

ஹுமாயூன் சாலையில் உள்ள கான்ஷிராமின் வீட்டுக்கு நான் சென்றபோது, வீட்டு வாசலில் பத்திரிகையாளர்களுக்கும், பாதுகாவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தது. கடைசியாக சென்ற நான் அந்தக் கூட்டத்தில் சேர்ந்து கொள்ளாமல் சற்று நேரம் ஒதுங்கியே இருந்தேன்.
பிறகு, அந்தக் கூட்டத்தில் மெல்ல புகுந்து, வெளிப்புற கேட்டை நெருங்கி விட்டேன். கேட்டுக்குள் யாரும் நுழைய முடியாதபடி பாதுகாவலர்கள் கதவை மூடியிருந்தனர். அந்தக் கதவின் மீது கை வைத்ததுதான் தாமதம். பாதுகாவலர் ஒருவர் எனது கையில் தடியால் ஓர் அடி அடித்துவிட்டார்.
அலறியபடியே நான் கையை எடுப்பதற்குள், 'பத்திரிகையாளரை எப்படி நீங்கள் அடிக்கலாம்?' என்று சில ஊடக நண்பர்கள் குரல் கொடுத்தபடி, உரத்த குரலில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அந்த அமர்க்களத்தைக் கேட்டு கோபத்துடன் வெளியே வந்த கான்ஷிராம், 'மாயாவதி இப்போது யாரையும் பார்க்க மாட்டார். அவர் எதுவும் கூற விரும்பவில்லை' என்றார்.
'அதை அவர் வந்து சொல்லட்டும். நீங்கள் யார் சொல்வதற்கு? அவரை நீங்கள் கொத்தடிமையாகப் பூட்டி வைத்திருக்கிறீர்கள்' என்பதில் தொடங்கி, சில உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் ஹிந்தியில் ஆவேசமாகப் பேசினார்கள். அவர்கள் வரம்பு மீறித் தெரிவித்த சில குற்றச்சாட்டுகள் கான்ஷிராமை கோபத்தின் உச்சத்துக்கே கொண்டு சென்றது.
அந்த நிருபரின் கன்னத்தில் கான்ஷிராம் 'பளார்' என்று ஒரு அறை விட்டார். தலைவர் கான்ஷிராமே கன்னத்தில் அறைந்துவிட்டார் என்றபோது தொண்டர்கள் பேசாமலா இருப்பார்கள்? அவர்களும் நிருபர்களைத்தாக்கத் தொடங்கினர்.
சட்டென கேட் திறந்தது. உள்ளேயிருந்து வெளியே வந்த பாதுகாவலரின் முதல் குறியே நானாகத்தான் இருந்தேன். சரமாரியாகத் தடியடியில் இறங்கினார்கள் பாதுகாவலர்கள். இன்னொருபுறம், கூடியிருந்த தொண்டர்கள் தங்கள் பங்குக்கு அங்கிருந்த பத்திரிகை நிருபர்களைத் தாக்கத் தொடங்கினார்கள்.
நானும் ஏனைய சில பத்திரிகையாளர்களும் அந்தத் தாக்குதலில் இருந்து தப்பி, அக்கம்பக்கத்து வீடுகளின் தோட்டங்களில் தஞ்சமடைந்தோம். அடுத்த அரை மணி நேரம் கான்ஷிராமின் ஹுமாயூன் சாலை வீட்டு வாசல் ஒரு கலவர பூமியாகக் காட்சியளித்தது.
காவல் துறையினரைத் தொடர்ந்து அவசர மருத்துவ ஊர்தி (ஆம்புலன்ஸ்) வந்தது. தடியடியால் எழுந்திருக்க முடியாமல் ஆங்காங்கே விழுந்து கிடந்த பத்திரிகையாளர்கள் சாக்கு மூட்டைகள் போல, ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்டனர். ஒரு வழியாக எல்லா பரபரப்பும் அடங்கும் வரையில், அக்கம்பக்கத்து வீட்டுத் தோட்டத்தில் அடைக்கலம் புகுந்திருந்த என்னைப் போன்ற பத்திரிகையாளர்கள் ஒருவர் பின் ஒருவராக வெளியே வந்தோம்.
அவர்களில் எனக்கு மட்டும்தான் தடியடி பாக்கியம் கிடைத்திருந்தது. ஏற்கெனவே இடது கை விரல்கள் வீங்கியிருந்தது போதாது என்று இப்போது முதுகிலும், தொடையிலும் தடியடியால் ஏற்பட்ட வேதனையும் சேர்ந்து கொண்டது. வங்காள பத்திரிகை நிருபர் ஒருவர் என்னைக் கைத்தாங்கலாக அழைத்துச் சென்றுஆட்டோவில் ஏற்றிவிட்டார்.
பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்ட சம்பவம் அப்போது தலைநகர் தில்லியில் மட்டுமல்ல, நாடு தழுவிய அளவில் பரபரப்புச் செய்தியாகியது. இப்போதைய அளவில் காட்சி ஊடகங்களும், சமூக ஊடகங்களும் இல்லை என்றாலும், எல்லா பத்திரிகையாளர்களும் கொதித்து விட்டனர்.
கான்ஷிராம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி பெரிய போராட்டத்துக்குத் தயாரானார்கள் பத்திரிகையாளர்கள். மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஐந்தாறு பத்திரிகையாளர்களுடன் நான் சேரவில்லை. மருத்துவமனையில் முதலுதவி எடுத்துக்கொண்டு எனது அறையில் ஓய்வெடுத்துக் கொண்டேன்.
அடுத்த நாள் மிகப் பெரிய ஆர்ப்பாட்டத்துக்கு, அனைத்து பத்திரிகையாளர் சங்கங்களும் அழைப்பு விடுத்திருந்தன. முதல் நாள் எதிர்கொண்ட தாக்குதலின் வேதனையில் இருந்து மீள முடியாமல் இருந்த நான் கலந்துகொள்ளவில்லை. ஆனால், நூற்றுக்கணக்கான பத்திரிகையாளர்கள், ரஃபி மார்க்கிலுள்ள இந்திய பத்திரிகையாளர் சங்கம் (ஐ.என்.எஸ்.) கட்டடத்திலிருந்து, உள்துறை அமைச்சரின் அலுவலகமான நார்த் பிளாக்கை நோக்கி ஊர்வலமாகச் சென்றனர்.
அந்த ஊர்வலத்தைத் தடுக்க காவல்துறையினர் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டதாகவும், அந்தத் தடையை மீறி ஊர்வலமாகச் சென்றதால் அவர்கள் மீது கண்ணீர்ப் புகைக் குண்டு வீச்சும், தண்ணீர் பீய்ச்சும் நடத்தப்பட்டதாகவும் சொன்னார்கள். நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவு இடப்படும் என்று உள்துறை அமைச்சர் இந்திரஜித் குப்தா தெரிவித்ததுடன், பிரச்னைக்கு முற்றுப்புள்ளி விழுந்தது.
மூன்று நான் ஓய்வுக்குப் பிறகு, உடல்வலி குறைந்ததும் நான் செய்த முதல் வேலை, ஹுமாயூன் சாலை கான்ஷிராமின் வீட்டைத் தொடர்பு கொண்டதுதான். நேரடியாக கான்ஷிராம், மாயாவதி என்று கேட்காமல், நண்பர் அம்பேத்ராஜன் இருக்கிறாரா என்று கேட்டேன்.
'நீங்கள் யார், உங்களுக்கு அம்பேத்ராஜனை எப்படித் தெரியும்' என்றெல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்ட பிறகு, 'அம்பேத்ராஜன் இதர் நஹி ஹை!' என்று எனது பதிலை எதிர்பார்க்காமல் தொலைபேசி துண்டிக்கப்பட்டது.
எதிர்முனையில் தொலைபேசியை எடுத்துப் பேசியது மாயாவதிதான் என்று தெரிந்தது. உடனே மறுபடியும் 0114631353 எண்ணைச் சுழற்றினேன். இப்போது எடுத்தவர் கான்ஷிராம். அவர் கேட்பதற்கு முன்பே எனது பெயரைத் தெரிவித்ததால் இணைப்பு துண்டிக்கப்பட்டவில்லை. என்னை ஏற்கெனவே தெரியும் என்பதாலும், சென்னையில் பெசன்ட் நகர் சந்தோஷ் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்கு வந்திருந்தபோது பலமுறை ம. நடராசனுடன் சந்தித்திருந்த நெருக்கத்தாலும், உடனே சகஜமாகப் பேசத் தொடங்கினார். சந்திக்க வரலாமா என்று கேட்டபோது, உடனேயே வரச் சொன்னார்.
மூன்று நாள்களுக்கு முன்னால் கலவர பூமியாக இருந்த ஹுமாயூன் சாலை வீடு, இப்போது அமைதியாகக் காட்சி அளித்தது. வழக்கமான சிநேக பாவத்துடனும், நட்புறவுடனும் கான்ஷிராமே வந்து கதவைத் திறந்து உள்ளே அழைத்துச் சென்றார். அன்று நடந்த சம்பவத்தைத் தவிர்த்து, அரசியல் நிலவரங்கள் குறித்துப் பேசிக் கொண்டிருந்தோம்.
மெதுவாக எனக்கு ஏற்பட்ட நிலைமை குறித்துப் பிரஸ்தாபித்தபோது, அவரது முகம் சற்று மாறியது. உடனே சுதாரித்துக் கொண்டார். மாயாவதியை அழைத்தார்.
'நான் சொல்வதைவிட நீங்கள் மாயாவதியிடமே கேட்டுக் கொள்ளுங்கள். உங்களுக்கு முழுமையான செய்தி தெரியாது. அவர் சொல்வார்' என்று கான்ஷிராம் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, மாயாவதி அங்கே வந்துவிட்டார்.
அதற்கு முன்னர் மாயாவதியுடன் எனக்கு நேரடியாகத் தொடர்பு கிடையாது. பலமுறை அவருடனான பேட்டிக்கு ஏற்பாடு செய்து தரும்படி அம்பேத்ராஜனைக் கேட்டும், பலனில்லை (பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் இரண்டு முறை மாநிலங்களவை உறுப்பினராக இருந்த அம்பேத்ராஜன் சமீபத்தில் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்திருக்கிறார்).
கான்ஷிராமின் அறிமுகத்துக்குப் பிறகு, என்னுடைய கேள்விக்கே காத்திருக்காமல், மாயாவதி பேசத் தொடங்கினார்.
'வெளியில் பேசப்பட்டது பாதி உண்மை, பாதி பொய். நீங்கள் முறையாகத் தொடர்பு கொண்டு, வரச்சொன்ன பிறகு எங்களை சந்திக்கிறீர்கள். அப்படி அல்லாமல், எந்தவித முன் அனுமதியும் பெறாமல் வலுக்கட்டாயமாகச் சிலர் வீட்டுக்குள் நுழைந்தனர். என்னைப் பார்க்க வேண்டும், என்னிடம் விளக்கம் கேட்க வேண்டும் என்று அவர்கள் பிடிவாதம்செய்தனர்.'
'நீங்கள் என்ன செய்தீர்கள்?'
'என் கையைப் பிடிக்க ஒருவர் முற்பட்டார். முறைகேடாக நடந்துகொள்ள அவர்கள் முயன்றனர். அந்தக் கும்பலில் பத்திரிகையாளர்கள் என்கிற போர்வையில் சமூக விரோதிகளும், கிரிமினல்களும் இருந்ததை நாங்கள் புரிந்துகொண்டோம். அவர்களைப் பாதுகாவலர்கள், கட்சித் தொண்டர்கள் உதவியுடன் வீட்டுக்கு வெளியே தள்ளி கேட்டை மூடிவிட்டோம்.'
'அதற்குப் பிறகு வெளியில் வந்து கான்ஷிராம்ஜி ஒரு பத்திரிகையாளரை அறைந்ததாகச் சொல்லப்படுவது...'
'அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லை. அவர்கள்தான் என்னையும், அவரையும் தாக்க திட்டமிட்டிருந்தனர். இதற்குப் பின்னால் ஓர் அரசியல் கட்சியும் அதன் தலைவரும் இருப்பது எங்களுக்குத் தெரியும். இந்த சம்பவம் குறித்துப் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று நான் உள்துறை அமைச்சர் இந்திரஜித் குப்தாவுக்குக் கடிதம் அனுப்பி இருக்கிறேன்...'
இதைச் சொல்லிவிட்டு மாயாவதி எழுந்து உள்ளே போய்விட்டார். கான்ஷிராம் என்னைப் பார்த்தார்.
'அடுத்ததாக உங்கள் அரசியல் நகர்வு என்ன?'
'உத்தர பிரதேசத்தில் கவர்னர் ஆட்சி அமல்படுத்தி இருக்கிறார்கள். சட்டப் பேரவையைக் கலைக்கவில்லை. எப்போது மாயாவதியை அவர்கள் முதல்வராக ஏற்றுக் கொள்கிறார்களோ, அப்போது ஆட்சி அமையும். இல்லாவிட்டால், மீண்டும் தேர்தல் அமையும்.'
மிகவும் தெளிவாகவும், தீர்மானமாகவும் சொன்னார் கான்ஷிராம். அவர் சொன்னதுபோல மட்டுமல்ல, நினைத்தது போலவும்தான் நடந்தது என்பது வரலாறு கூறும் உண்மை.
கான்ஷிராமை சந்தித்துவிட்டுப் பொடிநடையாக அருகிலுள்ள ஷாஜஹான் சாலை எம்.பி.க்கள் குடியிருப்பில் இருந்த வி.என். காட்கில் வீட்டுக்கு வந்தேன். அவர் அவசரமாக வெளியில் கிளம்பிக் கொண்டிருந்ததாகச் சொன்னார்கள். காத்திருந்தேன். என்னைப் பார்த்ததும், தன்னுடன் காரில் ஏறிக்கொள்ளச் சொன்னார்.
'இன்று இரண்டு சோதனைகளை பி.வி. எதிர்கொள்கிறார்' என்றார் வி.என். காட்கில்.
'தனி நீதிமன்றத்தில் ஆஜராகிறார் என்பது தெரியும். இன்னொரு சோதனை என்ன?' என்று கேட்டேன் நான்.
'ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.பி.க்களுக்கு லஞ்சம் அளித்ததாகக் கூறப்படும் வழக்கில் பி.வி. மீது இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுகிறது. ஏற்கெனவே லக்குபாய் பாதக், செயின்ட் கிட்ஸ் போதாதென்று இதுவும் சேர்ந்து கொண்டிருக்கிறது.'
வி.என். காட்கில் மெளனமானார். அந்த வழக்கில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.பி.க்கள் மட்டுமல்லாமல், பூட்டா சிங், சதீஷ் சர்மா, வி.சி. சுக்லா, ஆர்.கே. தவான், அஜித் சிங், பஜன்லால் ஆகியோரும் சேர்க்கப்பட்டிருந்தனர். அதை யோசித்துக் கொண்டிருக்கும்போது, எங்கள் கார் மெளலானா ஆசாத் சாலையில் உள்ள விஞ்ஞான் பவன் வளாகத்தில்நுழைந்தது.
முன்னாள் பிரதமர் ஒருவர் நீதிமன்றத்தில் ஆஜராவது இதுதான் முதன்முறை என்பதால், அந்த சிறப்பு நீதிமன்றத்தில் பலத்த காவல் போடப்பட்டிருந்தது. நாங்கள் அங்கே செல்வதற்கு முன்பே, அந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் கே.கே. திவாரி மட்டுமல்லாமல், சந்திராசுவாமி, கைலாஷ்நாத் அகர்வால் போன்றவர்களும் அங்கே இருந்தனர்.
குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவின் முன்ஜாமின் ரத்து செய்யப்பட வேண்டும், அவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை சிபிஐ முன்வைத்தது.
தலைமைப் பெருநகர நீதிமன்ற நீதிபதி பிரேம் குமாரின் சிறப்பு நீதிமன்றத்தில் ஓர் ஓரமாக வி.என். காட்கிலுடன் அமர்ந்திருந்த நான், நரசிம்ம ராவின் முகத்தைக் கூர்ந்து கவனித்தேன்.
எந்தவிதச் சலனமுமில்லாமல் நீதிபதியின் முன்னால் நின்று கொண்டிருந்தார் இந்தியாவின் முன்னாள் பிரதமர்!
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.