வாசல் படிக்கு அருகே ஒரு சிறு புல்
By ஆதினமிளகி | Published On : 10th September 2023 12:00 AM | Last Updated : 10th September 2023 12:00 AM | அ+அ அ- |

ஹிந்தி திரையுலப் பிரமுகர் சத்யஜித் ரேவுக்கு ஏழு வயதாக இருந்தபோது, நடைபெற்ற நிகழ்வு இது.
அவர் தனது தாயுடன் ரவிந்திரநாத் தாகூரின் சாந்தி நிகேதனுக்கு சென்றிருந்தார். தாகூரிடம் ஆட்டோகிராப் வாங்க ஒரு சிறு நோட்டுப் புத்தகத்தை சத்யஜித் ரே கொண்டு சென்றிருந்தார்.
தாகூரிடம் சத்யஜித் ரேயின் தாய், ''என் மகன் உங்கள் கவிதை வரிகளை சிலவற்றை இந்த நோட்டு புத்தகத்தில் பதிவு செய்ய விரும்புகிறான்'' என்றார்.
தாகூரும் நோட்டு புத்தகத்தை வாங்கிக் கொண்டார்.
மறுநாள் சத்யஜித் ரேயிடம் தாகூர் திருப்பித் தரும்போது, தாம் அதில் எழுதியிருந்த கவிதை வரிகளைப் படித்து காண்பித்துவிட்டு ''இந்தக் கவிதை வரிகள் உனக்கு இப்போது புரியாமல் போகலாம். ஆனால், நீ வளர, வளர இந்த வரிகள் ரொம்ப அர்த்தமுள்ளதாக விளங்கும்'' என்றார்.
அந்தக் கவிதை இதோ:
நான் உலகம் முழுவதும் சுற்றி
ஆறுகளையும் மலைகளையும் பார்த்து வந்தேன்
இதற்காக நிறையப் பணம் செலவழித்தேன்
நீண்ட தூரங்கள் சென்று எல்லாவற்றையும் பார்த்தேன்
ஆனால் என் வாசல் படிக்கு அருகே
ஒரு சிறு புல்லின் நுனியிலிருக்கும்
பனித் துளி ஒன்றில்
என்னை சுற்றியிருக்கும்
மொத்தப் பிரபஞ்சமும் தெரிவதைக்
காண மறந்தேன்!