கோலிவுட் ரவுண்ட் அப்!

ரஜினியின் 'வேட்டையன்' படப்பிடிப்பு டாப் கியரில்
கோலிவுட்  ரவுண்ட் அப்!

ரஜினியின் 'வேட்டையன்' படப்பிடிப்பு இரவும் பகலுமாக சீறிப் பாய்ந்து போய்க்கொண்டிருக்கிறது. வரும் அக்டோபரில் படம் வெளியாகிறது என்றாலும் கூட, ரஜினி அடுத்து லோகேஷ் கனகராஜின் படத்துக்குச் செல்வதால், 'வேட்டையன்' படப்பிடிப்பு டாப் கியரில் நடந்து கொண்டிருக்கிறது. த.செ.ஞானவேல் இயக்கும் இந்தப் படத்தில் ரஜினியுடன், பகத் பாசில், மஞ்சு வாரியர், ராணா, ரித்திகா சிங், துஷாரா, கிஷோர் என நட்சத்திரப் பட்டாளமே நடித்திருக்கின்றனர். அமிதாப் கெளரவத் தோற்றத்தில் வருகிறார். படத்தின் திருப்புமுனையான காட்சியில் அவரும் ரஜினியும் சேர்ந்து நடித்திருக்கிறார்கள். இதுவரை பல படங்களில் வில்லனாக மிரட்டி வந்த பகத் பாசில், இந்தப் படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இதுகுறித்து 'வேட்டையன்' வட்டாரத்தில் விசாரித்தால் கிடைத்த தகவல்கள்:

ரஜினி, பகத் காம்பினேஷனில் திரையரங்கமே அமர்களமாக இருக்கும். மாரி செல்வராஜின் 'மாமன்னன்' படத்தில் வடிவேலுவை எப்படி ஒரு வித்தியாசமான கேரக்டரில் பார்த்தோமோ அப்படி, 'வேட்டையன்' படத்திலும் எதிர்பாராத ஒரு கதாபாத்திரத்தில் பகத் நடித்திருக்கிறார். காமெடியில் கலகலக்க வைத்திருக்கிறார்.

அனிருத் இப்போது 'வேட்டையன்' தவிர, 'தலைவர் 171' படத்தின் பாடல் கம்போஸிங், 'இந்தியன் 2'க்கான பின்னணி இசைக்கோர்ப்பு வேலைகள், ஏ.ஆர்.முருகதாஸ், சிவகார்த்திகேயனின் 'எஸ்.கே.23' மற்றும் அஜித்தின் 'விடா முயற்சி'க்கான பாடல்கள் என பிஸியாக இருக்கிறார். தேர்தல் முடிந்ததும் 'விடாமுயற்சி' படப்பிடிப்புக்குக் கிளம்புவதால், பாடல்களை அவர் கொடுத்துவிட்டார் என்கிறார்கள். இவ்வளவு பிஸியான ஷெட்யூலில், 'வேட்டையன்' ஓப்பனிங் பாடலை அவர் கொடுத்திருக்கிறார்.

இந்தப் பாடலின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் நடைபெறும் என்றும், இதற்காக சென்னையில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில் அரங்கம் அமைக்கப்பட்டு வருகின்றது. இதற்கிடையே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் அவரது 171 படத்தின் டைட்டில் அறிவிப்பு விடியோ, இன்னும் சில தினங்களில் வெளிவருகிறது. சன் பிக்சர்ஸ் ஸ்டூடியோவில் 'தலைவர் 171'க்கான போட்டோஷூட்டும், டைட்டில் விடியோவும் படமாக்கப்பட்டுள்ளது என்றும், அதன் தீம் மியூஸிக்கையும் அனிருத் போட்டுக் கொடுத்துவிட்டார் என்றும் பேச்சு இருக்கிறது.

ஜூன் மாதத்தில் வெளிவரும் 'இந்தியன் 2'!

ஷங்கரின் இயக்கத்தில் கமல் நடித்த 'இந்தியன்' படத்தின் முதல் பாகம் 1996-ஆம் ஆண்டு, மே 9-ஆம் தேதி வெளியானது. பல வருடங்களுக்குப் பிறகு இந்தக் கூட்டணி மீண்டும் கைகோத்தது. கமலின், 'வீரசேகரன் சேனாபதி' எனும் இந்தியன் தாத்தா கதாபாத்திரத்தை மையமாக வைத்து 'இந்தியன் 2' உருவானது. இந்தப் படத்தில் கமலுடன், எஸ்.ஜே.சூர்யா, சித்தார்த், சமுத்திரக்கனி, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத்சிங், பிரியா பவானி சங்கர், நெடுமுடி வேணு, விவேக், மாரிமுத்து, மனோபாலா எனப் பலரும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்திருக்கிறார்.

ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கமலின் கடும் உழைப்பு, பெரும் நட்சத்திரங்கள், தேர்ந்தெடுத்த டெக்னீசியன்கள் என ஸ்கிரிப்ட்டுக்கே அதிக நாள் எடுத்துக்கொண்டு ஷங்கர் செதுக்கிய படம்தான் இது. படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டாலும், மே மாதமாவது திரைக்கு வந்திருக்கலாம். ஆனால், ரிலீஸை ஜூனிற்குக் கொண்டு சென்றது ஏன் என்பது குறித்து விசாரித்ததில் கிடைத்த தகவல்கள் இது:

இயக்குநர் ஷங்கர் இப்போது ராம் சரணை வைத்து 'கேம் சேஞ்சர்' என்ற படத்தையும் இயக்கி வருகிறார். அதன் படப்பிடிப்பும் நிறைவடையும் தருணத்தில் இருக்கிறது. 'இந்தியன் 2' படப்பிடிப்பு எத்தனையோ இன்னல்களைத் தாண்டி நடந்து முடிந்தாலும் கூட, எதிர்பார்ப்பை விடப் பல மடங்கு சிறப்பாக வந்திருக்கிறது என்கிறார்கள். இதனால் எடிட்டிங், கிராபிக்ஸ் வேலைகளில் தீவிர கவனமெடுத்து படத்தைக் கொண்டு வர நினைக்கிறார் இயக்குநர் ஷங்கர். இதற்காக அவரே உடனிருந்து கிராபிக்ஸை கவனிக்க விரும்புகிறார்.

இப்போது ராம் சரண் படப்பிடிப்புக்கு இடையே அவர் இதிலும் கவனம் செலுத்தி வந்தாலும், கிராபிக்ஸ் வேலைகள் இன்னும் பர்ஃபெக்ட் ஆக இருக்க வேண்டும் என்பதாலேயே ரிலீஸை தள்ளி வைத்துள்ளனர். பிரபல வெளிநாட்டு நிறுவனம் ஒன்றின் மேற்பார்வையில் கிராபிக்ஸ் வேலைகள் நடந்து வருகின்றன. எனவே கிராபிக்ஸ் பணிகள் முழுமையாக முடிந்த பின்னர்தான் எடிட் டெஸ்கிலும் படத்தின் பைனல் காப்பியை லாக் செய்யவுள்ளனர். அநேகமாக மே மாத இரண்டாம் வாரத்தில்தான் படம் முற்றிலும் ரெடியாகும் என்ற பேச்சு இருக்கிறது. படம் ஜூன் மாதம் இரண்டாவது வாரம் திரைக்கு வருகிறது.

மாற்றுத்திறனாளிகளுக்காக ஒரு படம்

மாற்றுத்திறனாளிகளுக்ககாக நடிகர் ராகவா லாரன்ஸ் தொடர்ந்து பல உதவிகளைச் செய்து வருகிறார். இவர் நடிக்கும் பல திரைப்படங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கென சில காட்சிகளை வைத்திருப்பார். தற்போது இவரின் குழுவிலிருக்கும் மாற்றுத்திறனாளிகள் சிலர் தமிழர்களின் பாரம்பரியமான 'மல்லர் கம்பம்' விளையாட்டை கற்றுக் கொண்டு பல இடங்களில் நிகழ்ச்சிகளை அரங்கேற்றி வருகின்றனர்.

அண்மையில் நடத்திய ஒரு நிகழ்வின் தொடக்கத்தில் பேசிய லாரன்ஸ், 'பல மேடைகளில் மாற்றுத்திறனாளிகள் நடனமாடுவதைப் பார்த்திருப்பீர்கள். நடனத்தைத் தாண்டி அவர்களுக்கு எதுவும் தெரியாது. அந்தத் தன்னம்பிக்கை அதிக அளவு இருக்கிறது. எனக்குச் சோகமாக இருக்கிற சமயத்தில் மாற்றுத்திறனாளிகள் நடனமாடுறதை பார்த்து என்னை ரீ-சார்ஜ் செய்து கொள்வேன். நானும் பல இயக்குநர்கள்கிட்ட மாற்றுத்திறனாளிகளை நம்ம படத்துல பயன்படுத்திக்கலாம்னு சொல்லுவேன்.

சில இயக்குநர்கள் 'எல்லா இடத்திலேயும் திரும்ப திரும்ப காட்சிப்படுதுற மாதிரி இருக்கு'ன்னு வேண்டாம்னு சொல்வாங்க? எத்தனை தடவை த்ரிஷா, நயன்தாராவைப் பார்க்குறாங்கன்னு நானும் சொல்லுவேன். பரீட்சையில தோல்வி அடைந்ததும் நிறைய பேர் தற்கொலை செய்துகொள்கின்றனர். இப்படி தன்னம்பிக்கை இல்லாம பல விஷயங்கள் நடக்குது. அந்தச் சமயத்துல தன்னம்பிக்கையோட இருக்கிற இந்த மாற்றுதிறனாளிகளைப் பார்த்து நாமளும் கற்றுக் கொள்ளணும். கடவுள் நமக்கு கணினி மாதிரியான பல விஷயங்களைக் கொடுத்தும் நாம கடவுளைத் திட்டுறோம்.

இந்தப் பசங்களுக்கு நிறைய வாய்ப்புக் கிடைக்கணும். மாற்றுத்திறனாளிகளுக்காக ஒரு மேடையை அமைத்து, நிகழ்ச்சிகள் பண்ணலாம்னு யோசிச்சிருக்கேன். இவர்களுக்காக இரு சக்கர வானங்களைக் கொடுக்கப்போறேன். அதுமட்டுமில்ல, மாற்றுத்திறனாளிகளுக்காகவே ஒரு படம் எடுத்து, மாற்றுத்திறனாளியாக நடிக்கப்போறேன். அந்தப் படத்துல கிடைக்கிற பணத்தை வச்சு மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு கட்டித் தரப்போறேன்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com