Enable Javscript for better performance
ஒரே தீர்வு- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    ஒரே தீர்வு

    By ஆனந்த் சீனிவாசன்  |   Published On : 17th September 2023 11:57 AM  |   Last Updated : 17th September 2023 11:57 AM  |  அ+அ அ-  |  

    kadhir3


    அன்று காலை லட்சுமி ஆன்ட்டி தூங்கி, எழுந்திருக்கும்போது மணி எட்டு.
    உடல் வலியுடன் மன வலியும் சேர்ந்து சோர்வை கொடுத்தது. வயது ஒன்றும் அதிகமில்லை ஐம்பத்து ஐந்து தான்.
    நமக்குப் பிடித்தமான விஷயங்கள் நடக்காது போனாலோ, அது முற்றிலும் பிறரால் புறக்கணிக்கப்பட்டிருந்தாலோ இம்மாதிரி பிரச்னைகள் வரத்தானே செய்யும்.
    வேலைக்காரப் பெண் சிவகாமி, உள்ளே பாக்கெட் பாலுடன் நுழைந்தாள். சிவகாமி டீ போட்டுக் கொண்டு வருவதற்குள், காலைக்
    கடன்களை, முடித்துவிட்டு சோபாவில் அமர்ந்த லட்சுமி 'பிளட் பிரஷர்' மாத்திரையைப் போட்டுக் கொண்டு டீயை குடித்தாள் .
    காலை டிபன் தயார் செய்யும் வேலையில் சிவகாமி தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருந்தபோது, லட்சுமி ஹாலில் மாட்டப்பட்டிருந்த போட்டோக்களைப் பார்த்துவிட்டுக் கண்களைத் துடைத்தாள்.
    'மனக்குமுறலுக்கு மருந்தே கிடையாதா?'
    என்று தன்னுள் கேள்விக் கேட்டுக் கொண்டாள்.
    டிபன் முடித்தவுடன் சிறிது நேரம் செய்தித்தாளில் பார்வையைச் செலுத்தினார். மனசு அதை நிராகரித்தது. மடித்து வைத்தாள்.
    மீண்டும் ஹாலில் மாட்டப்பட்டிருந்த போட்டோக்களைப் பார்த்து பார்த்து மனதுக்குள் அழுதாள்.
    காய்கறி வாங்க சிவகாமி மார்க்கெட் கிளம்பி போயிருந்தாள்.
    நேரத்தைப் போக்க நினைத்து லட்சுமி ஆன்ட்டி தொலைக்காட்சியை, ஆன் செய்தபோது, அங்கு ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சி ஓடிக் கொண்டிருந்தது.
    நிகழ்ச்சி நடத்துபவர் பங்கேற்பாளர்களிடம் 'நீங்கள் உங்களுடைய வாழ்வை யாருக்காக வாழ்கிறீர்கள்?' என்கிற கேள்வியைக் கேட்ட அடுத்த விநாடி அந்தக் கேள்வி தன்னைப் பார்த்து கேட்ட மாதிரி இருந்தது லட்சுமிக்கு. அந்தக் கேள்வி லட்சுமியின் ஆழ்மனதில் ஆயிரம் கேள்விகளைக் கேட்டு துளைத்து எடுத்தது.
    கணவனைப் பறிகொடுத்து வட இந்தியாவிலிருந்து புலம் பெயர்ந்தபோது ரமேஷுக்கு 10 வயது. இந்த ஊருக்கு வந்து, அவனை நன்கு படிக்க வைத்து, அவன் விரும்பிய ராஷ்மியை கல்யாணம் செய்துவைத்து, கொள்ளை அழகு பேத்தி சுஷ்மிதாவை அவர்கள் தன் கையில் கொடுத்தபோது, 'சொர்க்கம் இனி சுஷ்மிதாதான்' என்று நினைத்தாள்.
    சுஷ்மிதா ஒரு அழகு தேவதை. அவளைத் தினம் பார்த்து ரசித்து, அவளுக்காக விளையாட்டுப் பொம்மைகள் வாங்கிக் கொடுத்து, அவளோடு விளையாடின பொழுதுகள் தான் கொடுத்து வைத்தவள் என்று எண்ணினாள்.
    இரண்டு வயது சுஷ்மிதாவுடன் கொஞ்சம் நேரம் கிரிக்கெட் விளையாட்டு; பின்னர் புட்பால் விளையாட்டு.
    அதன் பின்னர், காய்கறிகள் பழங்கள் பற்றிய பாடம் . மனித உறுப்புகள் பற்றிச் சொல்லிக் கொடுத்த பிறகு, ஆங்கிலத்தில் ரைம்ஸ் பற்றிய படிப்பு., அதன் பின்னர் ஒன்.. டு.. த்ரீ.. சொல்லிக் கொடுப்பாள். தாய் மொழி ஹிந்தியாக இருந்தபோதிலும், தன் பேத்திக்குத் தமிழ் நன்கு கற்க வேண்டும் என்று ஆத்திசூடி, திருக்குறள்.. கற்றுக் கொடுப்பாள் லட்சுமி.
    பயங்கரச் சுட்டியான சுஷ்மிதா உடனே அதை கற்றுக் கொண்டு 'அறம் செய விரும்பு..' என்று ஆரம்பித்து 'ஊக்கமது கைவிடேல்..' என்று சொல்லும்போது, இரண்டு கைகளாலும் சைகை காண்பிப்பாள். அதை நினைத்து நினைத்து சந்தோஷப்பட்ட லட்சுமி, இப்போது சுஷ்மிதா இல்லாத வெறுமையைப் பார்க்கின்றபோது, மனதுக்குள் அழ ஆரம்பித்தாள்.
    சுஷ்மிதாவுக்கு ஒவ்வொரு பாடம் சொல்லிக் கொடுக்கும்போது லட்சுமி தானும் ஒரு குழந்தை போல் ஆகி திரும்ப, அவள் தன் மழலையில் சொல்கிறபோது அனுபவிக்கும் ஆனந்தம் வார்த்தையில் வர்ணிக்க இயலாது.
    யானை சவாரி விளையாட்டு சுஷ்மிதாவுக்கு மிகவும் பிடிக்கும். தனது உடம்பின் மீது அவளை ஏற்றிக்கொண்டு ஒரு ரவுண்ட் வந்து இரண்டாவது ரவுண்ட் கேட்கும்போது பாட்டிக்கு மூட்டு வலி 'உவ்வா' என்று லட்சுமி சொல்வாள்,. அடுத்த விநாடியே சுஷ்மிதா லேகிய பாட்டிலை எடுத்துவந்து தேய்த்து விடும்போது, அப்படியே கட்டி அணைத்து முத்த மழை பொழிந்தது எவ்வளவு சந்தோஷத்தை ஏற்படுத்தியது.
    பக்கத்தில் உள்ள பூங்காவுக்கு சுஷ்மிதாவை அழைத்துப் போய், ஊஞ்சல் விளையாட்டு, சீசா விளையாட்டு., சறுக்கு மரம்... இவைகள் மூலம் ஆசை தீர விளையாடும்போது அவள் முகத்தில் சந்தோஷ ரேகைகள் காணப்பட்டு, லட்சுமியும் மகிழ்வாள்.
    உடல்ரீதியாகக் களைப்பு தோன்றினாலும், குழந்தையின் கள்ளச் சிரிப்பு தேன் மழலை எல்லாக் களைப்பையும் போக்கிவிடும் லட்சுமிக்கு.
    ஒருமுறை அருகேயுள்ள சூப்பர் மார்க்கெட் அழைத்துப் போனபோது, அங்கு வைக்கப்பட்டிருந்த காய்கறிகள், பழங்கள் பெயர்களை கடகடவென சொன்னதும் அங்குள்ளவர்கள் ஆச்சரியபட்டார்கள்.
    லிஃப்ட் ஏறும்போது மேல் பட்டனை பிரஸ் பண்ணும்போது, ''பாட்டி பாட்டி ,இது டிரையாங்கிள்'' என்று சுஷ்மிதா சொல்லும்போது, லட்சுமி பூரிப்பாள்.

    ''அம்மா சாப்பாடு ரெடி'' என்று வேலைக்காரம்மா சொன்னதும், சகஜ நிலைக்குத் திரும்பினார் லட்சுமி.
    மதியம் 4 மணி. வீட்டு காலிங் பெல்லை ஆகாஷ் அழுத்தியபோது, லட்சுமியே
    வந்து திறந்தாள்.
    ''யாரு?''
    ''நான் ஆகாஷ். ஆன்ட்டி உங்க பக்கத்து வீடு..''
    ''அடடே!! வாப்பா ! உள்ளே வா. பார்த்து நாலு வருஷம் மேல ஆச்சுல்ல ? அதான் சட்டுன்னு அடையாளம் தெரியலை?''
    ''பரவாயில்ல ஆன்ட்டி.''
    ''இரு டீ போட்டுக் கொண்டு வர சொல்றேன். சிவகாமி .. இரண்டு டீ கொண்டுவா?''
    ''ஆமாம் ! வீட்டிலே ரமேஷ் அண்ணா, ராஷ்மி அண்ணி, குட்டி வாலு சுஷ்மிதா யாரையும் காணோம். எங்கே அவங்க? சுஷ்மிதா குட்டிக்கு டிரஸ், பொம்மைகள். உங்களுக்குத் தங்க வளையல் இரண்டு ஜோடி. ரமேஷ் அண்ணாவுக்கும், அண்ணிக்கும், டிரஸ் வாங்கிருக்கேன். நல்லா இருக்கான்னு பாருங்களேன்?'' என்று கொண்டு வந்த சாக்லேட்டுகளுடன் சேர்த்து கொடுத்து நமஸ்காரம் செய்தான் ஆகாஷ்.
    ''நல்லா தீர்க்காயுசாக இருப்பா..''
    ''என்ன ஆன்ட்டி? நான் கேட்ட கேள்விகளுக்கு எந்தப் பதிலும் காணும்?''
    அதைக் கேட்டதும், லட்சுமிக்கு துக்கம் தொண்டையை அடைத்து, அழ ஆரம்பித்துவிட்டாள்.
    ''ஆன்ட் டி பீ கூல்.! என்ன நடந்துச்சு ஏன் அழுறீங்க?''
    அழுகையை, கொஞ்சம் கொஞ்சமா நிறுத்திவிட்டு, இந்த 3 வருஷ இடைவெளியின்போது நடந்த விஷயத்தைச் சொல்ல ஆரம்பித்தாள் லட்சுமி.
    ''அவங்க இரண்டு பேரும்ஆபிஸ் போனவுடன் சுஷ்மிதாவை கவனிச்சுப்பேன். ,அவங்க இரண்டு பேரும் ஆபிஸ் முடிச்சிட்டு வருவதற்கும் சரியா இருக்கும். வந்தவுடன் அவங்க இரண்டு பேரும் டீ குடித்துக் கொண்டே, 'ரொம்ப தேங்க்ஸ் அத்தை.. நீங்க மட்டும் சுஷ்மிதாவை இப்படிகவனிச்சு எங்கச் சிரமத்தைக் குறைக்கிறீங்க.. இல்லைன்னா எங்க பாடு திண்டாட்டம்தான்' என்று ராஷ்மி சொல்ல, சொல்ல ரமேஷும் அதை ஆமோதிப்பான். அது எனக்கு இன்பமயமான காலம். ரமேஷுக்காக அடகு வைத்த இளமையை வட்டியுடன் மீட்டு தந்த தெய்வம் சுஷ்மிதா. நான் பெற்ற பிள்ளையிடம் காட்டிய கஞ்சதனத்தை பேத்தி சுஷ்மிதாவிடம் நான் காட்டியதில்லை. இப்ப அவ இந்த ஸ்டேட்டை விட்டே போயிட்டா ?''
    இப்படிச் சொன்னதும் ஆகாஷ் அதிர்ச்சியாகி, ''எவ்வளவு நாள் ஆச்சு ஆன்ட்டி?''
    ''ஒரு ஆறு மாசம் இருக்கும். சுஷ்மிதா இல்லாமல் நான் தினமும் செத்துக்கிட்டு இருக்கேன் ஆகாஷ்..''
    ''ஏன் என்ன ஆச்சு ?''
    ''மூணு வருஷம் முன்பு நீயும் உங்க குடும்பமும் அமெரிக்கா போனதால், விஷயம் உங்களுக்குத் தெரிய வாய்ப்பு இல்லை. இவ்வளவு அபிமானம் வைச்சு , என்னையும் அவங்களையும் நீ பார்க்க வந்திருக்கே.. உன்கிட்ட சொன்னா, எனக்கு மன பாரம் குறையும் .'
    ''நான் கேட்டுக்குறேன் ஆன்ட்டி! இப்ப உங்களுக்குத் துணை யாரு?''
    'ஒரு வேலைக்காரம்மா பேரு சிவகாமி . வந்து துணைக்கு இருப்பாங்க..'' என்று தொடர்ந்து சொல்ல ஆரம்பித்தாள் லட்சுமி.
    ''நல்லா போய்க்கிட்டிருந்த அவங்க குடும்ப வாழ்க்கையில் பூ நாகம் ஒன்னு புகுந்துச்சு. ராஷ்மி ஹைதராபாத்தில் ஒரு செமினார் போனபோது , முன்னாள் காதலன் சந்தோஷை சந்தித்தாள். அவள் ரமேஷை உதறிவிட்டு சந்தோஷுடன் கிளம்பி போய் விட்டாள். இரண்டு பேரும் விவாகரத்து வாங்கிட்டாங்க.. இப்போ ராஷ்மி புணேவில் செட்டிலாயிட்டாள். மாதம் ஒரு நாள் குழந்தையைப் பார்த்துவிட்டு வரலாம் என்று தீர்ப்பு வந்தும், அதை ரமேஷ் ஏன் புறக்கணித்தான்னு தெரியலை. நான் எவ்வளவோ கெஞ்சி பார்ததும் சுஷ்மிதாவையும் தன்னுடன் கூட்டிகிட்டு போயிட்டாள் ராஷ்மி. அந்த சுஷ்மிதா என்னைவிட்டு போகமாட்டேன்னு சொல்லி, அடம் பிடிச்சப்ப, தரதரவென்று இழுத்துக் கொண்டு போனாள். என் உயிரோடு கலந்த சுஷ்மிதாவை பார்க்க முடியாமல் தவிக்கிறேன். ஆறு மாசம் ஆச்சு! இப்படி பைத்தியம் மாதிரி இருக்கேன். ஹால் பூரா பாரு சுஷ்மிதா போட்டோக்கள்தான்!''
    ''கேக்கவே ரொம்பக் கஷ்டமா இருக்கு ஆன்ட்டி. ஆமாம் ரமேஷ் அண்ணா ஒன்னும் கேக்கலையா?''
    ''துரோகம் செஞ்ச ராஷ்மி மேலயும், குடும்பத்தைக் கலைச்ச சந்தோஷ் மீதும் கோபம் கொண்டு, ஒரு சந்நியாசி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கான்.''
    ''ரமேஷ் அண்ணா இப்ப எங்கே இருக்கார்?''
    ''எங்கே இருக்கான்? என்ன வேலை பார்க்கிறான்? எதுவும் எனக்குத் தெரியாது? மாதத்தில் முதல் ஞாயிறு வருவான். செலவுக்குப் பணம் கொடுத்து செல்வான். அரை மணி நேரம் கூடத் தங்க மாட்டான். வேலைக்கார அம்மாவிடம் என்னைக் கவனமாகப் பாத்துக்கச் சொல்வான். இதே நிலைமை தான் ஆறு மாசமா..''
    சட்டென்று காலண்டரை பார்த்தான் ஆகாஷ்.
    நல்ல வேளை நாளை முதல் ஞாயிறு. ரமேஷ் வந்தவுடன் ,இந்தப் பிரச்னை பற்றி ஒரு தீர்வு கிடைக்கப் பாடுபடுவோம்.
    ''சரி ஆன்ட்டி ! நான் கிளம்பறேன். நான் ஹோட்டலில் தங்கிட்டு நாளை வரேன்.''
    ''என்ன ஆகாஷ் வராதவன் வந்துருக்கே! இங்கேயே தங்கு. எனக்கும் கொஞ்சம் ஆறுதலாக இருக்கும்'.
    டின்னர் ஆன்ட்டியுடன் சேர்ந்து சாப்பிட்ட பிறகு, அவனுக்கு என்று ஒதுக்கப்பட்ட அறையில் படுக்கப் போனான். ஆனால் தூக்கம் வர மறுத்தது.
    நினைவலைகள் பின் நோக்கி சென்றது.
    புறநகர் பகுதியில் லட்சுமியின் வீட்டுக்குப் பக்கத்தில் இவர்கள் குடி வர இருவரது குடும்பத்தினரும் ஒருவருக்கொருவர் நன்கு பழக ஆரம்பித்தனர்.
    வட இந்தியாவிலிருந்து இவர்களும் புலம் பெயர்ந்தவர்கள். அதுவும் ஆகாஷ் என்றால் லட்சுமிக்கு மிகவும் பிடிக்கும். சுஷ்மிதா அப்போது 6 மாத குழந்தை.
    அவன் அமெரிக்கா போகப் பண உதவி செய்த லட்சுமியை எப்படிமறக்க முடியும்?
    மனோதத்துவப் படிப்புக்கு அமெரிக்கா போய் அங்கேயே வேலை கிடைத்து, 3 வருடம் கழித்து, ஊர் திரும்பிய ஆகாஷுக்கு , இப்படியொரு நிலைமையில் லட்சுமியை சந்திப்பான் என்று நினைக்கவில்லை.
    தான் ஒருசைகாலிஜிஸ்ட் எப்படியும்ஆன்ட்டியை சகஜ நிலைக்கு கொண்டு வரவேண்டும். அதுதான் நன்றிக்கடன் என்று நினைத்துக் கொண்டே தூங்கிவிட்டான்.
    மறுநாள் காலையில் சீக்கிரமே வந்துவிட்ட ரமேஷை பார்த்ததும், ஆகாஷ் மனம் சங்கடப்பட்டது . அவனிடம் இருந்த துள்ளல் காணாமல் போய் இருந்தது . லட்சுமி ஆன்ட்டி சொன்னபடி ஒரு சந்நியாசி மாதிரிதான் இருந்தான். சேவிங் செய்யாத முகம் கண்களில் எப்போதும் சோகம் தெரிந்தது.
    பரஸ்பர விசாரிப்புக்கு பிறகு ஆகாஷ் பேச்சை தொடர்ந்தான்
    ''ஐ ஆம் ரியலி சாரி அண்ணா. எல்லா விஷயமும் கேள்விப்பட்டேன். இப்போ ஆன்ட் டி நிலைமை ரொம்ப மோசமா இருக்கு. இதை உடனடியாகக் களையணும். உங்க ஒத்துழைப்பு வேணும் அண்ணா..''
    ''ஆகாஷ்.! நான் என்ன செய்ய முடியும்?'' என்றான் விரக்தியுடன் ரமேஷ்.
    ''அப்படியில்லை அண்ணா ! நீங்க ஒருமுறை புணே போயிட்டு வாங்க . ஆன்ட்டியையும்அழைச்சிட்டு போங்க! சுஷ்மிதாவை பார்த்துப் பேசினால் ஆன்ட்டி சந்தோஷப்படுவாங்க..''
    இப்படி ஆகாஷ் சொன்னதும் ஆவேசத்துடன் ரமேஷ். ''அந்த ஓடுகாலியை பார்க்க நான் போகப் போவதில்லை.'' என்றான்.
    ''அண்ணா நீங்க ஏன் அப்படி நினைக்கணும் ? உங்க வாரிசு, உங்க ரத்தம் பார்க்க போங்க. கூடவே அம்மாவும் வந்துட்டு போகட்டும்..''
    ''இல்லை ஆகாஷ் என் மனசு கல்லாயிடுச்சு''
    ''சரி நீங்க போக வேண்டாம் அண்ணி போன் கொடுங்க...''
    ''அவ ஃபோன் நம்பர் என்கிட்ட இல்லை. வாங்கி வைச்சுக்க விருப்பமும் இல்லை.''
    ''சரிஅட்ரஸ் கொடுங்க. புணேவில் இருக்கும் என் நண்பனைவிட்டுச் சந்திக்கச் சொல்லி
    ஃபோன் நம்பர் வாங்குகிறேன். என்கிட்ட பேச சொல்றேன்..''
    ''இது தேவையில்லாத ஒன்று ஆகாஷ்.''
    ''இல்லைண்ணா! இப்ப நான் கேட்கிறது கூட ஆன்ட்டி மனநிலை உத்தேசித்துத் தான். பாருங்க ஆன்ட்டியை... மனதளவில் நொறுங்கி இருக்காங்க..''
    வேண்டா வெறுப்பா முகவரியை சொன்னான்.
    பின்னர், தனக்கு வேலை இருப்பதாகச் சொல்லி கிளம்பி போயிருந்தான் ரமேஷ்.
    அட்ரஸ் குறித்துக் கொண்டு நண்பனிடம், குறிப்பிட்ட விலாசத்தில் ராஷ்மியைப் பார்க்கும்படி ஃபோனில் தகவல் சொன்னான் ஆகாஷ். தன் குறிக்கோளைச் சுருக்கமாகச் சொல்லி இந்த விஷயத்தில் தீவிரம் பற்றிச்சொன்னான்.
    அன்று மாலையே ஆகாஷின் நண்பன் ராஷ்மி விலாசத்தைக் கண்டுபிடித்து ,அவளது ஃபோன் நம்பரை வாங்கிக் கொண்டான் . தன் நண்பனும் ஒரு சைகாலாஜிஸ்ட் என்பதால் ராஷ்மியிடம் இந்தப் பிரச்னை பற்றிப் பேச முடிந்தது.
    ஆகாஷ் பற்றி ஏற்கெனவே தெரியும் என்பதால் அவளும் பேசினாள்.
    ''அண்ணி உங்க சொந்த விஷயம் பத்தி, நான் எதுவும் பேசமாட்டேன்..''
    தான் சொல்ல வேண்டியது பற்றிச் சுருக்கமாகச் சொல்லிவிட்டு, '' ஒரு சைகாலிஜிஸ்டு பார்வையில் ஆன்ட்டி படும் பாசப் போராட்டதுக்கு ,ஒரே தீர்வு இருக்கு; அது உங்களிடம் இருக்கு அண்ணி'' என்றான் ஆகாஷ்.
    தன் அட்வைஸ் கேட்டு நடந்தால், ஆன்ட்டியின் உயிர் காப்பாற்றப்படும் என்று சொன்னதும்,அவள் மனம் இறங்கினாள்.
    ''ஆன்ட்டி நீங்க சுஷ்மிதாவுடன் பேச, பார்க்க ,
    நான் சொல்ற ஒரே வழிதான் இருக்கு ! நீங்க ஸ்மார்ட் போன் வைச்சுருக்கிங்களா?''
    ''இல்லை..''
    ''என்ன ஆன்ட்டி ? இந்தக் காலத்திலே எல்லார் கையிலும் ஸ்மார்ட் போன் இருக்கும்போது உங்ககிட்ட இல்லைன்னு சொல்றது ஆச்சர்யமா இருக்கு.''
    ''இல்லை ஆகாஷ்... சுஷ்மிதா இருந்தவரைக்கும் அதற்கு வாய்ப்பு இல்லை. அவ ஊரை விட்டுப் போனதும், நான் ஒடுங்கி போயிட்டேன்..''
    ''பரவாயில்லை ஆன்ட்டி ! இன்றைய அறிவியல் வளர்ச்சி எல்லோரையும் நம் பக்கத்தில் கொண்டு விட்டுருக்கு அவர்கள் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும். நமக்குச் சாதகமான விஷயம்தான்!''
    உடனடியாக ஒரு ஸ்மார்ட் போன் வாங்கி வந்து, அதை எப்படி இயக்குவது என்று சொல்லிக் கொடுத்தான் ஆகாஷ்.
    உடனே ஆன்ட்டியின் வாட்ஸ் அப் நம்பருக்கு வர சொல்லி விடியோ காலில் சுஷ்மிதாவை பேசச் சொன்னான். விடியோவில் பார்த்ததும், ''சுஷ்மிதா கண்ணு'' என்று லட்சுமி கூப்பிட ''பாட்டி பாட்டி'' என்று சுஷ்மிதாவும் பேசினாள். இருவரும் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு முத்தமழை பொழிந்தனர். அவர்கள் கண்களில் இருந்து ஆனந்த கண்ணீர்.
    அந்த நிமிடங்கள் வர்ணிக்க இயலாத ஒன்று.
    சுஷ்மிதா கைகொட்டி சிரித்துத் துள்ளல்.அதைப் பார்த்த லட்சுமியின் மனம் லேசானதை கவனித்தான் ஆகாஷ்.
    ராஷ்மியின் ஒத்துழைப்புக்கு நன்றி சொன்னான்ஆகாஷ்.
    அதே சமயம் ராஷ்மியிடம் ஒரு வேண்டுகோளை வைத்தான்.
    ''அண்ணி,ஆன்ட்டி எப்போதெல்லாம் சுஷ்மிதாவை நினைத்து பார்க்க வேண்டும் என்று தோன்றி வாட்ஸ் அப் விடியோ காலில் வரும்போது, ஒத்துழைப்புக் கொடுங்கள். பாட்டி- பேத்தி உறவு என்பது வார்த்தையில் சொல்ல முடியாத பந்தம். உங்களுக்கு மன முறிவு ஏற்பட்டது, அதனால் பிரிந்தது இதெல்லாம் சுஷ்மிதா குட்டிக்குத் தெரியாது. அதுக்குத் தெரிஞ்சது எல்லாம் பாட்டியின் அன்பும், அரவணைப்பும் மட்டுமே. நீங்கள் ஒரு நாள் பாட்டியாக மாறும்போது அந்த உணர்வுகள் உங்களுக்கும் புரியும்.''
    ராஷ்மிக்கு ஆகாஷ் சொன்ன அறிவுரையை ஏற்றுகொண்டு, வாட்ஸ்அப் கால் மூலம் ஒவ்வொரு முறையும் வர சம்மதித்தாள்.
    ''காலப் போக்கில் எல்லாமே காணாமல் போய் விடும் ஆன்ட்டி. என்னதான் நீங்கள் பாசமும் அன்பையும் காட்டினாலும் ரேஷ்மி சுஷ்மிதாவின் அம்மா. உங்க மருமகள் என்கிற பந்தம் முறிந்து போனாலும், சுஷ்மிதாவை கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொள்வதில் அக்கறை இருக்கும். சுஷ்மிதாவுக்கு, உங்கள் அன்பு கூடிய சீக்கிரம் புரியும் !அவள் உங்களைத் தேடி நிச்சயம் ஒரு நாள் வருவாள். அதே சமயம் நீங்க ஒன்றை புரிஞ்சுக்கணும் மாற்றங்கள் என்ற ஒன்றே இந்த உலகத்தில் கடவுள் தோற்றுவித்த நியதி. வாழ்க்கையில் இதை நாம் புரிந்து வாழ பழகி விட்டால் யாருடைய மாறுதலும் நம்மைப் பலமிக்கச் செய்யாது. இதைத் தான் கவிஞர் கண்ணதாசன் 'மாறுவதைத் தெரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்து விடும்' என்று... '' என்றான் ஆகாஷ்.
    லட்சுமி ஆன்ட்டிக்கு சரியான முறையில். கவுன்சிலிங் கொடுத்து , தீர்வு கொடுத்த திருப்தியுடன் ஊர் கிளம்பினான் ஆகாஷ்.

    செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp