பிரணாப்தா என்கிற மந்திரச் சொல்! - 187

காங்கிரஸ் தலைமை பதவியை நோக்கிய சீதாராம் கேசரியின் அரசியல் பயணம்
பிரணாப்தா என்கிற மந்திரச் சொல்! - 187

காங்கிரஸின் இடைக்காலத் தலைவர் சீதாராம் கேசரியின் ஒவ்வொரு நகர்வும் நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை நோக்கியதாக மட்டுமே இருக்கவில்லை. அவரது குறி பிரதமர் பதவியை நோக்கியது என்பது அவருக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமல்ல, தில்லி அரசியல் வட்டாரங்களில் அனைவருக்குமே தெரிந்திருந்தது.

ஐ.என்.எஸ். கட்டடத்துக்கு நேர் எதிரில் இருந்தது வி.பி. ஹவுஸ் எனப்படும் வித்தல்பாய் படேல் ஹவுஸ். இங்கும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் உறுப்பினர்கள், அரசியல் தலைவர்களுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டு குடியிருந்தனர். வி.பி. ஹவுஸையொட்டி அமைந்திருக்கிறது கான்ஸ்டிட்யூஷன் கிளப். அங்கே கருத்தரங்கங்கள், கூட்டங்கள் நடைபெறும். ஏதாவது நிகழ்ச்சி நடக்கிறதா என்று தெரிந்துகொள்ள சாலையைக் கடந்து கான்ஸ்டிட்யூஷன் கிளப்பை அடைந்தேன்.

அருகில் இருந்த வி.பி. ஹவுஸ் பகுதிக்குள் நுழைந்து கொண்டிருந்தார் பீம் சிங். ஸ்ரீகாந்த் ஜிச்கரைப் போலவே தில்லியில் எனக்கு மிகவும் நெருக்கமான நண்பராகப் பழக்கியவர்களில் இவரும் ஒருவர். ஜம்முவைச் சேர்ந்த பீம் சிங்கை அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்தபோதே எனக்குத் தெரியும். தனது இளமைக் காலத்திலிருந்தே காங்கிரஸில் இணைந்துவிட்ட பீம் சிங், ஜம்மு-காஷ்மீர் மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவராகவும் இருந்திருக்கிறார்.

மோட்டார் பைக்கில் 150 நாடுகளுக்கு நல்லிணக்கப் பயணம் நடத்தியவர் என்கிற செய்தியை கேள்விப்பட்டு, பேட்டி எடுக்க அவரை நான் முதன்முதலில் சந்தித்தேன். அப்போது அவர் ஜம்மு-காஷ்மீர் இளைஞர் காங்கிரஸில் இருந்தார். இளைஞர் காங்கிரஸின் தேசிய துணைத் தலைவராக மட்டுமல்லாமல், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்களின் ஒருவராகவும் அவரை உயர்த்தினார் இந்திரா காந்தி.

காஷ்மீர் பிரச்னையில் காங்கிரஸ் கட்சியின் அணுகுமுறையில் அவருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அதிலிருந்து பிரிந்து தனிக்கட்சியைத் தொடங்கினார். தொடர்ந்து பத்து ஆண்டுகள் ஜம்மு-காஷ்மீர் சட்டப் பேரவையின் உறுப்பினராக இருந்த பீம் சிங், உதம்பூர் தொகுதியின் அசைக்க முடியாத சக்தியாகத் திகழ்ந்தவர். ஷேக் அப்துல்லாவை 'ஷேர்-ஏ-காஷ்மீர் (காஷ்மீரின் சிங்கம்)' என்று அழைப்பதைப் போல பீம் சிங்கை 'ஷேர்-ஏ-ஜம்மு (ஜம்முவின் சிங்கம்)' என்று அழைப்பார்கள்.

விடுதலைப் புலிகள், விடுதலைச் சிறுத்தைகள் என்றெல்லாம் கட்சிகள் இருக்கின்றன. 1980-இல் அவர் தொடங்கிய கட்சிக்கு, ஜம்மு-காஷ்மீர் தேசிய சிறுத்தைகள் கட்சி என்று பெயரிட்டார். அது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.

1984 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கூட்டணியை எதிர்த்து உதம்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார் பீம் சிங். தேர்தல் ரத்து செய்யப்பட்டு அந்தத் தொகுதியின் முடிவு நிறுத்தி வைக்கப்பட்டது. நீதிமன்றத்தை அணுகினார் பீம் சிங். வாக்கு எண்ணிக்கை நடைபெற்றபோது, 1988 ஜூன் மாதம் 19 ஆம் தேதி 32 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பீம் சிங் வெற்றி பெற்றதாக வானொலியில் அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த முடிவும் நிறுத்தி வைக்கப்பட்டது.

தில்லியிலிருந்து தேர்தல் ஆணைய செயலாளரை, உள்துறை அமைச்சர் பூட்டா சிங் சிறப்பு விமானத்தில் ஜம்முவுக்கு அனுப்பி வைத்தார். மீண்டும் வாக்கு எண்ணிக்கைக்கு அவர் உத்தரவிட்டார். 1988 ஜூன் 25 -ஆம் தேதி, தலைமைத் தேர்தல் ஆணையர் பெரி சாஸ்திரி 2,376 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் அயூப் கான் வெற்றி பெற்றதாக அறிவித்தார். பீம் சிங் வெற்றி பெறுவதை காங்கிரஸ் கூட்டணியில் இருந்த தேசிய மாநாட்டுக் கட்சி விரும்பவில்லை என்பதுதான் காரணம்.

அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தியின் அழுத்தத்துக்குப் பணிந்து முறைகேட்டில் ஈடுபட்டு தேர்தல் முடிவை மாற்றினார்கள் என்று தேர்தல் ஆணையத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார் பீம் சிங். தனது தொகுதியின் வாக்கு எண்ணிக்கையில் நடந்த முறைகேட்டைக் கண்டித்து, தேர்தல் ஆணையத்துக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார் அவர். அந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பாஜக தலைவர் வாஜ்பாய் அதில் கலந்துகொண்டார்.

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, பீம் சிங்குக்கு சாதகமாக நீதிமன்றத் தீர்ப்பு வந்தது என்றாலும் அதற்குள் அந்த மக்களவையின் பதவிக்காலம் முடிந்துவிட்டது. அதுகுறித்து அவர் கவலைப்பட்டதே கிடையாது.

அதில் இன்னொரு சுவாரசியமும் உண்டு. வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு தேர்தல் ஆணைய செயலாளர் டாக்டர் பல்லா ஹெலிகாப்டரில் புறப்பட்டு செல்ல முயன்றபோது ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பீம் சிங்குக்கு ஆதரவாக அவரைத் தடுக்க முற்பட்டதும், தேர்தல் முடிவை தில்லிக்குப் போய் அறிவிக்காமல் உடனடியாக அறிவிக்க அவரை வற்புறுத்தியதும் வரலாற்று நிகழ்வுகள். அந்த இளைஞர்களைச் சமாதானப்படுத்தி, டாக்டர் பல்லா அங்கிருந்து தப்பிச் செல்ல உதவினார் பீம் சிங்.

பீம் சிங் கடைசி வரை சலிக்காதப் போராளியாகத் திகழ்ந்தார். மனித உரிமை மீறல்கள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த வழக்குகள் ஏராளம். 54 முறை அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். எட்டு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். 18 முறை உச்சநீதிமன்ற உத்தரவால் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். தவறுகள், முறைகேடுகள், மனித உரிமை மீறல்கள், ஜனநாயகத்துக்கு எதிரான அச்சுறுத்தல்கள் ஆகியவற்றுக்கு எதிராகப் போராடுவதே வாழ்க்கை என்று வாழ்ந்தவர் அவர்.

இன்று பீம் சிங்கையோ, ஜம்மு-காஷ்மீர் சிறுத்தைகள் கட்சியையோ இந்தியா முற்றிலுமாக மறந்துவிட்டது. ஆனால் அவர் நடத்திய போராட்டங்கள் வரலாற்றில் இடம் பெற்றுள்ளன. காங்கிரஸ் ஆட்சியில் தேர்தல் ஆணையம் எப்படியெல்லாம் முறைகேடுகளில் ஈடுபட்டது என்பது குறித்து தெரிந்துகொள்ள பீம் சிங்கின் 1988 தேர்தல் முடிவு இன்றும் சாட்சியம் அளிக்கிறது.

காஷ்மீர் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் இருந்ததால், துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு வீரர்கள் புடைசூழ வந்து கொண்டிருந்தார் பீம் சிங். என்னைப் பார்த்ததும் அவருக்கு ஒரே மகிழ்ச்சி. அவரது மோட்டார் சைக்கிள் பயணம், தேர்தல் முறைகேட்டுக்கு எதிரான உண்ணாவிரதம் குறித்தெல்லாம் நான் எழுதியிருப்பதால் எங்கள் நெருக்கம் அதிகரித்திருந்தது. கடந்த 20 ஆண்டுகளாக எங்களுக்குள் தொடர்பு விட்டுப்போனது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால்தான் அவர் தனது 81-வது வயதில் இயற்கை எய்தினார்.

அவருடன் அவரது பேன்தர்ஸ் கட்சியின் அலுவலகமாகவும் இயங்கி வந்த வி.பி. ஹவுஸ் குடியிருப்பு வீட்டுக்கு நான் சென்றேன்.

'நரசிம்ம ராவ் அநேகமாக ஒதுங்கி விட்டார். பிரணாப்தாவும் கட்சித் தலைவர் பதவி, பிரதமர் பதவி குறித்த சிந்தனை இல்லாமல் இருக்கிறார். இப்போதைக்கு பிரதமர் தேவே கௌடாவுக்கும் சீதாராம் கேசரிக்கும் இடையில் ஒரு மெளன யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. இதில் இரண்டு பேருமே அரசியல் சாணக்கியர்கள். யார், யாரை கவிழ்க்கப் போகிறார்கள் என்பதுதான் கேள்வி.'' என்று என்னிடம் பீம் சிங் தெரிவித்தார்.

'தேவே கௌடாவை சீதாராம் கேசரி கவிழ்க்க முடியும். சீதாராம் கேசரியை தேவே கௌடா எப்படி கவிழ்ப்பார்?. அதனால் தேவே கெளடாவுக்குத்தான் ஆபத்து.'' என்றேன் நான்.

'நீங்கள் நினைப்பது போல அல்ல, திரைமறைவில் நடக்கும் சதி வேலைகள். தேவே கௌடா மிகவும் முக்கியமானவர்களைத் தூண்டிவிட்டு காங்கிரஸ் குழப்பத்தில் தொடர எல்லா வேலைகளையும் செய்து கொண்டிருக்கிறார். குழப்பம் தொடர்வது வரை தேவே கௌடாவின் பதவியும் தொடரும்.'' என்றார் அவர்.

அதற்குப் பிறகு காங்கிரஸிலும், பாஜகவிலும் ஐக்கிய முன்னணி அரசில் நடந்து கொண்டிருக்கும் பல்வேறு நகர்வுகள் குறித்தும் நாங்கள் பேசிக் கொண்டு இருந்தோம். விடைபெற்று நான் எனது அலுவலகத்துக்கு வந்துவிட்டேன். காங்கிரஸில் நாடாளுமன்ற கட்சித் தலைவர் பதவிக்கான போட்டி குறித்தும், ஜம்மு-காஷ்மீர் சிறுத்தைகள் கட்சித் தலைவர் பீம் சிங்குடனான சந்திப்பு குறித்தும் இரண்டு கட்டுரைகளை எழுதி முடித்து நான் கிளம்பும்போது நன்றாக இருட்டி இருந்தது. குளிர் காலம் வேறு என்பதால் எனது அறைக்குக் திரும்பி விட்டேன்.

காலை உணவுக்கு மகாராஷ்டிர சதனுக்கு வரும்படி என்னை அழைத்திருந்தார் ஸ்ரீகாந்த் ஜிச்கர். அங்கே போனபோது அவர் இன்னும் வந்திருக்கவில்லை. மகாராஷ்டிர சதன் உணவகத்தில் உள்ள ஒரு மேஜையில் மக்களவை காங்கிரஸ் உறுப்பினர்களான பிரஃபுல் படேலும், சாந்திப்பன் தோரட்டும் அமர்ந்திருந்தனர். இருவருமே எனக்கு நன்கு அறிமுகமானவர்கள்.

அரசியல் தலைவர்கள் இருவர் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது இடையில் செல்வது நாகரிகமாக இருக்காது என்று கருதி, சற்று தள்ளி இருந்த மேஜையில் அமர்ந்து கொண்டேன். என்னை கவனித்துவிட்ட சாந்திப்பன் தோரட், அருகில் வரச் சொல்லி அழைத்தார். பிரஃபுல் படேலும் சிரித்தபடி வரவேற்றதால் நான் அவர்களது மேஜைக்கு நகர்ந்தேன்.

பிரஃபுல் படேல் குறித்து நான் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. சமீபகாலம் வரை அவர் சரத் பவாரின் நிழலாகவும், மனசாட்சியாகவும், நம்பிக்கைக்குரிய நண்பராகவும் திகழ்ந்தவர். அவரை 'சரத் பவாரின் கஜானா' என்று குறிப்பிடுவார்கள். இப்போது அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸில் இணைந்து விட்டார் பிரஃபுல் படேல்.

சாந்திப்பன் தோரட் 1977 முதல் 1998 வரை தொடர்ந்து ஏழு தடவைகள் மாகாராஷ்டிர மாநிலம் பந்தர்ப்பூரிலிருந்து காங்கிரஸ் சார்பில் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் சரத் பவார் கோஷ்டியைச் சேர்ந்தவர் அல்ல. நரசிம்ம ராவ் ஆதரவாளராக அறியப்பட்டவர். சீதாராம் கேசரிக்கும் நெருக்கமானவர்.

நான் போய் அமர்ந்ததும் பிரஃபுல் படேல்தான் பேச்சைத் தொடங்கினார்.

'உங்கள் ஜி.கே. மூப்பனார் என்ன செய்யப் போகிறார்? அவர் காங்கிரஸில் இணைவதற்கான வாய்ப்புண்டா? உங்களுக்கு கிடைத்திருக்கும் தகவல் என்ன?''

'எனக்குத் தெரிந்து அப்படி எதுவும் தமிழ் மாநில காங்கிரஸில் இருப்பதாகத் தெரியவில்லை. அப்படியே மூப்பனார் ஏதாவது முடிவு எடுப்பதாக இருந்தாலும் திமுக தலைவர் கருணாநிதி, ப.சிதம்பரம் ஆகியோருடன் கலந்தாலோசிக்காமல் ஜி.கே. எம். எடுப்பார் என்று எனக்குத் தோன்றவில்லை.'' என்று நான் சொன்னதை தோரட் ஆமோதித்தார்.

'நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவி குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?'' என்று நான் பிரஃபுல் படேலிடம் கேட்டேன். அவர் சிரித்துக் கொண்டே சொன்னார்-

'எங்களைப் பொருத்தவரை பவார் ஜெயிக்கிறாரா இல்லையா என்பதல்ல முக்கியம். யாரும் புழக்கடை வழியாக தந்திரங்களின் மூலம் தலைவராகக் கூடாது. தேர்தல் தேவை. அது பவாராக இல்லாமல் சீதாராம் கேசரியோ, ராஜேஷ் பைலட்டோ, கருணாகரனோ யாராக இருந்தாலும் ஏற்றுக் கொள்வோம்.'' என்றார் படேல். அதை தலையாட்டி ஆமோதித்தார் தோரட்.

அதற்குள் ஸ்ரீகாந்த் ஜிச்கர் வந்துவிட்டார். சிறிது நேரம் அவர்கள் மூவரும் மராத்தியில் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தனர். நரசிம்ம ராவ் குறித்தும், சரத் பவார் குறித்தும் பேசுகிறார்கள் என்பது மட்டும்தான் எனக்குப் புரிந்தது. படேலும் தோரட்டும் விடைபெற்றுச் சென்றனர். நாங்களும் சிற்றுண்டி அருந்திவிட்டு அங்கிருந்து கிளம்பினோம்.

ஜிச்கர் என்னையும் அழைத்துக்கொண்டு பிகார் முன்னாள் முதல்வர் ஜெகந்நாத மிஸ்ரா வீட்டை அடைந்தார். அங்கே ஏற்கனவே நரசிம்ம ராவின் தீவிர ஆதரவாளர்களான சுரேஷ் கல்மாதி, பி.உபேந்திரா, எஸ்.எஸ். அலுவாலியா ஆகியோர் இருந்தனர். நான் ஸ்ரீகாந்த் ஜிச்கருடன் வரவேற்பறையைக் கடக்காமல் வாசல் வராண்டாவிலேயே, அங்கே போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டேன் .

அவர்கள் முக்கியமான ஒரு முடிவை எடுப்பதற்காக அங்கே கூடியிருக்கிறார்கள் என்பதும், அவர்களைச் சந்திக்க மிகவும் முக்கியமான ஒருவர் வர இருக்கிறார் என்பதும் அப்போது எனக்குத் தெரியாது. அவர் காரில் வந்து இறங்கியபோது அதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவர் என்னையும் தான்!

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.