காந்த் ஜிச்கரும் நானும், கிரேட்டர் கைலாஷிலுள்ள பிரணாப் முகர்ஜியின் வீட்டுக்குப் போனபோது, அங்கே ஏற்கெனவே பல தலைவர்கள் கூடிப் பேசிக் கொண்டிருந்தனர். ஜிச்கரும் நானும் வெளியே இருந்த பார்வையாளர்கள் அறையில் அமர்ந்து கொண்டோம்.
தொலைக்காட்சியில் தூர்தர்ஷன் செய்திகள் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தன. செயின்ட் கிட்ஸ் மோசடி வழக்கில் முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்ம ராவைக் கைது செய்து 14-ஆம் தேதி ஆஜர்படுத்த தில்லி பெருநகர முதன்மை மாஜிஸ்திரேட், ஜாமீன் பெற முடியாத வாரண்ட் பிறப்பித்திருந்தார். பி.வி. நரசிம்ம ராவும், மேலும் ஆறு பேரும் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர். அவர்கள் மீது இந்தியக் குற்றவியல் சட்டப்பிரிவு 120-பி, 195, 469, 471 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.
தொலைக்காட்சியில் அந்த செய்தி வெளியாகிக் கொண்டிருக்கும்போதே, வெளியில் இரண்டு கார்கள் கிளம்பிச் செல்லும் சத்தம் கேட்டது. வழக்குரைஞர்கள் ஆர்.கே. ஆனந்த், கபில் சிபலுடன் நரசிம்ம ராவ் கிளம்பிப் போய்விட்டார் என்று பிரணாப் முகர்ஜியின் வீட்டு வேலைக்காரர் எங்களுக்குத் தகவல் தெரிவித்தார். அடுத்தாற்போல என்ன செய்வது என்று நாங்கள் யோசித்துக் கொண்டிருக்கும்போதே, பிரணாப் முகர்ஜி, பல்ராம் ஜாக்கர், குலாம்நபி ஆசாத் மூவரும் இன்னொரு வழியாக காரை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அவர்களும் கிளம்பிப் போனபிறகு, சியாமசரன் சுக்லா வெளியே வந்தார்.
''பெருநகர மாஜிஸ்திரேட் பிறப்பித்திருக்கும் உத்தரவை நிறுத்தி வைக்க, தில்லி உயர்நீதிமன்றத்தில் பி.வி.என். சார்பில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யப்போயிருக்கிறார்கள். நல்ல முடிவுடன் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்'' என்றபடி தனது காரை நோக்கி நகர்ந்தார் எஸ்.சி. சுக்லா.
நாங்கள் இருவரும் அக்பர் ரோடு காங்கிரஸ் அலுவலகத்துக்கு வந்தோம். ஆர்.கே. தவானின் அறையில் அவருடன் அமர்ந்திருக்கும்போது, நீதிமன்றத்திலிருந்து தகவல் வந்தது. காலையில் பெருநகர மாஜிஸ்திரேட் பிரேம் குமார் பிறப்பித்திருந்த உத்தரவின் மீது நடவடிக்கை எதுவும் எடுக்க வேண்டாம் என்றும், 7-ஆம் தேதி மனு மீது விசாரணை நடக்கும் என்றும் உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.கே. மகாஜன் உத்தரவிட்டிருந்தார். 'தற்போதைக்கு நரசிம்ம ராவுக்கு ஆறுதல் கிடைத்தது' என்று நாங்கள் பேசிக் கொண்டோம்.
இன்னொருபுறம் இரண்டு முக்கியமான விவாதங்கள் நடைபெற்று வந்தன. பிரதமர் தேவே கெளடாவை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஏ.எம். அகமதி சந்தித்தது மிகப் பெரிய விமர்சனத்துக்கு வழிகோலியிருந்தது. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியைப் பிரதமர் முக்கியமான நிகழ்ச்சிகளில் சந்திப்பதுதான் வழக்கமே தவிர, தனிப்பட்ட முறையில் பிரதமர் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியையோ அல்லது அவர் பிரதமரையோ சந்திப்பது வழக்கமல்ல.
பிரதமருக்கும், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கும் இடையில் முக்கியமான பிரச்னைகளில் சட்ட அமைச்சர் தொடர்பில் இருப்பதுதான் நடைமுறை. அப்படி இருக்கும்போது, பிரதமர் தேவே கெளடா எதற்காக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஏ.எம். அகமதியைச் சந்தித்தார் என்று எதிர்க்கட்சியான பாஜக கேள்வி எழுப்பி இருந்தது. நரசிம்ம ராவை வழக்குகளில் இருந்து காப்பாற்ற பிரதமர் தேவே கெளடா முயற்சிக்கிறார் என்பதுதான் அவர்களின் மறைமுகக் குற்றச்சாட்டு.
லக்குபாய் பாதக் மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ் ஜாமீன் கேட்டு மனுச் செய்தார். அதை எதிர்த்து வாதாட வேண்டாம் என்று சட்ட அமைச்சகம் மூலம் மத்திய அரசு சிபிஐ இயக்குநர் ஜோகிந்தர் சிங்கை அறிவுறுத்தியது. சிபிஐ சார்பில் அந்த வழக்கில் வாதாடும் வழக்குரைஞர் கோபால் சுப்பிரமணியம் அதை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது மட்டுமல்ல, வழக்கில் ஆஜராவதில் இருந்து விலகிக் கொள்வதாகவும் தெரிவித்துவிட்டார்.
தேவே கெளடா அரசு காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகச் செயல்படுவதை, மார்க்சிஸ்டுகள் கடுமையாக எதிர்த்தனர். மார்க்சிஸ்ட் கட்சியின் எதிர்ப்பும் அறிக்கையும் எதிர்க்கட்சியான பாஜகவுக்கு மிகப் பெரிய வாய்ப்பாக மாறியது. காங்கிரஸின் ஆதரவில்லாமல் ஆட்சியில் தொடர முடியாது என்பதால், பிரதமர் தேவே கெளடா இக்கட்டான சூழலை சந்தித்தார்.
இத்தனை விமர்சனங்களுக்கும், விவாதங்களுக்கும் இடையில் 9, மோதிலால் நேரு மார்க் பங்களாவில், தனக்கு எதிரான மூன்று வழக்குகளையும் சட்ட ரீதியில் எப்படி எதிர்கொள்வது என்கிற ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார் முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ். பிரணாப் முகர்ஜி, வி.என். காட்கில், கபில் சிபல் மூவரும்தான் அவருடன் பெரும்பாலும் ஆலோசனையில் ஈடுபட்டவர்கள். குறிப்பிடத்தக்க இன்னொருவர், நரசிம்ம ராவின் வழக்குரைஞர் ஆர்.கே. ஆனந்த்.
ராம் குமார் ஆனந்த் என்கிற வழக்குரைஞர் ஆர்.கே. ஆனந்த், இந்தியாவின் குறிப்பிடத்தக்க உச்சநீதிமன்ற வழக்குரைஞர்களில் ஒருவர். மிக முக்கியமான பல வழக்குகளில் அவர் ஆஜராகி, வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்புகளைப் பெற்றிருக்கிறார். தில்லி உயர்நீதிமன்றத்தின் வழக்குரைஞராக இருந்த ஆர்.கே. ஆனந்த், அன்றைய பிரதமர் இந்திரா காந்தியின் நம்பிக்கையைப் பெற்றதுதான் அவரது வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்புமுனை.
1980-இல், சஞ்சய் காந்தி விமான விபத்தில் மரணமடைந்தபோது, அவரது மனைவி மேனகா காந்தி சொத்துகளுக்காக அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி மீது வழக்குத் தொடுத்தது பரபரப்பாகப் பேசப்பட்டது. அந்த வழக்கில் மாவட்ட நீதிமன்றம், தில்லி உயர்நீதிமன்றம் இரண்டிலும் பிரதமர் இந்திரா காந்திக்காக ஆஜராகி வெற்றி பெற்றுக் கொடுத்தவர் ஆனந்த்.
அதுமட்டுமல்ல, இந்திரா காந்தியின் உயிலைத் தயாரித்துக் கொடுத்தவரும் அவர்தான். அந்த உயிலின்படி ராஜீவ் காந்தியை வாரிசாக அறிவித்த நீதிமன்ற உத்தரவைப் பெற்றுத் தந்ததும் அவர்தான். இந்திரா காந்தியின் மறைவைத் தொடர்ந்து நடந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவர விசாரணையில், ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தில் அரசுத் தரப்பில் வழக்குரைஞராக ஆஜராக ஆர்.கே. ஆனந்தைத்தான் பிரதமர் ராஜீவ் காந்தி தேர்ந்தெடுத்தார்.
பி.வி. நரசிம்ம ராவ் மீது மூன்று குற்ற வழக்குகள் தொடரப்பட்டன. லக்குபாய் பாதக் லஞ்ச வழக்கு, செயின்ட் கிட்ஸ் மோசடி வழக்கு, நம்பிக்கைத் தீர்மானத்தில் வாக்களிக்க ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்பிக்களுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கு என்று மூன்று வழக்குகளிலும் நரசிம்ம ராவின் வழக்குரைஞராக ஆர்.கே. ஆனந்த்தான் ஆஜராகி வாதாடினார். விசாரணை நீதிமன்றத்திலிருந்து தொடங்கி, உச்சநீதிமன்றம் வரை வாதாடி அந்த மூன்று வழக்குகளிலும் நரசிம்ம ராவை நிரபராதி என்று நிரூபித்து அவருக்கு விடுதலை வாங்கிக் கொடுத்த பெருமையும் ஆர்.கே. ஆனந்தைச் சாரும்.
பின்னாளில் (2000) வாஜ்பாயி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் அவர் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2004, 2014 மக்களவைத் தேர்தல்களில் போட்டியிட்டபோது அவர் தோல்வியைத் தழுவினார் என்பதையும் குறிப்பிட வேண்டும். அரசியல் மட்டுமல்லாமல், விளையாட்டு அமைப்புகளிலும் பல பொறுப்புகளை வகித்த, வகிக்கும் ஆர்.கே. ஆனந்த் மீது பல குற்றச்சாட்டுகளும் இல்லாமல் இல்லை.
தினந்தோறும் ஜிச்கரின் வீட்டுக்குப் போவதும், அவருடன் மோதிலால் நேரு மார்க் நரசிம்ம ராவ் வீட்டு பார்வையாளர்கள் அறையில் பேசிக் கொண்டிருப்பதுமாக நான் இருந்தேன். நான் ஏன் நரசிம்ம ராவ் விவகாரத்தில்
இந்த அளவுக்கு ஈடுபாடு காட்டினேன் என்று எனக்கு இன்றளவும் புரியவில்லை. ஒருவேளை, பிரணாப் முகர்ஜி அவரிடம் நெருக்கமாக இருக்கிறார் என்பதால், நானும் நரசிம்ம ராவ் எதிர்கொள்ளும் பிரச்னைகளில் ஆர்வம் காட்டியிருக்கக் கூடும் என்று இப்போது தோன்றுகிறது.
ஏற்கெனவே இருக்கும் லக்குபாய் பாதக் லஞ்ச வழக்கும், செயின்ட் கிட்ஸ் மோசடி வழக்கும் போதாது என்று, தில்லி நீதிமன்றத்தின் நீதிபதிகள் ஒய்.கே. சபர்வால், டி.கே. ஜெயின் இருவர் கொண்ட அமர்வு ஜே.எம்.எம். வழக்கில் புலனாய்வுப் பணியைத் தானே ஏற்றுக்கொண்டு, அறிக்கை அளிக்க மூன்று பேர் கொண்ட குழுவை நியமித்திருந்தது.
1993 ஜூலையில், தனது அரசுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை முறியடிக்க, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் எம்.பி.க்களான சிபு சோரன், சைலேந்திர மஹாதோ, சைமன் மராண்டி, சூரஜ் மண்டல் நால்வருக்கும் ரூ.3.5 கோடி லஞ்சம் கொடுத்துத் தனது அரசுக்கு ஆதரவாக பிரதமர் நரசிம்ம ராவ் வாக்களிக்கச் சொன்னார் என்பதுதான் குற்றச்சாட்டு.
அந்த நான்கு எம்.பி.க்களும் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருக்கும் நிலையில், எந்த நேரமும் முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்ம ராவும் கைது செய்யப்படுவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.
நாங்கள் பார்வையாளர்கள் அறையில் உட்கார்ந்திருந்தபோது, உள்ளேயிருந்து ஸ்ரீகாந்த் ஜிச்கருக்கு அழைப்பு வந்தது. நரசிம்ம ராவ்தான் அழைத்திருக்க வேண்டும். அவர் பார்வையாளர்கள் அறையையொட்டி அமைந்திருந்த வீட்டுக்குள் சென்றார். சுமார் அரைமணி நேரம் கழித்துத் திரும்பி வந்தார்.
''என்ன சொன்னார்கள், நரசிம்ம ராவ்ஜியைப் பார்த்தீர்களா?'' - நான் கேட்டேன்.
''கைது செய்யப்படும் பட்சத்தில் ரூ. 25,000 ரொக்க ஜாமீனும், அதே அளவுக்குத் தனிநபர் ஜாமீனும் அளித்தால் உடனே விடுதலை செய்துவிட வேண்டும் என்று தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.கே. மகாஜன் உத்தரவிட்டிருக்கிறார். இன்று மாலையே சிபிஐ அவரைக் கைது செய்யக்கூடும். தனிநபர் ஜாமீன் வழங்க தில்லியில் அசையா சொத்து இருக்க வேண்டும். எனக்கு ஏதாவது இருக்கிறதா என்று வழக்குரைஞர் ஆனந்த் விசாரித்தார்.''
''என்ன சொன்னீர்கள்?''
''எனக்கு எம்.பி.க்கு அளிக்கப்படும் அரசு பங்களாதான் இருக்கிறது. தில்லியில் அசையா சொத்துக்கு நான் எங்கே போவது?''
''அப்படியானால் என்ன செய்யப்போகிறார்களாம்?''
''தெரியாது. உங்களுக்கு அசையா சொத்து இருக்கிறதா, ஜாமீன் கொடுக்க?'' என்று கேட்டுச் சிரித்தார் ஜிச்கர். நான் அதை ரசிக்கவில்லை.
முன்னாள் பிரதமர் ஒருவர், சிபிஐயால் கைது செய்யப்பட இருக்கிறார் என்பதும், அவருக்கு ஜாமீன் நிற்க அசையா சொத்து உள்ள ஒருவரைத் தேடுகிறார்கள் என்பதும் நினைத்துப் பார்க்கவே முடியாத அவலம்.
உயர்நீதிமன்றம் அளித்திருப்பது வெறும் இடைக்கால நிவாரணம்தான். ஒரு வாரத்தில் நரசிம்ம ராவ் தில்லி பெருநகர தலைமை மாஜிஸ்திரேட் பிரேம் குமாரின் நீதிமன்றத்தில், அவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஜாமீன் மனு மீதான விசாரணைக்கு ஆஜராக வேண்டும். அந்த நிலையில்தான் இரவு சுமார் 7.30 மணிக்கு சிபிஐ அதிகாரிகள் முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்ம ராவைக் கைது செய்ய 9, மோதிலால் நேரு மார்க்கிற்கு வந்தனர்.
அவர்கள் வந்தபோது நான் பார்வையாளர்கள் அறையில் இருந்தேன். நரசிம்ம ராவுடன் இருந்த ஸ்ரீகாந்த் ஜிச்கர் திரும்பிவந்து என்னிடம் நடந்ததை விளக்கினார்.
''வழக்குரைஞர் ஆர்.கே. ஆனந்த் நிபந்தனை ஜாமீனை அவர்களிடம் காட்டினார். பிரணாப் முகர்ஜி அவர் அருகில் இருந்தார். நிபந்தனை ஜாமீன் அடிப்படையில் நரசிம்ம ராவ்ஜி கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்...''
''அது சரி, அவருக்கு யார் ஜாமீன் கொடுத்தது? அசையா சொத்து இருப்பவர்கள்தானே கொடுக்க முடியும்?''
''உங்களுக்குத் தெரிந்தவர்தான் அந்தப் பெண்மணி...'' என்று சொல்லி நிறுத்தினார் ஜிச்கர்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.