

அண்மையில் கமலின் 'வேட்டையாடு விளையாடு' ரீ-ரிலீஸ் ஆகி, பெரும் வரவேற்பை பெற்றது. சென்னையில் சில திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக நிரம்பி வழிந்ததில், தயாரிப்பாளரான மாணிக்கம் நாராயணன் மகிழ்ந்தார். இதன் வெற்றி பல தயாரிப்பாளர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. அதனையடுத்து கமலின் 'ஆளவந்தான்' படத்தை ரீ-ரிலீஸ் செய்யப் போவதாக தாணு அறிவித்தார்.
இப்போது விஜய்யின் பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்திய படமும் வெளியாக உள்ளது. விஜய் - த்ரிஷாவின் அந்த ஹிட் காம்போதான் இப்போது 'லியோ'வில் இணைந்திருக்கிறது என்பதால், 'கில்லி'யை மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யத் திட்டமிட்டு வருகிறார் அதன் தயாரிப்பாளரான ஏ.எம்.ரத்னம்.
2004-ஆம் ஆண்டில் வெளியாகி, 20 ஆண்டுகள் ஆன நிலையில், அப்போது ஃபிலிமில் படமாக்கப்பட்ட இப்படத்தை நவீன தொழில்நுட்பத்தில் கொண்டு வர முயற்சிகள் நடக்கின்றன.
அதனைத் தொடர்ந்து விஜய்யின் 'சச்சின்' சூர்யாவின் 'காக்க காக்க' படங்களையும் ரீ ரிலீஸ் செய்யவிருக்கின்றனர். இன்னொரு பக்கம் கமலின் 'ஆளவந்தான்' மறுவெளியீடு ஆவதால், அதன் நவீன தொழில்நுட்ப வேலைகளும் தீவிரமாகி உள்ளன.
அடுத்த மாதம் அதுகுறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்கிறார்கள். 'ஆளவந்தான்' படத்தில் கமலுக்கு இரண்டு வேடங்கள். ஒருவர் கமாண்டோ, மற்றொருவர் கொடூர வில்லன்.
கமல் தவிர ரவீணா டாண்டன், மனீஷா கொய்ராலா, மிலிந்த் குணாஜி, சரத்பாபு, அனுஹாசன் என பலரும் நடித்திருப்பார்கள்.இது பற்றி தாணு... ''ஆளவந்தான்' மட்டுமல்ல, எங்களோட தயாரிப்பில் வெளியான விஜய்யின் 'சச்சின்', சூர்யாவின் சாரின் 'காக்க காக்க' படங்களையும் ரீ -ரிலீஸ் செய்கிறேன். மூன்று படங்களின் வேலைகளும் மும்முரமாக நடந்து வருகின்றன'' என்கிறார்.
ஏ.ஆர். ரஹ்மானின் சென்னை பாசம்
பாலிவுட் படங்களுக்கு இசையமைத்து இருந்தாலும் அவர் ஒரேடியாக பாலிவுட் பக்கம் செல்லாமல் தொடர்ந்து தமிழ், பாலிவுட் ஆகிய இரண்டிலும் கவனம் செலுத்தி வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மான். அவருக்கு மும்பையில் குடியேற வாய்ப்பு அதிக அளவில் இருந்தது. ஆனால் அவர் மும்பையில் குடியேறவில்லை. இதுகுறித்து அவர் அளித்த பேட்டி ஒன்றில், ''மாபியா கலாசாரம் காரணமாகவே மும்பையில் குடியேறவில்லை. ஆந்திரத்தைச் சேர்ந்த தயாரிப்பாளர் ஒருவர் 1994-ஆம் ஆண்டு சென்னையில் இருந்து வெளியேறுவதாக இருந்தால் ஹைதராபாத்தில் உள்ள பஞ்சாரா ஹில் பகுதியில் உள்ள வீட்டில் குடியேறும்படி என்னிடம் கேட்டுக்கொண்டார். நான் அவரைப் பார்த்து சிரித்தேன். அந்த நேரத்தில் ஹைதராபாத்தில் இருந்த சூழ்நிலை எனக்கு பிடிக்காததால் அங்கு குடியேற வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்துவிட்டேன். பாலிவுட் இயக்குநர் ஒருவர் என்னிடம் மும்பையில் குடியேறும்படி கேட்டுக்கொண்டார். அதோடு ஹிந்தி கற்றுக்கொள்ளும் படியும் கேட்டுக்கொண்டார். வட இந்தியர்கள் அதிக அளவில் அன்பு செலுத்துவதால் ஹிந்தி தெரிந்திருக்கவேண்டும் என்று என்னிடம் தெரிவித்தார். ஆனால் அவரது கோரிக்கையை நிராகரித்துவிட்டேன். பிரிட்டனில் 6 ஆண்டுகள் இருந்தேன். ஆனால் எனது மனைவி 3 மாதம்தான் அங்கு இருந்தார். அதற்குள் இந்தியாவுக்குத் திரும்பவேண்டும் என்று சொன்னார். அமெரிக்காவில் இருக்கலாம் என்று நினைத்து அங்கு சென்றோம். அங்கு சொந்தமாக வீடு கூட வாங்கினோம். ஆனால் அங்கிருந்து தாயகம் திரும்பிவிட்டோம். கமலஹாசனிடம் ஹாலிவுட் படம் தயாரிக்கும்படி கேட்டுக்கொண்டேன். 20 ஆண்டுகளுக்கு முன்பு அவர் ஹாலிவுட் சென்று படம் தயாரித்திருக்கவேண்டும்'' என்று தெரிவித்திருந்தார்.
ஏ.ஆர்.ரஹ்மான் அமெரிக்கா உட்பட உலகம் முழுவதும் சுற்றினாலும் தனது குடியிருப்பை நிரந்தரமாக சென்னைக்கு மாற்றிக்கொண்டார்.
மீண்டும் சுஷ்மிதா சென்
பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென், தற்போது வெப் சீரிஸ், டிவி நிகழ்ச்சி, சினிமா என மிகவும் பிஸியாக இருக்கிறார். அவர் திருநங்கையாக நடித்துள்ள 'தாலி' என்ற வெப்சீரிஸ் வரும் 15-ஆம் தேதி ஒடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. சுஷ்மிதா சென்னுக்கு அண்மையில் மாரடைப்பு ஏற்பட்டு ஆஞ்சியோ சிகிச்சையும் எடுத்துக் கொண்டுள்ளார். நடிப்பில் இருந்து கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் பிரேக் எடுத்துக் கொண்டது குறித்தும், ஒடிடி தளம் திரைப்படத் துறையில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பது குறித்தும், 'தாலி' வெப் சீரிஸில் திருநங்கையாக நடித்த அனுபவம் குறித்தும் சுஷ்மிதா சென் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், ''திருநங்கைகள் சின்ன விஷயங்களுக்காகவே கடுமையாகப் போராட வேண்டியிருக்கிறது. திருநங்கைகள் பற்றிய 'தாலி' படம் தங்களுக்கு பலன் தரும் என்று தெரிந்தாலும், அதில் நடிக்க சிலர் தயங்குவார்கள். அதற்காக அவர்கள் மீது தவறு என்று நான் நினைக்கவில்லை.
நான் திருநங்கை சமுதாயத்துக்காக மட்டும் இந்த வெப்சீரிஸில் நடிக்கவில்லை. கௌரி சாவந்த் வாழ்க்கையால் ஈர்க்கப்பட்டு இத்தொடரில் நடித்தேன். அவர் என்னைத் தேர்ந்தெடுத்தார். நான் 1990-ஆம் ஆண்டு கால நடிகை. எங்களது பீக் காலம் 28 வயதில் முடிந்துவிட்டது. பெண்களை மையமாகக் கொண்ட கதாபாத்திரங்கள் எடுபடாது போன்ற உரையாடல்கள் வேதனையளிக்கும்.
ஒடிடி தளத்துக்காக, கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும். அது எங்களுக்குப் புதிய வாழ்வை கொடுத்திருக்கிறது. நடிகர்களை மீண்டும் கொண்டு வந்ததோடு புதிய திறனையும் வளர்த்துள்ளது. நான் திரைப்படத்துறையில் இடைவெளி எடுத்துக் கொண்டதற்காக மகிழ்ச்சி அடைகிறேன். மிகவும் சலிப்பு ஏற்பட்டதால் நடிப்பில் இருந்து தற்காலிகமாக பிரேக் எடுத்துக் கொண்டேன்'' என்று தெரிவித்துள்ளார்.
ரஜினிக்கு வில்லன் பகத் பாசில்
ரஜினி நடிப்பில், நெல்சன் இயக்கிய 'ஜெயிலர்' படத்தின் வசூல் ரூ.700 கோடியைத் தாண்டியதாக தகவல் வெளியானதில், படக்குழுவினர் மகிழ்ச்சியில் திளைத்து வருகின்றனர். இந்த நிலையில் அவரது அடுத்த படமான 'ரஜினி 170' படத்தின் பூஜை விரைவில் நடக்க இருக்கிறது. சூர்யாவின் 'ஜெய் பீம்' படத்தை இயக்கிய த.செ.ஞானவேல், அடுத்து லைகா தயாரிப்பில் ரஜினியுடன் கைகோத்திருக்கிறார். இந்தப் படத்தில் முக்கியமான ஒரு கேரக்டரில் பாலிவுட் ஸ்டார் அமிதாப் பச்சன் நடிக்கிறார் எனச் சொல்லியிருந்தோம்.
ரஜினி இமயமலை பயணத்துக்கு முன்னர், 'ரஜினி 170'க்கான போட்டோஷூட்டையும் முடித்துக் கொடுத்துவிட்டு கிளம்பினார். மூன்று நாள்கள் நடந்த இந்த போட்டோஷூட்டில் போலீஸ் சீருடையில் செம மாஸ் ஆக ரஜினி தோற்றம் தந்திருகிறார்.
ஒரு உண்மைச் சம்பவம் என்றும், போலி என்கவுன்ட்டர் குறித்த கதை இது என்றும் பேச்சு இருக்கிறது. அமிதாப்பச்சனைத் தொடர்ந்து ஒரு முக்கியமான ரோலில் விக்ரம், நானியிடம் நடிக்கக் கேட்டனர்.
ஆனால் அவர்கள் மறுத்துவிடவே சர்வானந்த், கன்னட இளம் இயக்குநரும் நடிகருமான ரக்ஷித் ஷெட்டியிடம் பேசி வருவதாகச் சொல்கிறார்கள். ரஜினி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் எனவும், அவர் ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார் என்றும், படத்தில் இன்னொரு முக்கியமான கேரக்டரில் பகத் பாசில் நடிக்க உள்ளதாகவும் சொல்கிறார்கள்.
வில்லனாகவே தமிழில் பல படங்களில் வந்த பகத் பாசிலுக்கு இந்தப் படத்தில் வேறொரு வித்தியாசமான ரோலாம். அதைக் கேட்டதுமே அவர் நடிக்க ஒப்புக்கொண்டாராம். ரஜினியின் 'ஜெயிலர்' படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்துக்கும் அனிருத் இசையமைக்கிறார். மற்ற டெக்னீஷியன்கள் 'ஜெய்பீம்' படத்தில் ஞானவேலுடன் இருந்தவர்களே தொடர்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.