யாத்திரை

நடைபயிற்சியின் போது கண்டெடுத்த கைப்பை
யாத்திரை
Published on
Updated on
7 min read

வழக்கம்போல் மேற்கொள்ளும் நடைபயிற்சிக்காக, அன்று மாலை வீட்டிலிருந்துப் புறப்பட்ட ராமநாதன் தெருவில் இறங்கி மார்க்கெட் வழியாக நடந்து கொண்டிருந்தார்.

இன்னும் சற்று நேரத்தில் சந்தடியான மார்க்கெட் சாலையைக் கடந்ததும் அவர் தினசரி செல்லும் சந்தடியற்ற அமைதியான இடத்திலிருக்கும் நகராட்சிப் பூங்கா வந்துவிடும். அவருக்கு முன்னதாகவே அவருடைய நண்பர் கணேசன் அங்கே வந்து காத்திருப்பார். இருவருமே பணி ஓய்வு பெற்ற சீனியர் சிட்டிசன்கள்.

இருவருக்குமே அழையா விருந்தாளியான 'சுகர்' வந்து நிரந்தரமாக குடியமர்ந்துவிட்டது. தினசரி நடைபயிற்சி, கட்டுப்பாடான உணவு, மாத்திரைகளால் 'சுகர்' பெட்டி பாம்பு போல் அடங்கியே இருக்கிறது இருவருக்கும்.

ராமநாதன் கை கடிகாரத்தைப் பார்த்தார். மணி இன்னும் ஆறாகவில்லை. மேற்கு வானில் கோடைச் சூரியன் மறைவதற்கு இன்னும் அரை மணி நேரமாகும். அதற்குள் பூங்காவுக்குச் சென்று கணேசனுடன் பேசிக் கொண்டே உள்நடை பாதையில் மூன்று முறை வலம் வந்த பிறகு பெஞ்சில் சிறிது நேரம் அமர்ந்து ஓய்வெடுத்துவிட்டு ஏழரைக்குள் வீடு திரும்பி விடலாம் என்று எண்ணியபடி நடையைச் சற்று துரிதப்படுத்தினார்.

சாலை ஓரமாக நடந்து கொண்டிருந்த ராமநாதன் சாலையை ஒட்டிய நடைபாதையில் ஏறும்போது, காலில் ஏதோ இடறுவதைக் கண்டு குனிந்து பார்த்தார்.

ஒரு சிறிய கருப்பு நிற தோல் கைப்பை. 'எடுக்கலாமா?, வேண்டாமா?' என்று யோசிப்பதற்குள் அவரது கை தானாக அதை எடுத்து விட்டது. ஜிப் போட்டு மூடியிருந்த அந்தக் கைப்பை சற்றே கனத்தது. 'யாராவது பார்க்கிறார்களா?' என்று சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு நடைபாதையில் ஏறி ஓர் ஓரமாக

நின்றார்.

'அநாமத்தாக ஏதும் பொருள் கிடந்தால் எடுக்க வேண்டாம். காவல் துறையிடம் தெரிவிக்கவும்' என்று எப்போதோ?, எங்கேயோ எழுதியிருந்த எச்சரிக்கை வாசகம் நினைவில் வந்தது அவருக்கு. 'பாம்' இருக்கலாம் என்பதற்கான எச்சரிக்கை அது.

ஒரு நிமிடம் பதற்றமாகி பிறகு சுதாகரித்துகொண்டு விட்டார்.

'பாம்தான் இருக்குமா? ஏன் பணம் இருக்கக் கூடாதா?' என்று நினைத்தார். பையை நெருடிப் பார்த்தார். உள்ளே ஏதோ காகிதங்கள் இருப்பது போல் தெரிந்தது.

ஜிப்பைத் திறந்து பார்த்தார் ராமநாதன். அவர் ஊகித்தது சரியாக இருந்தது.

உள்ளே கத்தையாக ஐநூறு ரூபாய் நோட்டுகள் இருந்தன. ஒருபுறம் இன்ப அதிர்ச்சியும் மறுபுறம் பட படப்பும் காணப்பட்டது அவரிடம்.

ஜிப்பை மூடி விட்டு சுற்றும் முற்றும் பார்த்தார். 'யாரும் தன்னைக் கவனிக்கவில்லை' என்று தெரிந்து கொண்டார். 'அவரவர்கள் பஸ்ஸை பிடிக்கவோ, ரயிலை பிடிக்கவோ வேக வேகமாகச் செல்வார்கள். அலுவலகம் முடிந்தவர்கள் வீட்டுக்கு விரைவார்கள். அடுத்தவர் என்ன செய்கிறார் என்றா பார்ப்பார்கள்!' என்று எண்ணியவாறு தற்செயலாகப் பக்கவாட்டில் பார்த்தார் ராமநாதன்.

ஒரு பத்தடி தூரத்திலிருந்த நடைபாதை பெட்டிக் கடைக்காரர் மட்டும் அவரையே பார்ப்பது போல் தெரிந்ததும் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டார்.

இந்தக் கைப்பையை எடுத்தது முதல்தான் இயல்பாக இல்லை என்பதை உணர்ந்தார். அப்படி இருப்பது போல் பாசாங்கு செய்ய முடிந்தது அவரால்.

இதைத் தவற விட்டவர்கள் யாராக இருக்கும் என்பதை அறிய ஜிப்பைத் திறந்து ஏதாவது அடையாள குறிப்புகள் இருக்கிறதா? என்று பார்த்தார். ரூபாய் நோட்டைத் தவிர வேறு பிட் காகிதம் கூட இல்லை அதில். குத்து மதிப்பாக ஐம்பது ஐநூறுகள் இருக்கும் என்று கணித்தார்.

பாவம் யார் தவற விட்டார்களோ. இரு சக்கர வாகனத்தில் சென்றவர்தான் தவற விட்டிருக்க முடியும். பணப்பை கீழே விழுந்தது கூடத் தெரியாமல் வேகமாகச் சென்றிருக்கக் கூடும். ஆணோ, பெண்ணோ யாரோ தெரியவில்லை. என்ன அவசரத் தேவைக்காக எடுத்துப் போனார்களோ? வங்கியிலிருந்து எடுத்த சேமிப்பு பணமோ, யாரிடமிருந்தாவது கடன் வாங்கியதோ தெரியவில்லை. அவர்கள் மனம் எவ்வளவு பாடுபடும்!

அலுவலகத்தில் வாங்கிய கடனுக்கு மாதாமாதம் தவணை முறையில் பிடித்தம் போக பாதிச் சம்பளம் கைக்கு வருகையில் எதையோ பறி கொடுத்தது போன்று மனம் வருந்துமே.

இவ்வளவு பணத்தை தொலைத்தவர்கள் எவ்வளவு வேதனைப்படுவார்கள்! எப்படி அவர்களால் நிம்மதியாக இருக்க முடியும். ராமநாதன் இவ்வாறெல்லாம் சிந்தித்தபடியே பணப்பையை தேடிக் கொண்டு யாராவது வருகிறார்களா என்று அந்த நடைபாதையிலேயே காத்திருந்தார். நேரம்தான் ஓடிக் கொண்டிருந்ததே தவிர பையைத் தேடிக் கொண்டு யாரும் வருவதாகத் தெரியவில்லை.

கைப்பேசி ஒலிக்க, எடுத்து காதில் வைத்தார். எதிர்முனையில் கணேசன்.

'என்னாச்சு ராமா? பூங்கா வரலையா?'

'இல்லப்பா. கொஞ்சம் அவசர வேலை.'

கைப்பேசியை அணைத்துவிட்டு கை கடிகாரத்தைப் பார்த்தார். மணி ஆறரை.

மேற்கு வானில் சூரியன் மெல்ல மெல்ல கீழிறங்கிக் கொண்டிருந்தான். இரவின் வருகையை பறை சாற்றியபடி மெல்ல மெல்ல இருள் சூழத் துவங்கியது.

இருளை விரட்ட சாலை விளக்குகள் ஒளிரத் துவங்கின.

ராமநாதனுக்கு இருப்பு கொள்ளவில்லை. ஏனோ பெட்டிக்கடைப் பக்கம் பார்வையை செலுத்தினார்.

மீண்டும் பெட்டிக்கடைக்காரர் இவரையே பார்த்துக் கொண்டிருப்பதாக உணர்ந்தார்.

'இவர் ஏன் நம்மையே பார்க்கிறார்? பையை எடுத்ததைப் பார்த்திருப்பாரோ. அதில் பணம் இருப்பதாக நினைத்திருப்பாரோ. இல்லையேல் எதற்காக இப்படி பார்க்க வேண்டும்?'

அவரது நினைவை திசை திருப்பும் விதமாக ஒரு பைக், அவர் நின்று கொண்டிருந்த நடை பாதை அருகே வந்து நின்றது. அதிலிருந்து ஒரு இளைஞன் இறங்கி அவரை நோக்கி வந்தான்.

தன் கையில் வைத்திருக்கும் பையைப் பார்த்துவிட்டு, அதைத் தேடிக் கொண்டுதான் அந்த இளைஞன் வருகிறார் என்று நினைத்த ராமநாதன், அவர் அருகில் வந்த இளைஞனிடம் பையைக் காட்டி, 'தம்பி இந்த பேக்..' என்று முடிப்பதற்குள், அந்த இளைஞன் கைப்பேசியை அவரிடம் காட்டி ஏதோ விலாசத்துக்கு வழி கேட்டான். சொல்லிவிட்டு தன் அவசர குடுக்கைத் தனத்தை நினைத்து நொந்து கொண்டார்.

நல்லவேளை கைப்பேசியைப் பார்த்தவாறே அந்த இளைஞன் வந்ததால்தான் கேட்டதை அவன் கவனிக்கவில்லை. இப்படி அவசரப்பட்டு கேட்டு யாரிடமாவது கொடுத்து விடப் போகிறோம். 'யார் வந்தாலும் விவரங்களைக் கேட்ட பின்பே பையை ஒப்படைக்க வேண்டும்' என்று தனக்குள் எச்சரித்துக் கொண்டார்.

கைக் கடிகாரத்தைப் பார்த்தார். மணி ஆறே முக்காலைக் காட்டியது. பை கிடைத்து முக்கால் மணியாகிறது. யாரும் தேடிக் கொண்டு வரவில்லை.

இந்த இடத்தில்தான் கீழே விழுந்தது என்று எப்படித் தெரியும் அவர்களுக்கு? எங்கு போய் தேடுவார்கள்? அப்படியே தேடிப் போனாலும் கீழே விழுந்த பணப்பை அப்படியே இருக்கும் என்று எப்படி நம்புவார்கள்? இருந்தாலும் ஒருமுறை தேடிப் பார்த்து விடலாம் என்று முயற்சிக்காமலா இருப்பார்கள்?

இல்லை, நாம் நினைப்பது தவறு. சாலையில் எத்தனையோ இரு சக்கர வாகனங்கள் செல்கின்றன. யாராவது தேடிக் கொண்டு சென்றிருக்கலாம்.

நாம் எடுத்து வைத்துகொண்டு காத்திருக்கிறோம் என்று எப்படி தேடுபவர்களுக்குத் தெரியும்?

ராமநாதன் பலவாறு சிந்தித்தபடி இரு சக்கர வாகனங்களில் போவோர் வருவோரைப் பார்த்தவாறு கைப்பையுடன் அந்த நடைபாதையில் ஓரமாக நின்று கொண்டிருந்தார்.

இன்னும் கால் மணி நேரம் பார்க்கலாம். எதையாவது தேடுபவர்கள் நிச்சயம் வேகமாகச் செல்ல மாட்டார்கள். கீழே பார்த்தவாறு மெதுவாகத்தான் போவார்கள். தவிர, அவர்கள் ஒரு வித பதற்றத்திலும் சோகத்திலும் இருப்பார்கள். எனவே அதை வைத்து தேடுபவர்களை சுலபமாக அடையாளம் கண்டு விடலாம் என்று நினைத்தார்.

ஒருவேளைதான் கிளம்பிச் சென்ற அடுத்த நிமிடம் யாராவது பையைத் தேடி வந்து ஏமாற்றம் அடையக் கூடும். எனவே அவசரப்பட வேண்டாம் என்று ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கையில் நின்று கொண்டிருந்தார் ராமநாதன்.

தற்செயலாக அவரது பார்வை மீண்டும் பெட்டிக் கடைப் பக்கம் சென்றது. கடைக்காரர் வியாபார மும்முரத்தில் இருந்ததால் ராமநாதனை பார்க்கவில்லை.

ராமநாதன் நிமிடத்துக்கு ஒரு தரம் கைக்கடிக்காரத்தைப் பார்ப்பதும் ரோட்டைப் பார்ப்பதுமாகவே இருந்தார். அவர் நின்றுகொண்டிருக்கும் நடைபாதையில் நடந்து செல்வோர்

ஒன்றிரண்டு பேர்கள்தான். வாகனங்களில் செல்வோர்தான் அதிகம்.

மணி ஏழு நெருங்கிக் கொண்டிருக்கையில் மொபைல் லைட்டை ஒளிர விட்டபடி நடைபாதையில் எதையோ தேடிக் கொண்டு வந்தான் ஓர் இளைஞன். பைக்குச் சொந்தக்காரர் ஒருவேளை இவராக இருக்குமோ? என்று நினைத்த ராமநாதன் அந்த இளைஞன் கண்ணில் நன்றாகத் தெரியுமாறு பையை வைத்துக் கொண்டு நின்றார். ஆனால் அந்த இளைஞனோ அவரை ஏறெடுத்தும் பாராமல் தரையைப் பார்த்தபடியே அவரைக் கடந்து

சென்றான்.

ராமநாதன், 'என்ன தேடுகிறாய் தம்பி? '

என்றதும் அந்த இளைஞன் ஒரு விநாடி நின்று அவரை ஏறிட்டுப் பார்த்து, ' பைக் கீ சார். நீங்க பார்த்தீங்களா?' என்றான்.

'அடடா, இல்லையேப்பா?' என்றார் சற்று வருத்தத்துடன். அவர் மீண்டும் ஏதோ கேட்க வாய் திறப்பதற்குள், 'சரி சார்' என்று சொல்லிவிட்டு வேக வேகமாக பைக் கீயைத் தேடியபடி நகர்ந்து விட்டான்.

ராமநாதனுக்கு சற்று ஏமாற்றமாக இருந்தது. அதேசமயம், 'எப்படி இந்த மனிதர்கள் இவ்வளவு அலட்சியமாக இருக்கிறார்கள்' என்று அவர்கள் மீது கோபமும் வந்தது.

அவர் பள்ளிக்கூடம் படிக்கையில் ஒரு நாள் இங்க் பேனாவை தொலைத்துவிட்டு வந்ததற்காக அவர் அப்பாவிடம் அர்ச்சனையும், அடியும் வாங்கியது நினைவுக்கு வந்தது ராமநாதனுக்கு.

'நீ தொலைச்சுட்டு வந்தது சாதாரண பேனா இல்லை. பைலட் பேனா. உனக்காக டவுனுக்குப் போய் வாங்கி வந்தேன். பொறுப்பிருக்கா உனக்கு..'

தொலைத்துவிட்டு வந்தது 'பொறுப்பை' என்பதை கோடிட்டுக் காட்டினார் அப்பா. வசவு ஓரிரு நாளோடு போகவில்லை. ஒரு வாரம் நீடித்தது. பிறகு மறுபடியும் ஒரு புதிய பைலட் பேனா வாங்கி வந்து தந்தபோது, அதை வாங்கிக் கொள்ள பயமாக இருந்தது அவருக்கு. அதைத் தெரிந்து கொண்ட அவர் அப்பா, 'இனிமே தொலைக்க மாட்டே. பயம் வந்துடுத்தில்லே' என்று யூனிபார்ம் சட்டை பாக்கெட்டில் சொருகியதை நினைத்துப் பார்த்து தனக்குள் சிரித்துக் கொண்டார்.

தன் அப்பா சொல்லியதுபோல், இந்த மனிதர்கள் தொலைப்பது பொருளையல்ல, பொறுப்பை என்பதை நினைத்துக் கொண்டார்.

நேரம் ஓடிக் கொண்டிருந்ததே தவிர பணப்பையைத் தவற விட்டவர்கள் யாரும் தேடிக் கொண்டு வருவதாகத் தெரியவில்லை. இனி அங்கே நின்றுகொண்டிருப்பதில் பயனில்லை என்று தீர்மானித்து அங்கிருந்து கிளம்ப நினைக்கையில் நடுத்தர வயதுடைய ஒரு நபர் குனிந்து கீழே பார்த்தபடி சாலை ஓரமாக நடந்து வருவதைப்பார்த்தார்.

'இவர் எதைத் தேடுகிறார்? ஒருவேளை இவராக இருக்குமோ' என்று எண்ணிய ராமநாதன், அந்த நபர் அவருக்கு சமீபத்தில் வந்ததும், 'சார் என்ன தேடறீங்க?' என்றார் பையை அவர் கண்ணில் படும்படி வைத்துக் கொண்டு.

சட்டென்று நின்று நிமிர்ந்து பார்த்த அந்த நபர், ராமநாதனை ஒரு முறை முறைத்து விட்டு மீண்டும் தலையைக் குனிந்தபடி வேகமாக நடந்தார். ராமநாதனுக்கு அவமானமாகப் போய்விட்டது. அவருக்கு அப்போதுதான் உரைத்தது, சில மனிதர்கள் இப்படித்தான் எதையோ தொலைத்ததை தேடுவது போல் கீழே குனிந்து பார்த்தபடி நடப்பார்கள் என்று.

இனி யாரையும் எதிர்பார்த்து நின்று கொண்டிருப்பதில் பலனில்லை என்று அங்கிருந்து நகர்ந்தார். அப்போது பெட்டிக் கடைக்காரர் கடைக்கு வெளியே வந்து நின்று கொண்டு புகை பிடித்தபடி இவரையே பார்த்தவாறு இருப்பதைக் கண்டார்.

'சந்தேகமே இல்லை. இவன் நம்மைத்தான் நோட்டம் விடுகிறான்' என்று முடிவுக்கு வந்தார்.

ராமநாதன் பார்வையைத் தவிர்த்து வேறு பக்கம் முகத்தைத் திருப்பிக் கொண்டு நடக்க ஆரம்பித்தார்.

இரண்டடி நடக்கையில் ஒரு போலீஸ் ஜீப் பெட்டிக் கடைக்கு முன் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய ஒரு காவலர், பெட்டிக் கடைக்காரரை நோக்கிச் செல்வதைக் கண்டார்.

அப்படியே நின்று பார்த்தார் ராமநாதன். கடைக்காரர் புகைப்பதை கீழே போட்டு காலால் மிதித்து அணைத்து விட்டு காவலருக்கு வணக்கம் சொன்னார்.

காவலர் கடைக்காரரிடம் எதையோ கேட்பதும் அதற்கு அவர், ராமநாதனைக் காட்டி எதையோ சொல்வதையும் பார்த்த ராமநாதன் பதற்றமானார்.

கீழே கிடந்த பையைதான் எடுத்ததும் அதில் இருப்பது பணம் என்பதையும் ஊகித்தறிந்து போலீஸூக்கு தகவல் சொல்லி வரவழைத்து விட்டாரோ கடைக்காரர்' என்று எண்ணினார். ஆனால் அடுத்த நிமிடம் போலீஸ் அவர் பக்கம் வராமல் விருட்டென்று ஜீப்பில் ஏறி சென்று விட்டதும், தான் நினைத்தது தவறு என்றுணர்ந்து நிம்மதி பெருமூச்சு விட்டார் ராமநாதன். மீண்டும் நடையைத் தொடர்ந்த ராமநாதன் பணப்பையை என்ன செய்யலாம் என்று யோசித்தவாறே நடந்து கொண்டிருந்தார்.

போலீஸில் ஒப்படைத்து விடலாமா? என்று நினைத்தார்.

அடுத்த கனம் அவருடைய உள்மனம் வேண்டாம் என்று எச்சரிக்கை மணி அடித்தது. காரணம், சில வருடங்கள் முன்பு அவருடைய நண்பர் ஒருவருக்கு காவல் நிலையத்தில் நேர்ந்த கசப்பான சம்பவத்தை அந்த நண்பர் கூறியது நினைவுக்கு வந்தது அவருக்கு. அந்த நண்பரின் மனைவியின் ஐந்து சவரன் நகையை தெருவில் போய்க் கொண்டிருந்தபோது, ஒருவன் பறித்துக் கொண்டு போய் விட்டான். காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்றபோது, உட்கார கூட வைக்காமல் விசாரணை செய்தார்களாம்.

'திருடன் உடையின் கலர் என்ன, என்ன பைக், அதன் நம்பர் நோட் பண்ணீங்களா?' என்றெல்லாம்துருவித் துருவிக் கேட்டு விட்டு, கடைசியில், 'நீங்கள் ஏன் கழுத்தை மூடாமல் போனீர்கள்' என்று நகையைப் பறிகொடுத்த நண்பர் மனைவியையே குற்றவாளியாக்கி வெந்த புண்ணில் வேல் பாய்ச்சினார்களாம்.

பிறகு, 'திருடு போன நகை கிடைத்தால் தெரிவிக்கிறோம்' என்று சொல்லி, நகை பற்றிய விவரங்களை எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பி விட்டார்கள்.

இரண்டு மாதங்கள் கழித்து நகையை பெற்றுக் கொள்ளும்படி காவல் நிலையத்திலிருந்து அழைப்பு வந்ததும் மகிழ்ச்சியுடன் சென்றபோது நண்பருக்கும், அவருடைய மனைவிக்கும் அதிர்ச்சி காத்திருந்தது.

வேறு ஏதோ ஓர் இரண்டு இரண்டரை பவுன் நகையைக் கொடுத்து பெற்றுக் கொள்ளும்படி வற்புறுத்தினார்கள்.

'இது எங்கள் நகை இல்லை என்று சொல்லி வாங்க மறுத்தார்கள்..'

அடுத்ததாக போலீஸ் அதிகாரி ஒரு கேள்வி கேட்டதும் அதிர்ந்து போனார்கள் இருவரும்.

'நீங்க அஞ்சு பவுன்னு சொல்றதை எப்படி நாங்க நம்ப முடியும்?'

'என்ன சார், பொய்யா சொல்வோம்? மாசா மாசம் சீட்டு கட்டி போன வருஷம்தான் சார் வாங்கினோம். வாங்கினதுக்கு பில் கூட இருக்கு..'

'அதெல்லாம் விடுங்க. நகையை தொலைச்சுட்டீங்க..?'

'தொலைக்கலை சார். திருடன் பறிச்சிட்டான்.'

'எல்லாம் ஒன்னுதாங்க. இப்ப கொடுக்கிறதை வாங்கிட்டுப் போங்க. இதாவது கிடைச்சுதேன்னு சந்தோஷப்படுங்க?'

'அப்போ எங்க நகை கிடைக்காதா?'

'கிடைக்கலாம், கிடைக்காமலும் போகலாம். கேரண்டி கிடையாது.'

இறுதியில் அந்த நண்பரும் அவரது மனைவியும் போலீஸ் கொடுத்த நகையை வாங்கிக் கொள்ளாமல் திரும்பி வந்தார்கள்.

இன்னொருவர் தவற விட்ட நகையை அணிவது தோஷம் என்று நினைத்தார்கள். எனவே, இந்த பணத்தைக் கொண்டு போய் நேர்மையாக போலீஸில் ஒப்படைத்தால் நம் மீது சந்தேகப்பட்டு, 'உண்மையிலேயே இவ்வளவுதான் இருந்ததா இல்லை கொஞ்சம் எடுத்துகிட்டு மிச்சத்தை ஒப்படைக்கிறியா?' என்று கேட்டாலும் கேட்பார்கள்.

இந்த எண்ணம் தோன்றியதும், ராமநாதன் பணப்பையை போலீஸில் ஒப்படைக்கும் எண்ணத்தை கைவிட்டு அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தவாறே வீட்டை நோக்கி நடந்தார்.

கைக் கடிகாரத்தில் மணி ஏழரை நெருங்கியபோது கைப்பேசி ஒலித்தது. எடுத்துப் பார்த்தார். எதிர்முனையில் அவர் மனைவி பர்வதம்.

'என்ன இன்னும் காணும். எங்க இருக்கீங்க?'

'வீட்டுக்குத்தான் வந்துகிட்டிருக்கேன். கொஞ்சம் லேட்டாயிடுச்சு..'

மனைவிக்கு பதில் சொல்லி விட்டு கைப்பேசியை அணைத்ததும் விருட்டென்று அவர் மனதில் ஓர் எண்ணம் எழுந்தது.

ரொம்ப நாளாக பர்வதத்துக்கு காசி யாத்திரை போக வேண்டுமென்று ஆசை. காசில்லாமையால் அது தள்ளிக் கொண்டே போகிறது.

ராமநாதன் பிரபல தனியார் நிறுவனத்திலிருந்து ஓய்வு பெற்ற நாள் முதல் கடந்த ஐந்து வருடங்களாக பல முறை வட இந்திய யாத்திரை போய் வருவதற்கு திட்டம் தீட்டி அதற்காக அவருடைய சொற்ப ஓய்வூதியத்தில் செலவு போக மீதி பணத்தை சேர்த்து வைத்திருப்பார். ஆனால் திடீரென்று ஏதாவது ஓர் அவசரச் செலவு வந்து அவருடைய திட்டத்துக்கு முட்டுக் கட்டைப் போட்டு விடும். அவருடைய மகன் கார்த்தி, மகள் செல்விதான் அந்த முட்டுக்கட்டைகள்.

'காசி, ராமேசுவரம்.. எங்கப்பா போயிடப் போறது. கொஞ்சம் அவசரத் தேவைப்பா. அடுத்த மாசம் திருப்பித் தரேன், ப்ளீஸ்' ‘ என்று மகன் கெஞ்சும் போது கொடுத்து விடுவார்.

அதேபோன்று கல்யாணம் கட்டிக் கொடுத்த மகள், பேரன், பேத்தியுடன் வந்து விட்டு பக்கம் திரும்பும்போதெல்லாம் 'அதற்கு வேண்டும் இதற்கு வேண்டும்' என்று வாங்கிக் கொண்டு போய் விடுவாள். பிறகு எங்கே யாத்திரை போவது?

உள்ளூரிலேயே எங்காவது போய் வருவார்கள். இப்படியே ஐந்து வருடங்கள் ஓடி விட்டது. வயதாக நீண்ட பிரயாணம் செய்ய உடல் இடம் கொடுக்காது. எனவே கடவுளாகப் பார்த்துக் கொடுத்திருக்கிறார். இதில் எப்படியும் நாற்பதுக்கு மேல் இருக்கும். இதை வைத்துக் கொண்டு மனைவியை அழைத்துக் கொண்டு யாத்திரை கிளம்பி விடலாம்.'

இப்படியெல்லாம் சிந்தித்தவாறு பணப்பையை பத்திரமாக கையில் பிடித்தபடி வீட்டை நோக்கி நடக்கையில், பின்னாலிருந்து 'ராமநாதா!' என்ற பரிச்சயமான குரல் கேட்டுத் திரும்பினார்.

அவருடைய அலுவலக நண்பர் செல்வம். கிட்டத்தட்ட அவரையொத்த வயதிருக்கும்.

'அடடே நீயா! எப்படியிருக்கே செல்வம். பார்த்து பல வருஷமாச்சே..'

இருவரும் ஒருவரையொருவர் குசலம் விசாரித்துக் கொண்டார்கள்.

சற்று நேரம் நின்று இருவரும் பல விஷயங்களைப் பேசிக் கொண்டு வரும்போது, அவர்கள் பணிபுரிந்த அலுவலகம் பற்றி பேசுகையில், செல்வம், 'நம்ம குமார் தெரியுமா?' என்று கேட்டார் ராமநாதனிடம்.

'ஆமா, அவன் எப்படியிருக்கான்?'

'அவன் நல்லாத்தான் இருக்கான். அவன் மனைவிக்குத்தான் கேன்சர்..'

'அடப்பாவமே! என்னப்பாது! எவ்வளவு நாளா?'

'மூணு வருஷமா ஆஸ்பத்திரிக்கும் வீட்டுக்குமா மனைவியை அழைச்சிண்டு போய் போய் வரானாம்.'

'இப்ப எப்படி இருக்காம்?'

'ஒன்னும் பலன் இல்லையாம். போன மாசம் ஆஸ்பத்திரிக்குப் போற வழியில் அவனைப் பார்த்தேன்..'

'கையிலிருந்த காசும் போய் வீட்டையும் அடமானம் வைக்கிற நிலைமைக்கு வந்தாச்சு...' என்றான் மனம் நொந்து போய்.

'அவனைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. அதுக்கப்புறம் ஒரு நாள் அவன் வீட்டுக்குப் போய் என்னால் முடிஞ்சதைக் கொடுத்துட்டு வந்தேன்.'

குமார் பற்றி செல்வம் சொல்லச் சொல்ல ராமநாதனுக்கு வருத்தமும் வேதனையும் கூடியது. செல்வம் தொடர்ந்தார்.

'நாம வருத்தப்பட்டு என்ன பன்றது? ஆபீஸில் மேனேஜ்மென்ட்டை ஏமாத்தி எவ்வளவு தில்லுமுல்லு பண்ணினான்! எவ்வளவு கறாரா லஞ்சம் வாங்கினான்! அதெல்லாம் எப்படிப் போச்சு பார்.'

',என்னப்பா, அதெல்லாம் சொல்லிக் காட்டக்கூடிய நேரமா இது? அவன் பாவம் எவ்வளவு கஷ்டத்தில் இருக்கான்..'

'புரியுது ராமநாதா... ஆனால் உண்மையைச் சொல்லாமல் இருக்க முடியலை.' என்ற செல்வம் அடுத்ததாக சொன்ன ஒரு வார்த்தைதான் ராமநாதன் நெஞ்சில் அதிர்வலையை ஏற்படுத்தியது.

'இதுக்குத்தான் சொல்றது, எப்பவும் நாம உழைச்ச காசுதான் நிக்கும். அநாமத்தா வர்றதெல்லாம் இருக்கிற காசையும் சேர்த்து அடிச்சிட்டுப் போயிடும்னு...'

சொல்லிவிட்டு செல்வம் அவரிடம் விடை பெற்றுச் சென்று விட்டார். ஆனால் ராமநாதன்தான் அங்கேயே அசைவற்று நின்று கொண்டிருந்தார்.

செல்வம் கடைசியாகச் சொன்ன அந்த வார்த்தை அவர் அடி மனதில் திரும்பத் திரும்ப ஒலித்துக் கொண்டேயிருந்தது.

'என்ன ஒரு சத்தியமான வார்த்தை இது! போகிற போக்கில் சொல்லி விட்டுப் போய் விட்டார் செல்வம்.'

ராமநாதன் ஓர் முடிவுக்கு வந்தார்.

'இந்தப் பணத்தில் யாத்திரை போனால் மனசாட்சி உறுத்திக் கொண்டே இருக்கும். எனவே இதை கஷ்டப் படுகிற குமாருக்குக் கொடுத்தால் அவன் மனைவி வைத்தியச் செலவுக்கு உபயோகப்படும்...'

கைப்பேசியை எடுத்து வீட்டுக்கு வர தாமதமாகும் என்று மனைவிக்குத் தகவல் சொல்லி விட்டு ஆட்டோ பிடித்து குமார் வீட்டுக்கு விரைந்தார் ராமநாதன்.

வி.பத்ரி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com