'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 142

எதுவுமே செய்யாமல், எதிர்பாராமல் சில நிகழ்வுகள் நடந்து விடுகின்றன.
'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 142

எதுவுமே செய்யாமல், எதிர்பாராமல் சில நிகழ்வுகள் நடந்து விடுகின்றன. அப்படித்தான் 'புதிய பார்வை' ஆசிரியர் ம. நடராசனின் ஜாமீன் வழக்கிலும் நடந்தது. நான் யாரையும் தொடர்பு கொள்ளவோ, பேசவோ இல்லை. ஆனால், உச்சநீதிமன்றத்தில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதற்கு நான்தான் காரணம் என்று அவர் உள்பட எல்லோருமே நம்பினார்கள்.
ஜாமீனில் விடுவிக்கப்பட்டதும் நடராசன் என்னைத் தொலைபேசியில் அழைத்து நன்றி தெரிவித்தபோது நான் நெளிந்தேன். ஜாமீனுக்கும் எனக்கும் தொடர்பில்லை என்று தெரிவிக்கக் கூட அவகாசம் தராமல் இணைப்பைத் துண்டித்துவிட்டார். 
எனக்கு என்ன ஆச்சரியம் என்றால், எனக்கு எந்தவிதத் தொடர்பும் இல்லாத நடராசன் ஜாமீன் விவகாரம், தில்லியில் உள்ள பல தலைவர்களுக்கும் தெரிந்திருந்தது என்பதுதான். யார் அதற்குக் காரணம் என்று இன்றுவரை யோசித்துக் கொண்டு இருக்கிறேன், விடை கிடைக்கவில்லை.
நான் அக்பர் ரோடு காங்கிரஸ் அலுவலகம் சென்றேன். தமிழக காங்கிரஸில் இருந்து தமிழ் மாநில காங்கிரஸ் பிரிந்த பிறகு, கட்சித் தலைமைக்கு விசுவாசமாக இருந்த தலைவர்கள் அனைவருமே தேர்தலில் தோல்வி அடைந்திருந்தனர். நரசிம்ம ராவின் தலைமையை விமர்சித்து வெளியேறிய வாழப்பாடி கூ.ராமமூர்த்தி மீண்டும் கட்சியில் இணைந்திருந்த நிலையில், அவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக நியமிக்கப்படலாம் என்கிற வதந்தி நிலவியது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் குமரி அனந்தன், கட்சிப் பிளவையும், திமுகவுடனான உறவையும் எதிர்த்து காங்கிரஸிலேயே தொடர்ந்த திண்டிவனம் ராமமூர்த்தி, முன்னாள் அமைச்சர்கள் ஆர். பிரபு, கே.வி. தங்கபாலு, முன்னாள் எம்.பி.க்கள் இரா. அன்பரசு, எம். கிருஷ்ணசாமி உள்ளிட்ட பலரும் தில்லியில் முகாமிட்டிருந்தார்கள். தலைமை மாற்றம் வரப்போகிறது என்கிற கருத்து பரவலாக நிலவியது. 
ஆர்.கே. தாவன், வி.என். காட்கில், குலாம் நபி ஆசாத் ஆகியோரிடம் 'என்ன நடக்கப் போகிறது?' என்று கேட்டபோது 'தெரியாது' என்கிற ஒரே பதில்தான் கிடைத்தது. தன்னை மீண்டும் தலைவராக்குவார்கள் என்கிற நம்பிக்கையில் இருந்தார் வாழப்பாடி ராமமூர்த்தி என்றால், ஜி.கே. மூப்பனாரின் 'மனசாட்சிக் காவலர்' என்று கருதப்பட்டும் கட்சிக்கு விசுவாசமாக இருந்ததற்காகத் தனக்குத்தான் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி வழங்கப்படும் என்று உறுதியாக நம்பி இருந்தார் திண்டிவனம் ராமமூர்த்தி.
காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு விவகாரத்தை அப்போது கவனித்து  வந்தவர் ஜனார்தன் பூஜாரி.  இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி, நரசிம்ம ராவ், சோனியா காந்தி என்று காங்கிரஸ் தலைவர்கள் அனைவரிடமும் நம்பிக்கையைப் பெற்ற தலைவராகத் திகழ்ந்தவர் அவர்.  1977-இல் நடைபெற்ற தேர்தலில் மங்களூர் மக்களவைத் தொகுதியில் இருந்து முதன்முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் அவர். அதற்குப் பிறகு தொடர்ந்து மூன்று மக்களவைத் தேர்தல்களில் அந்தத் தொகுதியைத் தக்க வைத்துக் கொள்ளவும் அவரால் முடிந்தது. 1994 முதல் 2008 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர் அவர்.

1982-இல் பிரணாப் முகர்ஜி நிதியமைச்சரானபோது, ஜனார்தன் பூஜாரியை நிதித்துறை இணையமைச்சராக நியமித்தார் பிரதமர் இந்திரா காந்தி. அவருக்கு வங்கித் துறை ஒதுக்கப்பட்டது. அப்போதுதான் அனைவருக்கும் வங்கிக் கடன் என்பதை அறிமுகப்படுத்தினார் பூஜாரி.  காங்கிரஸ்காரர்கள் கை காட்டும் நபர்களுக்குப் பொதுத்துறை வங்கிகளில் சிறுகடன்கள் வழங்கப்படும் என்பதை எழுதப்படாத சட்டமாகவே மாற்றினார் அவர்.

ஜனார்தன் பூஜாரியின் வங்கிக் கடன் திட்டத்தில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு உடன்பாடு இருக்கவில்லை. 'வங்கிகள் திவாலாகிவிடும்' என்கிற பிரணாப் முகர்ஜியின் எச்சரிக்கையைப் புறந்தள்ளி, ஜனார்தன் பூஜாரியின் வங்கிக் கடன் திட்டத்துக்கு இந்திரா காந்தி பச்சைக்கொடி காட்டியதற்குக் காரணம் இருந்தது. வங்கிக் கடன்கள் மூலம் காங்கிரஸூக்கு வாக்கு வங்கியை உருவாக்க முடியும் என்பதை அவர் புரிந்து வைத்திருந்தார்.

ராஜிவ் காந்தி அமைச்சரவையிலும் நிதித்துறை இணையமைச்சராகத் தொடர்ந்த ஜனார்தன் பூஜாரி, பிறகு ஊரக வளர்ச்சித் துறை இணையமைச்சராகவும் பணியாற்றினார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர், கர்நாடக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் என்று தொடர்ந்து முக்கிய பொறுப்புகளை வகித்த ஜனார்தன் பூஜாரியின் நிறைவேறாத கனவு ஒன்று உண்டு. அது, கர்நாடக முதல்வராவது...!
பிரதமர் இந்திரா காந்தி அமைச்சரவையில் இணையமைச்சராக அவர் இருந்தது முதலே எனக்கு ஜனார்தன் பூஜாரியைத் தெரியும் என்பதால், அவருக்கும் என்னிடம் தனிப்பட்ட அன்பு இருந்தது. எங்கே பார்த்தாலும் அழைத்துப் பேசுவார் என்பது மட்டுமல்ல, எனக்கு நிறைய ஆலோசனைகளும், அறிவுரைகளும்கூட வழங்குவார். வழக்குரைஞராக வாழ்க்கையைத் தொடங்கியவர் என்பதால், இயல்பாகவே எந்தவொரு பிரச்னையையும் விவாதிக்கும் வழக்கம் அவருக்கு இருந்தது.
என்னைப் பார்த்துவிட்டால், தமிழக அரசியல் குறித்து என்னை பேசவிட்டு அதிலிருந்து அவர் பல செய்திகளைத் தெரிந்து கொள்வார். அதை வேறு சிலரிடம் கேட்டு, அதன் உண்மைத் தன்மையை உறுதி செய்து கொள்வதும் அவரது வழக்கம். என்னிடமும் அதுபோல, அவர் கேள்விப்பட்ட விஷயங்கள் குறித்து விசாரிப்பார்.
தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் என்பதால், அடுத்தாற்போல யார் தலைவராக வருவார் என்று தெரிந்துகொள்ள ஜனார்தன் பூஜாரியைத் தேடிப் போனேன்.
''தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைமையில் மாற்றம் ஏதாவது வரப்போகிறதா?''
''இன்னும் எதுவும் முடிவாகவில்லை. கட்சிக்கு விசுவாசமாக இருந்த ஒவ்வொருவரும் தலைமைப் பொறுப்புக்குக் காத்திருக்கிறார்கள். ஒவ்வொருத்தருக்கும் ஒரு 'காட் ஃபாதர்' இருக்கிறார். அவர்களையும் திருப்திப்படுத்தியாக வேண்டும். தலைவர் நரசிம்ம ராவ்ஜிதான் முடிவெடுக்க வேண்டும்...

''அவர் தனக்கு எதிரான வழக்குகளை சமாளிப்பதில் முனைப்புக் காட்டுவாரா, தனது கட்சித் தலைமையைத் தக்க வைத்துக் கொள்வதில் கவனம் செலுத்துவாரா, இல்லை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவரை நியமிப்பதில் அக்கறை செலுத்துவாரா?''
நான் அப்படிக் கேட்டது ஜனார்தன் பூஜாரிக்குப் பிடிக்கவில்லை. அதை அவரது முகம் தெரிவித்தது.
''நீங்கள் ஒரு பத்திரிகையாளர். அந்த எல்லையைத் தாண்டி எங்கள் கட்சியையோ, தலைவரையோ விமர்சிப்பதை நான் அனுமதிக்க முடியாது. ஐந்து ஆண்டுகள் பிரதமராக இதைவிடப் பல மடங்கு பெரிய பல பிரச்னைகளைக் கையாண்டவர் பி.வி. என்பதை நீங்கள் மறந்து விடாதீர்கள். ஏதாவது முடிவு ஏற்பட்டால் தெரிவிக்கிறேன்'' என்று கூறி முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.
தவறாகப் பேசி அவரின் அதிருப்தியை சம்பாதித்துக் கொண்டேன் என்று என்னை நானே நொந்தபடி அவரது அறையிலிருந்து வெளியில் வந்தேன். அங்கே அவரை சந்திக்க தமிழகத்திலிருந்து வந்திருந்த பெரும்பாலான தலைவர்கள் காத்திருந்தனர். அவர்கள் பெயரை எல்லாம் சொல்வதானால் பட்டியல் நீளும். அவர்களுடன் சிறிது நேரம் பேசிவிட்டு வெளியே வந்து விட்டேன். 
கட்டடத்தின் பின்புறம் அமைந்திருந்த பிரணாப் முகர்ஜியின் அறையில் அவருடன் ஆர். பிரபு இருந்தார். கதவு திறந்திருந்ததால், நான் வந்தது பிரணாப்தாவின் கண்ணில் பட்டது. உள்ளே அழைத்தார். ஓர் ஓரமாக இருந்த நாற்காலியில் அமர்ந்தேன். மோஜைக்கு அருகில் இருந்த நாற்காலிக்கு வரச் சொன்னார்.
''தமிழ்நாட்டில் எவ்வளவோ நடக்கிறது, நீ என்னவென்றால் தில்லியே கதியென்று இங்கேயே சுற்றிக் கொண்டிருக்கிறாய்.  நடராசனுக்கு ஜாமீன் வாங்கிக் கொடுப்பதற்காகவா தில்லியில் இருந்தாய்?'' என்கிற பிரணாப் முகர்ஜியின் கேள்வி என்னைத் திடுக்கிட வைத்தது. எனக்குத் தொடர்பே இல்லாத ஒன்று எப்படி, யாரால் அனைவரிடமும் பரப்புரை செய்யப்பட்டது என்று தெரியாமல் திகைத்தேன்.
''எனக்கும் அதற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. ஆனால், எல்லோரும் நான்தான் ஜாமீன் வாங்கிக் கொடுத்தேன் என்கிறார்கள். யார் இப்படியொரு வதந்தியைக் கிளப்பியது என்று தெரியவில்லை.''
பிரணாப்தாவும் சிரித்தார். பிரபுவும் சிரித்தார். பிறகு பிரணாப் முகர்ஜியே தொடர்ந்தார்.
''ஆக்ஷன் ஹாஸ் ஷிப்டட் டூ செளத். தென்னிந்தியாவில்தான் பல நிகழ்வுகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இங்கே அடுத்த சில வாரங்களுக்கு எதுவும் நடந்துவிடாது. காங்கிரஸில் நிச்சயமாக பிளவு ஏற்படாது. தேவே கெளடா ஆட்சியும் கவிழாது. நரசிம்ம ராவ் தலைவர் பதவியை ராஜிநாமா செய்துவிடவும் போவதில்லை. தேவையில்லாமல் தில்லியை வலம்வராமல், சென்னைக்குத் திரும்புவதுதான் உனது செய்தி நிறுவனத்துக்கு நல்லது.''
'சரி' என்பதுபோலத் தலையாட்டினேன். பிரணாப் முகர்ஜி தொடர்ந்தார்.
''ஜி.கே.எம். கேம்பில் என்ன நடக்கிறது என்று ஏதாவது தெரியுமா?''
''மூப்பனார்ஜி சென்னையில் இருக்கிறார். அதனால் அங்கே எதுவும் நடக்க வழியில்லை. காவிரி நீர் பேச்சுவார்த்தைக்காகக் கர்நாடக முதல்வர் ஜே.எச். பாட்டீலும், பிரதமர் தேவே கெளடாவும் சென்னை வருவதாக இருக்கிறார்கள். மூப்பனாரும் அதனால் அங்கேதான் இருக்கிறார் என்று சொன்னார்கள்.''
''காவிரிப் பிரச்னை சுமுகமாகத் தீர்ந்துவிடாது என்றாலும், இப்போதைக்குப் பிரச்னை இல்லாமல் பார்த்துக் கொள்வார்கள். தேவே கெளடாவுக்குப் பிரச்னையாகப் போவது திமுகவாக இருக்காது. தெலுங்கு தேசமாகத்தான் இருக்கும்'' - சொன்னவர் பிரபு.
''எச்சரிக்கை வெளியிட்டிருக்கிறார் முதல்வர் நாயுடு. கர்நாடக முதல்வரும் பிடிவாதம் பிடிப்பதாகத் தெரிகிறது'' என்றேன் நான்.
பிரணாப் முகர்ஜி எதுவும் சொல்லவில்லை. சற்று நேரம் அமைதி நிலவியது. பிறகு அவர் மெல்லப் பேசத் தொடங்கினார்.
''எந்தப் பிரச்னைக்கும் இந்த ஆட்சியில் தீர்வுகாண முடியாது. ஆனால் ஆட்சி கவிழ்ந்தவிடக் கூடாது என்பதில் அனைவரும் ஒற்றுமையாக இருப்பார்கள். காங்கிரஸூக்கு இவர்களை ஆதரிப்பதைத் தவிர வேறுவழியில்லை என்பதை அவர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள். அதுதான் அவர்களது பலம்.''
''நரசிம்ம ராவ் ஏதாவது சொன்னாரா?''
'இல்லை' என்று தலையை மட்டும் ஆட்டினார் பிரணாப் முகர்ஜி.
''பாஜக அலுவலகத்தில் கே.ஆர். மல்கானியை சந்தித்தேன். அவர் ஒரு கருத்து சொன்னார்.''
''என்ன அது?''
''ஐக்கிய முன்னணியில் இருக்கும் மாநிலக் கட்சிகள் எல்லாம் வருங்காலத்தில் பாஜகவுக்கு ஆதரவளித்து ஆட்சி அமைக்க உதவப் போகின்றன. பலவீனமாகி மெல்ல மெல்லக் கரையப் போவது காங்கிரஸ் கட்சிதான் என்பது அவரது கருத்து.''
''காங்கிரஸை அவ்வளவு எளிதில் கரைத்துவிட முடியாது. அவர் சொன்னதுபோல இந்தக் கட்சிகள் பாஜகவுடன் கூட்டணி அமைப்பது வேண்டுமானால் நடக்கும். நாளை காலை எனது வீட்டுக்கு வா. ஒரு கடிதம் தருகிறேன். அதை நீயே நேரில்போய் கொடுக்க வேண்டும். தில்லியில் இருந்து சென்னைக்குக் கிளம்பு...''
அடுத்த நாள் கிரேட்டர் கைலாஷில் உள்ள பிரணாப் முகர்ஜியின் வீட்டுக்குப் போனபோது கொல்கத்தாவில் இருந்து வந்திருந்த சிலர் அவருடன் பேசிக் கொண்டிருந்தனர். நான் வந்திருப்பதாகச் சொன்னதும் அவரது அலுவலக அறைக்கு அழைக்கப்பட்டேன். 
தயாராக வைத்திருந்த கடிதம் உள்ள கவரை எடுத்து நீட்டினார். உரையின் மீது எழுதப்பட்டிருந்த பெயரைப் பார்த்ததும் நான் திடுக்கிட்டேன். நிச்சயமாக அதை நான் எதிர்பார்க்கவில்லை.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com