ஒரே இடத்தில் கைலாசம் - வைகுண்டம்

கைலாசமும் வைகுண்டமும் ஒரே கோயிலில்
ஒரே இடத்தில் கைலாசம் - வைகுண்டம்

கைலாசம் என்பது சிவனின் உறைவிடம்- வைகுண்டம் என்பது விஷ்ணுவின் உறைவிடம் என்று இந்துக்களின் நம்பிக்கை. ஆனால், 'கைக்கு எட்டிய தூரம் கைலாசம்; வாய்க்கு எட்டிய தூரம் வைகுண்டம்' என்பதற்கேற்ப இவ்விரண்டு கோயில்களும் அருகருகே அமைக்கப்பட்டுள்ளன என்றால் ஆச்சரியம்தானே.

கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்பட்ட களியக்காவிளை அருகே, கேரள மாநிலப் பகுதியில் உள்ள செங்கல் சிவன்பார்வதி கோயிலில் இந்தப் பணியை மேற்கொண்ட மடாதிபதி மகேஸ்வரானந்த சரஸ்வதி சுவாமிகளிடம் பேசியபோது:

'111.2 அடி உயரத்தில் அமைந்துள்ள சிவலிங்கத்தின் மேல் பகுதியில் கைலாசமும், சிவலிங்கத்தையொட்டி வைகுண்டமும் அமைக்கப்பட்டுள்ளன.

சிவலிங்கத்தின் உள்பகுதி குகை வடிவில் 8 நிலைகளைக் கொண்டு (8 மாடி) அமைந்துள்ளது. உள்பகுதி நடைபாதையின் ஓரங்களில் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், வியாச மகரிஷி, கால பைரவர், காஷ்யப மகரிஷி, அத்ரி மகரிஷி, ஜமதக்னி மகரிஷி, பரத்வாஜ முனிவர், அகத்தியர், வசிஷ்டர், கௌதம மகரிஷி, பிருகு மகரிஷி, விசுவாமித்திரர், பரசுராமர், பாஸ்கராச்சார்யா ஆகியோரின் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நாட்டிலுள்ள முக்கிய சிவன் கோயில்களில் காணப்படும் 108 சிவலிங்கங்கள் உள்பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

2012-ஆம் ஆண்டு மே 3-ஆம் தேதி சிவலிங்கம் அமைக்கும் பணி தொடங்கியது. திருப்பணிகள் நிறைவு பெற்று 2019 நவம்பர் 10- ஆம் தேதி பக்தர்களின் தரிசனத்துக்காகத் திறந்து வைக்கப்பட்டது.

லிங்கத்தின் உள்பகுதியில் பக்தர்கள் தியானம் செய்வதற்கு வசதிகள், அபிஷேகம் செய்வதற்காக லிங்கங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இங்கு அமைக்கப்பட்டுள்ள சிவலிங்கம் உலகிலேயே அதிக உயரம் கொண்ட சிவலிங்கமாக, இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டு , ஆசியா புக் ஆஃப் ரெக்கார்டு ஆகிய சாதனைப் புத்தகங்களிலும் இடம்பிடித்துள்ளன.

சிவலிங்கத்தின் அருகில் 80 அடி உயர வைகுண்டம் என பெயரிடப்பட்டுள்ள தேவலோகம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் மீது 64 அடி நீள ஆஞ்சநேயர், கையில் சஞ்சீவி மலையுடன் பறந்து செல்வது போன்று அமைக்கப்பட்டுள்ளது.

மகா சிவலிங்கத்துக்குள் சென்று தரிசித்துவிட்டு அதன் மேல் பகுதியில் உள்ள கைலாயத்தைத் தரிசித்து அங்கிருந்து அனுமன் சிலையின் உள்பகுதி வழியாக அதையொட்டியுள்ள வைகுண்டத்துக்குச் செல்லும் வகையில் கைலாசம், வைகுண்டம் வடிவமைக்கப்பட்டுள்ளன.

வைகுண்ட தேவலோகத்தில் சயன கணபதி, அஷ்ட லட்சுமிகளான வீரலட்சுமி, கஜலட்சுமி, சந்தானலட்சுமி, விஜயலட்சுமி, தானியலட்சுமி, ஆதிலட்சுமி, தனலட்சுமி, ஐஸ்வர்யலட்சுமி என அஷ்டலட்சுமிகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இதுதவிர, அங்கு பாற்கடலில் அனந்தசயனத்தில் உள்ள மகாவிஷ்ணு, அவருடைய பத்து அவதாரங்களும், பிரம்மா - சரஸ்வதி, மகாவிஷ்ணு - லட்சுமி, சிவன் - பார்வதி, கணபதி, முருகன் உள்ளிட்ட சிலைகளும் தத்ரூபமாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

2019-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட வைகுண்டம் கட்டுமானப் பணி அண்மையில் நிறைவடைந்து, சித்திரை முதல் தேதியான ஏப். 14-இல் திறக்கப்பட்டது. பக்தர்கள் திரளாக வருகை தருகின்றனர்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com