

ஒரு சிவகாசிக்காரருக்குப் பெரும் சத்தம் என்பது சந்தோஷம்.
சித்திரைத் திருவிழா, கோடை வெயிலில் மல்லிகைப் பூ மூட்டை மூட்டையாய் விற்றுத் தீரும் நாளில் இந்த ஊர்க்காரனுக்கு மட்டும் சந்தோஷம் என்னவோ? மாலை நேரம் கோயிலில் பிடாங்கு சத்தம் கேட்கும்போது தான். வாண வேடிக்கை ஆரம்பித்தக் குதூகலம் எல்லாரையும் தொற்றிக் கொள்ளும். இந்தப் பிடாங்கு சத்தத்துக்காகவே ஊரில் வயதான பெரியவர்கள் காத்திருப்பார்கள். எப்படி திருவிழாக்களில் பிடாங்கு சத்தம் சந்தோஷமோ, அதேபோல இந்த ஊர்க்காரர்களின் மிகப் பெரிய துக்கமும் பெரிய சத்தத்தோடுதான் வருகிறது.
அது ஒரு ஜூலை மாதப் பிற்பகல் நேரம். வீடுகளில் குழந்தைகளும் சற்று கண் அயர்ந்திருந்த நேரம். லேசான அமைதியில் தூரத்தில் கிழங்கு விற்றுப் போகிற பெண்ணின் குரலும் அடுத்த கட்டடத்தில் கட்டிங் மிஷின் காகிதங்களை வெட்டும் சீரான இடைவெளியில் வரும் 'நறநற' எனும் சத்தமும் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தன.
கால் நீட்டி சுவரில் சாய்ந்த வாக்கில் பிள்ளையை மடியில் வைத்துப் பாலுட்டிக் கொண்டிருந்தாள் பெரியக்கா. சாமான் கழுவிக் கொண்டு வந்து வைத்துவிட்டு மகேஸ்வரி பிள்ளைக் கட்டிலை பிள்ளை ஈரமாக்கினது காயட்டும் என்று இழுத்து முற்றத்து வெயிலில் போட்டுக் கொண்டிருக்கையில், 'திடும்'-ன்னு பெரும் சத்தம். முதுகுக்குப் பின்னால் ஓடு இரண்டு சரிந்து மடாரென விழுந்து நொறுங்கியது. மகேஸ்வரி என்னவோவென்று பதறி நிமிர்ந்து பார்த்த அதே நேரத்தில் உள்ளே பலகடைப்புல இருந்த வெண்கலக் குத்துச் சட்டியும் இட்லிப் பானையும் மேலிருந்து பெரியக்கா காலில் விழுந்து உருண்டு சத்தம் எழுப்பி நடுங்கிக் கொண்டிருந்தன.
அக்கம்பக்கம் வீடுகளிலிருந்து ஆம்பளைங்களும், பொம்பளைங்களும் திமுதிமுன்னு வெளிய ஓடிவராங்க? ஒருத்தரோட ஒருத்தர் எந்தப் பக்கம் சத்தம் வந்ததுன்னு பேசுறாங்க? காளிராஜன் அண்ணாச்சியும் குரு மாமாவும் ஊருணிப் பக்கம்தான் சத்தம் கேட்டுச்சு வாரும் பார்ப்போமுன்னு' சைக்கிளை எடுத்துக்கிட்டு கிளம்பிட்டாங்க?
பொம்பளைங்க அவங்கவங்க வீட்டுல உருண்ட சாமான்களைப் பத்திப் பேசுறாங்க? கலா அக்கா வீட்டுல ஒரு சுவர் விரிசல் விட்டுருச்சுனு சொல்லி அழுதாங்க? 'என்ன கொடுமையைப் பார்க்கணும்னு விதிச்சிருக்கோ' சொல்லிக் கொண்டே உருண்ட பித்தளைத் தண்ணீர் பானையை எடுத்து வைத்துவிட்டு தண்ணீரை விளக்குமாறால தள்ளிவிட்டுக் கொண்டிருந்தாள் மகேஸ்வரி.
' 'எங்குட்டு என்ன ஆச்சோ.. அம்மா பத்ரகாளித் தாயே ஊரைக் காப்பாத்து, என்ன ஆபத்துனாலும் உன் பிள்ளைகளை பத்திரமா வீடு கொண்டு வந்து சேர்த்துரும்மா?' என்று வெள்ளை சேலை கோமதியக்கா வடக்கே பார்த்து கும்பிட்டுக்கிட்டாங்க?
வீட்டுக்குள்ள மேலருந்து பெரியக்கா கால்ல விழுந்த சாமான் ஒரு பக்கம் சொட்டையாகி நெளிஞ்சு கிடக்கு. அக்காவுக்குக் கால் வீங்கிப் போச்சு. பிள்ளையைத் தொட்டில்ல கிடத்திட்டு காலை நொண்டி நொண்டி நடந்து வந்து வெயிலில் கிடந்த பிள்ளைக் கட்டிலை நகர்த்திப் போட்டு அதிலே உட்கார்ந்தாள்.
'ஏத்தா... எப்படி வீங்கிப் போயிருக்கு பாரு. கொஞ்சம் சீனியும் சுண்ணாம்பும் கரைச்சு அப்பி வை வீக்கம் தணியட்டும்' என்று சொன்னார் கோமதியக்கா.
சீனியும் சுண்ணாம்பும் கால்ல தடவிக்கிட்டு இருக்கும்போதே கரும்புகையும் சாம்பல் போல தூசியும் மேல ஏறி இருட்டுனாப்புல அடைச்சிகிட்டு வருது. வானம் தெரியலை. தொண்டை கமருது. கருமருந்து வாடை தாங்க முடியலை.
'பச்ச பிள்ளை தொட்டில்ல கிடக்கு கதவை சாத்தி வையம்மா, பிள்ளைக்கு மூக்குல ஏறிரப் போகுது' என்று வைரமணியக்கா அலறினார்.
எல்லாரும் வீடுகளை கதவை சாத்தி வச்சுட்டு தெருவுல நின்னுகிட்டு அங்கிட்டும் இங்குட்டுமா சைக்கிளில் வர்றவுங்களைப் பிடிச்சு விசாரிக்கிறாங்க? வெடிச்ச சத்தமும் மருந்து நாற்றமும் சொல்லிருச்சு எங்கிட்டோ பயராபீஸ்ல வெடிச்சிருச்சுனு. ஆனா, எந்த ஆபிசுன்னு தெரியணும்னு ஆளாளுக்குப் பதற்றம் இருக்குமே. வீட்டுக்கு வீடு யாராவது பயராபீசுல தானே கிடந்து வேலை செய்யிறாங்க?'
பெரியக்கா இப்போ ரொம்பவும் பதற ஆரம்பிச்சுட்டா. வீரன் மச்சான் பை பாஸ் ரோடு தாண்டி இருக்குற பெரிய ஆபீசுல வேலை பார்க்குறாரு? வீரன் மச்சானுக்கு திரி வெட்டுற இடத்துல வேலை. திரி வெட்டுற இடம் ரொம்ப கவனமா இருக்கணும். லேசா மருந்து உரசினாலும் பத்திக்கிடும்.
ரோட்டுல கருமருந்து அப்பின உடுப்போட சைக்கிளில் போனவரை மறிச்சு 'எங்கிட்டுய்யா. என்னையா ஆச்சு' என்று விசாரிச்சாங்க பெரியக்கா மாமியார் ராமுத் தாய் அத்தை.
வந்தவருக்கு தொண்டை அடைச்சு கமறிக்கிட்டு வார்த்தை வரலை. 'ஒரு செம்பு தண்ணி கொண்டு வந்து குடும்மா? என்று என்னை கேட்கவும் நானும் ஓடிப் போய் ஒரு செம்பு தண்ணி கொண்டு வந்து கொடுத்தேன்.
குடிச்சுட்டு கரகரத்த குரலில், 'பெரியாபீசுலதான் வெடிச்சுப் போச்சு. கிட்ட போக முடியல. நாலு கட்டடம் தாண்டியும் எரியுது. கரும்புகை தான் வேற ஒன்றும் கண்ணுக்கே தெரியலை? நான் ரோட்டுல போய்கிட்டிருந்தேன். வெடிச்ச வேகத்துல தூக்கியடிச்சு போட்டுருச்சு. எம்புட்டு தூரம் தள்ளி விழுந்தேன்னு நினைக்கிறீங்க? நான் கீழே விழுந்தா என்மேல ரத்தமும் சதையுமா என்னமோ வந்து விழுந்துச்சு. எனக்கு அந்த நேரத்துல அப்படியே கண்ணைக் கட்டிக்கிட்டு மயக்கம் வந்துருச்சு. தீயணைக்கிற ஆளுங்க வந்துட்டாங்க? அவங்க தான் என்னையும் எழுப்பி விட்டாங்க? வீடு போய் சேர்ந்தா போதும்னு வந்தேன். யாருக்கு என்ன ஆச்சோ தெய்வம்தான் காப்பாத்தணும்.'
பேசியதைக் கேட்டுக் கொண்டிருக்கும்போதே பெரியக்கா வீங்குன காலோட வழுகுற சேலையைக்கூட கவனிக்காம மச்சான்னு கூப்பாடு போட்டுக்கிட்டு வீட்டுக்குள்ள இருந்து ஓடுறா? நானும் பின்னாலயே ஓடுறேன். வீட்டுக்குள்ள நாலு மாசப் பிள்ளை 'வீர்..வீர்..'ன்னு கத்திக்கிட்டு கிடக்கு.
ஊர் முழுசும் புகை தான். வெடிச்ச அரை மணி நேரத்துல பார்த்ததையும், கேட்டதையும் ஆளாளுக்குப் பேசிகிட்டு ஓடுறதும் வரதுமா இருக்காங்க? ஆம்பளைங்க பூராவும் பைபாஸ் ரோட்டுல அடைச்சு நிக்கிறாங்க? தீ அணைக்கிற வண்டிங்க எல்லாப் பக்கமும் போகுது வருது. பெரும் கூச்சல், கரும் பொகைக்கு அந்தப்பக்கம் 'சீவீர்னு' கங்கு. மலை கணக்கா தீ எரியுது. எம்புட்டு தூரத்துக்கு தீ எரியுதுனு பார்வைல கணிக்க முடியலை. ஓலம்னா ஓலம். எம்பிள்ளை இங்கதான்யா வேலைக்கு வந்துச்சுன்னு தேடுற பெத்தவங்க, புருஷனைத் தேடி பிள்ளயத் தேடி கண்ணுல கண்டவுங்களையெல்லாம் வீட்டுக்காரர பாத்தீங்களா?, என் தம்பியப் பாத்தீங்களா? விசாரிக்குற ஜனம் அலைமோதிக்கிட்டு கிடக்கு.
முதல்ல பக்கத்துக் கட்டடத்துல பரவின தீயை அமர்த்திக்கிட்டே முன்னேறிப் போகுது வண்டி. பக்கத்துக் கட்டட ஆபிஸில் மயங்கிக் கிடந்தவங்களையும் தீப்பட்டு வெந்து உயிருக்குப் போராடிகிட்டு இருக்கறவங்களையும் தூக்கிக் கொண்டு வந்து ரோட்டுப் பக்கம் விடுறாங்க? ரிக்ஷா வண்டிலயும் ஆம்புலன்லையும் காயம் பட்டவங்களை பெரியாஸ்பத்திரிக்குத் தூக்கிகிட்டு ஓடுறாங்க?
நல்ல தாட்டியமான ஆம்பளைங்க எல்லாம் இறங்கி உள்ளே சிக்கியிருந்த ஜனத்தை வெளியே தூக்கிட்டு வராங்க? மயக்கமும் தீப்புண்ணுமா இப்படி எத்தனை பேர்தான் சிக்கியிருக்காங்களோ தெரியலையே? கூட்டம் கண்ணீரும் பதற்றமுமா தேடிக் கொண்டிருந்தார்கள். ஆஸ்பத்திரியில நிற்க இடமில்லை. இருக்கற இடத்துல உயிருக்குப் போராடுற ஜனங்களுக்கு சிகிச்சை கொடுக்கிறாங்க. பிழைச்சு கிடக்குறதே பெரிசுன்னு ஆசுவாசப்படுறாங்க குடும்பத்து ஆளுங்க.
இருட்டுற நேரத்துல தான் பயராபீஸ் தீயை நெருங்கியிருக்கு தீ அணைக்கிற வண்டி. உள்ளே ஒருத்தரும் பிழைக்க வாய்ப்பில்ல. நம்பிக்கையில்லாமல் கூடியிருந்தவர்கள் வருத்தப்பட்டுக் கொண்டார்கள்.
'இங்க நிற்கயிலயே உடம்பு இப்படி காந்துதே. உள்ள என்ன மிஞ்சியிருக்கப்போவுது, யாரை உயிரோடப் பாக்கப்போறோம்' பெரியவர் ஒருவர் புலம்பினார்.
அதுவரைக்கும் அழுது கொண்டிருந்த பெரியக்கா, மச்சான்னு அலறிக் கொண்டு மடேரென தரையில் மயங்கி விழுந்தாள்.
ஒரு ரிக்ஷா வண்டிக்காரர் பரிதாபப்பட்டு அவளை வீடு கொண்டு வந்து சேர்த்தார். அக்காவைப் பிடித்து வண்டியில் ஏற்றுவதற்குள் சிறுமியாக இருந்த என்பாடு திண்டாட்டமாகப் போய் விட்டது.
'தீ மேல மேல எரிஞ்சுக்கிட்டே இருக்கு. தண்ணி வண்டி வண்டியா ஊத்தினாலும் அணைக்க முடியாம எரியுதாம். தீயணைப்புப் படையிலேயே ரெண்டு பேரு மேல என்னமோ வெடிச்சு விழுந்து செத்துப் போனாங்களாம். காளிராஜன் மாமா தீ எரியுற கட்டடத்துக்குப் பக்கத்துல தீ புண் காயத்தோட கிடந்தவங்கள தூக்கிக் கொண்டுவந்து ஆம்புலன்ஸ்ல ஏத்தி காப்பாத்தி உதவி செஞ்சிருக்காரு. அந்த நேரத்துல அவர் மேல வெடிச்சு சிதறின கங்கு பட்டு வலது கால் முட்டிக்குக் கீழ பூராம் புண்ணாய் போச்சுன்னு மாமா வீட்டு அத்தை வாசப்படிக்குப் பக்கத்துல வளர்ந்து நின்ன கத்தாழைய வெட்டி மாமா காலுக்கு வச்சு கட்டினாங்க?'
'ராத்திரி நேரத்துல அவ மகன வெளிய எடுத்துட்டாங்களாம். இவ புருசனை எடுத்தாச்சாம், இவுக மருமகனுக்கு கை போயிருச்சாம் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போயிருக்காங்களாம்' - என்று ஒவ்வொரு வீட்டுத் தகவலா வந்து சேருது.
ஊருல பாதி இடத்துல கரண்ட் இல்லை. எங்க எந்த பொறி தட்டுமோனு எரியுற தீ வெளிச்சத்துலயே ஆளுங்களையும் பிரேதத்தையும் அள்ளிக் கொண்டார்ந்து போடுறாங்க? அடையாளம் கண்டது பாதி காணாதது மீதி. யாரையும் போலீஸ்காரங்க பாக்க விடலை. எல்லாரும் பெரிய ஆஸ்பத்திரியில போய் தேடுங்கம்மா? இங்கன நின்னு வேலையைக் கெடுக்காதீங்க?'- என்று ஒரு போலீஸ்காரர் கையெடுத்துக் கும்பிட்டார்.
பெரியாபீசுல வேலை பாத்தவங்க குடும்பத்து ஆளுகளெல்லாம் பாதிபேர் வெடிச்ச இடத்துலயும், பாதிபேர் பெரிய ஆஸ்பத்ரிலயும் நடுராத்திரிலயும் ஏதாவது சேதி கிடைச்சிராதான்னு அல்லாடுறாங்க? இன்னிக்குப் போல போன் வசதி ஒன்னும் அப்போ இல்லாததால வீட்டுல இருக்க பொம்பளைகளுக்கு நேரத்துக்கு நேரம் பயம் கூடிக்கிட்டு இருந்தது. அழுகைச் சத்தம் அல்லது மயான அமைதி இதுதான் வீடுகள் தோறும் இருந்தது.
விடிய விடிய ஊரே தட்டழியுது. ராத்திரி மூணு மணி வரைக்கும் வீரன் மச்சான் பத்தி தகவல் ஒன்னும் வரலை.
'பத்ரகாளி தாயே இப்பதான் ஆத்தா உனக்கு மல்லிகையாக் கொட்டிக் கொண்டாடுனோம். உனக்கு மனங்குளிரலயா? ஆத்தா இப்படி கொத்துக் கொத்தா எமனுக்குக் கொடுக்க வேடிக்கை பாக்குறியா நாங்க எங்க தாயே போவோம்' என்று அம்மா பெரியக்காவை கட்டிக் கொண்டு அழுது புலம்பினார்.
விடியற்காலையில் சேதி வந்தது. பிழைச்சுக் கிடக்குறவங்க எல்லாம் பெரிய ஆஸ்பத்திரியில் கிடக்கிறாங்க. இல்லாதவுக எல்லாம் போன கணக்குதான். பொழுது பளபளன்னு விடியுது. இன்னும் எரிமலைபோல கங்கு கனன்று எரிஞ்சுக்கிட்டிருக்கு. ஆறடி உயரத்துல அய்யனார் போல கம்பீரமா நடக்குற வீரன் மச்சான் நெருப்போட போனதுதான். கல்யாணம் முடிச்சு ஒன்றரை வருஷம் பிள்ளை பிறந்து நாலு மாசம். பிள்ளை எதுவும் தெரியாம தொட்டில்ல கிடக்கு. அக்கா கிழிச்ச நாரா முற்றத்துல கிடக்குறா? கடைசியா மச்சான் கண்ணால பாக்கவும் கிடைக்காமலே போனாரு?
வீரனை அப்படியே உரிச்சு வச்சாப்புல மகன் இருக்கான்னு சொந்த பந்தமெல்லாம் சொல்லிச் சொல்லி மச்சானை நினைவுப்படுத்தும். அந்தப் பிள்ளையை வளர்க்க அக்கா பட்டபாடு கொஞ்ச நஞ்சமில்லை. அவனும் பொறுப்பா வளர்ந்தான். படிச்சு முடிச்சு வந்தவன் தொழில் செய்ய ஆசைப்பட்டான். பெரியக்கா முழுசா மகனுக்குத் தன் நகைகளைக் கொடுத்து தொழில் செய்ய உதவினாள். சொந்தமா பயராபீஸ் வச்சிருக்கிற முதலாளியா ஊருக்குள் மதிப்பா வளர்ந்திருக்கான் மகன். பெரியக்கா இன்னிக்கு ஒரு பயராபீஸ் முதலாளியம்மா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.