'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 158
By கி. வைத்தியநாதன் | Published On : 17th September 2023 11:54 AM | Last Updated : 17th September 2023 11:54 AM | அ+அ அ- |

உத்தர பிரதேச சட்டப்பேரவைக்கான தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்களே இருந்த நிலையில், மூத்த தலைவர்கள் பலரும் தேர்தல் பிரசாரத்தில் இருந்தனர். அஜித் சிங்கின் உதவியாளர் சமர்பால் சிங் எனது நெருங்கிய நண்பர். உத்தர பிரதேச அரசியல் குறித்துத் தெரிந்து கொள்வதாக இருந்தால், நான் அவரிடம் போய் உட்கார்ந்து விடுவேன். மிகவும் துல்லியமாகத் தேர்தல் முடிவுகளை அவர் கணித்து விடுவார்.
துக்ளக் ரோடிலுள்ள அஜித் சிங்கின் வீட்டுக்கு உத்தர பிரதேசத் தேர்தல் நிலவரம் குறித்துத் தெரிந்து கொள்ளப் போயிருந்தேன். அஜித் சிங் பிரசாரத்தில் இருந்ததால், வழக்கமான கூட்டம் எதுவும் இல்லாமல் வீடும் அலுவலகமும் வெறிச்சோடிக் கிடந்தது.
சமர்பால் சிங் தனது அலுவலக அறையில் தொலைபேசியில் உத்தரவுகள் பிறப்பித்தும், தகவல்களைக் குறிப்பெடுப்பதுமாக இருந்தார். நான் போய் அமர்ந் ததும், தனது அலுவல்களை மூட்டைகட்டிவிட்டு என்னோடு அரசியல் பேசத் தயாரானார் அவர்.
'உத்தர பிரதேசத் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?'
'எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காது என்பதுதான் எனது கணிப்பு. பகுஜன் சமாஜ் கட்சியும் காங்கிரஸூம் மூன்றாவது அணி அமைத்திருப்பதால், பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறும் கட்சியாக வரலாம். ஆட்சிக் கலைப்புக்கு முன்னர் இருந்த நிலைமைதான் மீண்டும் வரும். மாயாவதியை முதல்வராக ஏற்றுக் கொள்ள முலாயம்சிங் யாதவ் தயாராக இருந்தால் மட்டும்தான், பாஜகவுக்கு மாற்றாக இன்னொரு அரசை அமைக்க முடியும்.'
'இதுதான் அஜித்ஜியின் கணிப்புமா?'
'அவர்தான் முலாயம்சிங்கின் கூட்டணியில் இருக்கிறாரே. முலாயம் எப்படி சம்மதிப்பார்? நாங்கள் 38 இடங்களில் போட்டி போடுகிறோம். எத்தனை இடங்களில் வெற்றி பெறுகிறோம் என்பதைப் பொறுத்துத்தான் எங்கள் கருத்துக்கு மரியாதை இருக்கும்...'
'எத்தனை இடங்களில் வெற்றி பெற முடியும் என்று நினைக்கிறீர்கள்?'
'அதைப் பற்றி நான் அபிப்பிராயம் சொல்லக்கூடாது. முலாயம்சிங் முதல்வராவதை மாயாவதியும், மாயாவதி முதல்வராவதை முலாயம்சிங்கும் எப்பாடு பட்டாவது தடுத்து விடுவார்கள். நாங்கள் 25 இடங்களில் வெற்றி பெற்றால், ஒருவேளை பொதுவான முதல்வர் வேட்பாளராக அஜித்ஜிக்கு வாய்ப்புக் கிடைக்கலாம்.'
'என்னதான் நடக்கும் உத்தர பிரதேசத்தில்?'
'நான் சொல்கிறேன், குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அநேகமாக, குடியரசுத் தலைவர் ஆட்சிதான் தீர்வாக இருக்கும். ஆட்சி அமைவதாக இருந்தால், மாயாவதி தலைமையில்தான் ஆட்சி அமையும். மாயாவதியை பாஜக ஆதரிக்கப் போகிறதா, சமாஜவாதி - காங்கிரஸ் - ஜனதா தளம் கூட்டணி ஆதரிக்கப் போகிறதா என்பதைப் பொறுத்து அமையும். இல்லாவிட்டால், ஆளுநர் ஆட்சிதான்...'
எனக்கு என்ன ஆச்சரியம் என்றால், சமர்பால் சிங் சொன்னது போலவே தேர்தல் முடிவுகள் அமைந்தன. குடியரசுத் தலைவர் ஆட்சிதான் அமல்படுத்தப்பட்டது. ஓராண்டுக்குப் பிறகு, பாஜக ஆதரவுடன் மாயாவதி முதல்வரானார். 1996-இல் மட்டுமல்ல, அதற்குப் பிறகும் பல தேர்தல்களில் சமர்பாலின் கணிப்பு சரியாகவே இருந்து வந்திருக்கிறது.
'அது போகட்டும் சமர்பால், தில்லியில் என்ன நடக்கும்? தேவேகெளடா ஆட்சி தனது பதவிக் காலத்தை முடிக்குமா?'
'இது நித்திய கண்டம், பூர்ணாயிசு ஆட்சி. எந்த நேரமும் காங்கிரஸ் இந்த ஆட்சியைக் கவிழ்த்துவிடும். சீதாராம் கேசரிக்குப் பிரதமராகும் ஆசை வராமல் இருக்கும் வரைதான், தேவேகெளடா பிரதமராக இருப்பார்...'
'சீதாராம் கேசரிக்கு அப்படியொரு ஆசை வரும் என்று நினைக்கிறீர்களா?'
'ஏன் வரக்கூடாது? வெறும் 46 இடங்களுள்ள ஜனதா தளம் ஆட்சி அமைக்கலாமானால், 140 இடங்கள் கொண்ட காங்கிரஸ் ஏன் ஆட்சி அமைக்கக் கூடாது? நாங்கள் ஆட்சி அமைக்கிறோம், ஆதரவு தாருங்கள்; இல்லையென்றால் தேர்தலை சந்தியுங்கள் என்று சொன்னால், இப்போது ஐக்கிய முன்னணியில் உள்ள கட்சிகள் எல்லாம் சீதாராம் கேசரி வீட்டு வாசலில் வரிசை கட்டி நிற்கும்.'
தொலைபேசி ஒலித்தது. மிக ஆர்வமாக சமர்பால் ஹிந்தியில் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தார். உரையாடல் முடிந்ததும் என்னைப் பார்த்து சிரித்தபடி சொன்னார் - 'தேவேகெளடா விளையாடத் தொடங்கி இருக்கிறார். நரசிம்மராவ் மீது செயின்ட் கிட்ஸ் வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இதன் அடிப்படையில் அவர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம்.'
'அடுத்தது என்ன நடக்கும்?'
'ராஜீவ் காந்தியின் தூண்டுதலால், அவர் பிரதமராக இருக்கும் போது எழுப்பப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில், இப்போது நரசிம்ம ராவை குறி வைக்கிறார்கள்.'
அதற்கு மேல் நான் அங்கே இருக்க விரும்பவில்லை. அங்கிருந்தபடி ஸ்ரீகாந்த் ஜிச்கரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். அவர் நரசிம்ம ராவின் மோதிலால் நேரு மார்க் இல்லத்துக்குப் புறப்பட இருப்பதாகச் சொன்னார்.
உடனடியாகக் கிளம்பி வந்தால் தன்னுடன் சேர்ந்து கொள்ளலாம் என்றும் தெரிவித்தார். கிளம்பி விட்டேன்.
பிரணாப் முகர்ஜி, கபில் சிபல் உள்ளிட்ட மூத்த தலைவர்களுடன் நரசிம்ம ராவ் ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதாகவும், அதனால் உடனடியாக அவரது வீட்டிற்குப் போவதாக இல்லை என்றும் ஸ்ரீகாந்த் ஜிச்கர் தெரிவித்தார். தன்னிடமிருந்த ஒரு கோப்பை எடுத்து, என்னிடம் படிப்பதற்கு நீட்டினார். அது, நரசிம்ம ராவ் மீதான செயின்ட் கிட்ஸ் வழக்கின் குற்றப்பத்திரிகை.
சிறுபிள்ளைத்தனமான குற்றச்சாட்டின் அடிப்படையில் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சராகவும், பிரதமராகவும் இருந்த ஒருவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருப்பது எனக்கு வியப்பாக இருந்தது. அதிலும் வியப்பு என்னவென்றால், உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் பேரில் சிபிஐ இந்த வழக்கில் விசாரணை மேற்கொள்கிறது என்பதுதான்.
1996-இல், இந்த வழக்கு ஏழு ஆண்டு பின்னணி கொண்டது.
ஃபோபர்ஸ் பீரங்கி ஊழல் தொடர்பாக, ராஜீவ் காந்தி மீது அவரது அமைச்சரவையில் நிதியமைச்சராகவும், பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் இருந்த வி.பி. சிங் ஊழல் குற்றச்சாட்டை எழுப்பினார். காங்கிரஸில் இருந்து விலகி 'ஜன் மோர்ச்சா' என்கிற கட்சியைத் தொடங்கி இருந்தார் வி.பி. சிங். தொடர்ந்து ராஜீவ் காந்திக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எதிராகப் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார்.
வி.பி. சிங்கிற்குக் களங்கம் ஏற்படுத்தும் முயற்சியாக, அவர் மீது சில குற்றச்சாட்டுகளை எழுப்ப சதித்திட்டம் தீட்டப்பட்டது என்பதுதான் செயின்ட் கிட்ஸ் வழக்கு. வி.பி. சிங்கின் மகன் அஜய் சிங், நியூயார்க் சிட்டி வங்கியில் பணிபுரிந்து கொண்டிருந்தார். செயின்ட் கிட்ஸ் தீவிலுள்ள வங்கியில் அவரது பெயரில் வங்கிக் கணக்குத் தொடங்கப்பட்டது என்றும், ஃபர்ஸ்ட் டிரஸ்ட் கார்ப்பரேஷன் என்கிற நிறுவனத்தின் பெயரில் வி.பி. சிங்குக்கு மொத்தம் 2 கோடியே 10 லட்சம் டாலர் அந்த வங்கிக் கணக்கில் வைப்புத் தொகையாக இருப்பதாகவும் கூறப்பட்டது.
1986 செப்டம்பர் 16-க்கும், 1987 மார்ச் 26-ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் இந்தத் தொகை டெபாசிட் செய்யப்பட்டது என்று, 1989 ஆகஸ்ட் மாதம் குவைத்திலிருந்து வெளிவரும் 'அரப் டைம்ஸ்' பத்திரிகையில் ஒரு செய்தி வந்தது.
சந்திராசுவாமியின் உதவியுடன், இது தொடர்பாக அப்போது ராஜீவ் காந்தி அமைச்சரவையில் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த நரசிம்ம ராவ் போலி ஆவணங்களைத் தயாரித்தார் என்பதுதான் குற்றச்சாட்டு.
'சதித்திட்டம் தீட்டுதல், போலி ஆவணங்களை உருவாக்குதல், வி.பி. சிங்கின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தப் போலி ஆவணங்களைத் தயாரித்தல்' உள்ளிட்ட குற்றங்களுக்காக பி.வி. நரசிம்ம ராவ், சந்திராசுவாமி, அவரது உதவியாளர் கே.எஸ். அகர்வால், வெளியுறவுத் துறை இணையமைச்சராக இருந்த கே.கே. திவாரி ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த அளவுக்குக் கீழ்த்தரமான செயல்களில் நரசிம்ம ராவ் ஈடுபட்டிருக்க வழியில்லை என்பது அப்பட்டமாகத் தெரிந்தது. அந்த வழக்கில் அமலாக்கப் பிரிவின் முன்னாள் தலைவர் கே.எஸ். வர்மா, ஆயுத வியாபாரி அட்னான் கúஸாகியின் மாப்பிள்ளையான லாரி கோப் ஆகியோரும் இணைக்கப் பட்டிருந்தனர். வெளிநாட்டில் இருந்து வெளிவரும் பத்திரிகையொன்றில் வெளியாகி இருந்த செய்தியின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதும், உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் பேரில் விசாரணை நடத்தப்படுவதும் விசிரித்திரமாக இருந்தது.
'படித்துப் பார்த்தீர்களா? உங்களுக்கு என்ன தோன்றுகிறது?' - சிரித்தபடியே கேட்டார் ஜிச்கர்.
'சிறு பிள்ளைத்தனமாகத் தெரிகிறது. இதை எப்படி உச்சநீதிமன்றம் முக்கியத்துவம் கொடுத்து விசாரிக்கச் சொல்கிறது என்பதுதான் புரியவில்லை.'
'இன்னும் நிறைய வேடிக்கைகள் இருக்கின்றன. ஃபர்ஸ்ட் டிரஸ்ட் கார்ப்பரேஷனின் அப்போதைய தலைவர் ஜார்ஜ் டி. மெக்லியான் இறந்துவிட்டதால் அவரது பெயர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறது. லாரி கோப், வர்மா மீது வழக்குத் தொடர எந்தவித ஆதாரமும் இல்லை என்று சிபிஐ தெரிவித்தும்கூட அவர்களுக்கு ஜாமினில் வெளிவர முடியாத வாரண்ட் பிடிப்பிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
அயல் நாட்டவரான லாரி கோப்பைப் பிடித்துக் கொண்டுவர ஏற்பாடு செய்யுமாறு மாஜிஸ்ட்ரேட் பிரேம்குமார் உத்தரவிடுகிறார். சந்திராசுவாமிக்கும், அகர்வாலுக்கும் ஜாமீன் அளித்திருக்கிறார். நரசிம்ம ராவுக்குக் கைது வாரண்ட் பிறப்பிக்கிறார். எல்லாமே விசித்திரமாக இருக்கிறது...'
'இந்த வழக்கு என்னவாகும் என்று நினைக்கிறீர்கள்?'
'யாருக்குத் தெரியும்? இதுபோல இன்னும் எத்தனை வழக்குகளை நரசிம்ம ராவ்ஜிக்கு எதிராக ஜோடிக்கப் போகிறார்களோ தெரியவில்லை. இதன் பின்னணியில் இருப்பது யார் என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது...'
'பிரதமர் தேவேகெளடாவுக்கு இதில் தொடர்பு இருக்க வாய்ப்புள்ளதாக நினைக்கிறீர்களா?'
'யாரையும், எதையும் எதுவும் சொல்ல முடியவில்லை. பிரதமர் தேவே கெளடா உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஏ.எஸ். அகமதியைச் சந்தித்திருக்கிறார். எதற்காக சந்தித்தார், அதற்கான அவசியம் என்ன என்று தெரியவில்லை. நரசிம்ம ராவ் கைதாவதாலோ, காங்கிரஸ் பலவீனப்படுவதாலோ பிரதமர் தேவே கெளடாவுக்கோ, ஜனதா தளத்துக்கோ என்ன லாபம்? அப்படியே ஏதாவது ஆதாயம் இருந்தால் அது பாஜகவுக்குத்தான். பாஜகவின் பங்கு இதில் என்ன
என்றுகூட யோசிக்கத் தோன்றுகிறது...'
நாங்கள் பேசிக் கொண்டிருக்கும்போது தொலைபேசி ஒலித்தது. பேசி முடித்ததும் அவர் எழுந்திருந்தார்.
'வாருங்கள், பிரணாப் முகர்ஜியின் வீட்டுக்குப் போவோம். நரசிம்ம ராவ்ஜி அங்கே போயிருப்பதாகத் தெரிகிறது. அவரது வழக்குரைஞர் ஆர்.கே. ஆனந்த், கபில் சிபல், தலைவர்கள் குலாம் நபி ஆஸாத், சியாமசரண் சுக்லா, பல்ராம் ஜாக்கர் ஆகியோரும் பிரணாப் முகர்ஜியை சந்திக்கச் சென்று கொண்டிருக்கிறார்கள். நாமும் அங்கே போவோம்' என்றபடி என்னையும் அழைத்துக் கொண்டு விரைந்து வெளியே வந்தார்.
நாங்கள் காரில் ஏறி அமர்ந்து கிளம்பும் நேரத்தில், ஜிச்கரின் உதவியாளர் ஓடிவந்து அந்த திடுக்கிடும் செய்தியை அவரிடம் ரகசியமாகத் தெரிவித்தார். 'என்ன?' என்று நான் கேட்பதற்குள், ஜிச்கரே என்னைப் பார்த்துச் சொன்னார் -
'பேட் நியூஸ்... நரசிம்ம ராவ்ஜியைக் கைது செய்ய பெருநகர மாஜிஸ்டிரேட் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்...'
(தொடரும்)
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...