பேல் பூரி

கூகுள் ஏ.ஐ. அம்சங்களுக்கு கட்டணம் விதிக்க திட்டம்
பேல் பூரி

கண்டது

(திண்டுக்கல்- மதுரை நெடுஞ்சாலையில் உள்ள ஒரு ஊரின் பெயர்)

'ஜாதிக் கவுண்டன்பட்டி'

- பி.ஜெகநாதன், கோவில்பட்டி.

---------------------------------------------------------------------------------------------------

(சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஒரு கண் மருத்துவமனையில் பெயர்)

'விழியோன்'

-கு.கோப்பெரும்தேவி, சென்னை-125.

---------------------------------------------------------------------------------------------------

(தேனியில் ஓடிய டெம்போ ஒன்றில் எழதியிருந்தது)

'வா! போ! பேசு- பழகு; வண்டி மட்டும் கேட்காதே நண்பா!'

-ச.அரசமதி, தேனி.

---------------------------------------------------------------------------------------------------

கேட்டது

(திருச்சி ரயில் நிலையத்தில் இரு நண்பர்கள் பேசிக் கொண்டது)

'சம்பளத்தை மூணு கவரில் ஏன் பிரிச்சி வைக்கிறே.. ஏன்?'

'ஒண்ணு மனைவிக்கு.. ரெண்டாவது அம்மாவுக்கு,, மூணாவது கடன்காரங்களுக்கு...'

-அ.சுஹைல் ரஹ்மான், திருச்சி.

---------------------------------------------------------------------------------------------------

(சிதம்பரம் பேருந்து நிலையத்தில் இரு நண்பர்கள்...)

'தூங்கும் நேரம் அதிகமாயிருச்சுடா..'

'சந்தோஷப்பட வேண்டியதுதானே.. ஏன் வருத்தமாக சொல்றே..'

'கனவு எல்லாம் ரீப்பிட் ஆகுது. அது கூட பிரச்னை இல்லை. ரெண்டு கனவுகளுக்கு இடையில் விளம்பரம் வருதே..'

-கல்கி, சிதம்பரம்.

---------------------------------------------------------------------------------------------------

(மதுரையில் திரையரங்கம் ஒன்றின் முன் இரு நண்பர்கள்)

'வேர்த்து கொட்டுதுன்னு ஏ.சி. வாங்கினேன்...'

'இப்போ என்னாச்சு...'

'கரண்ட் பில் பார்த்து வேர்த்து கொட்டுது...'

-நா.குழந்தைவேலு, மதுரை.

---------------------------------------------------------------------------------------------------

யோசிக்கிறாங்கப்பா!

பணம், பெருமை, வெறுப்பு ஆகியவற்றை வெளியிட்டால்

அவை வட்டியும் முதலுமாக உன்னிடம் திரும்பிவரும்.

-மு.பெரியசாமி, விட்டுக்கட்டி.

---------------------------------------------------------------------------------------------------

மைக்ரோ கதை

ஒரு வனப் பகுதியில் மாடுகளை மேய்த்துகொண்டிருந்த சிறுவனிடம் அந்தப் பக்கம் சென்ற சாமியார், 'தம்பி தாகமா இருக்கு.. குடிக்கத் தண்ணீர் எங்கே கிடைக்கும்' என்றார்.

அந்தச் சிறுவன், 'அந்தப் பக்கம் கொஞ்சம் தூரம் போனீங்கனா பாறைகள் இருக்கும். அவைகளுக்கு நடுவே ஒரு சுனை இருக்கு.. சுவையான தண்ணீர் கிடைக்கும்' என்றான்.

இதற்கு நன்றி தெரிவித்த சாமியார், 'தண்ணீர் குடித்துவிட்டு அங்கே கொஞ்ச நேரம் ஓய்வெடுக்கலாமுன்னு இருக்கேன். நீ அங்கே வந்தா உனக்குச் சொர்க்கத்துக்கு போகிற வழியைக் காட்டுகிறேன்' என்றார்.

குழப்பத்துடன் அவரை பார்த்த சிறுவன், 'தண்ணீர் இருக்கும் இடத்துக்கு போகவே என்னிடம் வழி கேட்ட நீங்க எப்படி எனக்கு சொர்க்கத்துக்கு போகிற வழியை காட்டுவீங்க?' என்றார்.

-இரா.சாந்தகுமார், கூடுவாஞ்சேரி.

---------------------------------------------------------------------------------------------------

எஸ்எம்எஸ்

யார் கவலையைத் தந்தால் என்ன?

புன்னகை நம்மிடம்தானே உள்ளது.

சிரித்துகொண்டே நகர்வோம்.

-குலசை நஜ்முதீன், செங்கல்பட்டு.

---------------------------------------------------------------------------------------------------

அப்படீங்களா!

தேடுதலில் முன்னணித் தளமாக இருந்த கூகுள் நிறுவனம், செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) அம்சங்களைப் புகுத்தி புதிய வடிவம் கண்டுள்ளது.

சாட் ஜிபிடிக்கு போட்டியாக கூகுள் உருவாக்கிய ஜெமினி அட்வான்ஸ்டு, கூகுள் ஒன் போன்ற சேவைகளை கட்டண சேவைகளாக மாற்ற கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கூகுளின் வருவாயில் பெரும்பகுதி தேடலின்போது காண்பிக்கப்படும் விளம்பரங்களில் இருந்து பெறப்படுகிறது. அதனால்தான் இந்தச் செயல்பாடு பயனர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. எனினும், ஏ.ஐ.-அடிப்படையிலான அம்சங்களில் விளம்பரங்களைக் காட்ட முடியாது என்பதால், கூகுள் அவற்றிலிருந்து பணம் ஈட்டமுடியவில்லை. ஆகையால், ஏ.ஐ. அம்சங்களுக்கு கூகுள் கட்டணம் விதிக்க உள்ளது.

இவ்வாறு செய்வதன் மூலம் நிலையான வருவாய் மூலம் ஏ.ஐ. இயங்கும் கருவிகளை கூகுள் வழங்க உள்ளது.

இதனால் தற்போது இலவசமாக பெறும் பல்வேறு ஏ.ஐ. சேவைகளை பணம் செலுத்தி பெறும் நிலை ஏற்பட உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com