'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 188

பிரணாப் முகர்ஜியின் திடீர் விசிட் மற்றும் அரசியல் சுழற்சிகள்
'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 188

போர்ட்டிகோவில் வந்து நின்ற காரிலிருந்து பிரணாப் முகர்ஜியும், ஜனார்த்தன பூஜாரியும் இறங்கினார்கள். பின்னால் வந்து நின்ற காரில் இருந்து மாதவ்சிங் சோலங்கியும், விஜயபாஸ்கர ரெட்டியும் அவர்களைத் தொடர்ந்தனர்.

வராந்தா நாற்காலியில் அமர்ந்திருந்த நான் சட்டென்று எழுந்து நின்றேன். பிரணாப்தா என்னைப் பார்த்த பார்வையில் சற்று அதிருப்தி நிலவியதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. 'நீ எதற்கு இந்த இடத்தில், இந்த நேரத்தில் வந்திருக்கிறாய்?' என்பதுபோல இருந்தது அந்தப் பார்வை.

அவர் கேட்பதற்கு முன்பே, 'ஸ்ரீகாந்த் ஜிச்கருடன் வந்தேன்' என்று தன்னிலை விளக்கம் கொடுத்தபோது, எதுவும் சொல்லாமல் உள்ளே சென்றுவிட்டார் பிரணாப் முகர்ஜி.

சுமார் அரை மணி நேரத்துக்கு மேல் உள்ளே கலந்தாலோசனையில் ஈடுபட்டிருந்தார்கள். ஒருவர் பின் ஒருவராக கிளம்பிச் சென்றனர். பிரணாப் முகர்ஜி கிளம்பி கார் வரை சென்றுவிட்டார். என்ன தோன்றியதோ திரும்பிப் பார்த்தார். நான் வராந்தாவில் நின்று கொண்டிருந்தேன். அருகில் அழைத்தார்.

'சென்னையில் ஒரே களேபரமாக இருக்கிறது; நீ இங்கே இருக்கிறாய்... அங்கே செய்திகளைச் சேகரிக்க நிருபர்களை வைத்திருக்கிறாயா? பத்திரிகைகளுக்கு தில்லி செய்திகளைத் தருவதற்கு எத்தனையோ செய்தி நிறுவனங்கள் இருக்கும். பத்திரிகைகள் சென்னை செய்திகளை அதிகமாக எதிர்பார்ப்பார்கள்...'

'அங்கிருந்து எல்லா செய்திகளும் எனக்கு வந்து விடுகிறது. தென்னிந்தியாவில் உள்ள சில பத்திரிகைகள் தில்லியிலிருந்து செய்திகள் வேண்டும் என்று கேட்கின்றன. அதிலும் குறிப்பாக, காங்கிரஸ் நிலவரம் குறித்து எல்லோரும் ஆர்வமாக இருக்கிறார்கள்...'

'ஜிச்கருடன் சுற்றிக் கொண்டிருந்தால், ஒரு சார்புடைய செய்திதானே கிடைக்கும். கருணாகரன், ராஜேஷ் பைலட் உள்ளிட்டவர்களுடன் இதேபோலத் தொடர்புடன் இருக்கிறாயா?'

'ஆமாம்' என்று தலையாட்டினேன். மெதுவாகப் புன்னகைத்தார்.

'காங்கிரஸை மட்டுமே மையப்படுத்தினால் செய்தி நிறுவனம் நடக்காது. எல்லா தரப்பினருடனும் தொடர்பு இருக்க வேண்டும். அந்த செய்திகளும் தரப்பட வேண்டும்.'

அதற்கும் தலையாட்டினேன்.

'குளிர் கடுமையாக இருக்கிறது. கவனமாக இரு.' என்றபடி காரில் ஏறிக் கொண்டார்.

இப்படி எப்போதாவது அவர் காட்டும் அன்பும், நான் தடம் மாறிவிடக் கூடாது என்பதில் அவருக்கு இருந்த அக்கறையும்தான் என்னை நெகிழ வைக்கும். எனது பாதை திசைமாறி விடக்கூடாது, பயணம் தடம் புரண்டு விடக் கூடாது என்கிற அக்கறை அவருக்கு எப்போதுமே உண்டு.

ஸ்ரீகாந்த் ஜிச்கருடன் நானும் கிளம்பி விட்டேன். இரவு உணவுக்கு அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அப்போது அவர் சொன்ன ஒரு செய்தி எனக்கு அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது.

'காட்கில் சாஹேப் சீதாராம் கேசரியின் பக்கம் போய்விட்டார்... ஏன் அப்படி ஒரு முடிவுக்கு வந்தார் என்று தெரியவில்லை' என்றார் ஜிச்கர்.

அதை நான் எதிர்பார்த்தேன் என்றுதான் சொல்ல வேண்டும். நரசிம்ம ராவ் தரப்பின் குரலாக சுரேஷ் கல்மாதி மாறியிருப்பதுதான் அதற்குக் காரணம் என்று நான் சொன்னதை ஜிச்கரும் ஆமோதித்தார். நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருந்ததால், சுரேஷ் கல்மாதி முக்கியத்துவம் பெற்றார் என்பதும், சீதாராம் கேசரி கட்சியின் இடைக்காலத் தலைவரானதால், கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருக்கும் வி.என். காட்கில் அவரது குரலாக மாறினார் என்பதும் தவிர்க்க முடியாதவை.

வி.என்.காட்கில் மட்டுமல்ல, கருணாகரன், ஏ.கே.அந்தோணி, ஒடிஸா முதல்வர் ஜே.பி.பட்நாயக் உள்ளிட்ட பலரும்கூட சீதாராம் கேசரியின் ஆதரவாளராக மாறி இருந்தனர்.

காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் பதவிக்குத் தேர்தல் நடத்துவதா? இல்லை, ஒருமித்த கருத்தின் அடிப்படையில் தலைவர் தேர்வு நடைபெற வேண்டுமா? என்பதில் கருத்து வேறுபாடு நிலவியது. காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சியில் சீதாராம் கேசரிக்கு ஆதரவாக அதிக அளவில் எம்.பி.க்கள் இருக்கவில்லை என்பதால் போட்டியின்றித் தேர்தல் நடத்த வேண்டும் என்பதில் அவர் குறியாக இருந்தார்.

'நாடாளுமன்றக் காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கும் கேசரி போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்' என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகக் குழு ஒரு தீர்மானம் நிறைவேற்றி இருந்தது. அதைத் தொடர்ந்து ஒரு சில பிரதேச காங்கிரஸ் கமிட்டிகளும் இதுபோன்ற தீர்மானத்தை இயற்றும்படி, சீதாராம் கேசரி மறைமுகமாக அவர்களைத் தூண்டுவதாக ஜெகந்நாத் மிஸ்ரா உள்ளிட்டோர் குற்றம்சாட்டினார்கள்.

அடுத்த நாள் காலை சுமார் 10 மணிக்கு அலுவலகம் செல்லக் கிளம்பியபோது, ஒரு நடை சுநேரிபாக் சாலை சென்று கே.கருணாகரனை சந்தித்தால் என்ன என்று தோன்றியது.

நான் சென்ற நேரம் சரியான நேரம். பார்வையாளர்கள் யாரும் இருக்கவில்லை. சற்று நேரத்தில் கருணாகரனே வரவேற்பறைக்கு வந்து விட்டார்.

'காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் பதவிக்குத் தேர்தல் நடக்கப் போகிறதா, இல்லை ஏகமனதாக சீதாராம் கேசரி தேர்ந்தெடுக்கப்படுவாரா?' என்கிற எனது கேள்விக்காகவே கருணாகரன் காத்திருந்தார் என்றுதான் நினைக்கிறேன்.

'ஒருவருக்கு ஒரு பதவி என்ற கோட்பாடு கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்கிற அவசியம் எல்லாம் கிடையாது. இந்திராஜி, ராஜீவ்ஜி, ஏன் நரசிம்ம ராவ்ஜி காலத்தில் கடைப்பிடிக்கப்பட்டதா என்ன? ரகசியக் கருத்துக் கேட்பு மூலம் ஒருமனதாகத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படலாம். அப்படித்தான் லால் பகதூர் சாஸ்திரியும், இந்திராஜியும் காமராஜால் தேர்வு செய்யப்பட்டனர்.'

'சீதாராம் கேசரிக்குப் பிரதமர் பதவி ஆசை வந்துவிட்டது என்றும், அதனால்தான் நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவராக விரும்புகிறார் என்றும் சொல்லப்படுவது உங்களுக்குத் தெரியுமா?'

'இப்போதைக்கு அதற்கான வாய்ப்பு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. கௌடா அரசின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை. காங்கிரஸில் உள்ள எந்தப் பிரிவினருக்கும் இதில் மாறுபட்ட கருத்து கிடையாது. இதை நீண்ட காலம் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அதே நேரத்தில், இப்போதைய அரசியல் சூழ்நிலையில் ஐக்கிய முன்னணி அரசைக் கவிழ்க்கும் எண்ணம் யாருக்கும் இல்லை.'

கருணாகரனிடம் விடைபெற்றுக்கொண்டு வெளியே வந்த நான், ஒரு ஆட்டோ பிடித்து அக்பர் ரோடு காங்கிரஸ் அலுவலகத்துக்கு நகர்ந்தேன். அங்கே என்ன நடக்கிறது என்பதைப் பார்த்துவிட்டு, 'சாகர் ரத்னா' வில் மதிய உணவையும் முடித்துக்கொள்ளலாம் என்று தீர்மானித்தேன்.

நான் அக்பர் ரோடு அலுவலகத்துக்குப் போனபோது, வி.என். காட்கில் அவரது அறையில் இருப்பதாகச் சொன்னார்கள். நரசிம்ம ராவிடமிருந்து விலகி இப்போது சீதாராம் கேசரி ஆதரவாளராகி இருக்கும் வி.என்.காட்கிலைப் பேட்டி எடுத்தால் சுவாரஸ்யமாகவும், புதிய செய்திகள் கொண்டதாகவும் இருக்கும் என்று தோன்றியது.

பேட்டி வேண்டும் என்று கேட்டபோது காட்கில் சற்றுத் தயங்கினார்.

'நான் செய்தித் தொடர்பாளர்தானே தவிர, கட்சித் தலைவரல்லவே பேட்டி கொடுக்க...' என்றபடி தவிர்க்க நினைத்தார். பிறகு என்ன தோன்றியதோ தெரியவில்லை, 'என்னுடைய பேட்டி வேண்டும் என்று நீங்கள் கேட்டு நான் எப்படி மறுக்க முடியும்?' என்று சிரித்தபடி சொல்லிவிட்டு பேட்டிக்குத் தயாரானார்.

வி.என்.காட்கிலின் 'நியூஸ் கிரைப்' பேட்டி அப்போது மிகவும் பரபரப்பாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. அதற்குக் காரணம், அவர் நரசிம்ம ராவ் குறித்தும், சோனியா காந்தி குறித்தும் தெரிவித்த சில கருத்துகள்தான். அந்தப் பேட்டியிலிருந்து சில பகுதிகள்-

'முன்பு சரண் சிங்கையும், பிறகு சந்திரசேகரையும் கவிழ்த்ததுபோல, இப்போது தேவே கௌடா அரசையும் விரைவில் காங்கிரஸ் கவிழ்க்கப் போகிறது என்று சொல்லப்படுகிறதே...'

'ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசைக் கவிழ்க்கும் எண்ணம் காங்கிரஸூக்கு நிச்சயமாக இல்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி அமைப்பதைத்தான் காங்கிரஸ் விரும்புகிறது. இப்போது என்றில்லை, எப்போதுமே...'

'காங்கிரஸை மீண்டும் ஆட்சியில் அமர்த்த செல்வாக்குள்ள தலைவர் இல்லை என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா?'

'உண்மைதான். ஆனால், காங்கிரஸ் வெற்றி பெறுவதற்குச் செல்வாக்குள்ள தலைவர்கள் வேண்டும் என்பதில்லை. அதன் வரலாறும் காந்திஜி, நேருஜி, இந்திராஜி உள்ளிட்ட தலைவர்களின் பங்களிப்பும் இருக்கின்றன.'

'சோனியா காந்தி தலைவரானால், ஒருவேளை காங்கிரஸ் மீண்டும் செல்வாக்குடன் திகழ வாய்ப்பிருக்கிறதா?'

'அவரை நான் பலமுறை சந்தித்துப் பேசிவிட்டேன். தீவிர அரசியலில் இறங்குவதற்கு அவருக்கு விருப்பமில்லை என்பதையும் தெரிந்து கொண்டேன்.'

'பிறகு ஏன் அவர் வருவார் என்று சில தலைவர்கள் எதிர்பார்க்கிறார்கள்?'

'எனக்கும் அது புரியவில்லை. அவரை சிலர் மீண்டும் மீண்டும் சந்தித்து வற்புறுத்துவது தவறு. நேரு குடும்பத்தின் மீது அவர்களுக்கு இருக்கும் அபிமானம் காரணமாக இருக்கலாம். அதில் அவர்களது சுயநலமும் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.'

'நரசிம்ம ராவின் தீவிர ஆதரவாளராக இருந்த நீங்கள், இப்படி திடீரென்று சீதாராம் கேசரி ஆதரவாளராக மாறியது ஏன்?'

'நான் யாருக்கும் ஆதரவாளரும் அல்ல, எதிரியும் அல்ல. காங்கிரஸ் கட்சியின் விசுவாசி. இந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர். யார் தலைவராக இருக்கிறாரோ அவரது கருத்தை நான் பிரதிபலிக்கிறேன், அவ்வளவுதான்.'

'நரசிம்ம ராவ் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?'

நான் கேட்டதும் ஒரு நிமிடம் தயங்கினார் காட்கில். 'இந்தக் கேள்வி வேண்டுமா?' என்றார் அவர். நான் டேப் ரெக்கார்டரின் ஒலிப்பதிவை நிறுத்த எத்தனித்தபோது அவர் பேசத் தொடங்கினார்.

'நரசிம்ம ராவ் அறிவாளி. மேதை. மிகச் சிறந்த நிர்வாகி. திவாலாகிக் கொண்டிருந்த இந்தியாவை மீட்டெடுத்தவர். அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. ஆனால் அவருக்குக் கட்சியை வழிநடத்தத் தெரியவில்லை; வலுப்படுத்தத் தெரியவில்லை. அவரால்தான் காங்கிரஸ் தோல்வி அடைந்தது. அவரது சகாப்தம் முடிந்து விட்டது. காங்கிரஸின் வரலாறு நரசிம்ம ராவுடன் முடிந்துவிடக் கூடாது. இவ்வளவு போதும்.'

காட்கிலின் பேட்டி வெளியானபோது, முதல் நபராக என்னைத் தொலைபேசியில் அழைத்துப் பாராட்டியவர் அப்போது வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த ஐ.கே.குஜ்ரால்.

தலைநகரிலிருந்து வெளியாகும் 'டெல்லி மிட்டே' ஆங்கில நாளிதழில் தொடங்கி 'தி ட்ரிப்யூன்', 'மத்ய பிரதேஷ் க்ரானிக்கல்', 'ஃபிரி ப்ரஸ் ஜர்னல்' என்று பல முன்னணி நாளிதழ்கள், 'சோனியா அரசியலுக்கு வரமாட்டார் - வி.என்.காட்கில்' என்று தலைப்பிட்டு அந்தப் பேட்டியை வெளியிட்டிருந்ததால் அது பரபரப்பாகிவிட்டது. அதைத் தொடர்ந்து, எல்லா பத்திரிகைகளும் சோனியா காந்தியின் அரசியல் பிரவேசம் சார்ந்த ஹேஷ்யங்களுடன் கட்டுரைகளை வெளியிடத் தொடங்கின. காட்சி ஊடகங்களிலும் அது விவாதப் பொருளானது.

முன்னாள் பிரதமர் சரண் சிங்கின் நினைவு நாளையொட்டி, அஜித் சிங்கை சந்திக்க, துக்ளக் ரோட்டிலுள்ள அவரது வீட்டுக்குச் சென்றேன். காலையில் சரண் சிங்கின் சமாதி அமைந்திருக்கும் கிஸான் காட்டிலும், நாடாளுமன்ற மைய மண்டபத்தில் உள்ள உருவப் படத்துக்கும் மரியாதை செலுத்திவிட்டு வந்திருந்தார் அவர்.

'உங்களுக்கு எதற்கு இந்த வேலை? தேவையில்லாமல் சோனியா காந்தியை நீங்கள் ஏன் அரசியலுக்கு இழுக்கிறீர்கள்? சோனியா காந்தியை வைத்து பாஜக அரசியல் ஆதாயம் தேடப்போகிறது....' என்று அவர் சொன்னபோது, எனக்குச் சிரிப்பு வந்தது. அவர் தொடர்ந்தார்.

'உங்கள் மீது நண்பர் ஒருவர் கடுமையான கோபத்தில் இருக்கிறார். காலையில் கிஸான் காட்டில் சந்தித்தபோது, என்னிடம் சொன்னார். அவரிடம் நீங்களே பேசிக் கொள்ளுங்கள்...' என்றபடி தொலைபேசியில் எண்களைச் சுழற்றத் தொடங்கினார்.

யாராக இருக்கும் என்கிற யோசனையுடன் நான் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தேன்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com