பாலிவுட் ஸ்டூடியோ!

கரீனா கபூரின் தென்னிந்திய சினிமா பயணம்!
பாலிவுட் ஸ்டூடியோ!

தென்னிந்திய படத்தில் கரீனா கபூர்!

'ஜப் வி மெட்', 'ஓம்காரா', 'தேவ்' உள்ளிட்ட பல படங்களில் நடித்து பாலிவுட்டில் தனி இடத்தைப் பிடித்திருக்கும் கரீனா கபூர், 2012 - ஆம் ஆண்டு நடிகர் சையத் அலிகானை காதலித்துத் திருமணம் செய்துகொண்டவர். தற்போது சினிமா, விளம்பரம் என பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில், அண்மையில் ரசிகர்களுடன் உரையாடிய கரீனா, 'முதன்முறையாக, மிகப் பெரிய தென்னிந்திய படம் ஒன்றில் நடிக்கிறேன். பான் இந்தியா படமான இதன் படப்பிடிப்பு எங்கு நடக்க இருக்கிறது என்பது தெரியவில்லை. இதை என் ரசிகர்களுக்கு அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்' என்று படத்தின் பெயரைக் குறிப்பிடாமல் கூறியிருக்கிறார்.

ஏற்கனவே யஷின் 19-ஆவது திரைப்படமான 'டாக்ஸிக்' திரைப்படத்தில் கரீனா கபூர் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் நெட்டிசன்கள் பலரும் கரீனா கபூர் கூறிய தென்னிந்திய படம் 'டாக்ஸிக்' திரைப்படமாகத்தான் இருக்கும் என்றும் யஷுடன் இணைந்துதான் நடிக்கப் போகிறார் என்றும் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

-------------------------------------------------------------------------------------------

ஆன்மிகத்துக்கு ஸ்ரீதேவிதான் காரணம்!

நடிகர் அஜய் தேவ்கன் நடிப்பில் 'மைதான்' என்ற படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். அந்தப் படத்தை விளம்பரப்படுத்தும் வேலையில் ஈடுபட்டுள்ள போனி கபூர், தன் மனைவி ஸ்ரீதேவி குறித்த நினைவுகளைப் பகிர்ந்திருக்கிறார்.

'ஸ்ரீதேவி என்னைவிட ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர். அவரால்தான் நான் ஆன்மிகத்தில் ஈடுபட ஆரம்பித்தேன். அடிக்கடி திருமலை ஏழுமலையான் கோயிலுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இப்போது அதே நடைமுறையை அவரின் மகள் ஜான்வி பின்பற்றி வருகிறார். ஸ்ரீதேவி வழக்கத்துக்கு மாறான கதாபாத்திரங்களை ஏற்கக் கூடியவர். அதோடு வழக்கத்துக்கு மாறான செயல்களையும் செய்வார். அவரது தாயார் இறந்தபோது சிதைக்கு ஸ்ரீதேவிதான் தீமூட்டினார்' என்றார்.

'மைதான்' படம் இந்திய கால்பந்து விளையாட்டின் தந்தையாக கருதப்படும் செய்யத் அப்துல் ரஹீம் வாழ்க்கையை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் நடிகை பிரியாமணி உட்பட பலர் நடித்துள்ளனர். மைதான் படப்பிடிப்புக்காக அமைக்கப்பட்டு இருந்த செட் 2020-ஆம் ஆண்டு கரோனா காரணமாகப் பிரிக்கப்பட்டது. அதன் பிறகு புயல் காரணமாக, 2021-ஆம் ஆண்டு மே மாதம் மீண்டும் இதே படத்தின் செட் சேதம் அடைந்தது. மிகவும் போராடி இப்படத்தை போனி கபூர் முடித்திருப்பதாகத் தெரிவித்தார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார்.

-------------------------------------------------------------------------------------------


மும்பை திரும்பிய யுக்தா முகே!

1999-ஆம் ஆண்டு உலக அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் இந்தியாவைச் சேர்ந்த யுக்தா முகே. உலக அழகியானதும் பாலிவுட்டில் சில படங்களில் நடித்தார். அவை எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இதனால் பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. எனவே 2008-ஆம் ஆண்டில் தொழிலதிபர் பிரின்ஸ் துலி என்பவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவுக்குச் சென்று விட்டார். மகன் பிறந்த பிறகு கணவரின் கொடுமைகளைத் தாங்க முடியாமல் அவர் மீது குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் யுக்தா முகே அமெரிக்க போலீஸில் புகார் செய்தார்.

ஒரு கட்டத்தில் இருவரும் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் விவாகரத்து செய்து கொண்டனர். இதையடுத்து, யுக்தா முகே அமெரிக்காவில் இருந்து மும்பைக்கு வந்துவிட்டார். மும்பையில் தன் பெற்றோர் வீட்டில் வசிக்கும் யுக்தா முகே அண்மையில் மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.

2024-ஆம் ஆண்டுக்கான உலக அழகி விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவரைப் பார்த்தவுடன் யாராலும் அவரை அடையாளம் காணமுடியவில்லை. கணவனுடன் ஏற்பட்ட மன ரீதியான அழுத்தங்களால் அவர் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார் என பலரும் வேதனைப்பட்டனர்.

அடுத்து வெப்சீரிஸ் போன்ற எதிலாவது வாய்ப்பு கிடைக்குமா? என்று யுக்தா முகே தேடிக்கொண்டிருக்கிறார். யுக்தா முகே சேலை கட்டிக் கொண்டு அடையாளம் தெரியாத அளவுக்கு மும்பையில் கலந்து கொண்ட விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.

-------------------------------------------------------------------------------------------


சந்திப்பதற்கு பணம் வேண்டும்!

இயக்குநர் அனுராக் காஷ்யப் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவு ஒன்று ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது. பாலிவுட்டில் தனக்கென்று ஒரு தனி இடத்தைப் பிடித்திருப்பவர் இயக்குநர் அனுராக் காஷ்யப். விஜய் நடிப்பில் வெளியான 'லியோ', நயன்தாரா நடிப்பில் வெளியான 'இமைக்கா நொடிகள்' என தமிழ்ப் படங்களிலும் இவர் நடித்திருக்கிறார்.

பாலிவுட் இயக்குநரான இவர், இனிமேல் சினிமா சம்பந்தமாகத் தன்னைச் சந்திக்க வருபவர்கள் பணம் கட்டினால் மட்டுமே தன்னிடம் உரையாட முடியும்' என்று இன்ஸ்டாகிராம் பதிவில் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், 'சினிமா சம்பந்தமாக என்னைச் சந்திக்கப் பலர் வருகின்றனர். புதுமுகங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் சுமாரான படைப்புகளை ஊக்குவித்து விட்டேன்.

எனவே 'கிரியேட்டிவ் ஜீனியஸ்' என்று நினைத்துக் கொண்டு வருபவர்களிடம் நான் இனி என் நேரத்தைச் செலவிட விரும்பவில்லை.இனி 15 நிமிடங்கள் சந்தித்து என்னுடன் பேச வேண்டும் என்றால் ஒரு லட்சம் ரூபாயும், அரை மணி நேரம் என்றால் 2 லட்சம் ரூபாயும் அதுவே ஒரு மணி நேரம் என்றால் 5 லட்சம் ரூபாயும் கொடுத்தால்தான் என்னிடம் பேச முடியும்.

இப்படியான சந்திப்புகளிலேயே என் நேரத்தை வீணடித்துவிட்டேன். அதனால் இனி உங்களால் இந்தப் பணத்தைக் கொடுக்க முடியும் என்றால் மட்டுமே என்னை அழையுங்கள். இல்லையென்றால் விலகி இருங்கள்' என்று பதிவிட்டிருக்கிறார். இந்தப் பதிவு இணையத்தில் வைரலாகிவருகிறது.

-

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com