அடுத்து என்ன?: ஹீரோக்களின் லைன் அப்!

விஜய்யின் 'தளபதி 69' இயக்குநர் யார்? - காத்திருக்கும் ரசிகர்கள்
அடுத்து என்ன?: ஹீரோக்களின் லைன் அப்!

விஜய்யின் கடைசி இயக்குநர்?

நடிகர் விஜய்யின் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' படத்தின் ஷூட்டிங் நிறைவடையும் கட்டத்தில் இருப்பதால், அவரது அடுத்த படமான 'தளபதி 69' படத்தின் இயக்குநர் குறித்த அறிவிப்பை அனைவரும் எதிர்பார்த்திருக்கின்றனர். 'தமிழக வெற்றிக் கழகம்' தொடங்கிய விஜய், தனது முழு நேர அரசியல் என்ட்ரிக்கு முன்னதாக ஒரு படத்தை முடித்துகொடுத்து விடத் தீர்மானித்திருக்கிறார். அதனால் இப்போது நடித்து வரும் படத்தை அடுத்து அவரது 69-ஆவது படத்துடன் சினிமாவை விட்டு விலகுகிறார். இதனாலேயே அவரது கடைசி படத்தை இயக்கப் போவது யார்? என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

முன்னணி இயக்குநர்கள் பலரது பெயர்களும் ஒரு ரவுண்டு வந்தது. தற்போது அட்லி, திரி விக்ரம், அ.வினோத் உள்ளிட்டோரின் பெயர்களைச் சொல்லி வருகிறார்கள். இதற்கு முன்னர் வெற்றிமாறன், கார்த்திக் சுப்புராஜ், கோபிசந்த் மாலினேனி உள்ளிட்டோரும் விஜய்க்குக் கதை சொல்லியிருக்கின்றனர். இதில் வெற்றிமாறன் ஏற்கெனவே 'விடுதலை 2', 'வாடிவாசல்' ஆகிய படங்களைக் கைவசம் வைத்திருக்கிறார் என்பதால் அவருக்கான வாய்ப்பு குறைவு. அதைப் போலத் தெலுங்கு இயக்குநர் திரிவிக்ரமோ, அண்மையில் மகேஷ்பாபு நடித்த 'குண்டூர் காரம்' படத்தை இயக்கியிருந்தார். அது சுமாராக மட்டுமே ஓடியது.

அட்லி, அடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அல்லு அர்ஜூன் நடிப்பில் ஒரு படம் இயக்குகிறார் என்ற பேச்சு இருக்கிறது. ஆகையால், அல்லு அர்ஜுனின் கால்ஷீட்டை பொறுத்து, அட்லி இயங்குவார். ஆனாலும் விஜய்க்கான கதை அட்லியிடம் தயாராகவே இருக்கிறது. அ.வினோத் அடுத்து கமலை இயக்குகிறார் என்றனர்.

கமலோ ஏற்கெனவே கமிட்டான படங்களை முடித்துகொடுக்க வேண்டிய சூழலில் இருப்பதால், 'இந்தியன் 3', 'தக்லைஃப்', 'கல்கி 2898 ஏடி' ஆகிய படங்களில் இருக்கிறார். அதனால் வினோத் இயக்கும் படம் தள்ளிப்போனது. இதற்கிடையே வினோத் அடுத்து தனுஷை இயக்குகிறார் என்றனர். அதன்பின்னர், கார்த்தியை வைத்து 'தீரன் அதிகாரம் இரண்டு' இயக்குவார் என்ற பேச்சும் வந்தது. தனுஷும் கார்த்தியும் இன்னும் ஒரு வருடத்துக்கான லைன் அப்பில் இருப்பதால் வினோத் இயக்க தயாராகவே இருக்கிறார்.

வினோத் சமூக அக்கறையுள்ள ஸ்க்ரிப்ட்களை தொடர்ந்து இயக்கி வருபவர் என்பதால் 'தளபதி 69' படத்துக்குச் சரியான தேர்வாக இருக்கும் என்ற பேச்சு இருக்கிறது. விஜய்யின் சாய்ஸிலும் வினோத் இருக்கிறார் என்கிறார்கள். படப்பிடிப்புக்கு இடையே கதைகள் கேட்டு வந்த விஜய், அவர் மனதில் இயக்குநர் முடிவாகிவிட்டதால் மேற்கொண்டு கதைகள் கேட்பதை நிறுத்திவிட்டார் என்கிறார்கள்.

தனுஷின் ஆச்சரிய லைன் அப்!

தனுஷின் 50-ஆவது படமான 'ராயன்' படத்தைக் கோடைக்குக் கொண்டு வரும் முயற்சியில் இருக்கின்றனர். இதையடுத்து, தனுஷ் நடிக்க உள்ள படங்கள் குறித்த தகவல்கள் இனி:

'ராயன்' படத்தை முடித்த கையோடு, அடுத்து அதேபோல இயக்குநராக மீண்டும் களம் இறங்கிவிட்டார் தனுஷ். 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' என்ற படத்தை இயக்கி வருகிறார். தனுஷின் அக்கா மகன் பவிஷை கதாநாயகனாக அவர் அறிமுகப்படுத்துகிறார்.

இந்தப் படத்தில் அனிகா, பிரியா பிரகாஷ் வாரியர், மாத்யூ தாமஸ், ரம்யா எனப் பலரும் நடித்து வருகின்றனர். தயாரிப்பும் தனுஷ்தான். லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்து வருகிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்தப் படத்தை இந்த ஆண்டு இறுதியில் கொண்டு வரத் திட்டமிட்டு உள்ளனர்.

இதற்கிடையே தனுஷின் 51-ஆவது படமான 'குபேரா' படப்பிடிப்பும் இன்னொரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது. இதில் நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர். ஹைதராபாத்தில் நடந்த முதல் ஷெட்யூல் படப்பிடிப்பை முடித்துகொடுத்துவிட்டு, இப்போது இயக்கி வரும் 'ராயன்' படத்தின் டப்பிங் வேலைகளிலும், இன்னொரு பக்கம் பவிஷ் நடிக்கும் படப்பிடிப்பையும் கவனித்து வருகிறார்.

இதற்கிடையே 'ராயன்' படத்தின் பேட்ச் வொர்க் வேலைகளும் நடந்து முடிந்திருக்கின்றன. சேகர் கம்முலா இயக்கி வரும் 'குபேரா'வின் படப்பிடிப்பு இப்போது பாங்காக்கில் நடைபெற்று வருகிறது. அதில், தனுஷ் பங்கேற்கவில்லை.

'குபேரா' படத்தை முடித்து விட்டு தனுஷை இயக்க அருண் மாதேஸ்வரன், மாரி செல்வராஜ், அ.வினோத் என பலரும் காத்திருக்கிறார்கள் என்றாலும் அவர் ஏற்கெனவே கமிட்டான ஹிந்தி படத்துக்குச் செல்வார் என்கிறார்கள். பாலிவுட்டில் 'அட்ராங்கி ரே'யை இயக்கிய ஆனந்த் எல்.ராயின் படப்பிடிப்பு தொடங்கப்படலாம் என்றும் தகவல்.

சூர்யாவுக்காக 5 இயக்குநர்கள் காத்திருப்பு!

சூர்யா வெளியிட்டிருக்கும் அதிரடி அறிவிப்பு, அவரது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது. 'கங்குவா', 'புறநானூறு' என லைன் அப்பில் இருந்த சூர்யாவிடமிருந்து இன்ப அதிர்ச்சியாக கார்த்திக் சுப்புராஜின் பட அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. 'கங்குவா' படத்தின் போஸ்ட் புரொடக்ஷன், கிராபிக்ஸ் வேலைகள் மும்முரமாகப் போய்க் கொண்டிருக்கின்றன.

சூர்யாவும் டப்பிங் பேசி முடித்துவிட்டார். இதன் படப்பிடிப்புக்கு இடையே சுதா கொங்கரா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையில் 'புறநானூறு' படத்தின் அறிவிப்பு வெளியானது. இது சூர்யாவின் 43-ஆவது படமாகும். மதுரையில் இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது என்றும் துல்கர் சல்மான், நஸ்ரியா, விஜய் வர்மா ஆகியோர் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில்தான், 'புறநானூறு' படத்துக்குக் கூடுதல் நேரம் தேவைப்படுகிறது. இந்தப் படத்துக்காக, இணைந்திருக்கும் கூட்டணி சிறப்பு வாய்ந்த ஒன்று.

'இது எங்களின் மனதுக்கு நெருக்கமான படம். சிறந்த படைப்பை உங்களுக்கு வழங்க நாங்கள் பணியாற்றி வருகிறோம். விரைவில் அடுத்தகட்ட ஷூட்டிங் பணிகள் தொடங்கப்படும். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி' என்று சூர்யா தெரிவித்திருந்தார். இந்தச் சூழலில்தான் கார்த்திக் சுப்புராஜின் பட அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் சூர்யா. கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருப்பது அவரது 44-ஆவது படமாகும்.

சூர்யாவின் அடுத்த படங்களை இயக்கப் போகும் இயக்குநர்கள் பட்டியலில் வெற்றிமாறன், ரவிக்குமார், லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ், த.செ.ஞானவேல் எனப் பலரும் உள்ளனர். அத்தனை பேருமே சூர்யாவிடம் ஒன்லைன் சொல்லி, அதன் ஸ்கிரிப்ட் வேலைகளையும் ஒரு பக்கம் கவனித்து வருகின்றனர். சுதா கொங்கராவின் படம் தொடங்க, இன்னும் சில மாதங்கள் பிடிக்கும் என்பதால், அதற்குள் 'சூர்யா 44' படத்தின் படப்பிடிப்பை முழுவதுமாக நடத்தி முடித்துவிட பக்காவாகத் திட்டமிட்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com