'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 146
By கி. வைத்தியநாதன் | Published On : 25th June 2023 12:00 AM | Last Updated : 25th June 2023 12:00 AM | அ+அ அ- |

வேலூரில் ம. நடராசனை சந்தித்துவிட்டு சென்னை திரும்பியபோது என்னை இரண்டு, மூன்று தடவைகள் தில்லியிலிருந்து அஜித் சிங் என்னைத் தொடர்பு கொண்டதாக வீட்டில் சொன்னார்கள். அப்போது செல்லிடப்பேசி வராத காலம். எஸ்.டி.டி. அழைப்புகள்தான் இருந்தன. மிக முக்கியமான காரணமில்லாமல் அஜித் சிங் அழைத்திருக்கமாட்டார்.
அடுத்த நாள் காலையில் அவரைத் தொடர்பு கொண்டபோது, அவர் அதிகமாக எதுவும் பேசவில்லை. ''எப்போது தில்லிக்கு வரப்போகிறீர்கள்?'' என்பதுதான் அவரது கேள்வியாக இருந்தது. 'விரைவில் வருகிறேன்' என்றுதான் என்னால் பதில் சொல்ல முடிந்தது. அதற்குமேல் அவர் எதுவும் பேசவில்லை. நானும் கேட்டுக்கொள்ளவில்லை.
வேன்டேஜ் லெதர்ஸ் அதிபரான நண்பர் பி.ஆர். சேதுபிரகாசத்தை சந்திக்க எழும்பூர் காஸா மேஜர் சாலையிலுள்ள அவரது வீட்டுக்குப் போயிருந்தேன். அஜித் சிங் அழைத்ததைப் பற்றி நான் சொல்லிக் கொண்டிருந்தபோது அவர் இடைமறித்தார்.
''நாளை காலையில் நான் தில்லிக்குப் போவதாக இருக்கிறேன். நீங்களும் வருகிறீர்களா? வர்த்தக அமைச்சர் போல்லா புல்லி ராமையாவை சந்திக்கப் போகிறேன். நல்ல நண்பர். அவரை உங்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கட்டுமா?''
''உங்களுடன் தில்லி வருவதில் எனக்கு மகிழ்ச்சி தான். அமைச்சர் ராமையாவை சந்திப்பதற்கு இன்னொரு சந்தர்ப்பம் பார்ப்போம்.''
''காலையில் விமானநிலையம் வந்துவிடுங்கள். உங்களுக்கும் சேர்த்து டிக்கெட் போடச் சொல்லி விடுகிறேன்.''
ம.நடராசனை சந்தித்தது குறித்து நான் அவரிடம் எதுவும் பகிர்ந்து கொள்ளவில்லை. தில்லி வருகிறேன் என்கிற செய்தியை அஜித் சிங்கின் உதவியாளர் சமர்பால் சிங்கிடம் தெரிவித்துவிட்டு, கிளம்புவதற்கான முனைப்புகளில் இறங்கி விட்டேன்.
நாங்கள் ஒன்றாக தில்லி விமானநிலையத்தில் இறங்கியதுடன் சரி. சேதுப்பிரகாசம் அவருடைய அலுவல்களைப் பார்க்கக் கிளம்பிவிட்டார். நானும் எனது அலுவலகத்துக்கு வந்துவிட்டேன்.
துக்ளக் ரோட்டிலுள்ள அஜித் சிங்கின் வீட்டுக்கு நான் சென்றபோது, வழக்கம்போல மேற்கு உத்தரப் பிரதேசத்திலிருந்து வந்திருந்த அவரது தொண்டர்கள் நிறைந்திருந்தனர். அவர்களில் பெரும்பாலோர் ஜாட் இனத்தவர்கள். அவரது வீட்டுப் புல்வெளியில் சிறு சிறு குழுக்களாக அமர்ந்து அவர்கள் ஹுக்கா புகைப்பதைப் பார்க்கவே வேடிக்கையாக இருக்கும்.
நான் வந்திருக்கும் செய்தியை சமர்பால் சிங் சொல்லி அனுப்பினார். தில்லியிலுள்ள தலைவர்களின் வீடுகள் ஒவ்வொன்றுமே, பெரிய தோட்டம், புல்வெளிகளுக்கு நடுவில் அமைந்திருக்கும். வீட்டுக்குப் பின்னால் இருக்கும் புல்வெளியில் நாற்காலி போட்டு அமர்ந்திருந்தார் அஜித் சிங். என்னையும் அமரச் சொன்னார்.
முன்பே குறிப்பிட்டிருந்ததுபோல, எங்கள் இருவருக்கும் இடையில் அரசியல்வாதி பத்திரிகையாளர் என்பதைத் தாண்டி, தனிப்பட்ட நட்பும், நெருக்கமும் ஆரம்பம் முதலே இருந்தது. கரக்பூர் ஐஐடியில் 60 ஆண்டுகளுக்கு முன்பு தேர்ச்சி பெற்ற பொறியியல் பட்டதாரியான அஜித் சிங், முதல் தலைமுறை கணினி தொழில்நுட்ப வல்லுநரும்கூட. அமெரிக்காவில் ஐபிஎம் நிறுவனத்தின் துணைத் தலைவர் பதவியைத் துறந்து, தந்தை சரண்சிங் உடல்நலம் குன்றியபோது இந்தியா திரும்பியது முதல் அவரும் நானும் நண்பர்களாகத் தொடர்ந்தோம்.
அமைச்சராக இருந்தாலும், இல்லாவிட்டாலும் அஜித் சிங் என்னிடம் தெரிக்காமல் சென்னை வந்ததில்லை. திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் குன்றி காவேரி மருத்துவமனையில் இருந்தபோது, நலம் விசாரிக்க வந்தார். அவரை நான்தான் அழைத்துச் சென்றேன். அதுதான் அவரது கடைசி சென்னை விஜயம்.
''நான் காங்கிரஸிலிருந்து வெளியேறலாம் என்று தீர்மானித்திருக்கிறேன்...'' என்றார் அஜித் சிங்.
''இப்போது ஏன் இந்த திடீர் முடிவு? இதன் மூலம் நீங்கள் என்ன சாதித்துவிடப் போகிறீர்கள்?''
''காங்கிரஸில் இருந்து என்ன சாதித்துவிட முடியும்? மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி என்று பி.வி. நரசிம்ம ராவ் தன்னிச்சையாக முடிவெடுத்தபோதே நான் விலகிவிட நினைத்தேன். அந்த நேரத்தில் அவரை பலவீனப்படுத்த நான் விரும்பவில்லை. பகுஜன் சமாஜ் கூட்டணியை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஒருநாளும் மாயாவதி என்னையோ, ஜாட்டுகளையோ ஏற்றுக்கொள்ள மாட்டார்.''
''முலாயம்சிங் மட்டும் உங்களை ஏற்றுக் கொள்வாரா?''
''மாயாவதிக்கு முலாயம் பரவாயில்லை.''
''பாஜகவுடன் சேரும் முடிவில் இருக்கிறீர்களா?''
''அதுவும் இல்லை. சவுத்ரி சாஹேப் (சரண் சிங்) தனக்கென்று ஒரு வாக்கு வங்கி வைத்திருந்தார். அந்த வாக்கு வங்கி, காங்கிரஸ் எதிர்ப்பு வாக்கு வங்கி. காங்கிரஸில் நான் சேர்ந்ததால், என்மீது ஜாட் இனத்தவர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது. அதனால், தனிக்கட்சி தொடங்குவது என்று முடிவெடுத்திருக்கிறேன்.''
''எனக்கென்னவோ இது விபரீதமான முடிவாகத் தெரிகிறது. சவுத்ரி சாஹேப்பின் லோகதளத்தை மீண்டும் உயிர்ப்பிக்கப் போகிறீர்களா?''
''இல்லை. பாரதிய கிசான் காம்கர் கட்சி என்று வைப்பதாக இருக்கிறேன். மகேந்தர் சிங் திக்காயத் என்னுடன் இணையத் தயாராக இருக்கிறார். மக்களவையிலிருந்து ராஜிநாமா செய்துவிட்டு, புதிய கட்சியின் சார்பில் மீண்டும் தேர்தலில் நிற்கப் போகிறேன்.''
''எதற்காக அப்படி?''
''பிறகு? காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு ஜெயித்தேன். இப்போது கட்சியிலிருந்து விலகுகிறேன். அதனால் மக்களவை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்வதுதானே முறை?
எனது புதிய கட்சியின் சார்பில் மீண்டும் போட்டியிட்டு ஜெயிக்க முடியும் என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு. அவர்கள் எனது முடிவை நிராகரித்தால், அரசியலில் இருந்து விலகி விடுவேன்.''
அடிக்கடி கட்சி மாறுபவர் என்கிற விமர்சனம் அஜித் சிங் மீது உண்டு. அதே நேரத்தில், கட்சி மாறும்போது தனது மக்களவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்வதும், மீண்டும் மக்களை சந்தித்து தேர்தலில் வெற்றி பெறுவதும் அவரிடம் மட்டுமே நான் பார்த்த வித்தியாசமான அணுகுமுறை.
அடிக்கடி கட்சி மாறுவது குறித்து அவரிடம் ஒருமுறை கேட்டேன். ''கட்சி கட்டுப்பாடு என்கிற பெயரில் நமது கொள்கைக்கும் மனசாட்சிக்கும் வாக்களித்த மக்களுக்கும் எதிராக என்னால் செயல்பட முடியாது'' என்பது அவரது பதிலாக இருந்தது.
மக்களவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்வது என்பதில் தீர்மானமாகவும், பிடிவாதமாகவும் இருந்தார் அஜித் சிங். அவரது தன்னம்பிக்கை என்னை ஆச்சரியப்படுத்தியது. அதே நேரத்தில், அவர் அவசரப்பட்டு முடிவெடுக்கிறாரோ என்றும் தோன்றியது. நான் எதுவும் பேசவில்லை. மெளனம் காத்தேன்.
''தனிப்பட்ட முறையிலும், அரசியல் ரீதியாகவும் எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள்.
ஆனாலும், ஒரு முக்கியமான முடிவை நான் எடுக்க இருக்கும் வேளையில் அதை உங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது. அதனால்தான் அழைத்தேன். நீங்கள் என் முடிவை ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள், எச்சரிப்பீர்கள் என்று எனக்குத் தெரியும். ஆனால், எனக்கு வேறு வழி தெரியவில்லை.''
''நானும் ஒரு குழப்பான மனநிலையில்தான் தில்லி வந்திருக்கிறேன். உங்களது ஆலோசனை வேண்டும்.''
''என்ன பிரச்னை?''
நடராசன் என்னிடம் தெரிவித்ததைக் கூறி, அதை எப்படி கையாள்வது என்று தெரியாமல் இருப்பதைச் சொன்னபோது, அஜித் சிங் கலகல வென்று சிரித்தார்.
''இதைப்பற்றி நானும் சுப்பிரமணியன் சுவாமியும் கூட பேசினோம். ஜெயலலிதா மீதான வழக்குகளை நிறுத்துவதோ, கைதைத் தடுப்பதோ சாத்தியமே இல்லை. ஆனால், நடராசன் முன்வைத்த கோரிக்கையை நிறைவேற்ற நான் சில ஆலோசனைகளைத் தருகிறேன். நானும் உதவுகிறேன்...''
அவரை வியப்புடன் பார்த்தபடி நான் நிமிர்ந்து உட்கார்ந்தேன்.
வேலூரில் இருந்து நான் கிளம்பும்போது ம. நடராசன் என்னிடம் சொன்னதை இப்போது சொல்கிறேன்:
''என் மீதும், சசிகலா மீதும் எங்கள் குடும்பத்தினர் மீதும் எத்தனை வழக்குகள் வேண்டுமானாலும் போடட்டும். அதை நாங்கள் சந்திக்கத் தயாராகவே இருக்கிறோம். எங்களைக் கைது செய்யட்டும். 'காஃபிபோசா'வில் ஓராண்டு சிறையில் அடைக்கப் போவதாகக் கேள்விப்படுகிறேன். செய்யட்டும். ஆனால், ஜெயலலிதாவைக் கைது செய்து, சிறையில் அடைத்துத் துன்புறுத்தாமல் இருக்கவேண்டும். அதுதான் எனது ஒரே கோரிக்கை.''
''அதற்கு நான் என்ன செய்துவிட முடியும்? ஜெயலலிதாவைக் கைது செய்யாமல் விடமாட்டோம் என்று முதல்வர் கருணாநிதி, மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம், தமாகா தலைவர் ஜி.கே. மூப்பனார், ஏன் சமீபத்தில் மத்திய இணையமைச்சரான எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம் வரை சூளுரைத்திருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது எப்படி தடுத்துவிட முடியும்?''
''பிரதமர் நினைத்தால் தடுக்க முடியும். சிபிஐ கைது செய்யப் போகிறது என்று எனக்குத் தகவல் வருகிறது. நான் நிபந்தனை ஜாமீனில் இருக்கிறேன். இத்தனை வழக்குகள் இருக்கும் நிலையில், நண்பர்களாக இருப்பவர்களேகூட என்னை சந்திக்கத் தயங்குவார்கள், தவிர்ப்பார்கள். அதுதான் பிரச்னை.''
''அது எனக்குப் புரிகிறது. இந்தப் பிரச்னையில், சாதாரண பத்திரிகையாளனாக நான் எப்படி உங்களுக்கு உதவி செய்ய முடியும்? இதிலெல்லாம் நான் தலையிடுவது சரியாக இருக்குமா?''
''உங்களைத் தலையிடவோ, எங்களுக்காக யாரிடமும் சென்று பேசவோ நான் வற்புறுத்தவில்லை. நான் சொல்லும் செய்தியை அவர்களிடம் கொண்டுபோய் சேர்த்தால் போதும்.''
''யாரிடம் போய் நான் பேச வேண்டும் என்கிறீர்கள்? முதல்வரிடமும், பிரதமரிடமுமா? அது எப்படி முடியும்? அந்த அளவுக்கு நான் ஒன்றும் பெரிய பிரமுகரெல்லாம் இல்லை.''
''அதனால்தான் உங்கள் மூலம் தகவல் அனுப்ப விரும்புகிறேன். பிரதமர் தேவே கெளடா, ஜெயலலிதாவுக்கு நன்றாகத் தெரிந்தவர். அவர்களுக்கு இடையே சுமுகமான உறவு குடும்ப ரீதியாக உண்டு. ரேவண்ணா, குமாரசாமி எல்லோருக்குமே ஜெயலலிதாவைத் தெரியும். நான் சொல்வதாக அவரிடம் தகவலைக் கொண்டு சேர்த்தால் போதும்.''
''என்ன தகவல்?''
''ஜெயலலிதா மீது வழக்குகள் போட்டுக் கொள்ளட்டும். ஆனால், சிபிஐ அவரைக் கைது செய்யாமல் இருக்க வேண்டும். நாங்கள் சிறையில் இருக்கும் நிலையில், ஏற்கெனவே தனித்துவிடப்பட்டிருக்கும் ஜெயலலிதாவை மேலும் மேலும் தொந்தரவு கொடுத்துப் பழிவாங்கக் கூடாது என்பதுதான் எனது கோரிக்கை.''
நான் எதுவும் பேசவில்லை. எனது கரங்களைப் பற்றிக்கொண்டு ம. நடராசன் சொன்னார் ''நீங்கள் நினைத்தால் நிச்சயமாக உதவலாம். உங்களை யாரும் சந்தேகப்பட மாட்டார்கள். நம்பிக்கைக்குரிய நண்பர் என்கிற முறையில், நீங்கள் எனக்கு இந்த உதவியைச் செய்ய வேண்டும்...''
அஜித் சிங் எப்படி உதவப் போகிறார் என்று தெரிந்து கொள்ளும் ஆவலில் நான் நிமிர்ந்து உட்கார்ந்தேன்.
''எனக்கும் ஜெயலலிதாஜிக்கும் தொடர்பு கிடையாது. அவரது ஆட்சி ஊழல் ஆட்சி என்பதிலும் எனக்கு சந்தேகமில்லை. ஆனால், அவருக்கு எதிராக இருப்பவர்கள் எல்லாம் உத்தமர்கள் அல்ல. தேவே கெளடாவேகூட அவரிடமிருந்து தேர்தலுக்கு நன்கொடை வாங்கியிருக்கக்கூடும், யாருக்குத் தெரியும்?''
''அதையெல்லாமா இப்போது நினைவுபடுத்த முடியும்?''
''நான் வாய்ப்புக் கிடைத்தால் பிரதமர் கெளடாஜியிடம் பேசுகிறேன். நீங்கள் நான் சொல்லும் இரண்டு நபர்களை சந்தித்து, நடராசன் சொன்ன தகவலைத் தெரிவியுங்கள். அவர்கள் இருவரும் பிரதமருக்கு அழுத்தம் கொடுப்பார்கள். அதன் மூலம் சிபிஐ கைது செய்வதை தற்காலிகமாக தடுத்து நிறுத்த முடியும்.''
''யார் அவர்கள்?''
அஜித் சிங் அந்த இருவர் பெயரையும் சொன்னார். அவர்களை எப்படி, யார் மூலம், எப்போது சந்திக்க வேண்டும் என்பதையும் தெரிவித்தார்.
(தொடரும்)
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...