பிரணாப்தா என்கிற மந்திரச் சொல்!:  - 139

ராம் விலாஸ் பாஸ்வான் கூறியதை எல்லாம் அசை போட்டபடி, அக்பர் ரோடு காங்கிரஸ் அலுவலகத்தில் நுழைந்தபோது, அங்கே வழக்கத்துக்கு விரோதமாக நிருபர்கள் பலர் குழுமியிருந்தனர்.
பிரணாப்தா என்கிற மந்திரச் சொல்!:  - 139


ராம் விலாஸ் பாஸ்வான் கூறியதை எல்லாம் அசை போட்டபடி, அக்பர் ரோடு காங்கிரஸ் அலுவலகத்தில் நுழைந்தபோது, அங்கே வழக்கத்துக்கு விரோதமாக நிருபர்கள் பலர் குழுமியிருந்தனர். சுமார் அரை மணி நேரத்துக்குப் பிறகு வி.என். காட்கில், அதிருப்தியாளர்களில் ஒருவரான பல்ராம் ஜாக்கருடன் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அவர்கள் தந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கும் செய்தி இதுதான்  ''எந்தக் காரணம் கொண்டும் காங்கிரஸ் கட்சி பிளவுபடாது. கட்சி உடையும் என்பதற்கு மாறாக நாங்கள் எல்லோரும் சேர்ந்து கட்சியைக் கட்டுக்கோப்புடன் வைத்திருப்போம்.  மூத்த தலைவர்கள் தங்கள் கருத்து வேறுபாடுகளைப் பேசித் தீர்த்துக் கொள்ள முயற்சிகள் நடக்கின்றன. ஒன்றுபட்டு செல்வது என்று முடிவு செய்திருக்கிறோம்.''
இப்படியோர் அறிக்கையை வெளியிடுவதற்கு ஒரு பின்னணி இருப்பது, பத்திரிகையாளர் சந்திப்புக்குப் பிறகு நான் வி.என். காட்கிலைத் தனியாக சந்தித்துப் பேசும்போது தெரியவந்தது.
காலையில் தில்லிக்குப் புறப்படுவதற்கு முன்னர், கொச்சி விமான நிலையத்தில் நிருபர்களைச் சந்தித்திருந்தார் முன்னாள் கேரள முதல்வர் கே. கருணாகரன். அப்போது, தனக்கு 71 காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆதரவு இருப்பதாகவும், கட்சித் தாவல் தடைச்சட்டத்தால் அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் கட்சியில் பிளவை ஏற்படுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
கருணாகரன் நிருபர்களுக்கு அளித்திருந்த பேட்டியை என்னிடம் தந்து படிக்கச் சொன்னார் காட்கில். பிரணாப் முகர்ஜி வீட்டில் எம்.எஸ். பிட்டா தலைமையிலான இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் நடந்துகொண்ட விதம்தான் கருணாகரனின் ஆத்திரத்துக்குக் காரணம் என்பதை நான் புரிந்துகொண்டேன். அந்தப் பேட்டியில் நிறைய விஷயங்களைக் கருணாகரன் கூறியிருந்தார்.
''அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தைக் கூட்ட மொத்த உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்களின் கோரிக்கை போதும். காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தைக் கூட்டி கட்சித் தலைவர் ஒருவரைத் தேர்ந்தெடுப்போம் என்பதுதான் எங்கள் கோரிக்கை.  
நரசிம்ம ராவ் விலகினால் அடுத்த சில மணிநேரங்களில் அடுத்த தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார்'' என்று பேட்டியில் குறிப்பிட்டிருந்தார் அவர்.
நான் படித்து முடிப்பது வரை பேசாமல் இருந்த வி.என். காட்கில், எனக்கு ஒரு வேலை தந்தார். என்னை ஏன் அதற்கு அவர் தேர்ந்தெடுத்தார் என்று எனக்குத் தெரியாது. என்மீதான நம்பிக்கையா, இல்லை நான் எல்லோருக்கும் பொதுவானவன், செய்தியாக்கி தர்மசங்கடம் ஏற்படுத்தாதவன் என்கிற காரணமா என்று தெரியவில்லை. 
கருணாகரனில் தொடங்கி 15 பேர் அடங்கிய தனது கைப்பட எழுதிய பட்டியலை என்னிடம் நீட்டினார் காட்கில். ''இவர்கள் எல்லோருமே உங்களுக்கு நன்றாகத் தெரிந்தவர்கள்தான். அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பேச்சு கொடுத்துத் தெரிந்து கொள்ளுங்கள். அதனடிப்படையில் நீங்கள் கட்டுரை எழுதிக் கொள்வது உங்கள் உரிமை. அந்தக் கட்டுரையை எழுதுவதற்கு முன்னர், அவர்களில் யார் யார் நரசிம்ம ராவுக்கு ஆதரவாக அல்லது எதிராக இருக்கிறார்கள் என்பதை எனக்குத் தெரிந்து சொல்லுங்கள்'' என்பதுதான் அவர் என்னிடம் வைத்த வேண்டுகோள்.
அந்தப் பட்டியலை வாங்கி சட்டைப் பையில் வைத்துக் கொண்டேன். இப்போதுபோல கூகுள் செயலி எதுவும் இல்லாத காலம்.  எனது முதல் விஜயம், அக்பர் ரோடின் இன்னொரு கோடியில் அமைந்திருந்த ராஜேஷ் பைலட்டின் 10ஆம் இலக்க பங்களா. ஆட்டோ பிடித்து அங்கே விரைந்தேன்.
வழக்கத்துக்கு மாறாக ராஜேஷ் பைலட்டின் வீடு வெறிச்சோடி இருந்தது. அந்த பங்களாவையொட்டியுள்ள புல்வெளியில்கூடத் தொண்டர்கள் ஆங்காங்கே நின்று கொண்டிருப்பார்கள். ஆனால், அன்று யாருமே இல்லையென்பது எனக்கு வியப்பாக இருந்தது. உள்ளே நுழைந்து, வரவேற்பறைக்குள் நுழைந்தேன். பைலட்டின் உதவியாளர் செல்வராஜ் அலுவலக அறையில் இருந்தார்.
ஜூலை மாதக் கடைசி என்பதால், கோடை வெயிலின் கடுமை சற்று குறைந்திருந்தாலும் 'ஆந்தி' எனப்படும் புழுதிக் காற்று வீசிக் கொண்டிருந்தது. வீட்டின் பக்கவாட்டில், புல்தரைப் பூங்காவைப் பார்த்தபடி இருக்கும் வராந்தாவில் அமர்ந்தபடி தினசரிகளைப் படித்துக் கொண்டிருந்த ராஜேஷ் பைலட்டிடம் என்னை அழைத்துச் சென்றார் செல்வராஜ். எடுத்த எடுப்பிலேயே, நிருபர் கூட்டம் பற்றிய பேச்சை எடுத்தார் பைலட்.
''என்ன நிலைமை என்று தெரிந்து கொள்வதற்குத்தானே வந்திருக்கிறீர்கள்? 
கருணாகரன்ஜி கொச்சியில் நிருபர்களிடம் பேசியது தவறு. நமது பலவீனத்தை எதிரிகளுக்கு நாமே வெளிப்படுத்துவதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை.''
''அப்படியானால், நரசிம்ம ராவ் தொடரலாம் என்று நீங்கள் கருதுகிறீர்களா?''
''அது உள்கட்சிப் பிரச்னை. அதைப் பற்றி கருத்துக் கூறலாம். கட்சியில் தனக்கு 71 எம்.பி.க்களின் ஆதரவு இருப்பதாகவும், கட்சியைப் பிளவுபடுத்தப் போவதாகவும் சொல்வதெல்லாம் தவறு. மூத்த தலைவர் அப்படிப் பேசியிருக்கக் கூடாது.''
''இப்படியே எத்தனை நாள்கள் நீட்டிக்கொண்டு போவது என்று கருணாகரன் ஆதங்கப்படுவதாகத் தெரிகிறது.''
''அதற்காக....? ஆட்சிக்கு வந்ததும் வராததுமாக பெட்ரோல், டீசல் விலையை அதிகரித்திருக்கிறது தேவே கெளடாவின் ஐக்கிய முன்னணி அரசு. கம்யூனிஸ்டுகள் மகிழ்ச்சியாக இல்லை. நாளைக்கு ப.சிதம்பரம் தனது முதல் பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய இருக்கிறார். எப்படி இருக்கப்போகிறது பார்ப்போம்...''
''நீங்கள் என்னதான் நினைக்கிறீர்கள்?''
''காங்கிரஸ் எதுவும் செய்யாமல் இருந்தாலும் ஐக்கிய முன்னணி அரசு தானாகவே சண்டை போட்டுக்கொண்டு கவிழ்ந்துவிடும். காங்கிரஸில் சுமுகமாகத் தலைவர் மாற்றம் ஏற்பட நரசிம்ம ராவ் வழிவகுக்க வேண்டும். சிறுபான்மையினரின் நம்பிக்கையைப் பெற்ற, ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கிக் கொள்ளாத இளைஞர் ஒருவரின் தலைமை ஏற்பட்டால்தான், வாக்காளர்களின் நம்பிக்கையை காங்கிரஸ் மீண்டும் பெற முடியும்...''
''அந்த இளைஞரின் பெயர் ராஜேஷ் பைலட் என்று சொல்லலாமா?'' என்று கேட்டு நான் சிரித்தேன். அவரும் சிரித்தார்.
''இன்னும் இரண்டு மூன்று நாள்களில், நரசிம்ம ராவின் வழக்கு விசாரணைக்கு வருகிறது. வழக்குக்கு இடைக்காலத் தடை கிடைத்தால் நரசிம்ம ராவ் தப்பித்துக்  கொள்வார். இல்லையென்றால், பிரச்னைதான்.''
''என்னவாகும்?''
''அவர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய கட்டாயம் வந்தால், காங்கிரஸைக்கு அதைவிட அவமானம் எதுவும் இருக்க முடியாது.''
தொலைபேசி ஒலித்தது. சரத் பவார் வீட்டில் கூட்டம் நடைபெற இருக்கிறது என்பதை அவரது உரையாடலில் இருந்து தெரிந்து கொண்டேன். அவர் பேசி முடித்தபோது, நான் எழுந்து நின்றேன். கை குலுக்கி விடை பெற்றேன்.
அங்கிருந்து ஒருவர் பின் ஒருவராக வி.என். காட்கில் பட்டியலில் குறிப்பிடப்பட்டிருந்தவர்களை சந்தித்தேன். பதினைந்து பேரில் பத்து பேர் நரசிம்ம ராவ் பதவி விலக வேண்டும் என்று விரும்பினார்கள். இரண்டு பேர், கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லை. அவர்கள், சீதாராம் கேசரியும், ஏ.கே. அந்தோணியும். மூன்று பேர் நரசிம்ம ராவ் ஆதரவாளர்கள். அவர்கள் பிரணாப் முகர்ஜி, தேவேந்திர துவிவேதி, ஆர்.கே. தாவன்.
மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட அடுத்த நாள், சந்திரா சுவாமி மீது லண்டன் ஊறுகாய் வியாபாரி லக்குபாய் பதக் தாக்கல் செய்திருந்த மோசடி வழக்கில், முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் ஆஜராக வேண்டும் என்று தில்லி பெருநகர மாஜிஸ்டிரேட்டால் அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. அவர் ஆஜராவதற்கும், மோசடி 
வழக்கில் நரசிம்ம ராவ் சேர்க்கப்பட்டதற்கும் தடை விதிக்கக் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டிருந்தது. ராவின் சார்பில் வழக்குரைஞர் கபில் சிபல் ஆஜராகி வாதிட்டார்.
அந்த வழக்கின் விசாரணை முடிந்து அன்று தீர்ப்பு வரவிருந்தது. காங்கிரஸ் தலைமையகத்தில், தலைவரின் அறையில் பிரணாப் முகர்ஜி, ஆர்.கே. தாவன், வி.என். காட்கில், எஸ்.சி. சுக்லா, அதிசயமாக அன்று டாக்டர் மன்மோகன் சிங் ஆகியோர் தீர்ப்பை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். என்னுடன் சில நிருபர்களும் அந்த அறைக்கு வெளியேயும், தலைமையகக் கட்டடத்துக்குப் பின்னால் உள்ள பகுதியிலும் காத்துக் கொண்டிருந்தோம்.
தீர்ப்பு சற்று ஆறுதளிப்பதாக இருந்ததே தவிர, அவர்கள் யாருக்கும் எதிர்பார்த்த மகிழ்ச்சியை அளிக்கவில்லை. ராவ் மீதான வழக்குக்குத் தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. நீதிமன்றத்தில் ஆஜராவதற்குத் தடை விதிக்காமல், அன்று ஒருமுறை மட்டும் தடை விதித்து உத்தரவு பிறப்பித்திருந்தது.
ஒவ்வொருவராக வீட்டுக்குக் கிளம்பினார்கள். அந்த அறையிலிருந்து பிரணாப் முகர்ஜியும், டாக்டர் மன்மோகன் சிங்கும் மட்டும் வெளியே வரவில்லை. ''முந்திய நாள் ப. சிதம்பரம் தாக்கல் செய்திருந்த பட்ஜெட் குறித்து இருவரும் விவாதித்துக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார் மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் சியாமா சரண் சுக்லா.''
வீட்டுக்குக் கிளம்பும் நேரத்தில், என்னை அருகில் அழைத்தார் பிரணாப்தா.
''தமிழ்நாட்டில் என்னவெல்லாமோ நடந்து கொண்டிருக்கிறது. அதையெல்லாம் விட்டுவிட்டு, தில்லிலேயே சுற்றிக் கொண்டிருக்கிறாய் போலிருக்கிறது. தில்லி செய்திகளைக் கொடுப்பதற்குப் பலர் இருக்கிறார்கள். தமிழ்நாட்டுச் செய்திகளை வடநாட்டுப் பத்திரிகைகளுக்குத் தருவதற்குத்தான் சரியான ஆளில்லை. இருப்பதை விட்டுவிட்டு பறப்பதை பிடிக்க ஆசைப்படாதே...''
அருகில் நின்று கொண்டிருந்த வி.என். காட்கில், அவருக்கே உரித்தான நகைச்சுவை உணர்வுடன் இடைமறித்தார்.
''நீங்கள் யாரைக் குறிப்பிடுகிறீர்கள், தேவே கெளடாவையா, கருணாகரனையா?''
சுற்றி இருந்த அனைவரும் சிரித்துவிட்டனர். பிரணாப் முகர்ஜி காரில் ஏறிச் சென்றுவிட்டார்.

தமிழ்நாட்டுக்குத்தான் போகவில்லை, தமிழ்நாட்டு அரசியல் குறித்தாவது சில செய்திகளை சேகரிப்போம் என்று நினைத்துக் கொண்டேன். காங்கிரஸ் அலுவலகத்தில் உள்ள 'சாகர் ரத்னா' தென்னிந்திய உணவு விடுதியில் காபி அருந்திவிட்டுக் கிளம்ப முற்பட்டேன்.
அலுவலக கேட்டுக்கு வந்தபோது, பின்னாலிலிருந்து யாரோ அழைப்பது கேட்டது. திரும்பிப் பார்த்தேன் 'உதித்வாணி' என்கிற கன்னட தினசரியின் நிருபர்தான் அழைத்தார். எனது நல்ல நண்பர் அவர். அவரை நோக்கி நகர்ந்தேன்.
''நரசிம்ம ராவுக்கு இன்னொரு பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. அவருக்கு மட்டுமல்ல, காங்கிரஸைக்கும்...''
''என்ன அது?''
''மத்திய புலனாய்வுத் துறையின் (சி.பி.ஐ.) புதிய இயக்குநராக ஜோகிந்தர் சிங் நியமிக்கப்பட்டிருப்பதாக அறிவிப்பு வந்திருக்கிறது. தற்போதைய இயக்குநரான விஜய ராமா ராவுக்குப் பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று நரசிம்ம ராவ், பிரதமர் தேவே கெளடாவை வற்புறுத்தி இருந்தார். சொல்லப்போனால், சோனியா காந்தியின் விருப்பமும் அதுதான்.''
''ஏன் பிரதமர் இப்படியொரு முடிவை எடுத்தார்?''
''காங்கிரûஸ எரிச்சலூட்டவும், பலவீனப்படுத்தவும்கூட எடுத்திருக்கலாம். இந்த முடிவுக்குக் காரணம், தேவே கெளடாவா இல்லை உள்துறை அமைச்சர் இந்திரஜித் குப்தாவா என்று தெரியவில்லை. ஜோகிந்தர் சிங் கர்நாடக மாநில கேடரைச் சேர்ந்தவர் என்பதால், பிரதமரின் முடிவாகக்கூட இருக்கலாம்.''
அவர் இன்னொரு தகவலையும் பகிர்ந்து கொண்டார். பாதுகாப்பு அமைச்சர் முலாயம் சிங் யாதவ், முக்கியமான பொறுப்புகளில் நியமிப்பதற்கான அதிகாரிகளின் பட்டியலைப் பிரதமரிடம் தந்திருப்பதாகச் சொன்னார் அவர். பிரதமர் தேவே கெளடா அதிர்ச்சி அடைந்திருப்பதாக அவர் தெரிவித்ததில் உண்மை இல்லாமல் இல்லை!

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com