என்று கலைஞர் நினைக்கிறார். வழக்குத் தொடுப்பது ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான கலைஞரும், திமுகவும் என்பதால் இதெல்லாம் மக்கள் மன்றத்தில் எடுபடாது. ஜெயலலிதா மீது அனுதாபம்தான் ஏற்படும். அப்படியே அவர்களுக்கு ஏதாவது கோபமோ அதிருப்தியோ இருந்திருந்தாலும், தேர்தலில் அவரைத் தோற்கடித்ததால் மறைந்திருக்கும்.''
''ஜெயலலிதாவைக் கைது செய்தால் அதனால் அனுதாபம் ஏற்படும் என்று நினைக்கிறீர்களா?''
''அனுதாபம் ஏற்படுவது மட்டுமல்ல, அதன் மூலம் கலைஞர் தவறான முன்னுதாரணம் படைக்கிறார் என்றுதான் சொல்வேன். இதே நிலைமை ஐந்தாண்டுகளுக்குப் பிறகு கலைஞருக்கும் ஏற்பட அவரே வழிகாட்டுவதாக அது அமையும்.''
''ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால்தானே? அதற்கே வாய்ப்பில்லாமல் செய்து விட்டால்?''
''ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதில்லை. சர்க்காரியா கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் எம்.ஜி.ஆர். நினைத்திருந்தால் கலைஞரைக் கைது செய்திருக்க முடியும், செய்யவில்லை. ராஜீவ் கொலை வழக்கு, விடுதலைப் புலிகள் விவகாரத்தின் அடிப்படையில் ஜெயலலிதா கலைஞரைக் கைது செய்திருக்க முடியும், செய்யவில்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை இந்நாள் முதல்வர் கலைஞர் கைது செய்தால், அடுத்த முதல்வராக வருபவர் ஜெயலலிதாவாக இல்லாவிட்டாலும்கூட, முன்னாள் முதல்வர் கலைஞரைக் கைது செய்யக்கூடும்.''
''ஜெயலலிதா மீது மட்டுமல்ல, அவருக்கு எதிராகக் கட்சியில் போர்க்கொடி தூக்கியிருக்கும் முத்துசாமி, அரங்கநாயகம், கண்ணப்பன் உள்ளிட்டவர்கள் மீதும் தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணையை மேற்கொண்டிருக்கிறது. அது பாரபட்சமற்ற நடவடிக்கையாக தெரியவில்லையா?''
''சோதனை நடத்துவது, விசாரணைக்கு அழைப்பது, வழக்குத் தொடர்வது போன்றவை எல்லாமே மறைமுகமான அரசியல் அச்சுறுத்தல்கள். காங்கிரஸ் கையாண்ட பழைய தந்திரங்கள் இவை. செங்கோட்டையனைத் தவிர, இந்த முன்னாள் அமைச்சர்கள் எல்லோரும் திமுகவில் ஐக்கியமாகி விரைவில் ஞானஸ்நானம் பெற்றுவிடுவார்கள், பார்த்துக் கொண்டே இருங்கள்.''
''அந்தத் தலைவர்கள் இல்லாமல் ஜெயலலிதா கட்சி நடத்தப் போகிறாரா? அது சாத்தியமா?''
''அவர்கள் இடத்துக்குப் புதியதாகப் பல தலைவர்கள் வருவார்கள். அதிகபட்சம் போனால் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஐக்கிய முன்னணி அரசு தாக்குப்பிடிக்காது. அது ஆட்டம் கண்டுவிட்டால், தமிழக திமுக அரசும் ஆட்டம் கண்டுவிடும்.''
நடராசன் என்னை வேலூருக்கு வரும்படி அழைத்ததால் பல மாறுபட்ட கருத்துகளைத் தெரிந்துகொள்ள முடிந்தது. அவரது தீர்க்க தரிசனம் அச்சு பிசகாமல் பலித்தது என்பதை இப்போதுகூட நினைத்துப்பார்த்து வியக்கிறேன்.
மாலையில் சென்னைக்குத் திரும்பும் நேரம் வந்தது. ரயிலுக்குக் கிளம்புவதற்கு முன்னர் என்னைத் தனியாக அறைக்குள் அழைத்துச் சென்றார்.
அவர் என்னிடம் வைத்த வேண்டுகோளைக் கேட்டு நான் அதிர்ந்தேன். தர்மசங்கடத்தில் நெளிந்தேன்.
''நீங்கள் நினைத்தால் நிச்சயமாக உதவலாம். உங்களை யாரும் சந்தேகப்படமாட்டார்கள். நம்பிக்கைக்குரிய நண்பர் என்கிற முறையில் நீங்கள் எனக்கு இந்த உதவியைச் செய்ய வேண்டும்...''
எனது பதிலுக்கோ சம்மதத்திற்கோ அவர் காத்திருக்கவில்லை. கார் வரை வந்து என்னை வழியனுப்பினார். குழப்பத்துடன் ரயிலில் சென்னை
வந்தடைந்தேன்.
(தொடரும்)
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...