ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கழுத்து, இடுப்பு வலியில் இருந்து நிவாரணம் பெற...?

கழுத்து, இடுப்பு வலிக்கு ஆயுர்வேத தீர்வுகள்!
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கழுத்து, இடுப்பு வலியில் இருந்து நிவாரணம் பெற...?

நான் காரின் பின்புற இருக்கையில் அமர்ந்து பயணம் செய்து கொண்டிருந்தேன். அப்போது, ஓட்டுநர் ஸ்பீட் பிரேக்கரை பார்க்கத் தவறியதால், கார் தூக்கிப் போட்டது. முதுகுத் தண்டுவடத்தின் கழுத்து, இடுப்புப் பகுதியில் ஜவ்வு விலகி, கடும் வலியால் அவதிப்படுகிறேன். ஆறு மாதமாகியும் குணமாகாமல் படுக்கையிலேயே இருக்கிறேன். எவ்வளவோ வைத்தியம் பார்த்தும் சரியாகவில்லை. இதற்கு ஆயுர்வேதத்தில் சிகிச்சை உள்ளதா?

- சிவசுப்ரமணியன், சென்னை-40.

படுக்கையிலேயே பல மாதங்கள் படுத்து ஓய்வெடுத்தும் குணமாகவில்லை என்பதால் உங்களுடைய பிரச்னை சற்று கடுமையாகவே தெரிகிறது. 'பெட்úஸார்' எனும் படுக்கைப் புண் ஏதும் ஏற்படவில்லை என்று தெரிந்தால், இதற்கான ஆயுர்வேத சிகிச்சையை கீழ்காணும் வகையில் அமைத்துகொண்டு செய்துகொள்வது நல்லது.

'பொடிக்கிழி' எனும் மூலிகைகள் கலந்த பொடியை மூட்டை கட்டி, தவாவில் சூடாக்கி தண்டுவடம் முழுவதும் இளஞ்சூடாக ஒத்தடம் கொடுக்க வேண்டும். சுமார் 5-7 நாள்கள் வரை காலை உணவுக்கு முன் செய்துகொள்வதே நல்லது.

மதியம் உண்ட உணவு செரித்த பிறகு உங்களைக் குப்புறப் படுக்க வைத்து, சில மூலிகைத் தைலங்களைச் சூடாக்கி, பஞ்சில் முக்கி எடுத்து, இளஞ்சூடாக வலி உள்ள முகுதுத் தண்டு வடப் பகுதியில் போட்டு ஊற வைக்க வேண்டும். சுமார் 45 நிமிடங்களாவது ஊறிய பிறகு மூலிகைத் தழைகளைத் தண்ணீருடன் காய்ச்சி, அதிலிருந்து வெளியேறும் நீராவியை வலி உள்ள பகுதிகளில் நன்கு படும்படி காண்பிக்க வேண்டும். இந்தச் சிகிச்சை முறைக்கு 'ஸ்நேக ஸ்வேதம்' என்று பெயர்.

அதற்கு அடுத்ததாக ஆசன வாய் வழியாக முதல் இரண்டு நாள்களுக்கு மூலிகைத் தைலம் செலுத்தி, மூன்றாவது நாள் மூலிகைக் கஷாயத்தை ஆசன வாய் வழியாக மலப்பைக்குச் செலுத்த வேண்டும். இதன்மூலம் பெருங்குடல் பகுதியானது மலத்தேக்கம், வாயுத் தேக்கத்திலிருந்து விடுதலை பெறும் இந்தச் சிகிச்சை முறையானது நான்காவது நாள் தைலம், ஐந்தாவது நாள் கஷாயம், ஆறாவது நாள் தைலம், ஏழாவது நாள் கஷாயம், எட்டாவது நாள் தைலம் என்ற வகையில் உட்செலுத்தி, குடலை வழுவழுப்பாக்கிய பின்னர், தண்டுவடத்தின் கீழிருந்து மேலாக தைலத்தை வெதுவெதுப்பாகத் தடவி முக்கால் மணி நேரம் ஊறிய பின் வென்னீரில் குளிக்க வேண்டும். இந்தச் சிகிச்சையின் மூலமாக, வரண்டு போன வில்லைப் பகுதிகளில் எண்ணெய்ப் படை சேருவதால் அவை மறுபடியும் வலுவாகின்றன. நசுங்கிய நரம்புகள் விடுபட்டு, தம் இடத்துக்கே திரும்புகின்றன.

அதன்பிறகு தண்டுவடத்தின் மீது 'நவரக்கிழி' எனும் சிவப்பு அரிசியால் தயாரிக்கப்படும் சித்தாமுட்டி வேர்க் கஷாயம், பாலில் வேக வைத்தெடுத்த அதனை மூட்டை கட்டி, தடவி விடுதல் வேண்டும். வில்லைகளுக்கு நீர்ப் பசையை இதன் மூலம் நாம் உருவாக்கலாம்.

விபத்தினால் ஏற்பட்ட தண்டுவட வில்லை நசுங்களுக்கு அதனைச் சுற்றி உளுந்து மாவினால் வரம்பு கட்டி, அந்த வரம்பினுள் நிரம்பி வைக்கப்படும். மூலிகைத் தைல முறைகளும் சிறந்த சிகிச்சை முறையே ஆகும்.

வலி நிவாரணியான சில ஆயுர்வேத மாத்திரைகளை மூலிகைகளைக் கொண்டு காய்ச்சப்பட்ட தைல மருந்துகளை 10 முதல் 15 சொட்டுகள்விட்டு அரைத்து விழுதாக்கி காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு அதன் மேல் சிறிது சூடான பால் அருந்துவதன் மூலமாகவும் பயன் அடையலாம்.

மேற்குறிப்பிட்ட சிகிச்சை முறைகளை ஆயுர்வேத மருத்துவமனையில் தங்கி எடுத்துகொள்ள மட்டுமே முடியும். இந்தச் சிகிச்சையின் நடுவே, பிசியோதெரபி சிகிச்சைகளையும் எடுத்துகொள்வது நல்லது.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com