1,330 திருக்குறளுக்கு சிறுகதைகள்
By பிஸ்மி பரிணாமன் | Published On : 17th September 2023 12:15 PM | Last Updated : 17th September 2023 12:15 PM | அ+அ அ- |

திருக்குறளின் போதனைகளை அடிப்படையாக வைத்து 1,330 சிறுகதைகளை எழுதச் செய்து அதை ஏழு அடி உயரமும் ஆறு அடி அகலமும் கொண்ட பெரிய நூலாகத் தயாரித்துள்ளனர் பெரம்பலூரைச் சேர்ந்த 'அகழ் கலை இலக்கியம்' என்ற அமைப்பினர்'. வித்தியாசமான சாதனையை சாதித்திருக்கும் அந்த அமைப்பின் பொறுப்பாளரும், ஆங்கிலப் பேராசிரியையுமான வினோதினியிடம் பேசியபோது:
''1,330 திருக்குறள் தொடர்பாக, 1,330 திருக்குறள்நூலாக வெளியிட முடிவு செய்தாலும் 133 எழுத்தாளர்களை ஒன்று திரட்டியது 2021-ஆம் ஆண்டு கரோனா ஊரடங்கில்தான்.
சமூக வலைதளங்களில் 'தமிழ் எழுத்தாளர்களை வரவேற்கிறோம்'' என்று தகவல்களை வெளியிட்டபோது, பலரும் முன்வந்தனர். 'ஜூம்' முறையில் கலந்து பேசினோம்.
133 எழுத்தாளர்களை உறுதிப்படுத்தியவுடன் உரிய அவகாசம் கொடுத்து, ஒவ்வொரு எழுத்தாளருக்கும் ஓர் அதிகாரத்தை தேர்ந்தெடுத்து பத்து குறள்களுக்குப் பொருத்தமான சிறுகதைகளை எழுதச் சொன்னோம். பெறப்பட்ட சிறுகதைகளை நடுவர் குழுவிடம் கொடுத்தோம். இந்தப் பணி முடிய 2 ஆண்டுகள் ஆகிவிட்டன.
1,330 சிறுகதைகளை ஒரு தொகுப்பாக அச்சிடலாம் என்று முடிவு செய்தபோது, பிரமாண்ட வடிவில் அச்சிட்டால் என்ன? என்று தோன்றியது. திருக்குறளின் முதல் வரியில் நான்கு சீர் (சொல்) இரண்டாம் வரியில் மூன்று சீர் (சொல்) ஆக மொத்தம் ஏழு சொற்கள். அதனால் 7 அடி உயரமும் 7 அடி அகலமும் உள்ள நூலாக அச்சிட முடிவு செய்தோம். 'அகலத்தைக் குறையுங்கள்' எனஅச்சகத்தினர் கூறினர்.
ஏழு அடி நீளத்திலும் மூன்று அடி அகலத்திலும் சிறுகதைகளை அச்சிட்டு,பிறகு ஒரு பாதியை மறு பாதியுடன் ஒட்டி, 7 அடி உயரமும் 6 அடி அகலமுள்ள நூலாக உருவாக்கினோம். தாளின் இரண்டு புறமும் அச்சிட்டுள்ளோம். ஒவ்வொரு பக்கத்தையும் லாமினேட் செய்திருப்பதால், புரட்ட எளிதாக இருக்கும். இந்த நூலை சுவர்ப் புறத்தில் சார்த்தி வைக்கலாம். பெரியவர்கள் நின்று கொண்டு வாசிக்கலாம். சிறார்கள் ஸ்டூல் மேல் நின்று வாசிக்கலாம்.
எளிதாக கையில் எடுத்து வாசிக்கும் விதமாக, அகராதி வரிசையில் பத்து சிறுகதைகள் கொண்ட புத்தகமாக 133 நூல்களைத் தனியாக அச்சிட்டுள்ளோம். இதை அச்சிட ரூபாய் ஒரு லட்சம் செலவாகியுள்ளது. அதை 133 எழுத்தாளர்கள் பகிர்ந்துகொண்டோம்.
எழுத்தாளர்களில் சிறார்களும், முதிர்ந்தவர்களுக்கு உண்டு. ஜனரஞ்சக இதழ்களில் எழுதும் எழுத்தாளர்களும் உண்டு. இந்த நூல்களை மதுரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்துக்கு வழங்க அனுமதி பெற்று வழங்க உள்ளோம்'' என்றார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...