ஸ்டூடியோ!
By டெல்டா அசோக் | Published On : 17th September 2023 12:05 PM | Last Updated : 17th September 2023 12:05 PM | அ+அ அ- |

இந்தியாவின் சூப்பர் ஸ்டார் தீபிகா
நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கல்கி 2898'. இதில் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி மற்றும் தமிழ் நடிகர்களான கமல்ஹாசன், பசுபதி ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர். அதிக பொருட்செலவில் உருவாகி வரும் இந்த படம் ஒரு பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது.
வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் க்ளிப்ஸ் விடியோவைப் படக்குழு வெளியிட்டிருந்தது. ராஜமெளலி உள்ளிட்ட பலரும் விடியோவைப் பார்த்தபின் படக்குழுவினருக்குப் பாராட்டுகளைத் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் சமீபத்தில் அமெரிக்காவில் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் பிரபாஸ், தீபிகா படுகோனுடன் பணிபுரிந்த அனுபவம் குறித்துப் பகிர்ந்திருக்கிறார்: ''இந்தியாவின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் தீபிகா படுகோன். அவர் ஏற்கெனவே உலக அளவில் பிரபலமானவர். படப்பிடிப்பு தளத்தில் மிகவும் துடிப்போடு இருப்பார். எனக்கு அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் இப்போதுதான் முதல் முறையாக அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது''என்று கூறியிருக்கிறார்.
16 ஆண்டு கால அதிருப்தி
பாலிவுட் நடிகர் சன்னி தியோல் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'கதார் 2' படம் பெரிய அளவில் ஹிட்டாகி இருக்கிறது. இப்பட வெற்றியால் சன்னி தியோல் தனது சித்தி ஹேமாமாலினி குடும்பத்துடனும் சமரசமாகி இருக்கிறார்.
எம்.பி.யான சன்னி தியோல் வீடு ஒன்று ஏலத்திற்கு வந்தது. அந்த ஏலமும் இதனால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. சன்னி தியோல் நடிகர் ஷாருக்கானுடன் சேர்ந்து 1993-ஆம் ஆண்டு 'டர்' என்ற படத்தில் நடித்தார். அந்த நேரத்தில் ஷாருக்கான் திரைப்படத்துறைக்குப் புதியவராக இருந்தார். ஆனால் சன்னி தியோல் பிரபலமாக இருந்தார். இந்தப் படத்தில் ஷாருக்கானுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதால் சன்னி தியோல் அதிருப்தி தெரிவித்திருந்தார்.
அதன் பிறகு இருவரும் சேர்ந்து நடிக்கவில்லை. அதோடு இருவரும் கடந்த 16 ஆண்டுகளாகப் பேசிக்கொள்ளவும் இல்லை. ஆனால் இப்போது இருவரும் சமதானமாகிவிட்டனர். இது குறித்துப் பேட்டியளித்த சன்னி தியோல், ''ஷாருக்கான் எனக்கு போன் செய்து 'கதார் 2' பட வெற்றிக்கு வாழ்த்து சொன்னார்.
ஷாருக்கான் படத்தைப் பார்க்கப் போகும் முன்பு எனக்கு போன் செய்து வாழ்த்து சொன்னார். நான் அவருக்கு நன்றி சொன்னேன். அவரது மனைவி மற்றும் மகனிடமும் பேசினேன்'' என்று தெரிவித்திருந்தார். ஷாருக்கானும் தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடும் போது, ஒரு ரசிகர், 'கதார் 2' பார்த்தீர்களா?' என்று கேட்டதற்கு, 'பார்த்தேன், பார்த்தேன். மிகவும் நன்றாக இருந்தது!' என்று தெரிவித்தார்.
மகளுக்கு வழிகாட்டியாக ஷாருக்கான்
ஷாருக்கானின் மகள் சுஹானாகான் வெப் சீரிஸில் நடித்து வருகிறார். அவர் நடிக்கும் வெப் சீரிஸில் நடிகை ஸ்ரீதேவியின் மகள் குஷி கபூர் மற்றும் அமிதாப்பச்சன் பேரன் அகஸ்தியா நந்தா ஆகியோரும் நடிக்கின்றனர்.
இந்த வெப் சீரிஸை சோயா அக்தர் இயக்குகிறார். வரும் டிசம்பர் மாதம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இது வெளியாக இருக்கிறது. ஆர்யன் கானும் வெப் சீரிஸ் இயக்கத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில், பாலிவுட்டில் 'கஹானி 2' படத்தை இயக்கிய இயக்குநர் சுஜய் கோஷ் விரைவில் சுஹானா கான் மற்றும் ஷாருக்கானை வைத்து படம் இயக்கப்போவதாக குறிப்பிட்டு இருந்தார்.
தற்போது இப்படம் குறித்து மேலும் சில தகவல்கள் கிடைத்திருக்கிறது. அதன்படி சுஹானா நடிக்கும் படத்தில் ஷாருக்கான் கௌரவ தோற்றத்தில் மட்டும் நடிக்காமல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கப்போவதாக சுஜய் கோஷ் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதன் மூலம் சுஹானாவை இப்படத்தில் பிரபலப்படுத்த முடியும் என்று ஷாருக்கான் கருதுகிறார்.
இப்படத்தில் சுஹானா உளவாளியாக நடிக்கிறார். இதில் உளவாளிக்கு வழி காட்டியாக நடிக்கப்போவது நடிகர் ஷாருக்கான் என்று தெரிய வந்துள்ளது.
ஒரே கட்டடத்தில் நட்சத்திர அலுவலகங்கள்
மும்பையில் பாலிவுட் நட்சத்திரங்கள் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தின் குறிப்பிட்ட பகுதியைச் சொத்துக்களில் முதலீடு செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஏற்கெனவே அமிதாப் பச்சன் போன்ற நடிகர்கள் மும்பையில் பல இடங்களில் வீடு, அலுவலகம் வாங்கி வாடகைக்கு விட்டுள்ளனர்.
தற்போது மீண்டும் மும்பை அந்தேரி வீர் தேசாய் ரோட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள 'சிக்னேச்சர்' என்ற கட்டடத்தில் அமிதாப் பச்சன் 21-ஆவது மாடியில் நான்கு அலுவலகங்களை வாங்கி இருக்கிறார். ஒவ்வொன்றும் 2099 சதுர அடி கொண்டதாகும். நடிகர் கார்த்திக் ஆர்யன், அதே கட்டடத்தில் நான்காவது மாடியில் ஓர் அலுவலகத்தை ரூ.10.09 கோடிக்கு வாங்கியிருக்கிறார்.
இதே நான்காவது மாடியில் நடிகை சாரா அலிகானும், அவரது தாயார் அம்ரிதா சிங்கும் சேர்ந்து ஓர் அலுவலகத்தை ரூ.9 கோடிக்கு வாங்கியிருக்கின்றனர். பாலிவுட் நடிகை கஜோலும் இதே கட்டடத்தில் ஒரு அலுவலகத்தை வாங்கி இருக்கிறார்.
இரண்டு ஆண்டு கரோனாவிற்குப் பிறகு மும்பையில் இப்போதுதான் வீடு மற்றும் அலுவலக விற்பனை சூடு பிடித்து இருப்பதாக ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் மற்றும் பில்டர்கள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் அரசுக்குக் கடந்த மாதம் ரூ.776 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 21 சதவிகிதம் அதிகமாகும். மக்கள் அதிக அளவில் 500 முதல் 1000 சதுர அடி பரப்புள்ள சொத்துக்களில் ஆர்வம் காட்டுகின்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...