'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 157

நான் பேசிக் கொண்டிருக்கும்போதே, வெளியில் கார் வந்து நிற்கும் சப்தம் கேட்டது. உடனே சலசலப்பு.
'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 157
Updated on
4 min read

நான் பேசிக் கொண்டிருக்கும்போதே, வெளியில் கார் வந்து நிற்கும் சப்தம் கேட்டது. உடனே சலசலப்பு. கருணாகரன்ஜி வந்துவிட்டார் என்பது தெரிந்தது. 

கருணாகரன்ஜி 'நமஸ்காரம்' என்றபடி அறைக்குள் நுழைந்ததும் எல்லோரும் எழுந்து நின்றோம். 'ஹா...' என்றபடி என்னைப் பார்த்துச் சிரித்தார். தலைவர்கள் பேசும்போது அங்கே இருப்பது சரியல்ல என்ற இங்கிதம் கருதி நான் நழுவ முற்பட்டேன். கருணாகரன்ஜி விடவில்லை.

''என்ன சொல்கிறார் பிரணாப்? அவருக்குப் பழைய துணிச்சல் போய்விட்டது. அவர் மட்டும் தலைவர் போட்டியில் இறங்கி இருந்தால் நாங்கள் எல்லோரும் அவர் பின்னால் நின்றிருப்போம். என்ன சொல்கிறீர்கள் எஸ்.எம்.?''

எஸ்.எம். கிருஷ்ணா தலையாட்டினார்.

அதற்கு மேல் நான் அங்கே நிற்கவில்லை. வெளியே வந்துவிட்டேன். 

தமிழ்நாடு இல்லத்தில் சாப்பிடப் போனேன். மதிய உணவை முடித்துக் கொண்டு வெளியே வந்தபோது, இல்லத்தில் உள்ள தனது அறைக்குச் சென்று கொண்டிருந்தார் மத்திய பாதுகாப்புத் துறை இணையமைச்சராக இருந்த என்.வி.என். சோமு.

எனக்கு நன்றாக அறிமுகமான, என் மீது மிகுந்த அன்பு செலுத்திய திமுக தலைவர்களில் என்.வி.என். சோமுவும் ஒருவர். 'சாவி' வார இதழ் காலத்திலிருந்து, எங்கள் நட்பு தொடர்ந்தது. தொழிற்சங்கவாதியான என்.வி.என். சோமு, சென்னை மாநகராட்சி உறுப்பினராகவும், துணை மேயராகவும் இருந்தவர். அப்போது எனக்கு அவரைத் தெரியாது.

1980-இல் திமுக சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தபோதுதான், 'சாவி' இதழ் தொடர்பாக நான் அவரை முதலில் சந்தித்தேன். நான் பச்சையப்பன் கல்லூரியில் படித்திருக்கிறேன் என்கிற ஒரு காரணத்தால்தான் அவருக்கு என்னிடம் ஈர்ப்பு ஏற்பட்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

1984 இந்திரா அனுதாப அலைத் தேர்தலில், வடசென்னை தொகுதியில் இருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்றால், அவரது மக்கள் செல்வாக்கு எத்தகையது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். எல்லோரிடத்திலும் சாதாரணமாகப் பழகக் கூடியவர் என்.வி.என். சோமு. எந்த ஒருவரையும் எடைபோட்டு, நம்பிக்கைக்குரியவர் என்று தெரிந்த பிறகுதான் நெருக்கமாகப் பழகுவார். அவர்களுக்காக எந்த உதவியும் செய்யத் தயங்க மாட்டார். 'இந்து' நாளிதழ் ஊழியர்களின் தொழிற்சங்கத் தலைவர் என்பதால், பெரும்பாலான பத்திரிகையாளர்கள் அவரது நண்பர்களாக இருந்தார்கள்.

என்.வி.என். சோமு அமைச்சரான பிறகு நான் அவரை நேரில் சென்று சந்திக்கவில்லை. அவருக்கு தனி பங்களா ஒதுக்கப்பட்டிருக்கவில்லை என்பதால் அப்போது, தமிழ்நாடு இல்லத்தில்தான் தங்கி இருந்தார். முதல்வர் கருணாநிதி தில்லி வந்தபோது, அவருடன் இருந்தார் என்றாலும், புன்னகைக்க முடிந்ததே தவிர நாங்கள் பேசிக் கொள்ளவில்லை.

''என்ன சாப்பிட வந்தீர்களா? வாங்க என்னோட அறைக்குப் போகலாம். ரொம்ப நாளாச்சு உங்களோட பேசி...'' என்றபடி நட்புடன் அழைத்தபோது, அதற்காகவே காத்திருந்ததுபோல நானும் அவருடன் லிஃப்டில் ஏறிக் கொண்டேன். அறைக்குப் போய், அவர் உணவு அருந்த உட்கார்ந்தார். ஏற்கெனவே நான் சாப்பிட்டிருந்ததால், அவருடன் பேச்சுத் துணைக்கு அமர்ந்து கொண்டேன்.

''என்ன நடக்கிறது, காங்கிரஸில்? நரசிம்ம ராவ் கைதாகிவிடுவார் போலிருக்கிறதே...''

''கைது செய்வார்களா என்று தெரியவில்லை. ஆனால், நிச்சயமாகக் கூண்டில் ஏற்றப்படுவார். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். அதனால்தான் அவரே முன்வந்து தலைவர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டார்.''

அமைச்சர் என்.வி.என். சோமு எதுவும் பேசவில்லை. நான் பேசுவதைக் கேட்டபடி உணவருந்திக் கொண்டிருந்தார்.

''சீதாராம் கேசரி என்ன செய்வார் என்று சொல்ல முடியாது என்கிறார்கள். நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?''

''ஐக்கிய முன்னணி ஆட்சியை ஆதரிப்பதைத் தவிர, காங்கிரஸூக்கு வேறு வழியில்லை. எங்கள் ஆட்சி கவிழ்ந்தால், அடுத்தது தேர்தல்தான். அதில் பாஜக தனிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கக் கூடும். பாஜகவுக்குத் தனிப் பெரும்பான்மை கிடைக்காமல் இருக்கும் வரைதான் காங்கிரஸூக்கு ஆயுசு இருக்கும். தனிப் பெரும்பான்மை பெற்றுவிட்டால், காங்கிரஸ் இடத்தை பாஜக பிடித்துக் கொண்டுவிடும். அதற்குப் பிறகு அதை ஆட்சியில் இருந்து அகற்றுவது சுலபமல்ல...''

''அதனால் சீதாராம் கேசரி அடக்கி வாசிப்பார் என்று நினைக்கிறீர்களா?''

''அடக்கி வாசிப்பாரோ என்னவோ, ஆட்சியைக் கவிழ்க்கும் துணிவு அவருக்கு வராது. வேண்டுமானால், பிரதமர் தேவே கெளடாவை மிரட்டிக் கொண்டிருப்பார், அவ்வளவுதான் முடியும். அரசு கவிழ்வதை காங்கிரஸ் எம்.பி.க்கள் அனுமதிக்கமாட்டார்கள்.''

அமைச்சர் சோமு கை கழுவிக் கொண்டு வரவேற்பறையில் வந்து உட்கார்ந்தார். நானும்...

''ஜெயின் கமிஷன் விசாரணை மீண்டும் சுறுசுறுப்படைந்திருக்கிறதே... காங்கிரஸின் வற்புறுத்தல் இருக்கிறதோ?''

''தெரியவில்லை. முதல்வரை விசாரணைக்கு அழைத்திருக்கிறார்கள். வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.  ப.சிதம்பரம், ஜெயலலிதா என்று பலருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டிருப்பதாகக் கூறுகிறார்கள்.''

''எப்படி இருக்கிறது அமைச்சர் பதவி?''

''மிக முக்கியமான துறையின் இணையமைச்சர் என்பதால், பொறுப்பும் வேலைப்பளுவும் அதிகம். கட்சிப் பணியிலிருந்தும், தொழிற்சங்கப் பணியிலிருந்தும் விலகி இருப்பது சிரமமாகத்தான் இருக்கிறது.''

நான் விடைபெற்றுக் கொள்ள எழுந்தபோது, ''அடிக்கடி வந்து போங்கள். நான் அமைச்சராகிவிட்டதாலேயே அந்நியனாகி விடவில்லை'' என்று சிரித்துக் கொண்டே வழியனுப்பினார்.

சிறிது நாளில் அவருக்கு அக்பர் ரோடு 2-ஆம் இலக்க பங்களா ஒதுக்கப்பட்டது. பலமுறை அங்கே தேநீர் அருந்தவும், உணவு அருந்தவும் சென்ற நாள்களும், புல்தரையில் நாற்காலியில் அமர்ந்து அளவளாவிய காலமும் இப்போதும் பசுமையாக இருக்கின்றன. ஹெலிகாப்டர் விபத்தில் அவர் அகால மரணமடைந்தபோது, சோகம் தாளாமல் விம்மி அழுதவர்களில் நானும் ஒருவன். 

என்னிடம் நெருக்கமான நட்புறவுடன் கூடிய மூன்று தலைநகர் அரசியல்வாதிகள் - என்.வி.என். சோமு, ராஜேஷ் பைலட், மாதவராவ் சிந்தியா - விபத்தில் உயிரிழந்தனர் என்பதை நினைக்கும்போதெல்லாம் அடிவயிற்றில் ஏதோ பிசைவது போலிருக்கும். சாமானியமான பத்திரிகையாளனான என்னைத் தங்களது சகோதரர்போல கருதி நட்புப் பாராட்டிய அவர்கள் மூவருமே எனது பூர்வஜென்ம பந்தங்களாக இருந்திருக்கக்கூடும். தமிழ்நாடு இல்லத்திலிருந்து காங்கிரஸ் தலைமையகத்துக்குச் சென்றபோது, நிருபர்கள் கூட்டம் நடைபெற இருப்பதாகத் தெரிவித்தார்கள். அந்தக் கூட்டத்தில் நானும் சங்கமமானேன்.

தலைவர் சீதாராம் கேசரி புதிய காங்கிரஸ் காரியக் கமிட்டியை அறிவிக்க இருப்பதாக நிருபர்கள் பேசிக் கொண்டிருந்தனர். நரசிம்ம ராவ் ஆட்சி அகன்றதற்குப் பிறகு, வி.என். காட்கிலின் பங்களிப்பு கணிசமாகக் குறைந்துவிட்டது. அவரது இடத்தைப் பெரும்பாலும் பொதுச்செயலாளர்களான தேவேந்திர துவிவேதியும், ஜனார்தன பூஜாரியும் நிரப்பி வந்தனர்.

நரசிம்ம ராவின் காரியக் கமிட்டியை அப்படியே தக்க வைத்துக்கொள்ள இருப்பதாகவும், தாரிக் அன்வரை மட்டும் கூடுதலாகச் சேர்த்துக் கொள்ள இருப்பதாகவும் நிருபர்களுக்கு வழங்கப்பட்ட செய்திக் குறிப்பு தெரிவித்தது. அதற்குமேல், தேவேந்திர துவிவேதி எதுவும் சொல்லாமல் நகர்ந்து விட்டார். ஜிதேந்திர பிரசாதாவைத் துணைத் தலைவர் பதவியில் சீதாராம் கேசரி தக்க வைத்துக் கொண்டதுதான் அதைவிட வியப்பு.

மற்ற நிருபர்களின் கவனத்துக்கு எட்டாத ஒரு விஷயம் எனக்கு மட்டும் பளிச்சென்று தெரிந்தது. நரசிம்ம ராவைப் போலவே, சீதாராம் கேசரியும் காரியக் கமிட்டி உறுப்பினர்கள் பட்டியலில் பிரணாப் முகர்ஜியைச் சேர்த்திருக்கவில்லை. முந்தைய அமைப்பில் இருந்தது போலவே, இப்போதும் அவர் சிறப்பு அழைப்பாளர்கள் பட்டியலில்தான் தொடர்ந்தார்.

ஏனைய உறுப்பினர்கள் எல்லோரையும்விட அனுபவசாலியும், கட்சியின் மூத்த தலைவருமான பிரணாப் முகர்ஜி சேர்க்கப்படாததில்கூட எனக்கு வருத்தம் இல்லை; தாரிக் அன்வர் சேர்க்கப்பட்டிருப்பதுதான் உறுத்தலாக இருந்தது - அவர் எனது நெருங்கிய நண்பர் என்றாலும்கூட...

இரவு எத்தனை நேரமானாலும் காத்திருந்து பிரணாப் முகர்ஜியைப் பார்த்துவிட வேண்டும் என்று தீர்மானித்து, அவரது கிரேட்டர் கைலாஷ் வீட்டிற்குச் சென்றேன். நான் எதிர்பார்த்தது போலவே பிரணாப்தா இருக்கவில்லை. சீதாராம் கேசரியையும், நரசிம்ம ராவையும் சந்திக்கச் சென்றிருப்பதாகச் சொன்னார்கள். இரவு சுமார் பத்து மணிக்குத்தான் அவர் வந்தார்.

ஏற்கெனவே இரவு உணவை முடித்திருப்பார் என்று நினைக்கிறேன். காரிலிருந்து இறங்கி நேராகத் தனது அலுவலக அறைக்குச் சென்றுவிட்டார். நான் பார்வையாளர்கள் அறையில் இருந்ததை அவர் பார்த்திருக்க வழியில்லை. என்னைத் தவிர வேறு யாரும் அன்று வந்திருக்கவும் இல்லை. உள்ளே தகவல் அனுப்ப யாரும் இருக்கவில்லை.

கால் மணி நேரம் கழிந்ததும், நான் சற்று துணிவை வரவழைத்துக் கொண்டு, அங்கிருந்து உள் அழைப்பு (இன்டர்காம்) மூலம் அவரது அறையைத் தொடர்பு கொண்டேன். அவரே எடுத்தார். நான் வந்திருப்பதாகவும் காத்திருப்பதாகவும் சொன்னபோது அவருக்கு ஆச்சரியம். 'கம்... கம்... கம் இன்சைட்...' என்று அழைத்தார். அவரது அறையில் மெல்ல நுழைந்தேன். 

வழக்கமான தனது மேஜையிலோ, சோபாவிலோ அல்லாமல் அறையில் ஓர் ஓரமாகப் போடப்பட்டிருந்த சாய்வு நாற்காலி போன்ற சோபாவில் அமர்ந்து, பக்கத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சட்டப் புத்தகங்களைப் புரட்டிக் கொண்டிருந்தார்.

அங்கேயிருந்த நாற்காலியில் உட்காரும்படி சைகை காட்டினார். அமர்ந்தேன். 'பைப்' புகைத்தபடி அவர் படித்துக் கொண்டிருந்ததை மூடி வைத்துவிட்டு எனது பக்கம் பார்வையைத் திருப்பினார்.

''நீங்கள் ஏன் புதிய காரிய கமிட்டியில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை? நரசிம்ம ராவ்தான் புறக்கணித்தார் என்றால், சீதாராம் கேசரியும் புறக்கணிக்கிறார்.

அப்படியானால் அதற்கு என்ன அர்த்தம்?''

கோபப்படுவார் என்று நான் எதிர்பார்த்தேன். அவர் சிரித்தார்.

''இன்றைய தலைவர்கள் எல்லோரையும்விட இந்திராஜிக்கு நெருக்கமாக இருந்தவன் என்பதால், தங்களுக்குக் கீழே என்னை வைத்துப் பார்க்க அவர்கள் தயங்குகிறார்கள். நான் போட்டியாக வரமாட்டேன் என்று தெரிந்தாலும்கூட, அப்படியொரு சந்தர்ப்பம் ஏற்படுவதைத் தவிர்க்க நினைக்கிறார்கள். அவர்களுடைய தர்மசங்கடம் எனக்குப் புரிகிறது. அதனால்தான் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.''

''உங்களுக்குக் கொஞ்சம்கூட வருத்தமே இல்லையா?''

''வருத்தப்பட்டு என்னவாகப் போகிறது? அரசியலில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் நாம் நமது நேரத்துக்காகப் பொறுமையாகக் காத்திருக்கப் பழக வேண்டும். அவசரப்படுவதாலோ, ஆத்திரப்படுவதாலோ எதுவுமே நடக்காது. மாறாக, எதிர்ப்புதான் அதிகரிக்கும். உனது வாழ்க்கையில் நீ கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் இது.''

நான் எதுவும் பேசவில்லை. பைப்பைப் பற்ற வைத்துப் புகையை இழுத்துவிட்டபடி அவர் பேசத் தொடர்கிறார் -

''அடுத்த ஒரு வாரம் மிகப் பெரிய பூகம்பங்கள் வெடிக்கப்போகின்றன. எனது நண்பர் பி.வி.யையும், காங்கிரஸையும் எப்படிக் காப்பாற்றப்போகிறோம் என்பதுதான் எனது கவலை...''

அவரது முகத்தில் கவலையின் ரேகைகள் தெரிந்தன. தான் ஒதுக்கப்பட்டாலும், கடமையிலிருந்து விலகாத அந்த மாமனிதரை வியப்புடன் பார்த்தபடி அமர்ந்திருந்தேன்.

அடுத்த நாளே அவர் எதிர்பார்த்த அந்த பூகம்பம் வெடித்தது...

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com