

சிறப்பு நீதிமன்றத்தில் முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்ம ராவின் ஜாமீன் மனு மீதான தனது தீர்ப்பை ஒத்திவைப்பதாகத் தலைமைப் பெருநகர நீதிபதி பிரேம்குமார் தெரிவித்தபோது, அங்கே நிசப்தம் நிலவியது. பலத்த பாதுகாப்புடன் நரசிம்ம ராவ் அந்த வளாகத்தில் இருந்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து, தலைவர்கள் அவரவர் காரில் பின் தொடர்ந்தனர்.
வி.என். காட்கில், ஸ்ரீகாந்த் ஜிச்கர், புவனேஷ் சதுர்வேதி உள்ளிட்ட எனக்குத் தெரிந்த தலைவர்கள் அனைவரும் சென்றுவிட்டிருந்த நிலையில், விஞ்ஞான் பவன் வளாகத்தில் இருந்து நான் வெளியே வந்தேன். விஞ்ஞான் பவன் அமைந்திருக்கும் மெளலானா ஆசாத் சாலையில் இருந்து, காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்துக்குப் பின்புற வாசல் வழியாக நுழைய முடியும். காங்கிரஸ் அலுவலகம் நோக்கி நான் நடக்கத் தொடங்கினேன்.
கட்சித் தலைவர் சீதாராம் கேசரி தனது அறையில் இருப்பதாகவும், தீவிர ஆலோசனை நடைபெறுவதாகவும் அங்கே குழுமியிருந்த சில தொண்டர்கள் என்னிடம் தெரிவித்தனர். அவர்களில் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ஒன்றிரண்டு எம்.எல்.ஏ.க்களும் இருந்தனர். அவர்கள் காங்கிரஸ் தலைமையகத்தில் காணப்பட்டதற்குக் காரணம் இருந்தது.
உத்தர பிரதேசத்தில் ஆளுநர் ஆட்சி முற்றுக்குக் கொண்டுவரப்பட்டு, தனிப்பெரும் கட்சியான பாஜக ஆட்சியமைக்க அழைக்கப்படும் என்கிற செய்திதான், அவர்களது பரபரப்புக்குக் காரணம். அந்த மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தியது தொடர்பான மசோதாவுக்கு, நாடாளுமன்ற அங்கீகாரம் பெறப்பட வேண்டும். திமுக உள்ளிட்ட ஆளுநர் ஆட்சிக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட கட்சிகள் அந்த மசோதாவை ஆதரிக்கத் தயாராக இல்லை. காங்கிரஸின் நிலைப்பாடும் தெளிவாகத் தெரியாத நிலைமை.
வாக்கெடுப்பில் ஐக்கிய முன்னணி அரசு தோல்வியடைந்தால், ஆட்சி கவிழ்ந்துவிடும். அதனால், பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்து, குடியரசுத் தலைவர் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து தர்மசங்கடத்தைத் தவிர்க்க விரும்பியது கெளடா அரசு. வாக்கெடுப்பில் பாஜக பங்கேற்காமல் இருந்தாலே போதும், அரசு பிழைத்துவிடும்.
பாஜக ஆட்சி அமைவதைத் தடுக்க வேண்டும் என்கிற கோரிக்கையுடன்தான் அந்த மாநிலத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏக்களும், தொண்டர்களும் காங்கிரஸ் தலைமையகத்தில் குழுமி இருந்தனர். அது குறித்த விவாதம்தான் தலைவர் சீதாராம் கேசரியின் அறையில் நடந்து கொண்டிருந்தது.
அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் ஜிதேந்திர பிரசாதாவும், சட்டப் பேரவைக் கட்சித் தலைவர் பிரமோத் திவாரியும் வந்திருந்தனர். 'மாயாவதி தலைமையில் காங்கிரஸ் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி அரசை, சமாஜவாதி கட்சி தலைமையிலான ஐக்கிய முன்னணி ஆதரிக்க வேண்டும். அந்தக் கோரிக்கையை ஐக்கிய முன்னணி ஏற்றுக்கொள்ள மறுத்தால், தேவே கெளடா அரசுக்குத் காங்கிரஸ் அளித்துவரும் நிபந்தனையற்ற ஆதரவை நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்' என்பதுதான் உத்தர பிரதேசத் தலைவர்களின் கோரிக்கை.
உத்தர பிரதேசம் குறித்த விவாதம் தலைவர் கேசரியின் அறையில் நடந்து கொண்டிருந்த போது, நான், காங்கிரஸ் தலைமையகத்தில் இருந்த 'சாகர் ரத்னா' உணவகத்தில் இருந்தேன். வெவ்வேறு தேசிய நாளிதழ்களில் பணிபுரியும் தமிழகத்தைச் சேர்ந்த நிருபர்கள் சிலரும் அங்கே உணவருந்த வந்திருந்தனர். அவர்களுடன் பேச்சு கொடுத்தபோது, முதல்வர் கருணாநிதி உடல்நலக் குறைவு காரணமாகத் தனது எல்லா நிகழ்ச்சிகளையும் ரத்து செய்திருக்கும் தகவல் எனக்குத் தெரியவந்தது.
24 மணிநேரத் தொலைக்காட்சிச் சேனல்களும், நொடிக்கு நொடி செய்தி பரப்பும் சமூக ஊடகங்களும் இல்லாத காலம் அது. வானொலி, தொலைக்காட்சி மூலம் அவ்வப்போது வெளிவரும் செய்தி
மடல்கள்தான் தகவல் பெறும் ஒரே வழி. பிரணாப் முகர்ஜியும், ஜி.கே. மூப்பனாரும் ரகசியமாக சந்தித்தார்கள் என்கிற தகவலைத் தந்தார் அவர்களில் ஒருவர்.
நாங்கள் சாகர் ரத்னாவில் இருந்து வெளியே வருவதற்குள், தலைவர் கேசரியுடனான சந்திப்பை முடித்துக் கொண்டு அமைச்சர்கள் கிளம்பிவிட்டனர். சீதாராம் கேசரியும் கிளம்பிவிட்டிருந்தார். பிரணாப் முகர்ஜியும், ஆர்.கே. தாவனும், ஜிதேந்திர பிரசாதாவும் பேசிக் கொண்டிருப்பதாகச் சொன்னார்கள். பிரணாப்தா வருவதற்காக அவரது அறையில் காத்திருந்தேன். நீண்ட நேரக் காத்திருப்புக்குப் பிறகுதான் அவர் வந்தார்.
'கெளடா அரசு தப்பிப் பிழைக்குமா இல்லை கவிழுமா?' என்று கேட்டவுடன் என்னை சற்று கோபமாகப் பார்த்தார் பிரணாப் முகர்ஜி.
'தேவே கெளடா ஆட்சியைக் கவிழ்ப்பதில் உங்களுக்கெல்லாம் என்ன அப்படியோர் ஆர்வம்? இப்போதைக்குக் கவிழ்வதற்கான எந்தக் காரணமும் இல்லை. இந்த ஆட்சி கவிழ்வதால் காங்கிரஸூக்கு எந்த லாபமும் கிடையாது.'
நான் எதுவும் சொல்லவில்லை. அவர் இருக்கும் மனநிலையில் நான் எதையாவது சொல்லி வாங்கிக் கட்டிக் கொள்ளத் தயாராக இருக்கவில்லை.
'முதல்வர் கருணாநிதிக்கு உடல்நலம் சரியில்லை என்று கேள்விப்பட்டேன். என்ன பிரச்னை என்று தெரியுமா?'
'வெறும் வைரல் ஜுரம் என்றுதான் சொல்கிறார்கள். அவரது நிகழ்ச்சிகளை எல்லாம் அடுத்த பத்து நாள்களுக்கு ரத்து செய்திருக்கிறார்கள்.'
'வைரல் ஜுரம் என்றால் பத்து நாள்கள் ஏன் ரத்து செய்ய வேண்டும்? நன்றாக விசாரித்து எனக்குச் சொல்லுங்கள். அவரை நலம் விசாரிக்க வேண்டும்...'
பிரணாப் முகர்ஜி கிளம்பியபோது நானும் கிளம்பிவிட்டேன்.
ஒன்றன் பின் ஒன்றாகப் பரபரப்பாக நகரத் தொடங்கியது தில்லி அரசியல். கடுமையான விவாதத்துக்குப் பிறகு, காங்கிரஸ் காரிய கமிட்டி தேவே கெளடா அரசுக்கு வழங்கிவரும் ஆதரவைத் தொடர்வது என்று முடிவெடுத்தது. அந்த முடிவில் கட்சித் தலைவர் சீதாராம் கேசரி உள்பட யாருக்குமே முழு மனதுடனான உடன்பாடு இருக்கவில்லை. வேறு வழியில்லாமல் எடுத்த முடிவு என்றுதான் செய்தித் தொடர்பாளர் வி.என். காட்கிலே தெரிவித்தார்.
பிரணாப் முகர்ஜி ஜி.கே. மூப்பனார் ரகசிய சந்திப்பு நடந்ததா, எப்போது எங்கே நடந்தது, எதற்காக நடந்தது என்பது குறித்தெல்லாம் நான் விசாரித்துக் கொண்டிருந்தபோது, மத்திய புலனாய்வுத் துறையில் இருந்து எனக்குக் கிடைத்த தகவல் திடுக்கிட வைத்தது.
போஃபர்ஸ் வழக்கு தொடர்பான எல்லா ஆவணங்களையும் தனது பார்வைக்கு அனுப்பி வைக்கும்படி சிபிஐ இயக்குநர் ஜோகிந்தர் சிங்குக்கு உத்தரவு பிறப்பித்திருந்தார் உள்துறை அமைச்சர் இந்திரஜித் குப்தா. அது மட்டுமல்ல, முந்தைய நரசிம்ம ராவ் அமைச்சரையில் முக்கியப் பங்கு வகித்த அமைச்சர்கள், அதிகாரிகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் முன்னுரிமை கொடுத்து விசாரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வாய்மொழி உத்தரவு பிறப்பித்திருப்பதாக உயர் அதிகாரி ஒருவர் என்னிடம் தெரிவித்தார்.
அரசுக்கான ஆதரவை விலக்கிக் கொள்ள வேண்டாம் என்று காங்கிரஸ் கட்சியிடம் கோரிக்கை வைக்கும் நிலையில், உள்துறை அமைச்சர் இந்திரஜித் குப்தா இப்படி விபரீதமான உத்தரவுகளைப் பிறப்பிப்பது ஏன் என்று எனக்குப் புரியவில்லை. இதற்கெல்லாம் பிரதமர் தேவே கெளடாவின் அனுமதியோ சம்மதமோ இருக்கிறதா என்பதும் தெரியவில்லை.
காங்கிரஸ் தலைவர் சீதாராம் கேசரி, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. மூப்பனாரை நேரில் சென்று சந்திக்கிறார் என்கிற தகவல் எனக்குக் கிடைத்ததும், போட்டது போட்டபடி, அவசர அவசரமாகக் கிளம்பி சென்றேன். முந்தைய நாள்தான் சீதாராம் கேசரியை பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் கான்ஷிராம் சந்தித்திருந்த நிலையில், மூப்பனாருடனான சந்திப்பு பல கேள்விகளை எழுப்பியது.
தலைநகர அரசியலில் எந்தவொரு விஷயத்தையும் மூடி மறைத்துவிட முடியாது. ஏதாவது வகையில் அது வெளிவந்துவிடும். அப்படித்தான் மூப்பனார் சீதாராம் கேசரி சந்திப்பும்.
பிரணாப் முகர்ஜியின் ஆலோசனைப்படி காங்கிரஸிலிருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைக்கும் முயற்சியில் சீதாராம் கேசரி இறங்கி இருந்தார் என்று நான் கேள்விப்பட்டேன். அந்த முயற்சியை முன்னெடுக்கும்படி சீதாராம் கேசரியைக் கேட்டுக் கொண்டவர் சோனியா காந்தி என்றும் சிலர் கருத்துத் தெரிவித்தனர். அதுவும் உண்மையாக இருக்கக் கூடும்.
சோனியா காந்தி கேட்டுக் கொண்டால் மீண்டும் காங்கிரஸூக்குத் திரும்புவதாக ஏற்கெனவே ஜி.கே. மூப்பனார் தெரிவித்திருந்தார். அதுமட்டுமல்லாமல், தொடர்ந்து கே. கருணாகரன், பிரணாப் முகர்ஜி இருவரும் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வந்தனர் என்பதும் எனக்குத் தெரியும்.
20 மக்களவை உறுப்பினர்களைக் கொண்ட தமிழ் மாநிலக் காங்கிரஸ், மீண்டும் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்தால், அந்தக் கட்சியின் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 179ஆக உயரும். அப்போது மூப்பனாரைப் பிரதமராக்கி, காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைவதுகூட சாத்தியம்.
மூப்பனார் கேசரி சந்திப்புக்குப் பிறகு அவர்கள் இருவருமே பத்திரிகையாளர்களை சந்திக்கவோ, அவர்களுடன் பேசவோ மறுத்துவிட்டனர். மூப்பனாரை நான் தனிப்பட்ட முறையில் சந்தித்தபோதும்கூட, அவர் சிரித்து மழுப்பி விட்டாரே தவிர பிடி கொடுத்துப் பேசவில்லை. சீதாராம் கேசரியையும் அவரது வீட்டிற்கே சென்று சந்தித்தேன்.
'நாங்கள் பழைய நண்பர்கள். மூப்பனார்ஜி நீண்ட காலம் காங்கிரஸ் பொதுச் செயலாளராக இருந்தவர். நான் கட்சியின் பொருளாளராக இருந்தவன். எங்களுக்குள் பேசுவதற்கு எத்தனையோ இருக்கும். அதையெல்லாம் வெளியில் சொல்ல முடியுமா?' என்பதுதான் சீதாராம் கேசரி தந்த விளக்கம்.
தமிழ் மாநிலக் காங்கிரஸை மீண்டும் காங்கிரஸில் இணைப்பதற்கு மூப்பனார் சில நிபந்தனைகளை விதித்திருந்ததாகக் கூறப்பட்டது. அது என்ன என்பது அவர்கள் இருவருக்கு மட்டுமே தெரியும். தமிழ் மாநிலக் காங்கிரஸில் உள்ள பல முக்கியமான மூத்த தலைவர்கள் மீண்டும் காங்கிரஸில் இணைவதை எதிர்த்தனர். கூட்டணி சேரலாமே தவிர, தாய்க் கட்சிக்குத் திரும்புவது கூடாது என்று அவர்கள் கருதினார்கள்.
மூப்பனார் சீதாராம் கேசரி சந்திப்பைத் தொடர்ந்து, பிரணாப் முகர்ஜியும் மூப்பனாரை மீண்டும் சந்தித்தார். பிரணாப் முகர்ஜியின் வீட்டுக்கு மூப்பனார் ஒருநாள் இரவு விருந்துக்கு அழைக்கப்பட்டார். அந்த ரகசிய விருந்தில், சீதாராம் கேசரி கலந்து கொள்ளவில்லை. ஆனால், சில முக்கியமான காங்கிரஸ் தலைவர்கள், காரியக் கமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் என்ன பேசினார்கள் என்பது எனக்குத் தெரியாது.
தமிழ் மாநிலக் காங்கிரஸ் மீண்டும் காங்கிரஸூடன் இணைவது அல்லது இணைத்து கொள்ளப்படுவது என்பது தேவே கெளடா அரசின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியது. விரைவில் தேவே கெளடா அரசு கவிழ்ந்துவிடும் என்கிற வதந்தி காட்டுத் தீயாகப் பரவியது.
தில்லியில் பரபரப்பாக அரசியல் நகர்வுகள் அரங்கேறும்போது, பிரதமர் தேவே கெளடா அதை எதிர்கொள்ள எடுத்த முடிவு என்ன தெரியுமா? உடல்நலக் குறைவால் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த திமுக தலைவரும், தமிழக முதல்வருமான கருணாநிதியை சந்திக்க சென்னை விரைந்தார் அவர். காங்கிரஸில் மூப்பனார் மீண்டும் இணைந்து விடாமல் தடுப்பதற்கு அதுதான் சிறந்த வழி என்று அவருக்குத் தெரிந்திருந்தது.
கருணாநிதியுடனான அவரது சந்திப்பு, தில்லியில் ஒருவருக்குக் கடுமையான கோபத்தையும், அவர் மீது ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது என்பதை அப்போது பிரதமர் தேவே கெளடா உணர்ந்திருக்க வாய்ப்பில்லை. அவரது ஆட்சி அடுத்த சில மாதங்களில் கவிழ்ந்ததற்கு, அந்த சந்திப்பும்கூட முக்கியமான காரணம்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.