

இந்த முடிவு மிகவும் கஷ்டமான ஒன்றுதான். இருந்தாலும், வீட்டு நிலைமையை மனதில் வைத்து, ''சார் நான் இந்த வேலையை எடுத்துக்கிறேன். நீங்க அட்ரஸ் அனுப்புங்க? சம்பளம் மட்டும் கொஞ்சம் கூடத் தர முடியுமா என்று சொல்லுங்க சார் ப்ளீஸ்'' என்றேன்.
வினு, அதான் எனக்கு பயிற்சி கொடுத்து இப்போது வேலையும் ஏற்பாடு செய்துள்ள ஏஜென்ட், ''இங்க பாரும்மா அனிதா, உனக்கு இப்போதைக்கு இவ்வளவுதான் சம்பளம். அதிலும் முன்பே சொன்னதுபோல முதல் மாச சம்பளத்தில் பாதி நம்ம ஏஜென்ஸிக்கு கொடுக்கணும். நீ முதல் ஒரு மாசத்துக்கு சென்னையில் புழுதிவாக்கம் போகணும். அதற்கு அடுத்த மாசம் முகப்பேர் போகணும். உனக்கு தங்க இடம், சாப்பாடு, டீ, காபி எல்லாம் கொடுத்துடுவாங்க, சரியா? எப்போ ஜாயின் பண்ணுவீங்க?'' என்று கேட்டார்.
நானும், ''சார், நாளை மறுநாள் ஜாயின் பண்ணுறேன்'' என்றேன்.
மீண்டும் வினு சார், ''இந்தாம்மா அனிதா, நீங்க பார்த்துக்கப் போகிற கிளையண்ட் எழுபத்தைந்து வயசு இருக்கிற ஒரு பாட்டியம்மா, இப்போதான் அவங்களுக்கு இடுப்புகிட்ட ஆபரேஷன் ஆகி இருக்கு. அவங்களால நகர முடியாது. எல்லாமே நீங்கதான் பார்த்துக்கணும், புரிஞ்சுச்சா?''
''என்ன சொல்லறது. போகணும்னு முடிவு பண்ணியாச்சு. சரி சார்'' என்று ரெண்டு வார்த்தையில் பதில் சொன்னேன்.
அம்மாகிட்ட என்னோட இரண்டு குழந்தைங்களை ஒப்படைச்சுட்டு கிளம்பணும். ஏற்கெனவே என் வீட்டுக்காரர் சென்னையில்தான் வேலை பார்க்கிறார். ஆனால் அவர் திருவல்லிக்கேணியில் தங்கி இருக்கிறார். அவரை பார்க்க முடியுமா தெரியலை. அவர் என்னை வந்து பார்க்க முடியுமான்னும் தெரியலை.
பிளஸ் 2 பெயில். நர்ஸ், கேர் டேக்கர் சான்றிதழ் பயிற்சி பாதர் ஜோசப் புண்ணியத்தில் இலவசமாகக் கிடைத்தது. கிருஷ்ணகிரியைத் தாண்டி முப்பது கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் ஒரு சின்ன கிராமத்தில் வேலை செஞ்சு சம்பாதிக்க பெரிய வாய்ப்புகள் எதுவும் இல்லை. பிள்ளைங்களைப் படிக்க வெச்சு கரையேத்த வழியில்லாம என்னை மாதிரி நிறைய பேர் ஊரைவிட்டு ஊர் கிளம்பிட்டாங்க! வேறென்ன செய்ய?
புழுதிவாக்கத்தில போய் வேலைக்குச் சேர்ந்தேன். கண்ணைக் கட்டி காட்டில் விட்டதுபோல இருந்தது. இதுக்கு முன்னால நான் சென்னைக்கு வந்ததில்லை. வினு சார் சொன்னஅந்த பாட்டி ரொம்ப முடியாம படுத்து கிடந்தாங்க! கண்ணெல்லாம் உள்ளே போய் ரொம்ப வீக்கா இருந்தாங்க. அவங்களை புரட்டி துணி மாத்துறது, சாப்பாடு கொடுக்கறது, மாத்திரை, மருந்து கொடுக்கறது என எல்லாமே ரொம்ப கஷ்டமாதான் இருந்தது.
''சிலர் படுத்த படுக்கையாக இருக்கக் கூடும். அவர்களுக்கு உடம்பை துடைத்து, துணி மாற்றி, சிறுநீர், மலம் செல்வதை எடுத்து அகற்ற வேண்டும். உணவு ஊட்டிவிட வேண்டும். வாய் துடைத்துவிட வேண்டும். பெண்களாக இருந்தால் தலைமுடியை வாரி பராமரித்து உதவ வேண்டும். எப்போதும் அருகிலேயே அமர்ந்து இருக்க வேண்டும். நாளுக்கு இரண்டு அல்லது மூன்று முறை ரத்த அழுத்தம், சுகர் செக் அப் செய்ய வேண்டும். அந்த விவரங்களை நோட்டில் குறித்து வைக்க வேண்டும். தேவையான சமயத்தில் முதலுதவி செய்ய வேண்டும்.
முதியவர்கள், பராமரிப்பவர்கள் உறவுமுறை என்பது நீண்டகால அடிப்படையிலானது. இந்தப் பந்தம், கெமிஸ்ட்ரி மிகவும் முக்கியமாகிறது.
பலவிதமான முதியோர் இருக்கிறார்கள் என்பதை நாம் உணர வேண்டும். வீட்டுக்குள்கூட பாத்ரூம் போக, குளிக்கப் பிடித்துஅழைத்துச் செல்ல வேண்டும். அதுமட்டுமா? அவர்களோடு அமர்ந்து டி.வி. பார்க்க வேண்டும்.
இப்படி பல விஷயங்கள் என்னோட டிரைனிங்கில் சொன்னதுபோலவே இந்த கிளையண்ட் இருந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
பாட்டிக்கு கண் சுமாரா தெரியுது. காது அரைகுறையா கேக்குது. அந்த வீட்டில் அந்தப் பாட்டியம்மாவோட பொண்ணு அவங்க வீட்டுக்காரர் ரெண்டு பேரும் நல்லா அன்பா பேசுனாங்க!
அவங்க வீட்டுல காபி, சாப்பாடு எல்லாமே ரொம்ப சுமார். ரொம்ப ஆச்சாரம் பார்க்குற வீடு. முழுக்க முழுக்க ரசம், கொழம்பு, பொரியல் இப்படித்தான் தினமுமே சாப்பாடு. வீட்டு டி.வி.யில் எப்போ பார்த்தாலும் சாமி பாட்டு இல்லைன்னா சினிமா பாட்டு. சீரியல், கீரியல் எல்லாம் கிடையாது. பாட்டிக்கு காலையில் அஞ்சு மணிக்கே சாமி பாட்டு கேக்கணும். நான் சர்ச்சுல பாட்டு பாடுவேன். இந்த சாமி பாட்டு புதுசுதான்.
நான் வேலைக்குச் சேர்ந்து ஒரு மாசம்கூட ஆகலை. பாட்டிம்மாகிட்ட கொஞ்சம் முன்னேற்றம் இருந்தது. திடீர்னு ஒருநாள் காலையில அந்த அக்கா, ''இந்தாம்மா அனிதா, இன்னைக்கு மதியமே நீ எங்க அம்மா ரெண்டு பேரும் எங்க அண்ணன் வீட்டுக்கு கிளம்பணும்'' என்று சொல்லி கார் ஏற்பாடு செஞ்சாங்க?
எனக்கு முன்பே தெரியும் என்பதால் வெறுமனே 'சரிஅக்கா' என்று முனகினேன்.
இதோ இப்போ முகப்பேர் வந்தாச்சு. இங்கே ஒரு பெரியவர். பாட்டியம்மாவோட பையன். அவர் ரிட்டையர்டு. அவங்க மனைவி வேலை பார்க்குறாங்க. அவங்க மாடியில் ஒரு பிளாட்டில் இருந்தாங்க. வேலை பார்க்குறஅவங்க மக அப்பப்ப வந்து போவாங்க!
கீழே இன்னொரு பிளாட்டில் நான் பாட்டிம்மா. அந்த பிளாட்டில் ஏற்கெனவே பாட்டிக்கு ஒரு கட்டில், மெத்தை, டிவி, எல்லாம் வெச்சிருந்தாங்க! பாட்டிக்கும் எனக்கும் வேளாவேளைக்கு காபி, டிபன், சாப்பாடு, நொறுக்கு தீனி எல்லாம் வந்தது. பாட்டி நான் குளிக்காம அவங்கள தொடக் கூடாதுன்னு ரொம்ப பிரச்னை பண்ணுவாங்க. நான் எழுந்ததும் வீட்டை பெருக்கி துடைச்சு, பாட்டியோட நாப்கின் மத்த குப்பை எல்லாத்தையும் கொண்டுபோய் வீட்டுக்கு நாலு வீடு தள்ளி குப்பை தொட்டியில் கொண்டு போட்டுவிட்டு குளித்து தோய்த்து துணி உலர்த்துவேன்.
பிறகு பாட்டியை மெதுவா நடக்க வெச்சு பாத்ரூம் கூட்டிக்கிட்டு போய் அவங்க வேலை முடிக்க வெச்சு அவங்களை குளிப்பாட்டி ட்ரெஸ் மாத்தி அவங்களுக்கு காபி கொடுத்து கையோட டி.வி.யை போட்டு சாமி பாட்டு வெப்பேன்.
பாட்டி குளிக்க, ட்ரெஸ் மாத்த ரொம்ப முரண்டு பிடிப்பாங்க. ஆனாஅவங்களைப் பார்க்க அவங்க மற்ற பிள்ளைங்க உறவுக்காரங்க வந்தாக்கா ரொம்ப முடியலைன்னு டிராமா பண்ணுவாங்க! இதோ நானும் இவளும்தான் இங்கே தனிக் குடித்தனம், அவங்க எல்லாம் மாடியில் ஜாலியா இருக்காங்கன்னு குற்றப்பத்திரிகை நல்லா வாசிப்பாங்க! வரவங்களும் பாட்டிக்கு எதெல்லாம் கொடுக்க கூடாதோ அதெல்லாம் வாங்கி வருவாங்க!
ஒருமுறை நான் கூட சொன்னேன், ''பாட்டிக்கு இதெல்லாம் கொடுக்கக் கூடாது. சுகர் ஏறிடுமுன்னு'' . அவங்களோ, ''அதெல்லாம் ஒன்னும் ஆகாது. இருக்கறவரைக்கும் அவங்க என்ஜாய் பண்ணட்டும்'' என்று சொல்லுவாங்க. சரி எனக்கென்னன்னு இருக்க முடியலை. அப்புறம் அவங்க பையன் திட்டுவார். எதாவது ஒன்னு கெடக்க ஒன்னுஆனா ஏஜென்ஸியும் என்னை சும்மா விடாது.
அண்ணன் மகள் ஒருநாள் கீழ வந்தாங்க. அவங்க வீட்டில் இருந்து ஆபீஸ் வேலை செய்யறவங்க. அந்த அக்கா தமிழ், இங்கிலிஷ் எல்லாம் கலந்து, கலந்து லாப்டாப் வெச்சுக்கிட்டு பேசுவாங்க. சில விஷயம் காதுல விழும்.
''இங்க பாருங்க எனக்கு பிரீடம், பிலெக்சிபிளிட்டி, புல் பில்மெண்ட், இந்த மூணும் ரொம்ப முக்கியம். உங்களுக்கு அவுட்புட் தானே முக்கியம்? லாக் இன் பண்ணி எட்டு மணி நேரம் அப்படியே உட்கார்ந்து இருக்கணும், வீடியோ ஆன்ல வெக்கணும் இப்படி ரூல் போடாதீங்க'' என்று யாரிடமோ கோபமா பேசினாங்க!
அதுக்கு மறுநாளே அவங்களுக்கு வேலை போயிடுச்சு போல, வீட்டுல ஒரே சத்தம், அமர்க்களம். அந்த அக்கா யார்கிட்டயோ போனில் பேசினாங்க. அவங்களை ஆபீசுக்கு நேர்ல வரச் சொன்னாங்க! அந்த அக்கா, 'நான் ஆபீஸ் வர மாட்டேன். ஒர்க் பிரம் ஹோம்னா சொல்லுங்க' என்று பேசினார்.
அந்தப் பக்கம் ஒத்துக்கிட்டாங்க போல. அவங்க படிச்சவங்க. எல்லாம் பேசி டிமாண்ட் பண்ணி வாங்கிறாங்க. என் பொழப்பு அப்படியா? எனக்கும் இந்த ஒர்க் பிரம் ஹோம் இருந்தா நல்லாதான் இருக்கும். என் பிள்ளைங்களோட இருப்பேன். பாவம் அதுங்க என்ன செய்யுதோ? இந்த மனுசனைப் பாருங்க. அவரும் எனக்கு போன் பண்ண மாட்டார். நான் பண்ணுனாலும், 'அப்பறம் பேசுறேன்.
வை - ன்னு வச்சுடுவார்.
என்ன மனுசனோ? நான் கொஞ்சம்கூட எதிர் பார்க்கலை. பாட்டியம்மா என்னையைப் பத்தி ஒரே கம்பளைண்ட்.
''நான் சரியா குளிப்பாட்ட மாட்டேங்குறேன். சாப்பாடு பொறுமையா கொடுக்காம வாயில் திணிக்கிறேன். ட்ரெஸ் போட பிடிச்சு இழுக்கறேன். டி.வி.யில் அவங்க சொன்னபாட்டை போடலை' என்று இப்படி லிஸ்ட் ரொம்ப பெரிசானது. விஷயமும் ரொம்ப பெரிசானது.
புழுதிவாக்கம் அக்காதான் ஏஜென்ஸிகிட்டபேசி என்னை வேலைக்கு வெச்சது. அதனால அவங்க அவங்களோட புருஷன் ரெண்டு பேரும் வந்தாங்க. வீட்டில் இருக்குற அக்கா, புழுதிவாக்கம் அக்கா, பெரியண்ணன் மனைவி எல்லோரும் எனக்குதான் சப்போர்ட்.
ஒருவேளை எல்லாரும் சேர்ந்து பேசி எனக்கு வேலை போயிடுமோன்னு கொஞ்சம் கவலையாதான் இருந்தது. நல்லவேளை அப்படி ஒன்னும் நடக்கலை. வந்தவங்க எல்லோரும் கிளம்பினர். இப்போ பாட்டியம்மா மேல எல்லா கோபமும் திரும்பியது.
ஒரேசத்தம். 'இதைவிட ஒன்னை யாரு பாத்துக்குவா? எங்க இதைவிட செளகரியமா இருக்குமோ கிளம்பு' . பாட்டி மீது ஏகப்பட்ட
அம்புகள்.
கொஞ்ச நேரத்தில் எல்லோரும் இடத்தை காலி செய்தனர். பாட்டி என்னை கூப்பிட்டு, 'அனி செல்லம், நீ நல்லா தான் பாத்துக்கிறே, என் பையன், மருமக நீ இருக்கேன்னு ஒருநாளைக்கு ஒருவாட்டிகூட வந்து என்னை பாக்குறதில்லை. எப்படி இருக்கேன்னு கேக்கறதுல்ல, அதுக்குதான் இந்த டிராமா, புரிஞ்சுதா?'ன்னு லேசா கண்ணடிச்சு என்னை கிட்ட கூப்பிட்டு என் கன்னத்தை தடவி ஒரு எச்சை முத்தம் கொடுத்தாங்க!
நான் பாட்டியம்மா நல்லா இருக்கணும்னு சொல்லி தினம் சாமிக்கு பூ போட்டு விளக்கு
ஏத்துறேன். என் புள்ளைங்க, என்னோட அம்மா, என் புருஷன் எல்லாரும் வேற வேற இடத்துல. இதெல்லாம் எதுக்கு? நாலு காசு கிடைக்குமேன்னுதான். எனக்கு வேற வேலையும் தெரியாது. இந்தபாட்டிபோயிடுச்சுனா என்னை தூக்கி ஏஜென்ட் வேற இடத்துல போடுவான். அங்க என்ன வேலையோ? அந்த கிளையண்ட் எப்படி இருப்பாங்களோ ? யாருக்குத் தெரியும்? எனக்கு தெரியும் என் வேண்டுதல் பெரிசா பலிக்காதுன்னு.
இருந்தாலும் இந்த வேலையில் கொஞ்சமானும் தன்மானம் இருக்கா? இது மாதிரி என்னோட அம்மாவுக்கு நான் என்ன ஒத்தாசை பண்ணி இருக்கேன். அங்கே பாவம் அது என் பிள்ளைங்களோட மல்லு கட்டுது. குளிப்பாட்டி, சோறாக்கி, கால் கழுவி எல்லாமே பண்ணுது. ஏதாவது சம்பளம் கிம்பளம் கிடைக்குதா ?
யோசிச்சு யோசிச்சு எனக்கு பைத்தியம் பிடிக்கிறதுபோல ஆச்சு. என்ன பொழப்பு இது? எல்லோரும் எப்படி எப்படியெல்லாம் வாழுறாங்க...!!
'அனி, அனின்னு' முனகலா கிரீச்சு குரல்ல கூப்பிடுற சத்தம். ராத்திரி ஒரு ரெண்டு மணி இருக்கும். லைட்டை போட்டுகிட்ட போய் பார்த்தேன். பாட்டியம்மாவுக்கு கண் சொருகிஇருந்தது. சுகர் இறங்கி இருக்குமோ? போன் போட்டு மேல் பிளாட்டுல இருந்து அண்ணன், அண்ணியை கூப்பிட்டேன். அவங்க வர அஞ்சு நிமிஷம் ஆச்சு.
எனக்கு கையும் ஓடலை காலும் ஓடலை.
'அய்யாசாமி பாட்டியம்மாவை காப்பாத்து'ன்னு சத்தமா வேண்டினேன்.
கொஞ்ச நேரத்துல ஆம்புலன்ஸ் வந்தது. பாட்டியை அலாக்கா துணி மூட்டையை தூக்குற மாதிரி தூக்கி ஸ்ட்ரெச்சர்ல வெச்சு கொண்டு போனாங்க. கூடவே அண்ணன் மட்டும் போனாரு.
இந்த கீழ் பிளாட்டில் நான் மட்டும் தனியா. எனக்கு தூக்கம் வரலை. அப்படியே உட்கார்ந்து கண்ணசந்து போனேன்.
மனசு முழுக்க கவலை. பாட்டியம்மா பொழைக்குமா? எனக்கு இனிமே வேலை அவ்வளவுதானா? வேற யார் வீட்டுல போடுவாங்க? இதற்கு நடுவுல அதிசயமா காலங்காத்தால என் புருஷன் போன்.
''சொல்லுங்க''
அவரு வீடியோ கால் பண்ணி இருந்தார். அதுல ஒரு ஓரமா வேற ஒருபொண்ணு நைட்டி போட்டு உட்கார்ந்து இருந்தா?
''யாருங்க அந்தப் பொண்ணு?'' ஒரு கேள்விதான் கேட்டேன்.
'' நீ எங்க இருக்கே! என்ன பண்ணுறே நான் என்னிக்காச்சும் கேட்டுருக்கேனா? பெருசா கேள்வி கேக்குறே? ஒரு ஆயிரம் ரூபாய் பணம் அனுப்பு.''
அந்த பக்கம் போன் கட் ஆனது.
இங்கே எனக்கு எல்லாமே கட் ஆனது.
திரும்பவும் அவருக்கு போன் செய்தேன்.
''நீங்கள் தொடர்பு கொள்ள நினைக்கும் நபர் வேறு ஒருவருடன் தொடர்பில் இருக்கிறார்'' என்றது போன்.
நேரா சாமி ரூமுக்கு போய் சாமி முன்னால நின்னு அழுதேன்.
'உனக்கு கருணையே இல்லையா?. என்னை அறியாமல் என் கண்ணின் நீர் சொட்டு ஒன்று அங்கே ஏற்றிவைத்திருந்த விளக்கில் விழுந்து அதுஅணைந்தது. என் மனசு இருட்டானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.